Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 129)
இரண்டாம் ப்ரகரணம்
எற்றைக்கு மென்றது தோன்றப் பிறந்து ஒப்பித்து வீசிக் காப்பிட்டுக் காட்டுக்கு முற்பட்டு தர்மம் சொல்லிக்கேட்டு சிஷ்யாதாஸீ பக்தைகளாய் பாடி வருடி இன்று வந்தென்பாரையும், சென்றாலூரும் நிவாஸதாஸ பேதம் கொள்வாரையும், தாமவராக பாவிப்பர்.
இப்படிப்பட்ட நெஞ்சயும் சுவையையுமுடைய இவர் தம்முடைய அபிநிவேசத்தாலே அவன் பிறவிக்கு அநுகுணாமாகப் பிறந்து அநேகாநுவ்ருத்திகளைப் பண்ணும் பிராட்டிமாரையும், அசேஷசேஷதைகரதிகராய் அநேகதாபவித்து அநேகவித கைங்கர்யங்களைப் பண்ணும் அநந்த வைநதேயாதிகளையும் அவர்கள் தானென்னலாம்படி பாவிப்பரென்கிறார் “எற்றைக்குமென்று” தொடங்கி.
– இப்படிப்பட்ட நெஞ்சத்தையும் சுவையையும் கொண்ட நம்மாழ்வார் தம்முடைய அளவு கடந்த ப்ரேமை காரணமாக, அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்றபடியாகப் பிறந்து அவனுக்குப் பலவிதமான தொண்டுகள் செய்யும் பிராட்டிமார்; செய்யவேண்டியதான கைங்கர்யங்களில் எந்தவிதமான குறையும் இன்றி, அவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன், அந்தந்த இடஙளுக்கு ஏற்றபடி பல ரூபங்கள் எடுத்து, அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி உள்ள ஆதிசேஷன், கருடன் போன்ற நித்யஸூரிகள் – முதலானவர்கள் நம்மாழ்வாராகிய தாமே என்று கூறலாம்படியாக எண்ணிக்கொள்வார் என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸ்ரீபூமிப்பிராட்டியவதாரமான ஆண்டாள் ப்ரார்த்தனை மூவர்க்கு மொக்குமாகையாலே “எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம்” என்று அநேக ஜந்மங்கள் பிறந்து உன்னோடே சேஷ சேஷி பாவமாகிற உறவையுமுடையோமாய், உனக்கே உகப்பான அடிமைகளை நாங்கள் செய்யவேணுமென் றபேக்ஷித்தமை தோன்ற, “தேவத்வே தேவ தேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷி, விஷ்ணோர் தேஹாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ்தநூம்” என்கிறபடியே ஈச்வரன் லோக ரக்ஷணார்த்தமாக தேவ மநுஷ்யாதி ஸஜாதீயனா யவதரிக்குமளவில், அவன் கொண்ட வடிவுக்கு அநுரூபமான வடிவு கொண்டு தோற்றுமவளாகையாலே, “ராகவத்வே பவத் ஸீதா” என்கிறபடியே அவன் சக்ரவர்த்தி திருமகனா யவதரித்தபோது தானும் ஸ்ரீஜநகராஜன் திருமகளாயவதரித்து. – “வராஹ ருதிராபேண சுசிநாச ஸுகந்திநா, அநுலிப்தம் பரார்த்யேந சந்தநேத பரந்தபம்” என்கிறபடியே திருவபிஷேகார்த்தமாக அலங்கரித்து, “ஸ்திதயா பார்ச்வதச்சாபி வாலவ்யஜந ஹஸ்தயா, உபேதம் ஸீதயா பூயச் சித்ரயா சசிநம் யதா” என்கிறபடியே அப்போதருகே ஸேவித்து நின்று திருவெண்சாமரம் பணிமாறி, அநந்தரம் சக்ரவர்த்தி மாளிகைக் கெழுந்தருளுகிறபோது, “பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸிதேக்ஷணா, ஆத்வாரமநு வவ்ராஜ மங்களாந்யபி தத்யுஷீ; பூர்வாம் திசம் வஜ்ரதரோ தக்ஷிணாம் பாது தே யம:, வருண: பச்சிமா மாசாம் தநேசஸ்தூத்தராம் திசம்” என்கிறபடியே பெருமாள் வடிவழகைக் கண்டு இது நமக்குத் தொங்கப் புகுகிறதோ வென்னும் வயிறுபிடியாலே அந்த:புர த்வாரத்தளவும் பின் சென்று மங்களாசாஸநம் பண்ணி, ததநந்தரம் காட்டுக்கெழுந்தருளுகிறதோது “அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குச கண்டகாந்” என்று தான் முற்பட்டு, ஸ்ரீதண்டகாரண்யத்தி லெழுந்தருளி யிருக்கிறபோது அவராயுதங்களை தரித்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்டு “ந ஹி மே ரோசதே வீர கமநம் தண்டகாந் ப்ரதி, காரணம் தத்ர வக்ஷ்யாமி வதந்த்யாச் ச்ரூயதாம் மம; த்வம் ஹி பாணதநுஷ்பாணி: ப்ராத்ரா ஸஹ வநம் கத:, த்ருஷ்ட்வா வநசராந் ஸர்வாத் கச்சித் குர்யாச் சரவ்யயம்; க்ஷத்ரியாணாஞ்ச ஹி தநுர்ஹுதா சஸ்யேந்தநாநிச, ஸமீபதஸ் ஸ்திதம் தோஜோ பல முச்ச்ரயதே ப்ருசம்” என்று இவர் ஸாயுதராய் நிற்கில் ஆரேனையும் மேல் விழுந்து ப்ரமாதம் விளையக் கூடுமென்று பயப்பட்டு, “தர்மாதர்த்த: ப்ரபவதே தர்மாத் ப்ரபவதே ஸுகம்” இத்யாதியாலே ஸர்வத்துக்கும் தர்மமே மூலமென்னுமிடத்தை ஸ்மரிப்பித்து, ஆனபின்பு ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை அநுஷ்டிக்க வமையுமென்று தர்மோபதேசத்தையும் பண்ணின பெரியபிராட்டியாரையும், – “அஹம் சிஷ்யாச தாஸீச பக்தாச த்வயி மாதவ, மத்க்ருதே ஸர்வபூதாநாம் லகூபாயம் வத ப்ரபோ” என்று ஸ்ரீவராஹநாயனார் பக்கலிலே பரமதர்மம் கேட்டு தந்மூலமாக சிஷ்யையும் தாஸியும் பக்தையுமாய், “உன்றன்னைப் பாடி” என்கிறபடியே கவிபாடி, “திருமகளும் புவியும் செம்பொற் றிருவடியினிணை வருட” என்கிறபடியே பெரியபிராட்டியாரோபாதி அவன் திருவடிகளைப் பிடித்து, “இன்று வந்தித்தனையு மமுது செய்திடப் பெறில் நானொன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னுமாளும் செய்வன்” என்று தன்னைக் கைங்கர்யங் கொண்டால் அதுக்கு ப்ரத்யுபகாரமும் பண்ணுவனென்ற ஸ்ரீபூமிப்பிராட்டியாரையும். – “சென்றால் குடையாம்” என்கிற பாட்டிலும், “நிவாஸ சய்யா” இத்யாதி ச்லோகத்திலும் சொல்லுகிறபடியே பகவத் விநியோகாநு குணமாக சத்ர ஸிம்ஹாஸந பாதுகாம் சுகாதி சரீர பேதம் கொண்டு ஸகலவித கைங்கர்யங்களையும் செய்யும் திருவநந்தாழ்வானையும்; “ஊரும் புட்கொடியும் அஃதே” என்கிற சந்தையிலும், “தாஸஸ் ஸகா” இத்யாதி ச்லோகத்திலும் சொல்லுகிறபடியே வாஹந த்வஜ விதாந வ்யாஜநாதி தேஹ பேதங்களைக் கொண்டு ஸகலவித கைங்கர்யங்களையும் செய்யும் பெரியதிருவடியும் போலே, இவரும் “பிறந்திட்டாள்” என்கிறபடியே பிறந்து, பிராட்டிமார் தசையிலே நின்று பேசும்படியான பல பாவ வ்ருத்திகளையும், “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டு நாம்” என்று ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும், உசிதமான ஸகல சேஷவ்ருத்திகளையும், பண்ணவேணுமென்னு மபிநிவேசாதிசயத்தையு முடையராகையாலே, பி்ராட்டிமாரையும் அநந்தாதிகளான ஸூரிகளையும், அவர்களுக்கும் தமக்குமொரு விசேஷமற அவர்கள் தாமாகவே பாவிப்ப ரென்றபடி.
– (எற்றைக்கும் என்றது தோன்ற) – ஸ்ரீபூமிப்பிராட்டியின் அவதாரமான ஆண்டாளுடைய ப்ரார்த்தனை என்பது மூன்று பிராட்டிமார்களுடைய ப்ரார்த்தனை போன்றே உள்ளது என்பதால், திருப்பாவை (29) - எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாமாட்செய்வோம் – என்பதற்கு ஏற்ப பலவிதமான பிறவிகள் எடுத்தாலும் உன்னுடன் “அடிமை – எஜமானன்” என்ற உறவுமுறையுடன் கூடியவர்களாகவும், உனக்கு மட்டுமே நீ விரும்பும் கைங்கர்யங்களை நாங்கள் செய்யவேண்டும் என்ற ஆசை கொண்ட நிலை வெளிப்படும்படியாக. (பிறந்து) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-145) - தேவத்வே தேவ தேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷி, விஷ்ணோர் தேஹாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ்தநூம் – அவன் தேவனாக அவதரித்தால் பிராட்டியும் தேவ சரீரம் எடுத்தும், மனிதனாக அவதரித்தால் இவள் மனித சரீரம் எடுத்தும், விஷ்ணுவின் அந்தந்த ரூபத்திற்கு ஏற்றபடியாகத் தானும் தனது சரீரத்தை பிராட்டி எடுத்துக்கொள்கிறான் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் இந்த லோகத்தைக் காப்பாற்றும்விதமாக தேவன், மனிதன் போன்ற பிறவிகளில் அந்தந்த பிறவி கொண்டவனாக அவதரிக்கும்போது, அவன் எடுத்துக்கொண்ட ரூபத்திற்கு எற்றபடியான ரூபம் கொண்டு அவதரிப்பவள் என்பதால், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-144) - ராகவத்வே பவத் ஸீதா - அவன் இராகவனாக அவதரித்தபோது இவள் சீதையாக அவதரித்தாள் - என்பதற்கு ஏற்ப அவன் சக்ரவர்த்தி திருகமனாய் அவதரித்தபோது தானும் ஸ்ரீஜனகராஜனின் திருமகளாக அவதரித்து. – (ஒப்பித்து) – அயோத்யாகாண்டம் (16-9) - வராஹ ருதிராபேண சுசிநா ச ஸுகந்திநா, அநுலிப்தம் பரார்த்யேந சந்தநேத பரந்தபம் – சிவந்த மேகம் போன்றதும், பிராட்டியின் ஸம்பந்தம் காரணமாகத் தூய்மையாக உள்ளதும், நறுமணம் நிறைந்ததும் ஆகிய சந்தனத்தைச் சீதையால் பூசப்பட்டவனும், பகைவர்களை நடுங்கச் செய்பவனும் ஆகிய இராமன் – என்பதற்கு ஏற்ப உள்ள இராமனைப் பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்காக அலங்காரம் செய்து. (வீசி) – அயோத்யாகாண்டம் (16-10) - ஸ்திதயா பார்ச்வத: ச அபி வாலவ்யஜந ஹஸ்தயா, உபேதம் ஸீதயா பூயச் சித்ரயா சசிநம் யதா - அருகில் நிற்பவளும், சாமரத்தைத் திருக்கரத்தில் கொண்டவளும் ஆகிய சீதையுடன் சித்திரை நக்ஷத்திரத்துடன் கூடிய சந்த்ரன் போன்றுள்ள – என்பதற்கு ஏற்ப இராமனுக்கு அருகே அமர்ந்து வணங்கியபடி வெண்மையான சாமரம் வீசி. (காப்பிட்டு) – அதனைத் தொடர்ந்து இராமன் தசரதனுடைய அரண்மனைக்கு எழுந்தருளும்போது, அயோத்யாகாண்டம் (16-21) – பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸிதேக்ஷணா, ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களாந்யபி தத்யுஷீ – தனது கணவனாகிய இராமனால் (நீ உன் தோழிகளுடன் ஆனந்தமாக இரு, நான் தசரதனைப் பார்த்துவருகிறேன்) நற்செய்தி உரைத்துக் கௌரவிக்கப்பட்டவளும் கருமையான கண்கள் கொண்டவளும் ஆகிய சீதை மங்களமான சொற்களைக் கூறியபடி வாசல்வரை வந்து இராமனை வழி அனுப்பினாள் - என்றும், அயோத்யாகாண்டம் (16-24) - பூர்வாம் திசம் வஜ்ரதரோ தக்ஷிணாம் பாது தே யம: வருண: பச்சிமாம் ஆசாம் தநேசஸ: உத்தராம் திசம் – கிழக்கில் இந்திரனும், தெற்கில் யமனும், மேற்கில் வருணனும், வடக்கில் குபேரனும் உம்மைக் காப்பாற்றட்டும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப இராமனுடைய வடிவழகைக் கண்ட சீதை, “இந்த நிலை நமக்கு நிலையாக இருக்குமோ” என்ற கவலை காரணமாக அவன் அந்தப்புரத்தை விட்டு வெளியே செல்லும்வரை பின் தொடர்ந்து சென்று புகழ்ந்து. (காட்டுக்கு முற்பட்டு) – பின்னர் இராமன் கானகம் செல்ல முனையும்போது, அயோத்யாகாண்டம் (27-6) - அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குச கண்டகாந் – உனக்கு முன்பாக நான் பாதையில் உள்ள புற்களையும் முட்களையும் அழித்தபடி செல்வேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, தான் முன்பாகச் செல்வதாக முனைந்து. – (தர்மம் சொல்லி) - ஸ்ரீதண்டகாரண்ய வனத்தில் இராமன் எழுந்தருளியிருந்தபோது, அவன் ஆயுதங்களுடன் நின்று நிலையைக் கண்டு, ஆரண்யகாண்டம் (9-13) – ந ஹி மே ரோசதே வீர கமநம் தண்டகாந் ப்ரதி, காரணம் தத்ர வக்ஷ்யாமி வதந்த்யா: ச்ரூயதாம் மம – வீரரே! தண்டகாரண்யத்தை நோக்கி நாம் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கான காரணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக - என்றும், ஆரண்யகாண்டம் (9-14) - த்வம் ஹி பாணதநுஷ்பாணி ப்ராத்ரா ஸஹ வநம் கத:, த்ருஷ்ட்வா வநசராந் ஸர்வாந் கச்சித் குர்யாச் சரவ்யயம் – அம்பையும் வில்லையும் கையில் ஏந்தியபடி, தம்பியுடன் கானகம் வந்துள்ளீர்கள்; காட்டில் யாரைக் கண்டாலும் நீவிர் அந்த பாணங்களைத் தொடுப்பீர் - என்றும், ஆரண்யகாண்டம் (9-15) - க்ஷத்ரியாணாம் ச ஹி தநு: ஹுதாசஸ்ய இந்தநாநி ச, ஸமீபத: ஸ்திதம் தோஜோ பலம் உச்ச்ரயதே ப்ருசம் – காரணம், நெருப்பின் அருகில் உள்ள விறகும், க்ஷத்ரியர் கையில் உள்ள வில்லும் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரிக்கும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, “இவர் ஆயுதமும் கையுமாக நிற்கும்போது யாருடனாவது யுத்தம் செய்ய வாய்ப்புண்டு”, என்று அச்சம் கொண்டு, ஆரண்யகாண்டம் (9-30) - தர்மாதர்த்த: ப்ரபவதே தர்மாத் ப்ரபவதே ஸுகம் - தர்மத்தால் பொருளும் இன்பமும் ஏற்படுகிறது - என்பது போன்ற வாக்கியங்களால் “அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது தர்மமே ஆகும்”, என்று நினைவூட்டி, தொடர்ந்து, “ஆகவே ஆயுதத்தை வைத்து, தவ வேஷத்திற்கு ஏற்ப தர்மத்தைக் கடைப்பிடிப்பதே நல்லது” என்று தர்ம உபதேசம் செய்த பெரியபிராட்டியாரையும். – (கேட்டு சிஷ்யா தாஸீ பக்தைகளாய்) - கைசிகபுராணம் – அஹம் சிஷ்யாச தாஸீச பக்தாச த்வயி மாதவ, மத்க்ருதே ஸர்வபூதாநாம் லகூபாயம் வத ப்ரபோ - ப்ரபுவே! மாதவா! நான் உன்னிடம் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் உள்ளேன். என் பொருட்டு அனைத்து உயிர்களும் கரை ஏறுவதற்கான உபாயத்தை அருளிச்செய்வீராக – என்பதற்கு ஏற்ப வராஹப்பெருமாளிடம் மிகவும் உயர்ந்த தர்மம் குறித்துக் கேட்டறிந்து, அதன் காரணமாக சிஷ்யையும் தாஸியும் பக்தையுமாக நின்று, (பாடி) - திருப்பாவை (27) – உன் தன்னைப் பாடி - என்பதற்கு ஏற்ப அவனைக் கவி பாடி. (வருடி) - பெரியதிருமொழி (7-8-1) - திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட – என்பதற்கு ஏற்ப பெரியபிராட்டியாரைப் போன்றே அவன் திருவடிகளைப் பிடித்து. (இன்று வந்து) – நாச்சியார் திருமொழி (9-7) - இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னுமாளும் செய்வன் – என்பதற்கு ஏற்ப, தன்னை அடிமையாகக் கொண்டால் அதற்கான ப்ரதியுபகாரங்களைச் செய்வேன் என்கிற ஸ்ரீபூமிப்பிராட்டியாரையும். – (சென்றால் நிவாஸ பேதம் கொள்வாரையும்) - முதல் திருவந்தாதி (53) – சென்றால் குடையாம் - என்ற பாசுரத்தில் உள்ளபடியும், ஸ்தோத்ரரத்னம் (40) - நிவாஸ ஸய்யா - இருப்பிடம் சயனிக்கும் மெத்தை - என்பது போன்ற ச்லோகங்களில் உள்ளபடியும் பகவானுடைய கைங்கர்யத்திற்கு ஏற்றபடி குடை, ஸிம்ஹாஸனம், பாதுகை, திருப்பரிவட்டம் போன்ற பலவிதமான சரீரங்களை எடுத்துக்கொண்டு அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி உள்ள ஆதிசேஷனையும். (ஊரும் தாஸ பேதம் கொள்வாரையும்) - திருவாய்மொழி (10-2-3) - ஊரும் புட்கொடியும் அஃதே – என்ற பாசுரத்திலும், ஸ்தோத்ரரத்னம் (41) – தாஸஸ் ஸகா - உனக்கு அடிமையாகவும் நண்பனாகவும் - என்ற ச்லோகத்திலும் கூறுவதற்கு ஏற்ப வாகனம், கொடி, விதானம், விசிறி போன்ற பலவிதமான சரீரங்களை எடுத்துக் கொண்டு அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி உள்ள கருடனையும். (தாம் அவராகப் பாவிப்பர்) – திருவாய்மொழி (6-5-10) – பிறந்திட்டாள் – என்பதற்கு ஏற்ப பிறந்து, பிராட்டிமார்களின் நிலைகளில் நின்று பேசும்படியான பலவிதமான சிறப்பான தன்மைகளையும்; திருவாய்மொழி (3-3-1) – ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டு நாம் - என்று அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்களிலும், அனைத்து நிலைகளிலும், அவனுக்கு ஏற்ற அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி இருக்கவேண்டும் என்பதான அளவு கடந்த ப்ரேமையும் கொண்டுள்ளதால் பிராட்டிமாரையும், ஆதிசேஷன் முதலான நித்யஸூரிகளையும், அவர்களுக்கும் தனக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று கொண்டாடி, அவர்களை தானாகவே எண்ணிக் கொள்வார்.