Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 128)
இரண்டாம் ப்ரகரணம்
குழலில் நெஞ்சம் அருகலில் சுவையுமானவிவர் அவர்களளவல்லர்.
– ஆக, இப்படி நித்யஸூரிகளில் தலைவராய், தொடர்ந்தடிமை செய்யப் பிறந்த லக்ஷ்மணாதிகளோடும், நித்ய ஸம்ஸாரிகளிலே அந்ய தமராய் வைத்து பகவத் ப்ரத்யாஸந்நராகப் பெற்ற தசரதாதிகளோடும் இவர்க்குண்டான ஸாம்யத்தையருளிச் செய்தார் கீழ். அவர்களனைவரிலும் இவர்க்குள்ள வேற்றத்தை அருளிச்செய்கிறார் மேல் “குழலில் நெஞ்சு மருகலில் சுவையுமான இவர் அவர்களளவல்லர்” என்று.
– இப்படியாக நித்யஸூரிகளுக்குத் தலைவராகவும், தொடர்ந்து கைங்கர்யம் செய்வதற்காக இங்கு வந்து பிறந்த லக்ஷ்மணன் முதலானவர்களோடும்; நித்யஸம்ஸாரிகளைக் காட்டிலும் வேறுபட்டவராக இந்த ஸம்ஸார உலகில் அவதரித்து பகவத் பக்தியுடன் விளங்கிய தசரதன் முதலானவர்களோடும் நம்மாழ்வாருக்கு உள்ள ஒப்புமையை அருளிச்செய்தார். அவர்களைக் காட்டிலும் இவருக்கு உள்ள ஏற்றத்தை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, “குழற்கோவலர்” என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே பிராட்டிமாரும் நித்யஸூரிகளு மவனுமான திரளிலே பற்றின நெஞ்சையுடையராய், “அருகலிலாய” என்கிற பாட்டிற் சொல்லுகிறபடியே பிராட்டிமாரோடும் திருவடி திருவநந்தாழ்வான் முதலான நித்யஸூரிகளோடும் ஓரோவகையாலே பரிமாறுமவன், அவர்களோடே பரிமாறுமாபோலே ஒருவழியாய் வந்த ரஸத்தைத் தந்து விடுகிறிலன் என்னளவில்; அவர்களெல்லார் பக்கலிலும் பண்ணுமாதரத்தை என் பக்கலிலே பண்ணாநின்றா னென்னும்படி எல்லா வழிகளாலுமுள்ள ஸம்ச்லேஷ ரஸத்தை அவன் தமக்கு விளைக்கையாலே போக ரஸமும் விஞ்சப் பெற்றவரான விவர், ஓரோ அவதார மாத்ரத்திலும் கேவலம் அவன்றன்னளவிலும் பற்றின நெஞ்சையுடையராய் பகவத் ப்ராவண்யம் காதாசித்கமாய் விஷயாந்தர ப்ராவண்யமும் கலசியிருப்பாரும்; இதர விஷய வைராக்ய பூர்வகமாக எப்போதும் நடந்து செல்லும் பகவத் ப்ராவண்யமுண்டாயும், ததீயரும் அவனுமான சேர்த்தியில் ரஸமறியாதாருமான தசரதாதிகளும் பரத்வாவதார விபாகமற அவகாஹித்த நெஞ்சையுடையராயும் ஒருவழியால் வந்த ரஸத்தைப் பெற்றிருக்கும் லக்ஷ்மணாதிகளுமான அவர்களில் அத்யந்த வ்யாவ்ருத்தரென்கை. ஆக, லக்ஷ்மணாதிகள் தசரதாதிகளோடும் இவர்க்குள்ள ஸாம்யத்தை தர்சிப்பித்தாப்போலே அவர்களில் இவர்க்குண்டான ஆதிக்யத்தையும் தர்சிப்பித்தாராயிற்று.
– (குழலில் நெஞ்சும்) – திருவிருத்தம் (3) – குழற்கோலவர் - என்ற பாசுரத்தில் கூறியதற்கு ஏற்ப பிராட்டிமார்கள், நித்யஸூரிகள் மற்றும் ஸர்வேச்வரன் என்றுள்ள இந்தப் பெருக்கூட்டத்தில் தனது மனதை வைத்தவராக. (அருகலில் சுவையுமான இவர்) – திருவாய்மொழி (1-9-3) – அருகலிலாய - என்பதில் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனாகிய அவன், பிராட்டிமார் அனுமன் ஆதிசேஷன் போன்ற நித்யஸூரிகளுடன் ஒவ்வொரு விதமாகக் கலந்து பழகுகிறான். இது போன்று எனக்கு ஏதோ ஒரு ரஸத்தை மட்டும் அளிப்பதில்லை; அவர்கள் ஒவ்வொரிடமும் காண்பிக்கும் தனித்தனி ஈடுபாட்டினை முழுவதுமாக எனக்கு மட்டுமே அளிக்கிறான் என்று கூறலாம்படி, அனைத்து விதங்களிலும் சேர்க்கை இன்பத்தை அவன் நம்மாழ்வாராகிய தனக்கு உண்டாக்குவதால் இன்பச் சுவையும் நிறம்பப் பெற்றவர் ஆகிறார். இப்படிப்பட்ட இவர் (அவர்கள் அளவு அல்லர்) - அவனுடைய ஒவ்வொரு அவதாரத்தில் மட்டுமே அவனிடம் தங்களுடைய நெஞ்சத்தைப் பறி கொடுத்து நின்றவர்கள்; பகவத் பக்தி என்பது ஒரு காலகட்டத்தில் மட்டுமே உள்ளதாய் மற்ற விஷயங்களின் மீது விருப்பமும் கொண்டவர்கள்; மற்ற விஷயங்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு என்பதை முன்னிட்டவர்களாய் பகவத் பக்தி ஏற்பட்டாலும் அவன் மற்றும் அவனுடைய அடியார்கள் என்ற சேர்க்கையில் உள்ள சுவையை அறியாத தசரதன் முதலானவர்கள்; பரத்வம் மற்றும் அவதாரம் என்றுள்ள வேறுபாடு காணாமல் இரண்டிலும் ஒரே போன்று ஈடுபாடுள்ள உள்ளத்தைக் கொண்டவர்களாக, ஒரு வழியால் வந்த இன்பத்தை அடைந்த லக்ஷ்மணன் போன்றவர்கள் – இவர்களைக் காட்டிலும் மிகமிக வேறுபட்டவர் ஆவார். ஆக லக்ஷ்மணன் முதலானவர்களுடன், தசரதன் முதலானவர்களுடன் நம்மாழ்வாருக்கு உள்ள ஒப்புமையைக் கூறியது போன்று, அவர்களைக் காட்டிலும் இவருக்கு உள்ள மேன்மையையும் காண்பித்தார்.