Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 130)
இரண்டாம் ப்ரகரணம்
எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலாவடிமைக்குப் பாஞ்சாலி படுத்துமதும் கௌஸல்யாநுவ்ருத்தியு மொப்பாக்குகை பரிசு.
இப்படி யிவர்க்கிவ்வவஸ்தை விளையும்படி ஈச்வர விக்ரஹ வைலக்ஷண்யம் இவர் பும்ஸ்த்வத்தையழித்து ஸ்த்ரீத்வ பாவனையை ஜநிப்பித்ததுக்கும், இத்திருமேனியோடே யிவர்கிவ்விஷயத்தில் அநேகவிதாநுவ்ருத்திக ளுண்டானதுக்கும், த்ரௌபதி கௌஸல்யைகள் படிகளை த்ருஷ்டாந்தமாகச் சொல்லலாமோ வென்னு மாகாங்க்ஷையிலே இதுக்கவற்றை த்ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலமென்னுமிடத்தை தர்சிப்பிக்கிறர் (எழுவதோருருவென்று தொடங்கி).
– இப்படியாக இவருக்கு இந்த நிலை ஏற்படும்படியாக, ஸர்வேச்வரனுடைய திவ்யமங்கள திருமேனியின் மேன்மையானது, இவருடைய ஆண்மகன் என்ற நிலையை மாற்றி, நாயகி போன்று இவர் மாறியதற்கும், இந்தத் திருமேனி கொண்ட ஸர்வேச்வரன் விஷயத்தில் பலவிதமான கைங்கர்யங்களை இவர் செய்தபடி உள்ளதற்கும், த்ரௌபதி மற்றும் கௌஸலை போன்றவர்களுடைய தன்மைகளையும் உதாரணமாகக் கூறலாமோ என்னும் ஆசை எழுந்தது. இதனால் அவற்றை இங்கு உரைக்கிறார்.
– அதாவது “சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு” என்று தேஜோராசி மத்யே உந்நேயமாம்படி யிருப்பதாய், “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்கிறபடியே வயிரவுருக்காய் ஆண்களையும் பெண்ணுடை யுடுத்துமதான வவனுடைய அப்ராக்ருத விக்ரஹம் இவருடைய பும்ஸ்த்வத்தை யழித்து ஸ்த்ரீத்வ பாவனையை விளைத்ததுக்கும்; நிருபாதிக சேஷியான அவன் விஷயத்தில் நிரதிசய ப்ரேமத்தாலே “வழுவிலாவடிமை செய்ய” என்கிறபடியே தம்முடைய பாவவிசேஷங்களால் இவர் செய்கிற நாநாவிதாநுவ்ருத்திகளுக்கும் - “பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம் கநம், யாஸ்ஸ்த்ரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம் மநஸாயயு:” என்கிறபடியே ப்ராக்ருதமாய் மாம்ஸாஸ்ருகாதிமயமான தேஹத்தையுடைய த்ரௌபதி, ஸ்வதேஹ ஸௌந்தர்யத்தாலே ஸஜாதீயரை ஸ்த்ரீத்வத்தை யழித்து பும்பாவத்தை யடைவித்ததையும்; “யதாயதா ஹி கௌஸல்யா தாஸீவச்ச ஸகீவச பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி” என்கிறபடியே கௌஸலையார், ஔபாதிக பர்த்ரு விஷயத்தில் அவஸ்தாநுகுணமாகப் பண்ணின பாவவிசேஷ ப்ரயுக்த கதிபயாநுவ்ருத்தியையும் த்ருஷ்டாந்தமாக்குகை ஸுஸத்ருசமல்லாமையாலே ஸ்தூலமென்றபடி. இத்தாலொரு புடை ஒப்புச் சொல்லுவோமென்றாலும், இதுக்கது பற்றாதென்றதாயிற்று.
– (எழுவது ஒரு உரு அழிக்க) – திருவாய்மொழி (5-5-10) – சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு - என்பதற்கு ஏற்ப தேஜஸ் குவியலின் நடுவில் ஆராய்ந்து அறியும்படியாக உள்ளதாகவும், அயோத்யாகாண்டம் (3-28) – பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் – ஆண்களுடைய பார்வையையும் கவர்ந்து இழுக்கும் இராமன் – என்று கூறுவதற்கு ஏற்ப உறுதியான ஆண்களைக் கூட பெண்கள் போன்று மயங்கி நிற்கச் செய்வதாகவும் உள்ள அவனுடைய திவ்யமான திருமேனியானது, நம்மாழ்வாருடைய ஆண்மகன் என்ற தன்மையை மாற்றி, அவரை நாயகியாக நிற்கும்படிச் செய்ததை … (பாஞ்சாலி படுத்துமது ஒப்பாக்குகை பரிசு) - மஹாபாரதம் – பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம் கநம், யாஸ்ஸ்த்ரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம் மநஸாயயு: - தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்ட த்ரௌபதியுடைய சரீரத்தைக் கண்ட பெண்கள், ஆண்களுடைய தன்மையை தங்களுடைய மனதளவில் அடைந்தனர் - என்பதற்கு ஏற்ப இந்த உலகத்துடன் தொடர்பு கொண்டதாகவும், சதை மற்றும் இரத்தம் ஆகியவற்றால் உண்டானதும் ஆகிய சரீரம் கொண்ட த்ரௌபதி தனது சரீரத்தின் அழகு மூலம், தன் போன்ற பெண்களைக்கூட மயக்கி, அவர்களுடைய பெண் என்ற சிந்தனையை மாற்றி, அவர்கள் தங்களை ஆண்மகன் என்று கற்பனை செய்யும்படிச் செய்ததுடன் ஒப்பு நோக்கினால், இதற்கு அது பொருந்தாது. (செய்கிற வழுவிலா அடிமை) - எந்தவிதமான காரணமும் இன்றி இயல்பாகவே எஜமானனாகிய அவன் விஷயத்தில், எல்லையற்ற ப்ரேமை காரணமாகத் திருவாய்மொழி (3-3-1) – வழுவிலா அடிமை செய்ய - என்பதற்கு ஏற்ப தனது பல்வேறு நிலைகளில் நின்றபடி இவர் செய்யும் பலவிதமான கைங்கர்யங்களுக்கு … (கௌஸல்யா அநுவ்ருத்தி ஒப்பாக்குகை பரிசு) - அயோத்யாகாண்டம் (12-68) - யதாயதா ஹி கௌஸல்யா தாஸீவச்ச ஸகீவச பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி – கௌஸலை தனது வாழ்நாள் முழுவதும் வேலை செய்பவளாகவும், தோழியாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், தாயாகவும் நின்று அனைத்தையும் செய்தாள் - என்பதற்கு ஏற்ப கௌஸலை தனது கணவன் விஷயத்தில், அவன் தனது கணவன் என்ற உறவுமுறை காரணமாக, அந்தந்த நிலைகளுக்கு ஏற்றபடியாகச் செய்த தொண்டுகளை ஒப்பாகக் கூறலாம் என்றால், அது பொருந்தாது. ஆகவே எந்தவிதத்திலாவது ஒப்புமை கூறலாம் என்றால், இயலாது.