Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 135)
இரண்டாம் ப்ரகரணம்
தோழிமாரன்னையரென்கிற பன்மை ரக்ஷகத்வாதி பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தாலே.
ஆனால் தோழியென்றும் தாயென்றும் சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும் உபாயாத்யவஸாயத்தையுமாகில் தத் தத் விஷயமான பன்மைச்சொலவுக்குத் தாத்பர்யமேதென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (தோழிமாரென்று தொடங்கி).
– ஆனால் தோழி மற்றும் தாய் என்பதன் மூலம் ஸம்பந்த ஞானம் மற்றும் உபாயத்தில் உள்ள உறுதி ஆகியவை கூறப்படுகின்றன என்றால், அவற்றைத் தோழிமார், தாய்மார் என்று பன்மையில் ஏன் கூறவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது “தோழிமார்களு மன்னையரும்”, “அன்னையரும் தோழியரும்”, “தோழிமார் விளையாடப் போதுமினென்ன”, “அன்னையர் நாண”, “ஊரென் சொல்லிலென் தோழிமீர்”, “எங்ஙனேயோ வன்னைமீர்காள்” என்று இப்படி தோழி தாய் விஷயமாகச் சொல்லுகிற பன்மை - திருமந்த்ரத்திற் சொல்லுகிறபடியே இவ்வாத்மாவோடு ஈச்வரனுக்கு ரக்ஷகத்வ சேஷித்வ காரணத்வ சரீரித்வாதி ஸம்பந்தங்கள் பலவுமுண்டாகையாலே அவ்வோ ஸம்பந்தங்களை விஷயீகரித்த ஜ்ஞாநத்தினுடைய பேதத்தாலும், உபாயபூதனான அவனுடைய வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌசீல்ய ஸௌலப்ய ஜ்ஞாந சக்தி க்ருபாதிகளைப் பற்றி வரும் வ்யவஸாய ரூபமான ஜ்ஞாநத்தினுடைய பேதத்தாலுமென்கை. புத்தி சப்தம் – ஜ்ஞாநவாசி; “புத்திர் மநீஷா திஷணாதீ: ப்ரஜ்ஞா சேமுஷீ மதி:” என்னக்கடவதிறே. இத்தால் ஸம்பந்த ஜ்ஞாநத்துக்கும் உபாயாத்யவஸாயத்துக்கும் விஷயபேதத்தாலே வ்யக்தி பேதமுண்டாகையாலே தத்தத் விஷய பஹுவசன ப்ரயோகத்துக்குக் குறைவில்லை யென்றதாயிற்று.
– (தோழிமார் என்கிற பன்மை) – திருவாய்மொழி (5-5-9) – தோழிமார்களும் அன்னையரும் – என்றும், (5-4-5) – தோழியரும் – என்றும், (6-2-8) – தோழிமார் விளையாடப் போதுமினென்ன – என்றும், (5-3-6) - ஊரென் சொல்லிலென் தோழிமீர் - என்றும் உள்ள பலவற்றிலும், தோழி விஷயமாகப் பன்மையில் கூறியது ஏன் என்றால், (ரக்ஷகத்வாதி பந்த புத்தி பேதத்தாலே) - திருமந்த்ரத்தில் கூறுவதற்கு ஏற்ப ஆத்மாவுடன் ஸர்வேச்வரனுக்கு காப்பாற்றும் தன்மை, எஜமானத்தன்மை, உண்டாக்கிய காரணமாக இருத்தல், சரீரமாகக் கொண்டிருத்தல் போன்ற பல ஸம்பந்தங்கள் உண்டு என்பதால், அந்தந்த ஸம்பந்தங்கள் குறித்த ஞானத்தின் வேற்றுமையை உணர்த்தவே ஆகும் [அல்லது ஞானத்தின் வேற்றுமை காரணமாக ஆகும்]. (அன்னையர் என்கிற பன்மை) - திருவாய்மொழி (5-5-9) – அன்னையரும் – என்றும், (5-4-5)- அன்னையரும் - என்றும், (5-3-8) - அன்னையர் நாண – என்றும், (5-5-1) – எங்ஙனேயோ வன்னைமீர்காள் - என்றும் உள்ள பலவற்றிலும் தாய் விஷயமாகப் பன்மையில் கூறியது ஏன் என்றால், (வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தாலே) - உபாயமாக உள்ள ஸர்வேச்வரனுடைய வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், ஸௌலப்யம், ஞானம், சக்தி, க்ருபை போன்ற பலவற்றையும் அடிப்படையாகக் கொண்டு வருவதான உபாயத்தில் உள்ள உறுதி என்பதான ஞானத்தின் வேற்றுமைகளால் ஆகும். புத்தி என்ற சொல்லானது, ஞானத்தைக் கூறுவதாகும். அமரகோசத்தில் - புத்திர் மநீஷா திஷணாதீ: ப்ரஜ்ஞா சேமுஷீ மதி: - புத்தி, மநீஷா, தீக்ஷணா, தீ, ப்ரஜ்ஞா, சேமுஷீ, மதி போன்றவை ஒத்த பொருள் உடையவை – என்றது காண்க. ஆக, இதன் மூலம் ஸம்பந்த ஞானம் மற்றும் உபாயத்தில் உள்ள உறுதி ஆகியவற்றுக்கு விஷய வேறுபாடுகள் காரணமாக அவற்றின் ஸ்வரூபத்திலும் மாறுபாடு உள்ளது என்பதால், தோழிமார் எனபது போன்று பன்மையில் கூறியதில் எந்தவிதமான தோஷமும் இல்லை என்றாகிறது.