Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 133)
இரண்டாம் ப்ரகரணம்
ஸம்பந்தோபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தைகளுக்குத் தோழி தாயார் மகளென்று பேர்.
– ஏவம்பூத பக்திதசையில் இவர் பெண் பேச்சாகப் பேசுமிடத்தில் தோழி தாய் மகள் என்று த்ரிவிதமாகப் பேசுகிறவிதுக்குக் கருத்தென்னென்னுமபேக்ஷையிலே அத்தை ப்ரகாசிப்பிக்கிறார் மேல் (ஸம்பந்தோபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகளென்று பேர்) - என்று.
– இப்படிப்பட்டதான பக்தி நிலையில், இவர் ஒரு பெண்ணைப் போன்று பேசும்போது தோழி, தாய், மகள் என்பதான மூன்று விதங்களில் பேசும் இதற்கு என்ன கருத்து என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.
– அதாவது, தோழியாவாள், நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவளாகையாலே திருமந்த்ரத்தில் ப்ரதம பதத்தால் ஈச்வரனோடு ஆத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹ சேஷத்வாதி ஸம்பந்த ஜ்ஞாநமே அவனோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே, அந்த ஸம்பந்த ஜ்ஞாநமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழியென்றும். தாயாராவாள், பெற்று வளர்த்து பெண்பிள்ளை ப்ராப்த யௌவநையாய் நாயக விஷயத்தில் அதிமாத்ர ப்ராவண்யத்தாலே அவனிருந்தவிடத்தேறப் போக வேணுமென்று பதறுமளவிலும், அவன் தானே வரக்கண்டிருக்கையொழியப் படி கடந்து புறப்படுகை குலமர்யாதைக்குப் போராதென்று நிஷேதித்துப் போருமவளாகையாலே, ஸித்தோபாயத்தைப் பற்றினார்க்கு ப்ராப்தி விளம்ப ஹேதுவில்லாமையாலே சீக்ரமாக ப்ராப்யத்தைப் பெறவேணுமென்கிற அந்த த்வரையினுடைய உத்பத்த்யாதிகளுக்கு ப்ரதம ஹேதுவாய், அந்த த்வரை ப்ராப்ய வைலக்ஷண்ய தர்சநத்தாலே க்ரமப்ராப்தி பற்றாமல் முறுகி நடக்குமளவில், இது ப்ரபந்நகுல மர்யாதைக்குச் சோரதென்று நிஷேதித்து, சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்கவேணுமென்று இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற மத்யம பத ப்ரதிபாதி தோபாயாத்யவஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாயாரென்றும். தலைமகளாவாள், இயற்கையிலே புணர்ந்து நாயகன் வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டுக் குலமர்யாதைகளையும் பாராதே கிட்டியல்லது தரியேனென்னும் பதற்றத்தை யுடையளாகையாலே ப்ரதம மத்யம பதங்களால் அறுதியிடப்பட்ட சேஷியாய் சரண்யனானவனுக்கு சரம பத ப்ரோக்தமான ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலக்ஷண்யத்தை யநுஸந்தித்து ததநுபவ விளம்பா க்ஷமத்வத்தாலே ததேகோபாயத்வாத்யவஸாயத்தையு மதிக்ரமித்துக் கிட்டி அநுபவித்தல்லது தரியாதபடி நடக்கிற ப்ராப்ய த்வரையாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையை மகளென்று பேரிட்டுச் சொல்லக் கடவதென்கை. ஜ்ஞாநாவஸ்த்தைக ளென்னாமல் ப்ரஜ்ஞாவஸ்த்தைகளென்றது த்ரிவிதாவஸ்த்தையும் இவர்க்கு ஸர்வகாலமு முண்டென்னு மிடம் தோற்றுகைக்காக. “ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மதா” என்னக் கடவதிறே. பத த்ரயார்த்த ஜ்ஞாநமும் திருவுள்ளத்தில் எப்போது முண்டாயிறேயிருப்பது.
– (ஸம்பந்தத்தில் உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞாவஸ்தைக்குத் தோழி என்று பேர்) - தோழி என்பவள், நாயகன் மற்றும் நாயகி ஆகிய இருவரையும் ஒன்று கூட வைத்துச் சேர்ப்பவள் ஆவாள். திருமந்த்ரத்தில் உள்ள முதல் பதமான “ஓம்” என்பதன் மூலம், ஸர்வேச்வரனோடு ஆத்மாவிற்குக் கூறப்பட்டதான “இந்த ஆத்மா அவன் ஒருவனுக்கு மட்டுமே அடிமை” என்னும் அவனுக்கும் நமக்கும் இடையே உள்ள ஸம்பந்தத்தை உணர்த்தும் ஞானம் என்பதே, அவனோடு இந்த ஆத்மா சேர்வதற்குக் காரணமாக உள்ளது. ஆகவே அத்தகைய ஸம்பந்த ஞானத்தையே “தோழி” என்று கூறினார். – (உபாயத்தில் துணிவு ஆகிய ப்ரஜ்ஞாவஸ்தைக்குத் தாயார் என்று பேர்) – தாய் என்பவள் குழந்தையைப் பெற்று, வளர்த்து, தனது பெண்பிள்ளை தகுந்த பருவம் வந்தவுடன் நாயகன் ஒருவனிடம் கொண்ட அளவு கடந்த ப்ரேமை காரணமாக அவன் உள்ள இடம் தேடிப் போகவேண்டும் என்று பதறியபடி உள்ளபோதும், அவன் தனது இடம் வரும்வரை பொறுக்க இயலாமல் படியைத் தாண்டிப் புறப்படுதல் என்பது குல மரியாதைக்கு ஏற்காது என்று எண்ணும்போதும், அந்த மகளைத் தடுப்பவள் ஆவாள். ஸர்வேச்வரன் என்ற ஸித்தோபாயத்தைப் பற்றியவர்கள் அவனை அடைவதற்கான காலம் அதிகமாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லாமல் உள்ளதால், விரைந்து “அவனை அடைதல்” என்ற பேற்றை அடையவேண்டும் என்னும் வேகம் பிறப்பதற்கான முதல் காரணமாக உள்ளதால், அந்த விரைவு என்பது, அடையப்படவுள்ள பேற்றின் மேன்மையைக் கண்டதால் எந்தவிதமான முறைகளையும் வரிசையாகப் பின்பற்றாமல் ஓடும்படிச் செய்கிறது. இந்த நிலையானது ப்ரபந்நர்கள் குலமரியாதைக்கு ஏற்காது என்று தடுத்து, எஜமானனாகிய ஸர்வேச்வரன் தானாகவே வந்து நம்மை ஏற்கும்வரை காத்திருக்கவேண்டும் என்று இந்த வேகத்தின் துடிப்பை அடக்குவது திருமந்த்ரத்தின் நடுப்பதமான “நம:” என்பதாகும். ஆகவே இவ்விதம் உபாயத்தில் உறுதியாக நிலைத்தல் என்ற இந்த நிலையே தாயார் என்கிறார். – (பலத்தில் பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்தைக்கு மகள் என்று பேர்) - நாயகி இயல்பாகவே நாயகனுடன் சேர்ந்து, அவனுடைய ஒப்பற்ற சிறப்புகளில் ஈடுபட்டு நின்று, தனது குலமரியாதைகள் எதனையும் ஆராயாமல், அவனுடன் சேரவில்லை என்றால் உயிர் தாங்கமாட்டேன் என்னும் பதற்றம் கொண்டவள் ஆவாள். திருமந்த்ரத்தில் உள்ள “ஓம்” என்னும் முதல் பதம், “நம:” என்னும் நடுப்பதம் ஆகிய இரண்டாலும் உறுதியாகக் கூறப்பட்ட எஜமானனும், அனைவருக்கும் சரணம் புகத்தக்கவனும் ஆகிய ஸர்வேச்வரனுக்கு, திருமந்த்ரத்தின் இறுதி பதமான “நாராயண” என்பதன் மூலம் கூறப்பட்டதான ஸ்வரூபம், ரூபம், குணம் மற்றும் விபூதி ஆகியவற்றால் எற்பட்ட சிறப்புகளை எப்போதும் எண்ணியபடி உள்ளதால், அத்தகைய அனுபவம் கிடைக்கும்வரை ஏற்படும் காலதாமதத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமல், “அவன் மட்டுமே அவனை அடைய வைக்கும் உபாயம்” என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ள விதியையும் மீறி, அவனை அடைந்தால் மட்டுமே உயிர் தாங்கும், இல்லையேல் தரிக்காது என்று நடப்பதான பலன் மீது உள்ள பதற்றத்தை மகள் என்று கூறினாள். ஞானத்தின் பல்வேறு நிலைகள் என்று கூறாமல் “ப்ரஜ்ஞாவஸ்தை” என்று ஏன் கூறவேண்டும் என்றால், இந்த மூன்றுவிதமான நிலைகளும் இவருக்கு எப்போதும் உள்ளது என்று விளக்கவே ஆகும். ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மதா - மூன்று காலத்தையும் அறிவதே ப்ரஜ்ஞாவஸ்தை – என்றது காண்க. மேலும் திருமந்த்ரத்தில் உள்ள மூன்று பதங்களுடைய பொருள் குறித்த ஞானம் இவருக்கு எப்போதும் நிலைத்து உள்ளதாகும்.