Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 126)
இரண்டாம் ப்ரகரணம்
பிரியில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீனிறே.
இப்படி பிராட்டியோபாதி பிரியில் தரியாமைக்கு இவரொருவருமேயோ? பின்னையுமுண்டோவென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (பிரியில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீனிறே) என்று.
– இப்படியாகப் பெரியபிராட்டியைப் போன்று, அவனைப் பிரிந்தால் தரிக்க இயலாமல் உள்ள நிலை என்பது நம்மாழ்வாருக்கு மட்டுமே உள்ளதா அல்லது இது போன்றுள்ள நிலை வேறு யாருக்கும் வருமோ என்ற சந்தேகத்திற்கான விடையை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, நிருபாதிக சேஷியானவனைப் பிரியில் “நின்னலாலிலேன் காண்” என்று இவராகைக்கு “நேரிழையு மிளங்கோவும் பின்பு போக” என்கிறபடியே பிராட்டியோபாதி பின் துடர்ந்து போன இளையபெருமாளும், நிறுத்திப் போவதாகப் பெருமா ளருளிச்செய்தபோது, “ந ச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ, முஹுர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ” என்கையாலே அந்த ஜலத்தில் மத்ஸ்யமிறேயென்கை. இத்தால் பிராட்டியைப்போலே பிரியில் முடிகைக்கு இளைய பெருமாளும் இவரும் ஒக்குமென்றதாய்த்து.
– (பிரியில் இலேனுக்கு) - எந்தவிதமான காரணமும் இன்றி இயற்கையாகவே எஜமானனாக உள்ள ஸர்வேச்வரனைப் பிரிந்தால், திருவாய்மொழி (2-3-7) – நின்னலால் இலேன் காண் - என்பதற்கு ஏற்ப, இவர் இல்லை என்ற நிலைக்கு வருகிறார். இதே போன்று பெருமாள்திருமொழி (9-2) - நேரிழையும் இளங்கோவும் பின்பு போக – என்பதற்கு ஏற்ப பெரியபிராட்டியுடன் இராமன் பின்னே தொடர்ந்து சென்ற லக்ஷ்மணன், இராமன் கானகம் போவதற்கு முயன்றபோது தன்னை அயோத்தியிலே நிறுத்தி விட்டுப் போவதாக அருளிச்செய்தபோது, இராமாயணம் அயோத்யாகாண்டம் (53-31) - ந ச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ, முஹுர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ – இராமா! உன்னிடமிருந்து விலக்கப்பட்ட சீதை உயிர் தரிக்கமாட்டாள், நானும் உயிர் தரிக்கமாட்டேன், உயிர் வாழ்ந்தாலும் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் போன்று ஒரு சில நொடிகளே உயிர் வாழ்வோம் - என்று உரைத்தான். ஆக இதன் மூலம், பெரியபிராட்டிக்கு மட்டும் அல்லாமல், அவனை விட்டுப் பிரிந்தால் தரிக்க இயலாத நிலை என்பது லக்ஷ்மணன் போன்றே இவருக்கும் உள்ளது.