Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 134)

இரண்டாம் ப்ரகரணம்

ஸகி வெறிவிலக்கி ஆசையறுத்து அறத்தொடு நின்ற மூன்றில் அநந்யார்ஹத்வமும், வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ வென்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யவஸாயமும், புத்ரி பலகால் ஆள்விட்டு ஆற்றாமை சொல்லிக் கவராதவை விட்டு இரைக்க மடலெடுத்துக் கண் புதையப் போக்கற்று உருநெஞ்சுள்ளெழக் கூடுநாள் தேடித் தாழ்த்ததுக்கு ஊடி உசாத்துணையற்றுச் சூழலும் பகைமுகஞ் செய்யத் தடைநில்லாதே புயக்கற்று மாலையும் காலையும் பூசலிடுகிற பதினேழில் த்வரையும் தெரியும்.

இவ்வவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோற்றுமோவென்னு மபேக்ஷையிலே தோழி தாய் மகள் பேச்சான திருவாய்மொழிகளிலே இவை தெரியுமென்னுமத்தை ஸுக்ரஹமாக வரைந்து அருளிச்செய்கிறார் மேல் (ஸகியென்று தொடங்கி).

– இப்படிப்பட்ட மூன்று நிலைகளும் இவருடைய பேச்சில் வெளிப்படுமோ என்ற சந்தேகம் தோன்ற, “தோழி, தாய், மகள்” ஆகியவர்களுடைய பேச்சாக வெளிப்படும் திருவாய்மொழிகளில் இவற்றை அறியலாம் என்று, அவற்றை எளிமையாக அருளிச் செய்கிறார்.

– அதாவது, எம்பெருமானோடே இயற்கையிலே புணர்ந்து பிரிந்து ஆற்றாமையாலே மோஹங்கதையாய்க் கிடக்கிற பிராட்டிதசையைக் கண்டு தாய்மார் கலங்கி, இவள் நோவையும் அதுக்கு நிதானத்தையும் பரிஹாரத்தையும் அறியாதே, ப்ரதிபந்ந பாஷிணியாயிருப்பாளொரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு இந்நோய்க்குப் பரிஹாரமாகக் கருதி வெறியாடலுற; இவள் ப்ரக்ருதியறியு முயிர்த்தோழி அநந்யார்ஹையான விவளுக்கு அந்ய ஸ்பர்சம் ஸஹியாது, நாம் இதை விலக்காதொழியில் இவளை யிழக்கவருமென்று பார்த்து அப்போது நிரூபித்தறிந்தாளாக இவள் நோவையும் அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்குச் சொல்லி ததுசித பரிஹாரங்களையும் விதித்து, “அங்கோர் கள்ளுமிறைச்சியும் தூவேல்மின்”, “உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டம் கண்டென் பயன்” இத்யாதிகளாலே வெறியை விலக்கின பாசுரத்தாலே ப்ராப்ய த்வராதசையில் அவஸாதமடியாக உபாயாத்யவஸாயம் கலங்கி, “தர்மேண பாபமபநுததி” என்கிறபடியே தர்மாநுஷ்டானத்தாலே துக்க ஹேதுவைப் போக்கலாமென்பார் வார்த்தையைக் கொண்டு இவ்வவஸாதத்தைப் பரிஹரிக்கலாமோவென்று தேவதாந்தர்யாமி பரமான கர்மகலாபங்களிலே ப்ரவர்த்திக்கத் தேட, அவ்வளவிலே ஸம்பந்த ஜ்ஞாநமானது இவ்வவஸாதம் கர்மபலமன்றிக்கே, ஆகஸ்மிக பகவத் கடாக்ஷ பலமாய் அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனானவனை அநுபவிக்கையி லுண்டான ப்ராவண்ய கார்யமாகையாலே இதுக்கு அது பரிஹாரமுமன்று; அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு விருத்தமாகையாலே ஸ்வரூப நாசகமுமாமன்று, அந்ய ஸ்பர்சத்தை நிவர்த்திப்பித்த “தீர்ப்பாரையாமினியும்”. திருத்துலைவில்லிமங்கலத்திலே அதிப்ரவணையாயிருக்கிற பெண்பிள்ளையை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்துத் தோழியானவள் “இவளை நீரினியன்னைமீர் உமக்காசையில்லை” என்று நீங்களேயன்றோ திருத்துலைவில்லிமங்கலத்திலே கொண்டு புக்கு இப் ப்ராவண்யத்தை விளைத்திகொள்; இனி ப்ராப்த விஷய ப்ரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது. ஆனபின்பு இவள் பக்கல் உங்களுக்காசையற வமையுமென்ற பாசுரத்தாலே அர்சாவதார ஸுலபமான விஷயமே உபாயமாகையாலே எப்போதும் இதிலே நோக்காயிருக்கு முபாயாத்யவஸாயம் அவ்விஷய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோவென்னு மதிசங்கையாலே அத்தை நிவர்த்திப்பிக்கத் தேட, அவ்வளவிலே ஸம்பந்த ஜ்ஞாநம் சேஷ வஸ்துகதமான இப் ப்ராவண்யம் சேஷி யுகப்புக்கு விஷயமாமித்தனையல்லது உபாய கோடியி லந்வயியாது. ப்ராப்த விஷய வைலக்ஷண்யாதீனமாக வந்ததாகையாலே நிவர்த்திப்பிக்கவும் போகாது. இத்தை ஸ்வநிவர்த்யமாக நினைத்திருக்கிற ஸ்வாதந்தர்யம் அத்யந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகையாலே த்யாஜ்யமென்று ஸ்வஸ்பர்சத்தை நிவர்த்திப்பித்த “துவளில் மாமணியும்”. தலைமகள் பருவத்தைக் கண்டு பந்து ஜனங்கள் ஸ்வயம்வரத்துக்கு ராஜலோகத்தைத் திரட்டுகைக்கு மணமுரசறைவிக்க, திருப்புலியூரில் நாயனாரோடே அவளுக்குக் கலவி யுண்டாய்த்தென்னுமிடத்தை இவள் வடிவிலும் பேச்சிலுமுண்டான வேறுபாட்டாலே அறிந்த வுயிர்த்தோழியானவள் இத்த்வநி பெண்பிள்ளை செவிப்படுமாகில், “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழாத” தன்மையளாயிருக்கிற விவளைக் கிடையாது; ஏற்கவே பரிஹரிக்க வேணுமென்று இவள் பந்துஜனங்களைக் குறித்து இவளுக்குத் திருப்புலியூரில் நாயனாரோடே ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாயிற்றுப் போலேயிரா நின்றது, தத் குணசஷ்டிதங்களையே வாய்புலற்றா நின்றாள். ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மமல்லவென்ன; ஆகில் இவளுக்குத் தக்க அவயவசோபை ஆபரணசோபை முதலான நாயக லக்ஷணங்கள் அவனுக்குண்டோ வென்ன; அவையெல்லாம் குறையில்லை. அவையொன்றுமில்லையேயாகிலும் இவள் அங்கே அநந்யார்ஹையாமைக்கடையாளம் ஸுவ்யக்தமாகக் காணலாம். ஆன பின்பு இத்தைத் தவிருங்கோளென்று மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய், அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே ப்ராப்ய த்வரையினுடைய பரிபாகத்தை உபாயாத்யவஸாய தசையிலே நின்று தர்சித்தவநந்தரம் அது பகவதநந்யார்ஹை யானமையறியாதே அந்ய விஷயத்துக்கு மர்ஹமோவென்று நிரூபிக்க, அவ்வளவிலே ஸம்பந்த ஜ்ஞாநம், இதுக்கு அந்ய சேஷத்வ ப்ரஸங்கமும் ஸ்வரூபம் நாசகம் சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை யொழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும் இவ்வஸ்து அவனுக்கே சேஷமென் றறுதியிட்ட “கருமாணிக்க மலை”யுமாகிற தோழிப் பேச்சான இம்மூன்று திருவாய்மொழியிலும் அநந்யார்ஹ சேஷத்வம் தோன்றுமென்கை. ஆகவித்தால், தோழியானவள் வெறிவிலக்கியும், ஆசையறுத்தும், அறத்தோடு நின்றும், இவ்வஸ்து - அந்யசேஷமுமன்று, ஸ்வசேஷமுமன்று, பகவதேக சேஷமென்று சொன்ன இம்மூன்று திருவாய்மொழியும், ஸம்பந்தஜ்ஞாநதசையில் பேச்சென்னுமிடம் ஸம்ப்ரதிபந்ந மென்றதாயிற்று. (வாடிமெலிந் தித்யாதி) அதாவது ஆடியாடியிலே, “வாடிவாடும்” என்று அடியார்கள் குழாங்களையுடன் கூடப் பொறாமையால் வந்த க்லேசத்தாலே ஆச்ரயத்தை யிழந்த தளிர் போலே வாடி, பாலனாயேழுலகிலே “கண்ணன் கழல் துழாய் பொன்செய்ப் பூண் மென்முலைக்கென்று மெலியும்” என்று கைகழிந்தவற்றை யாசைப்பட்டு மெலிந்து, மண்ணையிருந்து துழாவியிலே “என் பெண் கொடியேறிய பித்தே” என்னும்படி ஸத்ருச பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்துக் கிட்டும்படி பித்தேறி, கடல் ஞாலத்திலே “ஈசன் வந்தேறக்கொலோ” என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறமை யறியாதே ஈச்வர னாவேசித்தானோ வென்னும்படி அவனாகப் பேசி, மாலுக்கு வையத்திலே “கற்புடையாட்டி யிழந்தது கட்டே” என்னும்படி பகவதலாப க்லேசத்தாலே கட்டங்கவிழந்து, – உண்ணுஞ்சோற்றிலே “இன்றெனக் குதவா தகன்ற” என்று தன்னைப் பிரிந்து க்லேசப்படுகிற இவ்வாபத் தசையில் எனக்கு உதவாதே போனாளென்னும்படி அகன்று, கங்குலும் பகலிலே “சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையல்” என்னும்படி அவனைக் கிட்டி அவன் ஸந்நிதியிலே முடியவேணுமென்று வ்யவஸிதையானமை உபாஸகர்க்குப் பரபக்தி தசையிலுண்டாம் க்லாநி கார்ச்யாதிகள் போலே ஸாதநத்திலே முதலிடுமோவென்று மாதாவானவ ளஞ்சி, அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும் குறித்து வாடா நின்றாள், மெலியா நின்றாள் என்றாற்போலே முறைப்பட்டு “முறையோ வரவணை மேல் பள்ளி கொண்ட முகில்வண்ணனே” என்று அத்தலையில் க்ருபையொழிய இவள் பக்கலுள்ளவை ஒன்றும் ஹேதுவல்ல; ஆனபின்பு இவளை இப்படித் துடிக்க விட்டிருக்கை உம்முடைய க்ருபைக்கும் ரக்ஷகத்வத்துக்கும் போருமொவென்று கூப்பிடுகிற ஏழு திருவாய்மொழிகளிலும் உபாயாத்யவஸாயம் தோன்றுமென்கை. இத்தால், தாய்ப்பேச்சான ஏழு திருவாய்மொழியும் உபாயாத்யாஸாயதசையில் பேச்சென்னுமிடம் ஸ்பஷ்டமென்றபடி. – (புத்ரியித்யாதி) அதாவது, தலைமகளானவள், “அஞ்சிறைய மடநாரை”, “வைகல் பூங்கழி”, “பொன்னுலகாளீர்”, “எங்கானல்” என்கிற நாலு திருவாய்மொழிகளிலும் க்ரமப்ராப்தி பற்றாமல் தூதுவிட்டு, வாயுந்திரையுகளிலே “ஆற்றாமை சொல்லி யழுவோமை” என்று ஸகல பதார்த்தங்களும் பகவதலாபத்தாலே நோவுபடுகிறனவாகக் கருதி, அவற்றை ஸமதுக்கிகளாகக் கொண்டழுது, ஏறாளுமிறையோனிலே “மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்” என்று அவன் விரும்பாதவற்றை யுபேக்ஷித்து, மாசறு சோதியிலே “நாடுமிரைக்கவே – யாமடலூர்தும்” என்று ஜகத்க்ஷோபம் பிறக்கும்படி மடலூர்வனென்று, ஊரெல்லாம் துஞ்சியிலே “பின்னின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னின்றிராவூழி கண்புதைய மூடிற்றால்” என்று ப்ரேம வ்யாதியும் ராத்ரியாகிற கல்பமும் க்ருத ஸங்கேதிகளாய் சூழப்பொருகையாலே போக்கடியற்று, எங்ஙனேயோவிலே “சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு வென்னெஞ்சுள்ளெழும்” என்று தேஜஸ் தரங்கமத்யே நெஞ்சிலே ப்ரகாசிக்க, மானேய் நோக்கிலே “திருவல்லவாழுறையும் கோனாரை அடியேனடி கூடுவதென்று கொல்” என்று அவனைக் கூடும் நாளை ப்ரார்த்தித்து, இப்படி ப்ரார்த்தியாநிற்கவும் தாழ்த்து வந்தவாறே மின்னிடை மடவாரிலே “போகு நம்பீ” என்று ப்ரணய ரோஷத்தாலேயூடி, வெள்ளைச் சுரிசங்கிலே “என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார் - இனியாரைக் கொண்டென்னுசாகோ” என்று அபஹ்ருத சித்தையாகையாலே உசாத்துணையுமின்றி, ஏழையராவியிலே “கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றனவே” என்று உருவெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய, நாங்கள் வரிவளையிலே “காலம் பல சென்றும் காண்பதாணை யுங்களோ டெங்களிடையில்லை” என்று ஹிதம் சொல்லுகிற தாய்மார் தோழிமாரை அதிக்ரமித்து, இன்னுயிர்ச் சேவலிலே “இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது” என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவஸிதையாய், மல்லிகை கமழ் தென்றலிலே ஸந்த்யாகாலத்தில் க்ருஷ்ணனைப் பசுக்களின் முற்கொழுந்தில் வரக்காணாமல் பாதக பதார்த்தங்களாலே நலிவுபட்டு, வேய்மரு தோளிணையிலே ப்ராத: காலத்திலே க்ருஷ்ணன் பசு மேய்க்கப் போனானாக அதிசங்கை பண்ணி, அவன் முகத்தைப் பார்த்து, நீ பசு மேய்க்கப் போனால் நலியக்கடவ பாதக பதார்த்தங்கள் நலியாநின்றதென்று கூப்பிடுகிற பதினேழு திருவாய்மொழிகளிலும், ப்ராப்ய த்வரை தோன்றுமென்கை. இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திருவாய்மொழிகளும் ப்ராப்ய த்வராதசையில் பேச்சென்னுமிடம் வ்யக்தமென்றபடி.

– (வெறி விலக்கி) – ஸர்வேச்வரனோடு இயற்கையாகவே சேர்ந்து, பின்னர் பிரிந்து, அந்த ஆற்றமை காரணமாகப் பிராட்டி மயங்கிக் கிடக்கிறாள். இந்த நிலையைக் கண்டு அவளுடைய தாய்மார்கள் கலக்கம் கொண்டு, இவளுக்கு ஏற்பட்ட நோய் இன்னது என்றும், இதற்கான காரணம் மற்றும் மருந்து இன்னது என்றும் அறியாமல் நிற்கிறார்கள். அப்போது தனக்குத் தோன்றுவதை உரைக்கும் ஒரு கட்டுவிச்சி கூறியதைக் கேட்டு இந்த நோய்க்கு இதுவே மருந்து என்று வெறியாடலில் ஈடுபட்டனர் (வெறியாடல் என்பது ஒரு பூசாரியை அழைத்து க்ஷுத்ர தெய்வங்களுக்குச் செய்யப்படும் சாமி ஆடுதல் போன்ற சடங்கு). அப்போது நாயகியின் நிலையை அறியும் அவளுடைய உயிர்த்தோழி ஒருவள், “ஸர்வேச்வரன் அல்லாமல் வேறு யாருக்கும் இவள் உரியவள் அல்லள். இப்படிப்பட்ட இவளுக்கு வேறு தொடர்பு ஏற்படுதல் என்பது பொறுத்துக் கொள்ள இயலாத ஒன்றாகும். நாம் இதனைத் தடுக்கவில்லை என்றால், இவளை இழந்துவிடுவோம்”, என்று ஆராய்ந்தாள்; அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தாள். அந்த நாயகிக்கு ஏற்பட்டுள்ள நோய் இன்னது என்று உரைத்து, அதன் காரணத்தையும் தாய்மார்களிடம் கூறினாள். அதற்கான மருந்துகளையும் உரைத்தாள். ஆக, திருவாய்மொழி (4-6-3) - அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் - என்றும், திருவாய்மொழி (4-6-7) – உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டம் கண்டென் பயன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப வெறியாடல் என்பதை விலக்கிய திருப்பாசுரங்கள் மூலம் பேற்றினை அடைவதற்குப் பதறியபடி உள்ள நிலையில், மிகுந்த துன்பத்தின் காரணமாக உபாயத்தின் மீது கொண்டுள்ள உறுதியானது கலங்கி, தைத்திரீயம் – தர்மேண பாபம் அபநுததி – பலனின் பற்றில்லாத தர்மங்களால் பாபங்கள் நீங்குகின்றன - என்பதற்கு ஏற்ப தர்மங்களில் ஈடுபடுவதால் துக்கத்திற்கான காரணங்கள் விலகுகின்றன என்று கூறுபவர்களுடைய சொற்களைக் கேட்டு, இந்தத் துன்பத்தை விலக்க இயலுமோ என்று அனைத்து தேவதைகளின் அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரன் விஷயமாக உள்ள கர்மங்களை இயற்றுவதற்கு முனைந்தனர். அப்போது ஸர்வேச்வரனுக்கும் நமக்கும் உள்ள ஸம்பந்தம் குறித்த ஞானம் குறித்து அந்தத் தோழி கூறுவது என்னவென்றால், “இந்தத் துன்பமானது இதுவரை செய்து வந்த கர்மங்களால் உண்டான பலன் காரணமாக வந்தது அல்ல. ஸர்வேச்வரன் நம்மிடமிருந்து எதனையும் எதிர்பாராமல் நம்மைக் கடாக்ஷிப்பதன் பலனாக, தனக்கே உரியதான சிறந்த திருமேனியைக் கொண்ட ஸர்வேச்வரனை அனுபவிப்பதால் ஏற்படுவதான மிகுந்த அன்பின் காரணமாக உண்டானதாகும். ஆகவே இந்த வெறியாடல் என்பது இதற்கு மருந்தாகாது. மேலும் இது அவனுக்கு மட்டுமே அடிமை என்ற தன்மைக்கு விரோதத்தை ஏற்படுத்தும்; இதனால் ஆத்ம ஸ்வரூபத்தை அழித்தும்விடும்”, என்பதாகும். இப்படியாக அந்தத் தோழி, மற்ற ஸம்பந்தங்களை திருவாய்மொழி (4-6) – தீர்ப்பாரை யாம் இனியும் – என்பதில் நீக்கினாள். – (ஆசை அறுத்து) - மேலும் அவள் தொடர்ந்தாள். திருத்துலைவில்லி மங்கலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டுள்ள பெண்பிள்ளையை அதிலிருந்து விலக்க எண்ணும் தாய்மாரை நோக்கி அந்தத் தோழியானவள், “திருவாய்மொழி (6-5-1) - இவளை நீரினியன்னைமீர் உமக்காசையில்லை - என்று கூறுவதற்கு ஏற்ப திருத்துலைவில்லி மங்கலத்திற்கு இவளை அழைத்துச் சென்று இவளுக்கு இந்தக் காதலை ஏற்படுத்தியது நீங்கள் அல்லவோ? இயல்பாகவே நம்முடைய காதலனாகிய ஸர்வேச்வரனிடம் இவளுக்கு உள்ள இந்தக் காதலை உங்களால் விலக்க இயலாது. ஆகவே இவள் விஷயத்தில் உங்களுக்கு ஆசை அற அமையும்”, என்றாள். இந்தத் திருவாய்மொழி மூலம், அர்ச்சாவதாரம் என்பதான மிகவும் எளிமையான விஷயமே உபாயமாக உள்ளதன் காரணமாக, எப்போதும் ஸர்வேச்வரனை அடையவேண்டும் என்பதன் காரணமாக அவனே உபாயம் என்பதில் உள்ள உறுதியானது, அர்ச்சாவதாரத்தின் எளிமையை உணர்ந்ததால் ஏற்பட்ட காதலுடைய பதற்றம் என்ற உபாயத்தில் கொண்டு சேர்த்துவிடுமோ என்ற சந்தேகம் காரணமாக அதனை நீக்க முயலும்போது. ஸர்வேச்வரனுடைய அடிமையாக உள்ள இந்த ஆத்மாவிற்கு இயல்பாகவே அவனிடம் அமைந்த இந்தக் காதல் ஸர்வேச்வரனுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக மட்டுமே அமையும் அல்லாமல், உபாயத்தில் சேராது; இயல்பாகவே எஜமானனாகிய ஸர்வேச்வரனுடைய மேன்மை காரணமாக வந்த இந்தக் காதலைத் தள்ளவும் இயலாது; இதனைத் தன்னால் நீக்க இயலும் என்று எண்ணுகிற சுயசுதந்திரமானது, “அவனுக்கு மட்டுமே வசப்பட்ட நிலை” என்பதற்கு விரோதமானது என்பதால், கைவிடத்தக்கது என்று தனது ஸம்பந்தத்தை விலக்குகின்ற திருவாய்மொழி (6-5) – துவளில் மாமணியும் – என்ற திருவாய்மொழியில் விளக்கினாள். – (அறத்தொடு நின்ற) - நாயகியின் திருமண வயதை அறிந்த உறவினர்கள் அவளுடைய ஸ்வயம்வரத்திற்காக அரசர்களை வரவழைக்கும் விதமாக மணமுரசை அறிவித்தனர். அப்போது திருப்புலியூரில் உள்ள ஸர்வேச்வரனோடு நாயகிக்கு ஏற்பட்ட சேர்க்கையை நாயகியின் வடிவிலும் பேச்சிலும் உண்டான மாற்றங்கள் மூலம் அறிந்த கொண்ட அவளுடைய உயிர்த்தோழியான ஒருத்தி தனது மனதில், “இவள் நாச்சியார் திருமொழி (1-5) - மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் - என்பதற்கு ஏற்ப தன்மை கொண்டவளாக உள்ளாள். இந்நிலையில் இந்தச் செய்தி இவள் காதில் விழுந்தால் இவள் நமக்கு உயிருடன் கிடைக்கமாட்டாள். ஆகவே இவளைக் காப்பாற்ற வேண்டும்” என்று தீர்மானித்து உறவினர்களிடம் சென்றாள். அவர்களிடம் அந்தத் தோழி, “இவளுக்குத் திருப்புலியூரில் உள்ள ஸர்வேச்வரனுடன் சேர்க்கை உண்டானது என்று தோன்றுகிறது. அவனுடைய திருக்கல்யாண குணங்களையும், செய்கைகளையும் குறித்தே எப்போதும் வாய் ஓயாதபடி புலம்புகிறாள். இவ்விதம் உள்ளபோது நீங்கள் இவளுக்குத் திருமணம் செய்ய எண்ணுவது சரியல்ல”, என்றாள். இதற்கு உறவினர்கள், “சரி, ஆனால் இவளுக்கு ஏற்றபடியான திருமேனி அழகு, ஆபரணங்களின் ஒளி போன்ற நாயகனுக்குத் தேவையான லக்ஷணங்கள் அவனுக்கு உள்ளதா?”, என்று கேட்டனர். இதற்குத் தோழி, “அவை ஒன்றிலும் குறையில்லை. அவை அவனிடம் இல்லையென்றாலும், இவள் அவனுக்கு மட்டுமே வசப்பட்டவள் என்றான நிலையை மிகவும் தெளிவாகக் காணலாம். ஆகவே நீங்கள் செய்யும் இந்த ஏற்பாட்டைத் தவிர்ப்பீர்களாக”, என்று நடுநிலை மாறாமல் தர்மம் உரைத்தாள். இப்படியாகத் திருமணத்தை விலக்கிய விதத்தைத் திருவாய்மொழி (8-9-1) - கருமாணிக்க மலை – என்பதில் காணலாம். மேலும் இந்தத் திருவாய்மொழியில், “பேற்றினை அடையவேண்டும் என்ற வேகத்தின் முதிர்ந்த நிலையை, உபாயத்தின் உறுதி நிலையில் கண்ட பின்னர், அது பகவானுக்கு மட்டுமே உரிமையாகிவிட்டது என்பதை அறியாமல், மற்றவர்களுக்கு உரிமையாகலாமோ என்று ஆலோசிக்க, அப்போது உண்டாகும் ஸம்பந்த ஞானமானது, அந்த ஆத்மா வேறு ஒருவருக்கு அடிமை என்ற பேச்சு, அதன் ஸ்வரூபத்தை அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது. மேலும் தனக்கு எஜமானனாகிய அவனிடம் உள்ள இனிமையாலும், அதனை அல்லாமல் வேறு எதனையும் காரணமாகக் கொண்டு ஏற்படாத அடிமைத்தன்மையாலும் இந்த ஆத்மா அவனுக்கு மட்டுமே அடிமையாகும்”, என்று கூறப்பட்டது. (மூன்றிலும் அநந்யார்ஹத்வம் தெரியும்) – தோழியின் சொற்களான இந்த மூன்று திருவாய்மொழிகளிலும், இந்த ஆத்மா மற்ற யாருக்கும் அடிமை இல்லை, அவனுக்கு மட்டுமே அடிமை என்னும் கருத்து வெளிப்பட்டது. ஆகவே இதன் மூலமாகத் தோழியானவள், “வெறிவிலக்கியும், ஆசை அறுத்தும், அறத்தொடு நின்றும்” என்பதற்கு ஏற்ப, மூன்று தன்மைகளால் இந்த ஆத்மாவானது மற்றவர்களுக்கு அடிமை அல்ல, தனக்குத்தானே அடிமை அல்ல, பகவானுக்கு மட்டுமே அடிமை என்று உரைத்த மூன்று திருவாய்மொழிகளும், அவள் “ஸர்வேச்வரன் – ஆத்மா” என்ற ஸம்பந்த ஞானத்துடன் கூறிய சொற்களே ஆகும் என்பது நன்றாக விளங்குகிறது. – (வாடி) – திருவாய்மொழி (2-4-1) – ஆடியாடி - என்ற திருவாய்மொழியில் உள்ளதான (2-4-1) – வாடிவாடும் - என்பதற்கு ஏற்ப அடியார்கள் கூட்டத்தைத் தன்னால் அடையப்பெறாத காரணத்தால் ஏற்பட்ட துன்பம் காரணமாக ஆதாரத்தை இழந்த தளிர் போன்று வாட்டம் அடைந்து. (மெலிந்து) – திருவாய்மொழி (4-2) – பாலனாய் ஏழுலகில் – என்பதில் உள்ளதான (4-2-10) - கண்ணன் கழல் துழாய் பொன்செய்ப் பூண் மென்முலைக்கென்று மெலியும் – என்பதற்கு ஏற்ப கையை விட்டு அகன்றதைக் குறித்து அதில் மேன்மேலும் ஆசை கொண்டு உடல் மெலிந்து. (பித்தேறி) - திருவாய்மொழி (4-4) – மண்ணையிருந்து துழாவி – என்பதில் உள்ளதான (4-4-6) - என் பெண் கொடியேறிய பித்தே - என்பதற்கு ஏற்ப அவனைப் போன்று ஒப்புமை உள்ள பொருள்களையும், அவனுடன் ஸம்பந்தம் கொண்ட பொருள்களையும் அவனாகவே எண்ணி அடையும்படியாக புத்தி தடுமாறி. (ஏறப் பேசி) - திருவாய்மொழி (5-6) - கடல் ஞாலம் – என்பதில் உள்ளதான (5-6-1) – ஈசன் வந்தேறக்கொலோ - என்பதற்கு ஏற்ப பிரிவாற்றாமை காரணமாகப் புலம்புவது அறியாமல், தன்னுள் ஸர்வேச்வரன் வந்து புகுந்தான் என்று கூறும்படியாக அவனாகவே பேசி. (கட்டிழந்து) - திருவாய்மொழி (6-6) – மாலுக்கு - என்பதில் உள்ளதான (6-6-10) – கற்புடையாட்டி யிழந்தது கட்டே - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனைப் பிரிந்த துன்பம் காரணமாகச் சரீரம் முழுவதையும் இழந்து. (அகன்று) – திருவாய்மொழி (6-7) – உண்ணும் சோறு – என்பதில் உள்ளதான (6-7-6) – இன்று எனக்கு உதவாது அகன்ற - என்பதற்கு ஏற்ப தன்னைப் பிரிந்து துன்பப்படுகின்ற இந்த ஆபத்து நிலையில், எனக்கு உதவாமல் போனாள் என்னும்படியாக அகன்று சென்று. (சார்வதே வலிமை) - திருவாய்மொழி (7-2) – கங்குலும் பகலும் – என்பதில் உள்ளதான (7-2-5) – சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல் - என்பதற்கு ஏற்ப அவனை அடைந்து அவனுடைய அருகிலேயே உயிரை விடவேண்டும் என்று உறுதியாக உள்ள தன்மை. (ஸதனம் ஆமோ என்று) – உபாஸகர்கள் பரபக்தி நிலையை அடையும்போது அவர்களுக்கு உண்டாகின்ற வாட்டம், மெலிந்து போகுதல் முதலானவைகள் போன்று இவளுக்கும் இவை ஸாதனத்தில் வந்து நிற்குமோ என்று. (மாதா அஞ்சி முறைப்பட்டு) - தாயானவள் அச்சம் கொண்டு அவனையும், அவனைக் குறித்து வினவ வந்தவர்களையும் குறித்தும் இவள் “வாடியபடி நின்றாள், மெலிந்து நின்றாள்” என்பதும் போன்று. (முறைப்பட்டு முறையிடுகிற எழில்) – திருவிருத்தம் (62) - முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில்வண்ணனே - என்பதற்கு ஏற்ப அவனிடம் உள்ள க்ருபை அல்லாமல் இவளிடம் எந்தவிதமான செய்கைகளும் உபாயத்தில் சேராது; இப்படி உள்ளபோது இவ்விதம் இவளைத் துடிக்கும்படிச் செய்தல் என்பது உனது க்ருபைக்கும் பாதுகாக்கும் தன்மைக்கும் ஏற்புடையாயதாகுமோ என்று அழைக்கின்ற ஏழு திருவாய்மொழிகளிலும். (அத்யவ்யஸாயம் தெரியும்) - உபாயத்தில் உள்ள உறுதி வெளிப்படும் என்று கருத்து. ஆக இதன் மூலம், தாயுடைய சொற்களாக அமைந்துள்ள ஏழு திருவாய்மொழிகளும், உபாயத்தில் உறுதியுடன உள்ள நிலையில் வெளிப்பட்ட பேச்சுக்கள் என்பது தெளிவாகிறது. – (புத்ரி பலகால் ஆள்விட்டு) - நாயகியானவள், திருவாய்மொழி (1-4-1) - அஞ்சிறைய மடநாரை – என்றும், (6-1-1) – வைகல் பூங்கழி - என்றும், (6-8-1) – பொன்னுலகாளீர் - என்றும், (9-7-1) – எங்கானல் - என்றும் உள்ள நான்கு திருவாய்மொழிகளிலும், நாயகன் வரும்வரை காத்திருக்க இயலாமல் அவனுக்குத் தூதுவிட்டு. (ஆற்றாமை சொல்லி) - திருவாய்மொழி (2-1) – வாயும் திரையுகளில் - என்றுள்ள திருவாய்மொழியில் உள்ளதான (2-1-7) - ஆற்றாமை சொல்லி அழுவோமை - என்பதற்கு ஏற்ப, அனைத்து பொருள்களும் ஸர்வேச்வரனைப் பிரிந்து துன்பம் அடைந்து துக்கத்தில் இருப்பதாக எண்ணி, அவற்றையும் தன்னைப் போன்ற துக்கம் கொண்டவைகளாகக் கொண்டு புலம்பி. (கவராதவைவிட்டு) - திருவாய்மொழி (4-8) – என்பதில் உள்ளதான (4-8-1) – மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம் - என்பதற்கு ஏற்ப அவனால் விரும்பப்படாமல் உள்ளவற்றைத் தானும் வெறுத்து. (இரைக்க மடல் எடுத்து) - திருவாய்மொழி (5-3) – மாசறு சோதி – என்பதில் உள்ளதான (5-3-10) – நாடுமிரைக்கவே யாம் மடலூர்தும் – என்பதற்கு ஏற்ப உலகம் இரைக்கும்படியாக மடல் ஊர்வேன் என்று. (கண்புதையப் போக்கற்று) - திருவாய்மொழி (5-4) – ஊரெல்லாம் துஞ்சி - என்பதில் உள்ளதான (5-4-6) – பின்னின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னின்றிராவூழி கண்புதைய மூடிற்றால் – என்பதற்கு ஏற்ப காதல் நோயானது இரவுப்பொழுது என்பது கல்பம் போன்று பெரிதாக இவளை வருத்துவது என்ற ஒரே செயலில் நோக்கம் கொண்டதாக சூழ்ந்து நிற்பதால், செல்லும் இடம் அறியாமல். (உருநெஞ்சுள் எழ) – (5-5) – எங்ஙனேயோ – என்பதில் உள்ளதான (5-5-10) - சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள் எழும் – என்பதற்கு ஏற்ப ஒளிவெள்ளம் என்ற அலைகளுக்கு நடுவில் ஒளிப்பிழம்பு போன்று காணப்படுவதான, இந்த உலகத்துப் பொருள்களுடன் தொடர்பு அற்றதான அவனுடைய திருமேனியானது அன்பு மற்றும் அன்பற்ற நிலை ஆகிய அனைத்தும் ஒரே போன்று நிற்கும்படியாக நெஞ்சத்தில் ப்ரகாசிக்க. (கூடுநாள் தேடி) - திருவாய்மொழி (5-9) – மானேய் நோக்கி - என்பதில் உள்ளதான (5-9-1) - திருவல்லவாழுறையும் கோனாரை அடியேனடி கூடுவதென்று கொல் - என்பதற்கு ஏற்ப அவனுடன் சேரும் நாளை ப்ரார்த்தனை செய்து, அந்த ப்ரார்த்தனையில் நிலை நின்றபோது அவன் காலதாமதம் செய்து வந்ததால். (தாழ்த்ததுக்கு ஊடி) – திருவாய்மொழி (6-2) – மின்னிடை மடவார் - என்பதில் உள்ளதான (6-2-1) – போகு நம்பீ - என்பதற்கு ஏற்ப காதல் காரணமாக உண்டான கோபத்தால் ஊடி. (உசாத்துணை அற்று) – திருவாய்மொழி (7-3) – வெள்ளைச் சுரிசங்கு - என்பதில் உள்ளதான (7-3-4) - என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார் இனியாரைக் கொண்டென்னுசாகோ – என்பதற்கு ஏற்ப அவனாலே கவரப்பட்ட சிந்தனை கொண்டவள் என்பதால் வேறு வழித்துணை யாரும் இன்றி. (சூழவும் பகைமுகம் செய்ய) – திருவாய்மொழி (7-7) – ஏழையராவி - என்பதில் உள்ளதான (7-7-8) - கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றனவே – என்பதற்கு ஏற்ப அவனைப் போன்றே உள்ளதன் காரணமாகத் துன்புறுத்துகின்ற பொருள்கள் ஒரு பக்கம் துன்புறுத்த. (தடை நில்லாதே) – திருவாய்மொழி (8-2) - நங்கள் வரிவளை – என்பதில் உள்ளதான (8-2-7) - காலம் பல சென்றும் காண்பதாணை யுங்களோ டெங்களிடையில்லை – என்பதற்கு ஏற்ப தனக்கு நன்மையை உரைக்கின்ற தாய்மார்கள் மற்றும் தோழிகளுடைய சொற்களை மீறி. (புயக்கற்று) – திருவாய்மொழி (9-5) – இன்னுயிர்ச்சேவல் - என்பதில் உள்ளதான (9-5-10) – இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது – என்பதற்கு ஏற்ப அவனைப் போன்றே உள்ள பொருள்களைக் கண்டு நொந்து உயிர் துறப்பது என்று தீர்மானித்தவளாக. (மாலையும் காலையும் பூசல் இடுகிற) – திருவாய்மொழி (9-9) – மல்லிகை கமழ் தென்றல் - என்ற திருவாய்மொழியில் மாலைப் பொழுதானவுடன் பசுக்கூட்டங்கள் திரும்பும்போது அவற்றின் முன்பு க்ருஷ்ணனைக் காணாமல் தன்னை வருத்தும் பல பொருள்களால் மேலும் துன்பம் அடைந்து, திருவாய்மொழி (10-3) – வேய்மரு தோளிணை – என்ற திருவாய்மொழியில், காலைப்பொழுதில் பசுக்களை மேய்க்க க்ருஷ்ணன் புறப்படும்போது அவனிடம், “நீ பசு மேய்க்கச் செல்லும்போது என்னை அனைத்துப் பொருள்களும் துன்புறுத்துகின்றன”, என்று அவனை அழைத்தபடி செல்கின்ற. (பதினேழில் துவரையும் தெரியும்) – இப்படியாகக் கூறப்பட்ட பதினேழு திருவாய்மொழிகளில், பேற்றில் உள்ள பதற்றமானது வெளிப்படுகிறது என்று கருத்து. இதன் மூலம் நாயகி உரைப்பதான பதினேழு திருவாய்மொழிகளும் பேறு கிட்டவேண்டும் என்ற பதற்றம் காரணமாக நின்ற நிலையில் உரைத்த சொற்கள் என்பது தெளிவாகிறது.