Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 127)
இரண்டாம் ப்ரகரணம்
அழுந்தொழும் ஸ்நேஹபாஷ்பாஞ்ஜலியோடே ருசிரஸாநுக்களில் கூவிக்கொள்ளும் பிரியாவடிமைக்குச் சரணே சரணென்று வாளும் வில்லுங்கொண்டு பந்துவும் பிதாவுமவரே யென்கையும், அன்னையென் செய்யிலென் ராஜ்யமும் யானேயென்று பெருஞ்செல்வமு மிச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவிக் குடிக்கிடந்த கையறவும், கோதிலடிமை உறுமோ வென்பித்த புலன்கொள் நித்ய சத்ரு விசிந்தநமுமான ப்ராதாக்கள், அப்பொழுதைக்கப்பொழுது போனாயென்னும் மாதாபிதாக்கள், செந்தீத் தண்காற்று இளநாகம் முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும் பள்ளிப்பிள்ளை, முற்றவிட்டு மற்றிலே னென்னும் தர்மாத்மா, வாளி பொழிந்த நிர்க்குண விச்வாத்மா உள்ளேயுறைய வீரசரிதம் ஊணாகக் கற்பார் பாவம் மற்றிலே னென்னும் ராமதாஸன், பலவகையும் கண்டு வெண்சங்கேந்தின ரூபபரனான ச்வேதன் முதலானார் படிகளும் காணலாம்.
– இனிமேல் பகவதநந்யராய் ஸஹஜ பக்திகராயிருக்கும் லக்ஷ்மண பரத சத்ருக்நர்கள்படியும், பகவத் ப்ரத்யாஸந்நராய் தத்பக்தியுக்தரான தசரத யசோதா ப்ரஹ்லாத விபீஷண மாருதி பார்த்தபடிகளும் இவர் பக்கலிலே உண்டென்னுமத்தைத் தனித்தனியே அடைவே தர்சிப்பிக்கிறார் ஒரு சூர்ணையாலே. த்ருஷ்டாந்த தார்ஷ்டாந்திகங்களிரண்டுக்கும் தனித்தனியே வாசகமிடாதே இரண்டும் ஒரு ஸந்தர்ப்பத்திலே பலிக்கும்படி வாக்கியத்தைச் சுருக்கி யருளிச்செய்கையாலே த்ருஷ்டாந்தத்திலாதல் தார்ஷ்டாந்திகத்திலாதல் வசநமில்லாதவற்றுக்கு ப்ரதிகோடிக்கு அநுகுணமாகக் கூட்டி நிர்வஹிக்கக்கடவது. இந்த ந்யாயம் இப் ப்ரபந்தத்திலிப்படி வந்த ஸ்தலங்களுக்கெல்லாமொக்கும்.
– அடுத்து பகவானைக் காட்டிலும் வேறு என்று கூறப்பட இயலாதவர்களும், இயற்கையாகவே பக்தி கொண்டவர்களும் ஆகிய லக்ஷ்மணன், பரதன், சத்ருக்நன் ஆகியோருடைய தன்மைகளும்; பகவானுடன் எப்போதும் ஸம்பந்தம் கொண்டவர்களும், அவனிடம் பக்தியுடன் உள்ளவர்களும் ஆகிய தசரதன், யசோதை, ப்ரஹலாதன், விபீஷணன், அனுமன், அர்ஜுனன் ஆகியோருடைய தன்மைகளும் நம்மாழ்வாருக்கு உள்ளது என்பதைத் தனித்தனியாக முழுவதுமாக இந்தச் சூர்ணையில் உணர்த்துகிறார். உபமானம் மற்றும் உபமேயம் ஆகிய இரண்டிற்கும் தனித்தனியான சொற்கள் கூறாமல், அவை இரண்டும் ஒரே நேரத்தில் வெளிப்படும்படியாக வாக்கியத்தைச் சுருக்கமாக அமைத்து அருளிச் செய்துள்ள காரணத்தால், உபமானத்திலோ அல்லது உபமேயத்திலோ ஒன்றுக்கொன்று பொருத்தமான சொற்கள் இல்லையென்றால், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எற்ற சொற்களைச் சேர்த்துக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும். இந்த விதிமுறை இந்த ப்ரபந்தத்தில் இவ்விதம் உள்ள அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.
(அழுந்தொழுமித்யாதி) அதாவது இளையபெருமாள் “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:” என்கிறபடியே பால்யமே தொடங்கிப் பிரியில் தரியாத ஸ்நேஹத்தாலே “பாஷ்ப பர்யாகுலமுக:” என்றும், “ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திதம்” என்றும் சொல்லுகிறபடியே விச்லேஷ ப்ரஸங்கஜமான சோக வேகத்தாலே சொரிகிற பாஷ்பத்தோடே ஸ்வரூப ப்ரகாசகமான அஞ்ஜலியும் கையுமாய்க் கொண்டு, “ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத” என்றும், “பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்ச தே” என்றும் சொல்லுகிறபடியே திருச்சித்திரகூடகிரித் தாழ்வரை முதலான ருசிர தேசங்களிலே பிராட்டியோடேகூட தேவரீர் ஸ்வைரமாக வெழுந்தருளியிருக்க, ஸர்வவித கைங்கர்யங்களையும் அடியேன் செய்யவேணும்; அது செய்யுமிடத்தில் ஏவிக்கொண்டருள வேணுமென்று ப்ரார்த்தித்து, அப்படி ஏவிக்கொள்ளச் செய்யப்படுமதாய் “குருஷ்வமாமநுசரம்” என்கிறபடியே விச்சேதமறப் பின்துடர்ந்து செய்யுமடிமைத் தொழிலைப் பெறுகைக்காக, “ஸ ப்ராதுச் சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:, ஸீதாமுவாசாதியசா ராகவஞ்ச மஹாவ்ரதம்” என்கிறபடியே புருஷகார பூர்வகமாகத் திருவடிகளைக் கட்டிக்கொண்டு, “அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸுமத்யமா, ப்ருஷ்டதஸ்து ததுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாமஹ” என்கிறபடியே ஸாயுதராய்க் கொண்டு பெருமாளைப் பின்சென்று, “ப்ராதா பர்த்தாச பந்துச்ச பிதா ச மம ராகவ:” என்று தமக்கு ஸர்வவித பந்துவும் பெருமாளே யென்றாப்போலே. – இவரும் “அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து” என்கிறபடியே பருவம் நிரம்புவதற்கு முன்னே, பிரியில் தரியாதபடி பிறந்த ஸ்நேஹத்தாலே “அழும் தொழும்” என்று, விச்லேஷம் பொறாமல் கண்ணும் கண்ணநீரும் கையுமஞ்ஜலியுமாய் “திருவேங்கடத்தெழில்கொள் சோதி யெந்தை தந்தை தந்தைக்கு - ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும்” என்று “மொய்த்த சோலையும் மொய்பூம்தடம் தாழ்வரை”யுமான போக ஸ்தலங்களையுடைய திருமலையிலே, “அலர்மேல் மங்கையுறை மார்பனா”கையாலே பிராட்டியோடே கூடி ரஸோத்தரமாக விருக்கிற பரமசேஷியானவவனுக்கு, ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸகல சேஷவ்ருத்திகளையும் பண்ணவேணும்; அது தன்னிலும், “முகப்பே கூவிப் பணிகொள்ளாய்” என்று ஸந்நிதியிலே யேவிக்கொள்ளவும் வேணுமென்று ப்ரார்த்தித்து, அப்படி ஏவிக்கொள்ளப்படுமதாய், “பிரியாவடிமை” என்கிறபடியே யாவதாத்மாநுவர்த்தியான கைங்கர்யத்தைப் பெறுகைக்கு உபாயமாக “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” என்று புருஷகாரம் முன்னாக அவன் திருவடிகளைப் பற்றி, “வாளும் வில்லுங் கொண்டு பின் செல்வார் மற்றில்லை” என்று திவ்யாயுதங்களைக் கொண்டு தாம் பின்னே திரியவாசைப்பட்டு, “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையு மவரே” என்று சேஷியான ஸர்வேச்வரனே தமக்கு மாதாபித்ராதி ஸர்வவித பந்துவுமென்கையாலும். ஸ்ரீபரதாழ்வான், பெருமாள் திருமுடி சூடியிருக்கத் தாமடிமை செய்து வாழப் பெறாதபடி அவரைக் காட்டிலே அகலவடித்துத் தம்மேலே ஸ்வாதந்த்ர்யத்தை ஆரோபித்த கொடுமையாலே “ஹந்யாமஹமிமாம் பாபாம் கைகேயீம் துஷ்டசாரிணீம்” என்று மாதாவானவளைச் சீறியுபேக்ஷித்து ஸ்வாதந்த்ர்யாஸஹதை தோற்ற “ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய” என்று ராஜ்யமும் நானும் பெருமாளுக்கு சேஷமென்று, “ம்ருதே து தஸ்மிந் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜை:, நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத் ராஜ்யம் மஹாபல:” என்கிறபடியே வஸிஷ்டாதி புரோஹிதர் நீ ராஜாவாக வேணுமென்று நியோகியா நிற்க, “இக்ஷ்வாகூணமியம் பூமிஸ் ஸசைலவநகாநநா” என்கிற மஹதைச்வர்யத்தையு மிச்சயாதே பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திருவபிஷேகம் பண்ணுவிக்கையிலே அபேக்ஷை தோன்ற “ஏபிச்ச ஸ சிவைஸ்ஸார்த்தம்” என்கிறபடியே அவர் திருவடிகளிலே சென்று “அயாசத் ப்ராதரம் ராமம்” என்கிறபடியே மீண்டெழுந்தருள வேணுமென் றபேக்ஷித்த விடத்தில் அவர் அது செய்யாதே, “பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்வா புந: புந:” என்கிறபடியே திருவடிநிலையைக் கொடுத்துவிட, “ததஸ்து சிரஸா க்ருத்வா பாதுகே பரதஸ்ததா, ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டச் சத்ருக்நேந ஸமந்வித:” என்கிறபடியே அத்திருவடிநிலையை சிரஸாவஹித்துக் கொண்டு ஹ்ருஷ்டராய் மீண்டு போந்து “சிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நக்ருதம் மயா” என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே “நமே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராண்யாபரணநிச, தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்மசாரிணம், இத ஏவ யதா க்ஷிப்ரம் ப்ரதிகச்சாம தாம் புரீம், அயோத்யா மாகதோ ஹ்யேஷ பந்தா: பரமதுர்கம:” என்று நாம் பிள்ளை பரதனையொழியக் குளித்தல் ஒப்பித்தல் செய்யக்கடவோமல்லோம், சீக்ரமாக நாம் இனி அங்கே செல்லலாம்படி யென்னென்று பெருமாள் த்வரையோடே மீண்டெழுந்தருளுமளவும், “பங்கதிக்தஸ்து ஜடிலோ பரத:” என்கிறபடியே கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடக்கையாலே பங்கதிக்தராய், மூத்தாரிருக்க இளையார் முடிசூடக் கடவரல்லரென்கிற இக்ஷ்வாகு குல மர்யாதை தப்பாமல் நோக்கிக் கொண்டு, “ஸ காம மநவாப்யைவ” என்கிறபடியே தாமாசைப்பட்ட பொருள் கைபுகராத விழவோடே யிருந்தாப்போலே இவரும் பகவத் ப்ராவண்யாதிசயத்தாலே வழியல்லா வழியேயாகிலும் கிட்டுமத்தனை யென்கிற த்வரைக்கு இடங்கொடாமல் விலக்கும் மாதாவை சத்ரு பக்ஷமாகக் காண்கையாலே, “அன்னையென்செய்யிலென்” என்று “ஜீவிக்கிலென்? முடியிலேன்?” என்று சீறி உபேக்ஷித்து, “யானேயென்றனதே” என்கிற ஸ்வாதந்தர்யா ஸஹாராய்க் கொண்டு “யானே நீயென்னுடைமையும் நீயே” என்று ஆத்மாத்மீயங்க ளிரண்டும் அங்குத்தைக்கு சேஷமென்று “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பு” என்று மேன்மேலும் ஸம்ருத்தமாய் வரும் நிரவதிகைச்வர்யத்தையும் அக்நி சமமாகக் கொண்டு “வேங்கடவாணனை வேண்டிச் சென்று” என்று திருச்சித்திரகூடத்தி லிருந்தாப்போலே திருமலையிருக்கிறவவனை யதாமநோரத மநுபவிக்கைக்காக அபேக்ஷித்துச் சென்று தம் அபேக்ஷிதம் அவன் அப்போது செய்யாதே ஒரு வைசத்ய முகத்தாலே “திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை” என்று திருவடிகளைத் தந்தாயென்று ஹ்ருஷ்டராம்படி பண்ணிவிட, அப்படி அவன் கொடுத்த திருவடிகளை சிரஸாவஹித்து வீடுதிருத்தப் போனவன் விண்ணுலகம் தர விரைந்து வருமளவும், “கண்ணநீர் கைகளாலிறைக்கும்”, “இருநிலம் கைதுழாவிருக்கும்” என்கிறபடியே கண்ணநீர் வெள்ளத்தாலுண்டான சேற்றிலேயிருந்து ஆற்றாமையாலே நிலம் துழாவி, “குடிக்கிடந்தாக்கம் செய்து” என்கிறாப்டியே ப்ரபந்ந குலத்தில் செய்து போரும் மர்யாதை தப்பாமல் “காமுற்றகையறவோடு” என்கிறபடியே தாமாசைப்பட்ட பொருள் கைபுகராதவிழவோடே யிருக்கையாலும்; – ஸ்ரீசத்ருக்நாழ்வான், “கச்சதா மாதுலகுலம் பரதேந ததாநக: சத்ருக்நோ நித்யசத்ருக்நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத” என்கிறபடியே பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தமென்று ஸ்ரீபரதாழ்வானுக்கே சேஷபூதராய், அவருடைய பாவநத்வ போக்யத்வங்களிலே கால்தாழ்ந்து, “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்கிறபடியே வயிரவுருக்காய் ஆண்களையும் பெண்ணுடை யுடுத்தும் பெருமாளுடைய வடிவழகில் துவக்குண்ணாதே, பரதாநுவ்ருத்தியில் போகாதபடி தன் பக்கலிலே துவக்கவற் றென்னுமத்தாலே தம்முடைய நிஷ்டைக்கு அது நித்யசத்ருவென்றறுதி யிட்டிருக்கச்செய்தே ஸ்ரீபரதாழ்வானுக்கு உகப்பாகையாலே உத்தேச்ய ப்ரீதியென்று புரிந்து பெருமாள் வடிவிலே நெஞ்சு சென்று, “விசிந்தயந்” என்கிறபடியே எப்போதும் அத்தை மநஸ்ஸிலே கொண்டிருக்குமாபோலே – இவரும், “கோதிலடியார்” என்று ப்ரதமாவதியில் நிலைபோலன்றிக்கே ஸ்வரூபத்தினுடைய எல்லை நிலமாகையாலே “லோதிலடிமை” என்று சொல்லப்படுகிற பாகவத சேஷத்வத்தினுடைய ரஸம், “அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டார் இங்கே திரிய” அவர்களைத் தவிர்ந்து “செந்தாமரைக்கண் திருக்குறளன் நறுமாவிரை நாண்மலரடிக் கீழ்புகுதல் – பாவியேனுக்கு - உறுமோ?” என்று சொல்லுவிக்கப்பட்டதாய், ஸர்வேந்த்ரியாபஹார க்ஷமமாகையாலே அந்த பாகவத சேஷத்வ நிஷ்டா விரோதியான பகவத் விக்ரஹத்தை உத்தேச்ய ப்ரீதியென்னுமத்தைப் பற்றி, “திரிதந்தாகிற்”படியே மீண்டு, “புலன் கொள்வடி வென் மனத்ததாய்” என்று எப்போதும் தம் மநஸ்ஸுக்கு விஷயமாகக் கொண்டிருக்கையாலும், கீழ்ச்சொன்ன வாகாரங்களை யுடையரான இளையபெருமாள் ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீசத்ருக்நாழ்வானாகிற திருத்தம்பிமார் மூவர்படியும் இவர்பக்கலிலே காணலாம். – “விசிந்தநம்” என்கிறவிதுக்கு இப்படி வ்யாக்யாநம் பண்ணிற்று இதன் பட்டோலை யானதிலே, “உறுமோ”வென்று நித்யசத்ருவை வென்று, “புலன் கொள்வடிவை விசிந்தயனாயிருக்கும்” என்று, “விசிந்தயந்” என்று ஒரு வசநமுண்டாகவு மெடுத்து இப்படி இவர்தானே அருளிச்செய்து வைக்கையாலே, இவ்விடத்திலும் சிந்தநமென்னாமல் விசிந்தநமென்றது அவ்வசந ஸூசகமாகவிறே. “விசிந்தயந்” என்கிற வசநம் இன்னவிடத்திலே யென்று த்ருஷ்டமாய்த்தில்லை; வந்தவிடத்திலே கண்டு கொள்வது. (அப்பொழுதைக்கித்யாதி) சக்ரவர்த்தி, “ந ததர்ப்ப ஸமாயாந்தம் பச்யமாநோ நராதிப” என்கிறபடியே வைத்தகண்வாங்காதே உத்தரோத்தர மநுபவியா நிற்கச்செய்தே ஒருகாலும் த்ருப்தனாகாமல் அநுபூஷுவாய்ச் சொல்லுமாபோலே, இவரும் “எப்பொழுதும் நாள் திங்களாண்டு” இத்யாதிப்படியே யாவத் காலமநுபவியா நின்றாலும், “அப்பொழுதைக் கப்பொழு தென்னாராவமுதம்” என்று அநுக்ஷணம் எனக்கு அத்ருப்திகரமான போக்யவஸ்துவென்று, மேன்மேலும் அபிநிவிஷ்டராகையாலும். – “யமளார்ஜுநயோர் மத்யே ஜகாம” என்று க்ருதஸங்கேதமாய் நலிய வந்து நின்ற யமளார்ஜுநங்களின் நடுவே க்ருஷ்ணன் போனபோது யசோதைப்பிராட்டி ஓடிச் சென்று எடுத்துக்கொள்ளாநிற்க, மருதுகளின் பெருமையையும் இவன் மௌக்த்யத்தையும் கண்டு வயிறு எரிகொளுந்தி முகத்தைப் பார்த்து “இப்பெரிய மருதுகளின் நடுவே போனாயே” என்று வெறுத்தாப்போலே, இவரும் அதீதகாலஸ்தமாயிருக்கவும் ஸமகாலத்திற்போல ப்ரகாசிக்கையாலே அப்படி வயிறெரிந்து கொண்டு “போனாய் மாமருதின் நடுவே” என்கையாலும் பிதாவும் மாதாவுமான அவர்களிருவர்படியும் இவர் பக்கலிலே காணலாம். – (செந்தீத் தண்காற்று இளநாகம் முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும் பள்ளிப்பிள்ளை) ஸ்ரீப்ரஹ்லாதன், “நாக்நிர்தஹதி நைவாயம் சஸ்த்ரைச் சிந்நோ நசோரகை:, க்ஷயம் நீதோ நவாதேந நவிஷேண நக்ருத்யயா”, “ஸத்வாஸக்தமதி: க்ருஷ்ணே தச்யமாநோ மஹோரகை:, நவிவேதாத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்யாஹ்லாத ஸம்ஸ்தித:” என்கிறபடியே அக்நி முதலானவை பாதகமாகாதபடி “ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகந்மயே, பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா குத:” என்று மித்ராமித்ரகதாவகாசமற ஸர்வமும் பகவதாத்மகதயா அநுகூலமாக அநுஸந்தித்து, “எங்குமுளன் கண்ணன்” என்கிறபடியே “உர்வ்யாமஸ்தி” என்று தொடங்கி, “ஸர்வத்ராஸ்தி” என்று பிறர்க்கு முபதேசித்தாப்போலே; இவரும், “அறியும் செந்தீயைத் தழுவி யச்சுதனென்னும் மெய்வேவாள் எறியும் தண்காற்றைத் தழுவி யென்னுடைக் கோவிந்த னென்னும்”, “போமிள நாகத்தின் பின்போய் அவன் கிடக்கை யீதென்னும்” என்று அக்நி முதலான பாதக பதார்த்தங்கள் பகவதாத்மகத்வேந அநுகூலமாம்படி “என் முன்னைக் கோளரியே – உன்னைச் சிந்தை செய்து செய்து – என் முன்னைத் தீவினைகள் முழுவேரரிந்தனன் யான் – முடியாததென்னெனக்கு” என்று அவனை அநவரதா நுஸந்தாநம் பண்ணி, “கறந்த சிலிடந்தொறுமிடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்துளன்” என்று அவனுடைய ஸர்வகதத்வத்தைப் பிறருமறியும்படி அருளிச் செய்கையாலே “பள்ளியிலோதி வந்த தன் சிறுவன்” என்றும், “பிள்ளையைச் சீறி” என்றும் சொல்லப்பட்ட பள்ளிப்பிள்ளையான ப்ரஹ்லாதன்படியும் இவர்பக்கலிலே காணலாம். – ஸ்ரீவிபீஷணாழ்வான், “த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணங்கத:” என்றும், “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச, பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை” என்றும் லங்கையோடே கூட புத்ர தாராதிகளான ஸர்வத்தையும் விட்டு சக்ரவர்த்தி திருமகனையே தமக்கெல்லாமாகப் பற்றினாப்போலே, இவரும் “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்றவிட்டு” என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கங்களையும் ஸவாஸநமாகவிட்டு, “தயரதற்கு மகன்றன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்று சக்ரவர்த்தி திருமகனையே தமக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாகப் பற்றுகையாலே, “விபீஷணஸ்து தர்மாத்மா” என்று தர்மபுத்தி யுடையவ னென்கிற மாத்ரமன்றிக்கே, “ராமோ விக்ரஹவாந் தர்ம:” என்று சொல்லப்பட்ட தர்ம ஸ்வரூபனான சக்ரவர்த்தி திருமகனையே தனக்கு தாரகமாகவுடையவ னாகையாலே “தர்மாத்மா” என்று விசேஷஜ்ஞர் சொல்லும் ஸ்ரீவிபீஷணாழ்வான்படியும் இவர் பக்கலிலே காணலாம். – திருவடி, “நிர்குண: பரமாத்மாஸௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி” என்கிறபடியே விரோதி வர்க்கத்தைக் கிழங்கெடுக்கையாலே ஏறிட்ட நாணி இறங்கிட்டு “பவாந் நாராயணோ தேவ:” என்கையாலே, பரமாத்ம சப்த வாச்யனாய்க் கொண்டு “விச்வாத்மாநம்” என்கிறபடியே விச்வத்துக்கும் ஆத்மபூதனாயிருக்கிற சக்ரவர்த்தி திருமகனைத் தன்னுள்ளே யுடையனாய், “ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதூய சரிதம் தவ ஸேவதேஸௌ” என்கிறபடியே சக்ரவர்த்தி திருமகனுடைய வீரசரிதத்தை போக்யமாகவுடையனாய், “ஸ்நேஹோ மே பரமோ ராஜம்ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்ட்டித: பக்திச்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” என்று குணத்தாலும் சரத்தாலும் அநுகூலரையும் ப்ரதிகூலரையும் ஜயிக்கும் வீரரான சக்ரவர்த்தி திருமகனளவிலே எப்போதும் ப்ரதிஷ்ட்டிதமாய், இதுக்கு மேலில்லை யென்னும்படி யிருக்கிற ஸ்நேஹத்தாலும் நியதையான பக்தியாலும் இவ்விஷயத்தை விட்டுப் பரத்வத்தில் தன்னெஞ்சு போகாமை சொல்லுகிறவிடத்தில் பரத்வத்தின் பேரும் சொல்லுகை அஸஹ்யமாய் “அந்யத்ர” என்னும்படி சக்ரவர்த்தி திருமகனையல்லதறியே னென்றிருந்தாப்போலே. இவரும், “செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த வொருவன் திருக்கடித்தானமு மென்னுடைச் சிந்தையுமொருக்கடுத் துள்ளே யுறையும் பிரான் கண்டீர்” என்று மூல பலம் முதலறும்படி சரவர்ஷத்தை வர்ஷித்த ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனைத் தம்முள்ளே யுடையராய், “கணை நாணி லோவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே ஓவாத வூணாக வுண்” என்கிறபடியே அவனுடைய வீரசரிதத்தை போக்யமாக வுடையராய், “கற்பாரிராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ?” என்று ப்ரிய ஹிதங்களைப் பற்ற ஒன்றைக் கற்குமவர்கள் ரமணீயனுமாய் உபகாரகனுமான சக்ரவர்த்தி திருமகனையொழிய பரத்வாதிகளையும் அவதாராந்தரங்களையும் கற்பரோவென்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யாதிசயத்தாலே, பரத்வாதிகளைக் கழிக்கிறவிடத்தில் அவற்றின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாய் “மற்றும்” என்னும்படி “தயரதற்கு மகன் றன்னை யன்றி மற்றிலேன்” என்றிருக்கையாலே, “தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய” என்று ராமதாஸனா யிருக்கும் திருவடியுடையபடியும் இவர்பக்கலிலே காணலாம். – அர்ஜுனன், “பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷ ஸங்காந் ப்ரஹ்மாணமீசம் கமலாஸநஸ்தம் ருஷீம்ச்ச ஸர்வாநுரகாம்ச்ச தீப்தாந்” என்று விச்வரூபம் கண்டவநந்தரம், “அத்ருஷ்ட பூர்வம் ஹ்ருஷிதோஸ்மி த்ருஷ்ட்வா பயேநச ப்ரவ்யதிதம் மநோ மே, ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரஸீத தேவேச ஜகந்நிவாஸ; கிரீடிநம் கதிநம் சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ, தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பல விச்வமூர்த்தே” என்று திவ்ய சக்ஷுஸ்ஸாலே இப்போது கண்ட விச்வரூபம் அத்ருஷ்ட பூர்வதையாலும் உக்ரதையாலும் ஹர்ஷ பயங்க ளிரண்டையும் விளைக்கையாலே ஸதத ஹர்ஷ ஹேதுவாய் பூர்வபரிசிதமுமான ஸௌம்ய ஸ்வரூபத்தைக் காணவாசைப்பட்டு சதுர்புஜமுமாய் சங்க சக்ர கதாதரமுமான திவ்ய விக்ரஹத்தைக் காட்ட வேணுமென்று தத் தர்சந தத் பரனா யபேக்ஷித்தாப்போலே, இவரும், “நல்குரவும்” என்று தொடங்கி, “பலவகையும் பரந்த பெருமானை – திருவிண்ணகர்க்கண்டேனே” என்று விருத்த விபூதி யுத்தனாய்க் கொண்டு விபூதி முகத்தாலே பலபடியாக விஸ்த்ருதனா யிருக்கிறவனைக் கண்டு, “நீராய் நிலனாய்” என்று தொடங்கி, “சிவனாயயனானாய்” என்று கார்ய காரணங்க ளிரண்டையும் சரீரமாகக் கொண்டு நீ ஜகதாகாரனாயிருக்கிறவிருப்பை எனக்கு காட்டித் தந்தாயாகிலும், இத்தால் நான் பெற்றது உன்னதான வஸ்துக்களை என்னதென்றும் பிறரதென்றுமிருக்கும் விப்ரதிபத்தி போய், உன்னதே ஸகலமுமென்றிருக்கிற மாத்ரம்; இது எனக்கு ஆகர்ஷகமாய் அநுபாவ்யமா யிருக்கிறதில்லை. ஆனபின்பு, “கூராராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று சங்கசக்ரமான உன் அஸாதாரண விக்ரஹத்தோடே என் முன்னே வரவேணுமென்று அஸாதாரண விக்ரஹாநுபவ தத் பரராய் அபேக்ஷிக்கையாலே, “சினப்போர்ச் சுவேதன்” என்று சொல்லப்பட்ட அர்ஜுனன்படியும் இவர் பக்கலிலே காணலாமென்கை. – ச்வேதனென்றது ச்வேதவாஹந னென்றபடி. முதலானாரென்றது “உபமாந மசேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத்” என்கிறபடியே எல்லார்க்கும் தம்முடைய ஓரோ வகைகளாலே உபமாந பூமியாயிருக்கு மவராகையாலே இன்னமும் ஜ்ஞாநிகளானவர்கள் பலர்படியும் இவர் பக்கலிலே காணலாமென்று தோற்றுகைக்காக; பிராட்டிமாரோடு ஸாம்யம் சொன்னபின்பு ஸ்ரீகோபிமார் முதலானரோடு ஸாம்யம் சொன்னவோபாதியிறே, லக்ஷ்மணாதிகளோடே ஸாம்யம் சொன்ன பின்பு தசரதாதிகளோடே இவர்க்குண்டான ஸாம்யம் சொன்னவிதுவும்.
– (அழும் தொழும் ஸ்நேஹ பாஷ்ப அஞ்ஜலியோடே) – லக்ஷ்மணன், இராமாயணம் பாலகாண்டம் (18-27) – பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: - இராமனிடம் சிறுவயது தொடங்கியே அன்புடன் இருந்தான் - என்பதற்கு ஏற்ப பால்யம் முதலே இராமனை விட்டு அகன்றால் தாங்கிக் கொள்ள இயலாதபடி கொண்ட அன்பு காரணமாக, இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-1) – “பாஷ்ப பர்யாகுலமுக: - கண்ணீரால் நிறைந்த முகம் கொண்ட – என்றும், அயோத்யாகாண்டம் (16-26) - ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திதம் – வணங்கியபடியும் அஞ்ஜலி முத்திரையுடனும் உள்ள – என்று கூறுவதற்கு ஏற்ப பிரிவை வெளிப்படுத்துவதான சோகம் காரணமாக சொரிந்தபடி உள்ள கண்ணீர் மற்றும் அடிமைத்தன்மையை வெளிப்படுத்தும் அஞ்ஜலிமுத்திரை ஆகியவற்றுடன் கூடியபடி. (ருசிர ஸாநுக்களில் கூவிக்கொள்ளும் பிரியா அடிமைக்கு) - ஆரண்யகாண்டம் (15-7) – ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத - உனது திருவுள்ளத்துக்கு ஏற்ற இடத்தைக் காண்பித்து, “இங்கு பர்ணசாலை அமைப்பாய்” என்று நீயே நியமிக்கவேண்டும் - என்றும், அயோத்யாகாண்டம் (31-25) – பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்ச தே – நீ சீதையுடன் சேர்ந்து இந்த மலையின் தாழ்வரைகளில் இன்பமாக இருப்பாயாக; நான் இரவு பகல் என்று ஆராயாமல் உனக்கு வேண்டிய அனைத்து கைங்கர்யங்களையும் செய்வேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, “திருச்சித்திரக்கூட மலையின் தாழ்வரைகள் போன்ற இனிமையான இடங்களில் சீதையுடன் சேர்ந்து நீ இன்பத்துடன் உள்ளபோது, நான் அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தல்வேண்டும்; அவ்விதம் நான் செய்ய முனையும்போது, எனக்குக் கட்டளை இட்டு அந்தச் செயல்களை நீ ஏற்கவேண்டும்”, என்று இராமனிடம் ப்ரார்த்தனை செய்து இயற்றப்படுவதும், அயோத்யாகாண்டம் (31-23) – குருஷ்வமாமநுசரம் - என்னை உன்னுடன் வரும்படியாகச் செய்தருளவேண்டும் – என்பதற்கு ஏற்ப எந்தவிதமான தடையும் இன்றிப் பின்தொடர்ந்து சென்று செய்யப்படுவதும் ஆகிய கைங்கர்யத்தைப் பெறுவதற்காக. (சரணே சரணென்று) - அயோத்யாகாண்டம் (31-2) – ஸ ப்ராதுச் சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:, ஸீதாமுவாசாதியசா ராகவஞ்ச மஹாவ்ரதம் - இராமனுடைய இரண்டு திருவடிகளையும் உறுதியாகப் பிடித்தபடி, அருகில் இருந்த சீதையை நோக்கியபடி, லக்ஷ்மணன் உரைத்தான், இராமனையும் பார்த்தபடி உரைத்தான் - என்பதற்கு ஏற்ப, சிபாரிசு செய்பவளாகிய சீதையை முன்னிட்டுக் கொண்டு இராமனுடைய திருவடிகளைக் கட்டிப் பிடித்தபடி. (வாளும் வில்லும் கொண்டு) ஆரண்யகாண்டம் (11-1) – அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸுமத்யமா, ப்ருஷ்டதஸ்து ததுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாமஹ - இராமன் முன்னே செல்ல, அழகான இடையைக் கொண்ட சீதை பின்னே செல்ல, லக்ஷ்மணன் வில்லும் கையுமாகப் பின் தொடர்ந்தான் - என்பதற்கு ஏற்ப ஆயுதங்களை ஏந்தியவனாக இராமனைப் பின்தொடர்ந்தபடி சென்று. (பந்துவும் பிதாவும் அவரே என்கையும்) – அயோத்யாகாண்டம் (58-31) – ப்ராதா பர்த்தாச பந்துச்ச பிதா ச மம ராகவ: – எனது சகோதரனும், கணவனும், உறவினனும், தந்தையும் இராமனே ஆவான் - என்று தனக்கு அனைத்துவிதமான உறவும் இராமனே ஆவான் என்று கூறியது போன்று (இதனைப் போன்றே நம்மாழ்வாரும் உரைத்ததை அடுத்துக் கூறுகிறார்) … – (அழும் தொழும் ஸ்நேஹ பாஷ்ப அஞ்ஜலியோடே) - திருவாய்மொழி (2-3-3) - அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – என்பதற்கு ஏற்ப தகுந்த வயது வருவதற்கு முன்பாகவே அவனைப் பிரிந்தால் தாங்கிக் கொள்ள இயலாதபடியாக உண்டான அன்பு காரணமாக, திருவாய்மொழி (7-2-8) - அழும் தொழும் – என்பதற்கு ஏற்ப பிரிவு ஏற்பட்டதைத் தாங்க இயலாமல் கண்ணும் கண்ணீருமாகவும், கையும் அஞ்ஜலியுமாகவும் நின்று. (ருசிர ஸாநுக்களில்) – திருவாய்மொழி (3-3-1) - திருவேங்கடத்தெழில்கொள் சோதி யெந்தை தந்தை தந்தைக்கு - ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப, திருவாய்மொழி (3-3-10) – மொய்த்த சோலை மொய்பூம்தடம் தாழ் - என்பதற்கு ஏற்ப உள்ளதான இனிமையான இடங்கள் பல உள்ள திருவேங்கடத்திருமலையில். (கூவிக் கொள்ளும்) - திருவாய்மொழி (6-10-10) - அலர்மேல்மங்கை உறை மார்பா – என்பதற்கு ஏற்ப உள்ளதால், “பெரியபிராட்டியுடன் கூடியபடி மிகுந்த இன்பத்துடன் உள்ள உயர்ந்த எஜமானனுக்கு அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்களிலும், அனைத்து நிலைகளிலும், அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்யவேண்டும். இவ்விதம் செய்யும்போது, திருவாய்மொழி (8-5-7) – முகப்பே கூவிப் பணிகொள்ளாய் - என்பதற்கு ஏற்ப, “நீ என்னை ‘இவ்விதம் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு அந்தக் கைங்கர்யங்களை ஏற்கவேண்டும்” என்று ப்ரார்த்தித்தும், இப்படியாக அவனால் உத்தரவிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஆகிய, (அடிமைக்கு) – திருவாய்மொழி (5-8-2) - பிரியா அடிமை – என்பதற்கு ஏற்ப உள்ளதான சரீரத்தில் உயிர் உள்ளவரை தொடர்ந்தபடி இருக்கின்ற கைங்கர்யத்தை அடையும் வழியாக. (சரணே சரணென்று) – திருவாய்மொழி (5-10-11) - நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு – என்று கூறுவதற்கு ஏற்ப சிபாரிசாக பெரியபிராட்டியை முன்னிறுத்தி அவன் திருவடிகளைப் பற்றியபடி. (வாலும் வில்லும் கொண்டு) - திருவாய்மொழி (8-3-3) - வாளும் வில்லுங் கொண்டு பின் செல்வார் மற்றில்லை - என்பதற்கு ஏற்ப திவ்யமான ஆயுதங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு அவன் பின்னே செல்வதற்கு ஆசை கொண்டு. (பந்துவும் பிதாவும் அவரே என்கையும்) – திருவாய்மொழி (5-1-8) – சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும் அவரே - என்பதற்கு ஏற்ப எஜமானனாக உள்ள ஸர்வேச்வரனே தனக்குத் தாய், தந்தை, அனைத்துவிதமான உறவினன் என்று கூறுவதால். (ப்ராதாக்கள் படிகளும் காணலாம்) - லக்ஷ்மணன் தன்மையை இவரிடம் காணலாம். – (அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே என்று) ஸ்ரீபரதாழ்வான், இராமன் திருமுடி சூடிக்கொண்டு ராஜ்யத்தை ஆண்டபடி உள்ளபோது, தான் அவனுக்கு அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்து வாழவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தான். ஆனால் அது நிறைவேறப் பெறாதபடி இராமானைக் கானகம் அனுப்பி, தன் மீது அரசபதவி என்ற சுதந்திரத்தை ஏற்றிய கொடுமை காரணமாக, அயோத்யாகாண்டம் (78-22) - ஹந்யாமஹமிமாம் பாபாம் கைகேயீம் துஷ்டசாரிணீம் - இந்தத் தீய செயல் நிறைந்த மஹாபாபியாக உள்ள கைகேயியை நான் கொன்று விடுகிறேன் - என்பதற்கு ஏற்ப, தனது தாயாகிய கைகேயியைச் சீறி, அவளை வெறுத்து ஒதுக்கி, தான் தனக்கு உரியவன் அல்லன் என்ற தன்மை வெளிப்படும்படி, அயோத்யாகாண்டம் (82-12) – ராஜ்யம் அ அஹம் ச ராமஸ்ய - இந்த ராஜ்யமும் நானும் இராமனுடைய உடைமைகள் - என்பதற்கு ஏற்ப, “இந்த ராஜ்யமும் நானும் இராமனுடைய அடிமைகள்” என்று கூறியது போன்றும்; (பெருஞ்செல்வமும் இச்சியாமல்) - பாலகாண்டம் (1-33) - ம்ருதே து தஸ்மிந் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜை:, நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத் ராஜ்யம் மஹாபல: - தசரதன் இறந்தபோது அந்த நாட்டை ஆள்வதற்கான திறன் கொண்ட பரதன், வசிஷ்டர் போன்ற முக்கியமானவர்களால் அரசபதவியை ஏற்கவேண்டும் என்று கூறப்பட்டாலும், அரசனாக அமர விருப்பம் கொள்ளவில்லை - என்பதற்கு ஏற்ப, வசிஷ்டர் முதலான பலரும் பரதனிடம், “நீ அரசபதவியை ஏற்கவேண்டும்” என்று ஆணையிட்டபோதிலும், கிஷ்கிந்தாகாண்டம் (18-6) – இக்ஷ்வாகூணமியம் பூமிஸ் ஸசைலவநகாநநா – மலைகள், வனங்கள் ஆகியவை நிறைந்த இந்தப் பூமியானது இக்ஷ்வாகு குலத்து அரசர்களுக்கே உரியது – என்பதற்கு ஏற்ப உள்ளதான மிகப் பெரிய செல்வத்தையும் விரும்பாமல் நின்றது போன்றும்; (வேண்டிச் சென்று) - இராமனைக் கானகத்திலிருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கவேண்டும் என்ற விருப்பம் வெளிப்படும்படி அயோத்யாகாண்டம் (104-12) – ஏபிச்ச ஸ சிவைஸ்ஸார்த்தம் - நான் இவர்களுடன் சேர்ந்து உன்னை வேண்டுகிறேன் – என்பதற்கு ஏற்ப இராமனுடைய திருவடிகளில் பணிந்து, பாலகாண்டம் (1-35) - அயாசத் ப்ராதரம் ராமம் - தனது மூத்தவனாகிய இராமனைப் பரதன் வேண்டி நின்றான் – என்பதற்கு ஏற்ப, “மீண்டும் அயோத்திக்குத் திரும்ப வேண்டும்”, என்று விண்ணப்பித்தது போன்றும்; (திருவடியே சுமந்து) - அப்போது இராமன் அது போன்று செய்யாமல், பாலகாண்டம் (1-37) – பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்வா புந: புந: – இராமன் தனது இடத்தில் தன்னுடைய பாதுகையை வைத்து ஆளும்படியாக அளித்து மீண்டும் மீண்டும் உரைத்தான் - என்பதற்கு ஏற்ப தனது பாதுகைகளை அளித்தபோது, அயோத்யாகாண்டம் (113-1) – ததஸ்து சிரஸா க்ருத்வா பாதுகே பரதஸ்ததா, ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டச் சத்ருக்நேந ஸமந்வித: – அதன் பின்னர் பரதன் அந்தப் பாதுகைகளைத் தனது தலையில் ஏற்றுக் கொண்டு மிகுந்த ஆனந்தம் பூண்டு சத்ருக்நனோடு தேரில் ஏறினான் – என்பதற்கு ஏற்ப அந்தப் பாதுகைகளைத் தனது தலையில் ஏற்றபடி ஆனந்தத்துடன் அயோத்தி திரும்பியது போன்றும்; (விரைந்து வருமளவும் கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவி) - யுத்தகாண்டம் (124-19) - சிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நக்ருதம் மயா - தனது தலையால் வணங்கிக் கேட்டுக் கொண்டபடி நம்மால் செய்ய இயலவில்லை - என்பதற்கு ஏற்ப மிகுந்த வருத்தமானது இராமனுடைய திருவுள்ளத்தில் நிறைந்திருந்தது. ஆகவே யுத்தகாண்டம் (124-6, 7) – நமே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராண்யாபரணநிச, தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்மசாரிணம், இத ஏவ யதா க்ஷிப்ரம் ப்ரதிகச்சாம தாம் புரீம், அயோத்யா மாகதோ ஹ்யேஷ பந்தா: பரமதுர்கம: - கைகேயியின் புத்திரனும் அறநெறி தவறாதவனும் ஆகிய பரதன் இன்றி நீராடவோ, ஆடை அணிகலன் அணிவதிலோ எனக்கு விருப்பம் இல்லை. இங்கிருந்து நான் விரைவாக அயோத்தி செல்லவேண்டும். அயோதிக்குச் செல்லும் இந்த வழி நீண்ட தூரம் என்பதால் விரைவாக அடைய இயலாதது – என்பதற்கு ஏற்ப, “நாம் நம்முடைய புத்திரன் போன்ற பரதனைக் காணாமல் இனி குளித்தல், அலங்கரித்தல் போன்றவற்றைச் செய்யமாட்டோம். விரைவாக அங்கு செல்வதில் என்ன தடை” என்று கூறியபடி இராமன் விரைந்து அயோத்திக்கு வந்தான் அப்போது, யுத்தகாண்டம் (127- 4) - பங்கதிக்தஸ்து ஜடிலோ பரத: - தூசி படிந்த சரீரத்துடனும் ஜடைமுடியுடனும் உள்ள பரதன் – என்பதற்கு ஏற்ப கண்ணீரால் ஏற்பட்ட சேற்றில் தரையில் கிடந்த காரணத்தால் சேறு அப்பியவனாகக் கிடந்தது போன்றும்; (குடிக்கிடந்த கையறவும்) - மூத்த புத்திரன் உள்ளபோது இளையபுத்திரன் முடிசூடிக்கொள்ளும் தகுதி கொண்டவன் அல்லன் என்பதான இக்ஷ்வாகு குலத்தின் வழக்கம் தவறிப் போகாமல் பாதுகாத்து, பாலகாண்டம் (1-38) – ஸ காம மநவாப்யைவ – பரதன், தான் விரும்பிய கைங்கர்யத்தைப் பெறாமல் - எனபதற்கு ஏற்ப, தான் விரும்பிய பொருள் கிட்டவில்லையே என்ற வருத்தத்துடன் இருந்தது போன்றும் [இவற்றைப் போன்றே நம்மாழ்வாரின் தன்மை உள்ளதை அடுத்து அருளிச்செய்கிறார்] … – நம்மாழ்வாரும் பகவானிடம் கொண்டுள்ள மிகுதியான பக்தி காரணமாக செல்லக்கூடாத வழி என்றபோதிலும் அவ்வழியாகச் சென்றால் தகுந்த இலக்கை அடையலாம் என்பதான விரைவான செயலை அனுமதிக்காமல் தடுப்பவள் தாயாக உள்ளபோதிலும் விரோதியாகக் காண்பதால், (அன்னை என் செய்யில் என்) - திருவாய்மொழி (5-3-6) – அன்னை என் செய்யில் என் – என்பதில் கூறியபடி, “உயிர் வாழ்ந்தால் உனக்கு என்ன? மடிந்தால் உனக்கு என்ன?”, என்று தாயை வெறுத்து ஒதுக்கி, (ராஜ்யமும் யானே என்று) – திருவாய்மொழி (2-9-9) – யானேயென்றனதே – என்பதற்கு ஏற்ப தான் சுதந்திரமாக உள்ளதைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாதவராக, திருவாய்மொழி (2-9-9) – யானே நீயென்னுடைமையும் நீயே – என்பதற்கு ஏற்ப தனது ஆத்மாவும் ஆத்மாவுடன் ஸம்பந்தம் கொண்டுள்ள அனைத்தும் உனக்கே உடைமைப்பட்டவை என்று உரைத்து, (பெருஞ்செல்வமும் இச்சியாமல்) – திருவாய்மொழி (4-9-4) – கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பு - என்பதற்கு ஏற்ப மேன்மேலும் தன்னிடம் வளர்ந்தபடி உள்ள எல்லையற்ற செல்வங்கள் அனைத்தையும் அக்னிக்குச் சமமாக எண்ணியபடி. (வேண்டிச் சென்று) - திருவாய்மொழி (8-2-1) - வேங்கடவாணனை வேண்டிச் சென்று - என்பதற்கு ஏற்ப திருச்சித்திரக்கூடத்தில் இருந்தது போன்று திருவேங்கடத்திருமலையில் உள்ள அவனைத் தனக்கு விருப்பமான விதங்கள் அனைத்திலும் அனுபவிப்பதற்கான விருப்பத்துடன் சென்று. (திருவடியே சுமந்து) - தனது விருப்பத்தினை அவன் அப்போது நிறைவேற்றாமல், தெளிந்த ஞானம் மூலமாக, திருவாய்மொழி (4-9-9) - திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை - என்பதற்கு ஏற்ப, “திருவடிகளை அளித்தாய்” என்று மிகுந்த ஆனந்தம் நிறைந்தவராகச் செய்தான்; அவ்விதம் அவன் அளித்த திருவடிகளைத் தனது தலையில் தாங்கியபடி, (விரைந்து வருமளவும்) - வீடு திருத்தப் போனவன் பரமபதத்தை அளிப்பதற்காக விரைவாக வரும்வரை. (கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவி) - திருவாய்மொழி (7-2-1) - கண்ணநீர் கைகளாலிறைக்கும் – என்றும், திருவாய்மொழி (7-2-1) - இருநிலம் கைதுழாவிருக்கும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப கண்ணநீரால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உண்டான சேற்றில் நின்றபடி பிரிவாற்றாமையால் தரையில் புரண்டு. (குடிக்கிடந்த கையறவும்) – திருவாய்மொழி (9-2-3) - குடிக்கிடந்தாக்கம் செய்து - என்பதற்கு ஏற்ப ப்ரபந்நர்களின் குலத்திற்கு உண்டான கௌரவம் குலையாமல், திருவாய்மொழி (2-1-3) – காமுற்றகையறவோடு - என்பதற்கு ஏற்ப, தான் விரும்பிய பொருள் கிட்டாமல் உள்ள நிலையுடன் இருப்பதால், (ப்ராதாக்கள் படிகளும் காணலாம்) – பரதாழ்வான் தன்மையை இவரிடம் காணலாம். – (கோதிலடிமை உறுமோ வென்பித்த புலன்கொள் நித்ய சத்ரு விசிந்தநமுமான ப்ராதாக்கள்) – ஸ்ரீசத்ருக்நாழ்வான், அயோத்யாகாண்டம் (1-1) – கச்சதா மாதுலகுலம் பரதேந ததாநக: சத்ருக்நோ நித்யசத்ருக்நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத - தோஷங்கள் அற்றவனாகவும், புலன்களை அடக்கியவனாகவும் உள்ள சத்ருக்நன் மிகுந்த அன்பு காரணமாக பரதனால் அன்புடன் அழைத்துச் செல்லப்பட்டான் - என்பதற்கு ஏற்ப, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தல் என்பதே மிகவும் உயர்ந்த புருஷார்த்தம் என்பதால் பரதனுக்கே அடிமைப்பட்டவனாகவும்; பரதனுடைய தூய்மையான தன்மை மற்றும் இனிமை ஆகிய இரண்டிலும் தன்னை இழந்தவனாகவும்; அயோத்யாகாண்டம் (3-28) – பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் - வடிவழகு தாராளகுணம் போன்றவற்றால் ஆண்களுடைய சித்தத்தையும் கவரவல்ல இராமன் - என்பதற்கு ஏற்ப, வைரம் போன்ற கடினமான உள்ளதையும் உருகும்படிச் செய்கின்ற இராமனுடைய வடிவழகைக் கண்டு தடுமாறாமல் பரதனுக்குக் கைங்கர்யம் செய்வதை விட்டு அகன்று போகாதபடியும்; இப்படியாக அந்த நிலை மாறாதபடி இருப்பதற்காக தனது அந்த நிலைக்கு இராமனுடைய வடிவழகு எப்போதும் சத்ருவே ஆகும் என்று தீர்மானித்துள்ளபோதிலும், பரதனுக்கு மிகவும் ப்ரியம் என்றும் காரணத்தால் இராமனுடைய வடிவழகில் ஈடுபட்டு, அயோத்யாகாண்டம் (89-3) – விசிந்தயந் - சிறப்பாக மனதில் கொண்டிருப்பவன் - என்பதற்கு ஏற்ப எப்போதும் இராமனுடைய வடிவழகைத் தனது மனதில் நிலை நிறுத்தியபடி உள்ளது போன்று (சத்ருக்நாழ்வானின் தன்மையை நம்மாழ்வாரிடம் காணலாம் என்று அடுத்து அருளிச்செய்கிறார்) … – நம்மாழ்வார் (கோதில் அடிமை) திருவாய்மொழி (8-10-9) – கோதில் அடியார் - என்பதற்கு ஏற்ப அடிமைத்தனத்தில் முதல் நிலை போன்று அல்லாமல் [பகவத் அடிமை போன்று அல்லாமல்], “கோதில் அடிமை” என்று கூறும்படியாக பாகவதர்களுக்கு அடிமையாக உள்ள நிலையின் சுவை, (உறுமோ என்பித்த) - திருவாய்மொழி (8-10-3) – அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டார் இங்கே திரிய – என்பதற்கு ஏற்ப உள்ள அவர்களை விடுத்து, திருவாய்மொழி (8-10-3) - செந்தாமரைக்கண் திருக்குறளன் நறுமாவிரை நாண்மலரடிக் கீழ்புகுதல் – பாவியேனுக்கு - உறுமோ – என்று கூறும்படியாகச் செய்வதும். (புலன் கொள் நித்ய சத்ரு விசிந்தநமுமான) - அனைத்து இந்த்ரியங்களையும் கவரும்படியான ஆற்றல் கொண்டதாக உள்ளதால், பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருத்தல் என்று நிலைக்கு இடையூறாக உள்ள பகவானின் திருமேனியை, தனக்கு விருப்பமானவர்களுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்ற காரணத்தால், கண்ணிநுண்சிறுத்தாம்பு (3) – திரிதந்தாகிலும் - என்பதற்கு ஏற்ப பாகவத அடிமைத்தனத்தில் இருந்து கடினத்துடன் தனது மனதைத் திருப்பி எடுத்து, திருவாய்மொழி (8-10-9) – புலன் கொள்வடி வென் மனத்ததாய் – என்பதற்கு ஏற்ப தனது மனதிற்கு எப்போதும் இலக்காகக் கொண்டுள்ள காரணத்தால், (ப்ரதாக்கள் படிகளும் காணலாம்) – லக்ஷ்மணன், பரதன், சத்ருக்நன் ஆகிய மூன்று தம்பிகளுடைய தன்மையை நம்மாழ்வாரிடம் காணலாம். – “விசிந்தநம்” என்று சொல்லுக்கு மேலே உள்ள விதத்தில் வ்யாக்யானம் செய்தது எப்படி என்றால் – “உறுமோ” என்ற பாசுரத்தில் பாகவத கைங்கர்யத்திற்கு எப்போதும் தடையாக உள்ள பகவத் திருமேனியை வென்று, “புலன்கொள் வடிவை” என்பதற்கு ஏற்ப உள்ள அவனை, “விசிந்தயனாய் இருக்கும் - விசேஷமாக மனதில் எப்போதும் கொண்டு” என்றுள்ள சூர்ணை வரியில், “விசிந்தயந்” என்னும் ஒரு சொல் இராமாயணத்தில் உள்ளதாக ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் எடுத்தாண்ட காரணத்தால் ஆகும்; இங்கு சிந்தநம் என்று கூறாமல் விசிந்தநம் என்று உரைத்தது அந்தச் சொல்லை மறைமுகமாக உணர்த்தவே ஆகும். ஆனால் இராமாயணத்தில் “விசிந்தயந்” என்ற சொல், இன்ன இடத்தில் உள்ளது என்று அறிய இயலவில்லை. – (அப்பொழுதைக்கு அப்பொழுது என்னும் பிதா) – தசரதசக்ரவர்த்தி, அயோத்யாகாண்டம் (3-29) – ந ததர்ப்ப ஸமாயாந்தம் பச்யமாநோ நராதிப - தன்னிடம் வருகின்ற இராமனை நோக்கியபடி உள்ள தசரதனுக்கு மனநிறைவு உண்டாகவில்லை – என்பதற்கு ஏற்ப வைத்த கண் வாங்காமல், மேன்மேலும் இராமனை அனுபவித்தபடி உள்ளபோதிலும், எப்போதும் மனநிறைவு அடையாமல் மீண்டும் கண்டு அனுபவிக்க வேண்டும் என்று விரும்பியது போன்று; நம்மாழ்வாரும், திருவாய்மொழி (2-5-4) – எப்பொழுதும் நாள் திங்களாண்டு - என்ற பாசுரத்தில் கூறுவது போன்று காலம் உள்ளவரை அனுபவித்தபடி நின்றாலும், திருவாய்மொழி (2-5-4) – அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் - என்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு நொடியிலும் எனக்கு மனநிறைவு ஏற்படாதவிதத்தில் உள்ள இனிமையான பொருள் என்று, மேன்மேலும் ஆசையைப் பெருக்கியபடி உள்ளவர் என்பதாலும். – (போனாய் என்னும் மாதா) – ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-6-15) – யமளார்ஜுநயோர் மத்யே ஜகாம - யமளார்ஜுன மரங்களுக்கு நடுவில் சென்றான் - என்று கூறுவதற்கு ஏற்ப குறிப்பிட்ட செயலைச் செய்வதில் ஒத்தபடியான சிந்தனை உள்ளவர்களாக, க்ருஷ்ணனைத் துன்புறுத்த எண்ணியபடி வந்து நின்ற யமளார்ஜுன மரங்களின் நடுவே க்ருஷ்ணன் சென்றான். அப்போது யசோதைப்பிராட்டி ஓடி வந்து அவனை எடுத்துக்கொண்டாள். அந்த இரண்டு மருதமரங்களின் வளர்த்தி மற்றும் க்ருஷ்ணனுடைய பால்யம் ஆகிய இரண்டையும் கண்ணுற்று, வயிறு எரிந்து, க்ருஷ்ணனுடைய திருமுகத்தை நோக்கி, “இந்தப் பெரிய மருதமரங்கள் நடுவில் சென்றாயே” என்று வெறுத்து நின்றாள். இதே போன்று நம்மாழ்வாரும், கடந்த காலகட்டத்தில் இந்த நிகழ்வு நடந்தபோதிலும், இவர் உள்ளபோது நடந்தது போன்று தோன்றுவதால், யசோதையைப் போன்றே வயிறு எரிந்து, திருவாய்மொழி (5-1-2)- போனாய் மாமருதின் நடுவே - என்று கூறினார். (படிகளும் காணலாம்) - இதன் மூலம் இவரிடம் தந்தை மற்றும் தாயான தசரதன் மற்றும் யசோதையின் தன்மைகளைக் காணலாம். – ஸ்ரீப்ரஹ்லாதன், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-19-58) – நாக்நிர்தஹதி நைவாயம் சஸ்த்ரைச் சிந்நோ நசோரகை:, க்ஷயம் நீதோ நவாதேந நவிஷேண நக்ருத்யயா - அவனை அக்னி எரிக்கவில்லை, ஆயுதங்கள் வெட்ட இயலவில்லை, விஷத்தால் இறக்கவில்லை, பூதங்களால் அழியவில்லை - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-38) - ஸத்வாஸக்தமதி: க்ருஷ்ணே தச்யமாநோ மஹோரகை:, நவிவேதாத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்யாஹ்லாத ஸம்ஸ்தித: – க்ருஷ்ணனிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட மனம் உள்ளவனாகிய ப்ரஹ்லாதன் கொடிய பாம்புகளால் தீண்டப்பட்டபோதிலும் க்ருஷ்ணனுடைய நினைவால் ஏற்பட்ட மகிழ்ச்சி காரணமாகத் தனது சரீரத்தை உணரவே இல்லை – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அக்னி போன்றவை தனக்கு எந்தக் கெடுதலையும் செய்யாதபடி, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-19-36) – ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகந்மயே, பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: – தந்தையே! அனைத்து உயிர்களையும் தனது சரீரமாகக் கொண்டவனும், உலகிற்கு நாயகனும், பரமாத்மாவும் ஆகிய கோவிந்தன் இந்த உலகத்தையே தனது சரீரமாகக் கொண்டபடி உள்ளபோது பகைவன் என்ற நிலை எவ்விதம் உண்டாகும் - என்பதற்கு ஏற்ப, பகைவன் போன்ற எந்தவிதமான சொல்லையும் எண்ணாதபடி, அனைத்தையும் பகவானின் சரீரமாகவே எண்ணி, திருவாய்மொழி (2-8-9) – எங்கும் உளன் கண்ணன் – என்பதற்கு ஏற்ப, உர்வ்யாமஸ்தி - பூமியில் உள்ளான் – என்று தொடங்கி, ஸர்வத்ர அஸ்தி - எங்கும் உள்ளான் - என்பது முடிய அனைவருக்கும் உபதேசித்தான். இதே போன்று நம்மாழ்வாரும், (செந்தீத் தண்காற்று இளநாகம் முதலான பகையற) - திருவாய்மொழி (4-4-3) - அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய்வேவாள் எறியும் தண்காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும் - என்றும், திருவாய்மொழி (4-4-5) – போம் இள நாகத்தின் பின்போய் அவன் கிடக்கை ஈதென்னும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அக்னி முதலான துன்புறுத்தும் பொருள்கள் அனைத்தும் ஸர்வேச்வரனையே தங்களுடைய ஆத்மாவாகக் கொண்டுள்ள காரணத்தால் நன்மையே செய்யும்படியாக. (சிந்தை செய்து) – திருவாய்மொழி (2-6-6) - என் முன்னைக் கோளரியே உன்னைச் சிந்தை செய்து செய்து என் முன்னைத் தீவினைகள் முழுவேரரிந்தனன் யான் முடியாததென்னெனக்கு - என்பதற்கு ஏற்ப எப்போதும் சிந்தித்தபடி. (எங்கும் உளன் என்று) – திருவாய்மொழி (1-1-10) – கறந்த சிலிடந்தொறுமிடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்துளன் – என்பதற்கு ஏற்ப அவன் எங்கும் நிறைந்துள்ள தன்மையை அனைவரும் அறியும்படியாக அருளிச்செய்வதால், பெரியதிருமொழி (2-3-8) – பள்ளியிலோதி வந்த தன் சிறுவன் - என்றும், பெரியதிருமொழி (2-3-8) – பிள்ளையைச் சீறி – என்றும் கூறப்பட்ட பள்ளிப்பிள்ளையான ப்ரஹ்லாதன் தன்மையையும் நம்மாழ்வாரிடம் காணலாம். – (முற்றவிட்டு மற்றிலே னென்னும் தர்மாத்மா) - விபீஷணன், யுத்தகாண்டம் (17-14) – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணங்கத: - புத்திரர்களையும் மனைவியையும் துறந்த நான் இராமனையே சரணம் அடைந்தேன் - என்றும், யுத்தகாண்டம் (19-5) – பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச, பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை - இலங்கை என்னால் துறக்கப்பட்டது, நண்பர்கள் விடப்பட்டனர், செல்வங்கள் விடப்பட்டன, எனது அரசும் உயிரும் உனது உடைமையாக உள்ளன, அனைத்தும் உனது உடைமையாக உள்ளன – என்றும் கூறுவதற்கு ஏற்ப இலங்கையுடன் சேர்த்து புத்திரர்கள், மனைவி ஆகிய அனைத்தையும் துறந்து, சக்ரவர்த்தி திருமகன் மட்டுமே தனக்கு அனைத்தும் என்று பற்றினான். இதே போன்று நம்மாழ்வாரும், (முற்றவிட்டு) - திருவாய்மொழி (8-2-11) – பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்றவிட்டு - என்பதற்கு ஏற்ப இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் பற்றுதல்கள் மற்றும் வாசனையுடன் கைவிட்டு. (மற்றிலேன் என்னும்) – திருவாய்மொழி (3-6-8) – தயரதற்கு மகன்றன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே - என்பதற்கு ஏற்ப சக்ரவர்த்தி திருமகனை மட்டுமே தனக்கு அனைத்துவிதமான பாதுகாப்பாகப் பற்றியபடி உள்ளதாய். (தர்மாத்மா படியும் காணலாம்) - ஆரண்யகாண்டம் (17-23) - விபீஷணஸ்து தர்மாத்மா - விபீஷணன் தர்மம் நிறைந்தவன் - என்பதற்கு ஏற்ப தர்மபுத்தி கொண்டவன் என்பதும் மட்டும் அல்லாமல், ஆரண்யகாண்டம் (37-13) - ராமோ விக்ரஹவாந் தர்ம: - தர்மமே இராமன் என்ற உருவம் எடுத்தது - என்று கூறப்படும் தர்ம ஸ்வரூபனாகிய சக்ரவர்த்தி திருமகனை மட்டுமே, தான் உயிர் வாழ்வதற்கான காரணமாகக் கொண்டுள்ளதால் “தர்மாத்மா” என்று சான்றோர்கள் கொண்டாடும் விபீஷணாழ்வான் தன்மையை நம்மாழ்வாரிடம் காணலாம். – (வாளி பொழிந்த நிர்க்குண விச்வாத்மா உள்ளேயுறைய வீரசரிதம் ஊணாகக் கற்பார் பாவம் மற்றிலே னென்னும் ராமதாஸன்) மஹாபாரதம் வனபர்வம் (149-8) - நிர்குண: பரமாத்மாஸௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி – தாழ்ந்த குணங்கள் ஏதும் அற்றவனாகிய அந்தப் பரமாத்மா உனது சரீரம் முழுவதிலும் பரவி நிற்கிறான் - என்பதற்கு ஏற்ப பகைவர்களுடைய கூட்டத்தை அடியுடன் அழிப்பதால் ஏற்றிய நாணை இறக்கி, யுத்தகாண்டம் (130-13) - பவாந் நாராயணோ தேவ: - நீயே நாராயணன் ஆவாய் - என்று கூறுவதால், “பரமாத்மா” என்று கூறப்படும் பெயர் கொண்டவனாக, தைத்திரீயத்தில் – விச்வாத்மா - உலகின் ஆத்மாவாக உள்ளவன் - என்று கூறும்படி உலகத்திற்கே ஆத்மாவாக உள்ள சக்ரவர்த்தி திருமகனைத் தனது உள்ளத்துள்ளே எப்போதும் கொண்டவனும்; அதிமாநுஷஸ்தவம் (32) – ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதூய சரிதம் தவ ஸேவதேஸௌ - அந்த அனுமன் உயர்ந்த மோக்ஷத்தையும் தள்ளியவனாக உனது வீரம் நிறைந்த சரீரத்தை எப்போதும் கொண்டாடியபடி இங்கேயே உள்ளான் - என்பதற்கு ஏற்ப சக்ரவர்த்தி திருமகனுடைய வீரம் நிறைந்த சரீரத்தை மட்டுமே இன்பமாக எண்ணுபவனும்; உத்தரகாண்டம் (40-15) - ஸ்நேஹோ மே பரமோ ராஜம்ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்ட்டித: பக்திச்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி - மிகவும் உயர்ந்த ப்ரீதி எனக்கு உன்னிடம் உள்ளது, அதே போன்று பக்தியும் உள்ளது, எனது மனம் இதனை விடுத்து வேறு எங்கும் செல்வதில்லை - என்பதற்கு ஏற்ப சிறந்த குணம் மூலமும், அம்புகள் மூலமும் முறையே தனக்கு வேண்டியவர்களையும், விரோதிகளையும் வெல்லும் வீரனாகிய சக்ரவர்த்தி திருமகனிடம் எப்போதும் நிலைத்து நிற்பதாகவும், அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை என்பதற்கு ஏற்ப உள்ளதாகவும் இருக்கின்ற அன்பாலும், எப்போதும் உள்ள பக்தியாலும், அந்த இராமனை அல்லாமல் பரத்வத்தில் கூடத் தனது உள்ளம் போகாமல் உள்ளதைக் குறித்துக் கூறும்போது பரத்வம் என்ற சொல்லைக் கூறுவதையும் விரும்பாமல் “அந்யத்ர - மற்ற எதிலும்” என்று கூறுவதற்கு ஏற்ப, சக்ரவர்த்தி திருமகன் அல்லாமல் வேறு எதனையும் அறியாமல் உள்ளவனும் ஆகிய அனுமான் இவ்விதம் இருந்தது போன்று. – நம்மாழ்வாரும், (வாளி பொழிந்த நிர்க்குண விச்வாத்மா உள்ளேயுறைய) - திருவாய்மொழி (8-6-2) – செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த வொருவன் திருக்கடித்தானமு மென்னுடைச் சிந்தையுமொருக்கடுத் துள்ளே யுறையும் பிரான் கண்டீர் - என்று மூலமாக உள்ள வலிமையானது அதன் முதலுடன் அழிந்து போகும்படியாக அன்பு மழையைப் பொழிந்த ஒரே வீரனாகிய சக்ரவர்த்தி திருமகனைத் தன் உள்ளத்தில் கொண்டவராகவும். (வீரசரிதம் ஊணாக) – பெரிய திருவந்தாதி (78) - கணை நாணி லோவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே ஓவாத வூணாக வுண் – என்பதற்கு ஏற்ப அவனுடைய வீர சரிதத்தையே தனக்கு இன்பமாகக் கொண்டவராகவும். (கற்பார் பாவம் மற்றிலேன் என்னும்) - திருவாய்மொழி (7-5-1) – கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ - என்பதற்கு ஏற்ப, “மகிழ்வுக்காகவும் நன்மைக்காகவும் ஒன்றைக் கற்கவேண்டும் என்றுள்ளவர்கள், மனதிற்கு இனிமையானவனும் உபகாரங்கள் செய்பவனும் ஆகிய சக்ரவர்த்தி திருமகனை விடுத்து, பரத்வம் போன்ற மற்ற அவதாரங்கள் குறித்துக் கற்பார்களோ”, என்று தனக்கு இராமனின் மீது உண்டான அளவு கடந்த அன்பினால் பரத்வம் போன்றவற்றை நீக்கி உரைக்கும்போது, அவற்றின் பெயரை உரைக்கக் கூட விருப்பம் இன்றி “மற்றும்” என்று கூறும் அளவிற்குத் திருவாய்மொழி (3-6-8) - தயரதற்கு மகன் றன்னை யன்றி மற்றிலேன் – என்று உள்ளதன் காரணமாக, (ராமதாஸன் படியும் காணலாம்) - ஸுந்தரகாண்டம் (43-9) - தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய - நான் கோசலநாட்டின் சக்ரவர்த்தியாகிய இராமனின் அடிமை - என்று கூறுவதற்கு ஏற்ப இராமனின் அடிமையாக உள்ள அனுமனுடைய தன்மையையும் காணலாம். – (பலவகையும் கண்டு வெண்சங்கேந்தின ரூபபரனான ச்வேதன் படியும் காணலாம்) - அர்ஜுனன், கீதை (11-15) - பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷ ஸங்காந் ப்ரஹ்மாணமீசம் கமலாஸநஸ்தம் ருஷீம்ச்ச ஸர்வாநுரகாம்ச்ச தீப்தாந் – தேவாதிதேவனே! நான் உன்னுடைய திருமேனியில் அனைத்துவிதமான தேவர்களையும், அனைத்து உயிர்களையும், தாமரையில் உள்ள நான்முகனையும், சிவனையும், அனைத்து ரிஷிகளையும், ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன் – என்று கூறுவதற்கு ஏற்ப விச்வரூபத்தைத் தரிசித்தான். அதன் பின்னர், கீதை (11-45) - அத்ருஷ்ட பூர்வம் ஹ்ருஷிதோஸ்மி த்ருஷ்ட்வா பயேநச ப்ரவ்யதிதம் மநோ மே, ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரஸீத தேவேச ஜகந்நிவாஸ - இதற்கு முன்பு நான் எப்போதும் கண்டிராத இந்த வியக்கவைக்கும் ரூபத்தைக் கண்டு மகிழ்ந்தபடி உள்ளேன். எனது மனம் அச்சத்தால் நடுங்கியபடி உள்ளது. எனவே நீ உனது முந்தைய ரூபத்தையே காண்பிப்பாயாக. அனைத்து தேவர்களுக்கும் உலகத்திற்கும் இருப்பிடமாக உள்ளவனே, எனக்கு க்ருபை செய்வாயாக - என்றும், கீதை (11-46) - கிரீடிநம் கதிநம் சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ, தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பல விச்வமூர்த்தே – க்ரீடத்தைத் தரித்தவனாகவும், கதாயுதம் கொண்டவனாகவும், சக்ரத்தை ஏந்தியவனாகவும் உள்ள உன்னுடைய அந்த ரூபத்திலேயே நான் உன்னைத் தரிசிக்க விரும்புகிறேன். ஆயிரம் திருக்கரங்கள் கொண்டு விச்வரூபத்தில் உள்ள நீ, நான்கு திருக்கரங்கள் கொண்டவனாக தரிசனம் தருவாயாக - என்றும் கூறுவதற்கு ஏற்ப, திவ்யமான கண்கள் கொண்டவனாக தான் கண்ட விச்வரூபம் என்பது முன்பு எப்போதும் காணப்படாத ஒன்றாக உள்ளதாலும் உக்கிரமாக இருந்ததாலும், மகிழ்வையும் அச்சத்தையும் ஒருசேர உண்டாக்குவதாக இருந்ததாலும், எப்போதுமே மகிழ்வை மட்டுமே உண்டாக்கக் காரணமாக உள்ளதும், முன்பு காணப்பட்டதும் ஆகிய அழகான ரூபத்தை மீண்டும் காண ஆசை கொண்டான்; ஆகவே நான்கு திருத்தோள்களுடனும், சங்கு சக்கரம் கதை ஆகியவற்றைக் கொண்டவனாகவும் உள்ள திவ்ய திருமேனியைக் காண்பதில் ஈடுபட்டவனாக நின்று விரும்பியது போன்று. – (இவரும் பல்வகையும் கண்டு) - நம்மாழ்வாரும் திருவாய்மொழி (6-3-1) – பல்குரவும் - என்று தொடங்கி, திருவாய்மொழி (6-3-1) - பலவகையும் பரந்த பெருமானை திருவிண்ணகர்க்கண்டேனே - என்று ஒன்றுக்கொன்று, மாறுபட்ட பொருள்கள் நிறைந்த இந்த உலகத்தைத் தனது செல்வமாகக் கொண்டவனாய், தனது உடைமையாக உள்ள பொருள்கள் மூலம் இந்த உலகில் பலவிதமாக நிறைந்துள்ளவனாய் உள்ள அவனைக் கண்டு. (வெண்சங்கு ஏந்தின ரூப பரனான) - திருவாய்மொழி (6-9-1) – நீராய் நிலனாய் - என்று தொடங்கி, (6-9-1) – சிவனாய் அயன் ஆனாய் - என்று கூறுவதற்கு ஏற்ப, “கார்யம் மற்றும் காரணம் ஆகிய அனைத்தையும் உனது சரீரமாகவே கொண்டு, இந்த ஜகத்தின் காரணமாக நீ உள்ள இருப்பை எனக்குக் காண்பித்தாய். ஆனால் இத்தகைய நிலையால், நான் அடைந்ததான உனக்குச் சொந்தமான பொருள்களை என்னுடையது என்றும், மற்றவர்களுடையது என்றும் எண்ணுகின்ற மாறுபட்ட எண்ணங்கள் விலகி, அனைத்தும் உனக்கே சொந்தம் என்ற எண்ணம் மட்டுமே என்னால் அடையப்பட்டது. இத்தகைய நிலையானது எனக்கு ஈடுபடுத்துவதாகவும், அனுபவிக்கத்தக்கதாகவும் இல்லை. ஆகவே, திருவாய்மொழி (6-9-1) – கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய் - என்பதற்கு ஏற்ப சங்கும் சக்கரமும் கூடியதான உனக்கு மட்டுமே உரிய திருமேனியுடன், என் முன்பாக நீ வரவேண்டும்”, என்று அவனுக்கு மட்டுமே உரிய திருமேனியுடன் அவனை அனுபவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். (ச்வேதன்படியும் காணலாம்) - இதன் மூலம் நம்மாழ்வாருக்கு நான்முகன் திருவந்தாதி (24) – சினப்போர்ச் சுவேதன் - என்னும்படியான அர்ஜுனனின் தன்மையும் உள்ளதைக் காணலாம். – “ச்வேதன்” என்றால் ச்வேதவாஹனன் அல்லது அர்ஜுனன். “முதலானோர்” என்பதன் மூலம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-55-156) - உபமாந மசேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத் - உயர்ந்த ஸாதுக்கள் அனைவருக்கும் எப்போதும் உபமானம் கூறலாம்படி எந்த ப்ரஹ்லாதன் இருந்தானோ - என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் தங்களுடைய ஒவ்வொரு தனித்தன்மை காரணமாக உபமானத்தின் இருப்பிடமாக நம்மாழ்வார் உள்ளதால், மேலும் பல ஞானிகளுடைய தன்மைகளையும் நம்மாழ்வாரிடம் காணலாம் என்பது உணர்த்தப்பட்டது. இந்தச் சூத்திரத்தில், பிராட்டிமார்களுடன் நம்மாழ்வாருக்கு உள்ள ஒப்புமை கூறியதைத் தொடர்ந்து, கோபிகைகளுக்கும் இவருக்கும் உள்ள ஒப்புமை கூறப்பட்டது; அது போன்று லக்ஷ்மணன் போன்றவர்களுடன் ஒப்புமை கூறியதைத் தொடர்ந்து தசரதன் போன்றவர்களுடன் ஒப்புமை கூறப்பட்டது.