Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 131)

இரண்டாம் ப்ரகரணம்

பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமா போலே நெக்கொசிந்து கரைந்தலைந்திடிந்து உடையப் பெருகு (மிகு) காதல் கடலிடங் கொண்ட கடலை பஹுமுகமாக அவகாஹிக்கும்.

இப்படி யவஸ்தாந்தராபந்நரானாலும், தாமான தன்மையால் செல்லும் அபிநிவேசமும், இவர்க்குக் குறையாதென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் மேல் (பெருக்காறென்று தொடங்கி).

– இப்படியாக பலருடைய தன்மைகளை இவர் அடைந்தாலும், தானாக நின்று உரைக்கும் காதல் என்பதும் இவரிடம் குறையாது என்பதை ஓர் உதாரணத்தால் கூறுகிறார்.

– அதாவது, கிண்ணகமெடுத்தவாறு பலதலையாய்ப் பாய்ந்து செல்லாநிற்க தனக்கொரு குறைவின்றியே, “பெயருங் கருங்கடலே நோக்குமாறு” என்கிறபடியே தனக்குப் புகலான கடலை நோக்கிச் சென்று புகுமாப்போலே, “நெக்கொசீந்து கரையும்”, “நீராயலைந்து”, “நெஞ்சிடிந்து”, “என்மனமுடைவது மவர்க்கே” என்று உடை குலைப்பட்டு சிதிலராய் பரவசராய் த்ரவீபூதராய் நிலைகலங்கி நெஞ்சுகட்டழிந்து உருக்குலைந்து போம்படி “பெருகுமால் வேட்கை”, “கழியமிக்கதோர் காதல்” என்கிறபடியே கரையழியப் பெருகுகிற காதலானது “கடலிடங்கொண்ட கடல்வண்ணா” என்கிறபடியே ஒரு கடலொரு கடலிலே சாய்ந்தாற்போலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளின ச்ரமஹரமான வடிவையுடைய பெரியபெருமாளாகிற அபரிச்சேத்ய வஸ்துவைத் தாமான தன்மையாலும் அவஸ்தாந்தரா பத்தியாலுமுண்டான பேதத்தாலே பலமுகமாகச் சென்று அவகாஹிக்கு மென்கை. இத்தால் உக்தவக்ஷ்யமாணா வஸ்தைகளுக்கெல்லாமுடலான விவருடைய பக்தி வைபவம் ப்ரதிபாதிக்கப்பட்டது.

– (பெருக்காறு பலதலைத்து) - வெள்ளம் எடுத்த ஆறு ஒன்று பல கிளைகளாகப் பிரிந்து சென்று பாய்ந்து ஓடினாலும், இவ்விதம் பலவாகப் பிரிந்தாலும், எந்தவிதமனா குறையும் இன்றி, (கடலை நோக்குமாபோலே) - முதல் திருவந்தாதி (67) – பெயருங் கருங்கடலே நோக்குமாறு – என்பதற்கு ஏற்ப, தான் சென்று சேர்வதற்கு ஏற்ற இடமாக உள்ள கடலை நோக்கிச் சென்று, அதில் சேர்ந்து விடுகிறது. இது போன்று, நம்மாழ்வார் நிலையைக் கூறுகிறார். (நெக்கு ஒசிந்து கரைந்து) - திருவாய்மொழி (6-5-2) – நெக்கொசிந்து கரையும் – என்றும், (அலைந்து) - திருவாய்மொழி (5-8-1) – நீராய் அலைந்து - என்றும், (இடிந்து) - திருவாய்மொழி (9-6-2) – நெஞ்சு இடிந்து - என்றும், (உடைய) - திருவாய்மொழி (9-3-6) - என் மனம் உடைவதும் அவர்க்கே - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளம் உடைந்து, உருவம் குலைந்து, பரவசம் மிகுந்து, நீராய் உருகி, தனது நிலை தடுமாறி, நெஞ்சம் உறுதி இழந்து போகும்படியாக. (பெருகு காதல்) – திருவாய்மொழி (9-6-1) - பெருகுமால் வேட்கை – என்றும், திருவாய்மொழி (5-5-10) – கழியமிக்கதோர் காதல் – என்றும் கூறுவதற்கு ஏற்ப கரை அழியும்படியாகப் பெருகும் காதல் என்பது, (கடல் கொண்ட கடலை) - திருவாய்மொழி (7-2-7) – கடலிடம் கொண்ட கடல்வண்ணா - என்பதற்கு ஏற்ப ஒரு கடலில் மற்றொரு கடல் சாய்ந்துள்ளது போன்று திருப்பாற்கடலில் கண்வளர்ந்தபடி உள்ளவனும், காண்பதற்கு இனிமையானதும் களைப்பை நீக்குவதும் ஆகிய வடிவத்தைக் கொண்டவனும் ஆகிய பெரியபெருமாள் என்னும் அளவிட்டு உரைக்க இயலாத பொருளை. (பஹுமுகமாக அவகாஹிக்கும்) - தானான தன்மையில் நின்றும் [அதாவது மற்றவர்கள் தன்மையில் நிற்காமல், நம்மாழ்வார் என்னும் தன்னுடைய தன்மையில் நின்று], மற்ற பலவிதமான தன்மைகளில் நின்றும் [தாய், தோழி, நாயகி போன்ற தன்மைகள்] பலவிதமாகச் சென்று சேருவார். இதன் மூலம் இதுவரை கூறப்பட்டவை, இனிக் கூறப்பட உள்ளவை ஆகிய பலவிதமான தன்மை மாறுபாடுகளுக்கு ஆதாரமாக உள்ள இவருடைய பக்தி வைபவம் உரைக்கப்பட்டது.