Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 125)

இரண்டாம் ப்ரகரணம்

இரானெனில் நசவாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன்சிறையிலும் விதிதன் புணைவனென்று ஜீவிதாதிகளால் குறைவின்றி மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி வில்வலவா ஹாவென்று இரக்கமெழாக் கொடுமைகள் சங்கித்து என்னையும் ஜீவந்தீ மென்று ஆள்விட்டுச் சுடரையடைந்து அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.

இப்படி ப்ரதாந மஹிஷிகளோடும் மற்றும் பகவத் பரிக்ரஹமுடையாரோடும் இவர்க்கு ஸாம்யமுண்டேயாகிலும், அல்லதாரெல்லாம் இவர்க்கொருவகைக் கொப்பா மித்தனை யாகையாலே, ஸர்வதா ஸாம்யம் ஜநகுல ஸுந்தரியான பிராட்டியோடே யென்கிறார் மேலொரு சூர்ணையாலே.

– இப்படியாக ஸர்வேச்வரனுடைய முதன்மையான பிராட்டிமார்கள் மற்றும் அவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்ற தேவிமார்கள் ஆகியவர்களுடன் நம்மாழ்வாருக்கு ஒப்புமை உள்ளது; இவர்கள் தவிர உள்ள மற்றவர்களுடன் இவருக்கு இது போன்றுள்ள ஒப்புமை உண்டு என்பதால் ஜனககுலத்தில் அவதரித்த சீதையுடன் ஒப்புமை உள்ளது என்று இந்தச் சூர்ணையில் கூறுகிறார்.

(இரானெனில் நசவாகக் குழைத்தவன் பின்தொடரவிருந்த வன்சிறையிலும்) “நச ஸீதா” இத்யாதி ச்லோகத்திற்படியே ஜலாதுத்த்ருதமான மத்ஸ்யம் போலே விச்லேஷத்தில் ஸத்தாஹாநி பிறக்கும்படி, “மநஸ்வீ தத்கத:” என்று ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு ப்ரகாரமாய் பிரிக்கவொண்ணாதபடி யிருக்குமாபோலே, பிரிக்கவொண்ணாதபடி ஒரு நீராகக் கலந்த சக்ரவர்த்தித்திருமகன், “உண்ணா துறங்கா தொலி கடலை யூடறுத்து” லங்கா த்வாரத்தளவும் பின்தொடர்ந்து வரும்படியாக, “தனிச்சிறையில் விளப்புற்ற” என்கிறபடியே “ஒருத்தி சிறையிருந்து ரக்ஷிக்கும்படியே!” என்று லோகமடையக் கொண்டாடும்படி தேவஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகப் பிராட்டி லங்கையிலே தனிப்பட்டுச் சிறையிருந்தாப்போலே – “மராமரமெய்த மாயவனென்னு ளிரானெனில் பின்னை யானொட்டுவேனோ” என்று சக்ரவர்த்தித்திருமகன் என்பக்கல் இரேனென்று அகலுமாகில் பின்னை நான் தொங்குவனோவென்று விரஹத்தில் ஸத்தாஹாநி பிறக்கும்படியாக “இலங்கை செற்றாய் – உன்னை யென்னுள்ளே குழைத்த வெம்மைந்தா” என்கிறபடியே ஏகதத்வ மென்னலாம்படி ஸம்ச்லேஷித்தவன் பிரிவில் தம் ஆற்றாமை குளப்படியாம்படி கடல் போன்றவாற்றாமையோடே விண்ணுலகம் தர விரைந்து, தாமிருந்த விடத்தேற வரும்படி, “வன்சிறையிலவன் வைக்கில்” என்கிறபடியே ஸம்ஸாரிகள் சிறையை விடுவிக்கைக்காக அவன் ஸம்ஸாரத்திலே வைக்கவிருந்த வன்சிறையிலும், (விதிதன் புணைவனென்று) அச்சிறை யிருப்பிலேயும் அவள், விமுகனான ராவணனுக்கு “விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி” என்று, நீ ப்ராணனோடேயிருக்க வேண்டியிருந்தாயாகில் சரணாகதி தர்மஜ்ஞருமாய் சரணாகத வத்ஸலருமாக ப்ரஸித்தராயிருக்கிற பெருமாளோடே உறவு பண்ணென்று ஹிதோபதேசம் பண்ணினாப்போலே இவரும் விமுகரான ஸம்ஸாரிகளுக்கு “புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே” என்று ஹிதோபதேசம் பண்ணுகையாலும். (ஜீவிதாதிகளால் குறைவின்றி) அவள், “நஹி மே ஜீவிதேநார்த்தோ நைவார்த்தைர் பூஷணை: வஸந்த்யா ராக்ஷஸீ மத்யே விநா ராமம் மஹாரதம்” என்று பெருமாளைப் பிரிந்து ராக்ஷஸிகள் நடுவேயிருக்கிற வெனக்கு ப்ராணாதிகளா லென்ன ப்ரயோஜந மென்று தத்விநியோகத்திற்குப் புறம்பாமவற்றை உபேக்ஷித்தாப்போலே, இவரும், “மாறாளன் கவராத மணீமாமை குறைவிலம்” என்று தொடங்கி அத்தலைக் குறுப்பல்லாத ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும், (மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி) அவள், ஆற்றாமையின் அதிசயத்தாலே “விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்ய வா வேச்மநி ராக்ஷஸஸ்ய” என்று உயிர்க் கொலையாக்கி வைத்தவனுடைய க்ருஹத்தில் நற்கொலை யாக்குவதித்தனை விஷம் தருவாரில்லையோ? விஷம்போலே சிறிதுபோது நின்று கொல்லுகையன்றிக்கே அப்போதே முடிப்பதொரு சஸ்த்ரம் தருவாரில்லையோவென்று முடியும் வகை தேடினாப்போலே, இவரும், “மாயும் வகையறியேன்” என்று முடியும் வகை தேடுகையாலும், (வில்வலவாஹாவென்று) அவள் அதிமாத்ர துக்கிதையாய் ரக்ஷகரான பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து “ஹா ராம” என்று கூப்பிட்டாப்போலே, இவரும், “புணரா நின்ற மரமேழன்றெய்தவொரு வில்வலவா வோ” என்று அவன் வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடுகையாலும், (இரக்கமெழாக் கொடுமைகள் சங்கித்து) அவள், கன்னாற்றாமைக்கு உதவ வந்து முகம் காட்டாமையாலே “க்யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராகவ: ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோசச் சங்கே” என்று பெருமாளை நிர்கருணராக சங்கித்தாப்போலே, இவரும் “இரக்கமெழீர்”, “வழாநெடுந்துன்பத்த ளென்றிரங்கா ரம்மனோ! இலங்கைக்குழா நெடுமாட மிடித்த பிரானார் கொடுமைகளே” என்று இத்தசையில் க்ருபை பண்ணாமலிருக்கிற கொடுமையாலே, “அறிவொன்றும் சங்கிப்பன்” என்கிறபடியே நைர்க்ருண்ய சங்கை பண்ணுகையாலும். (என்னையும் ஜீவந்தீமென்று ஆள்விட்டு) அவள், “ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் ஸம்பாவயதி கீர்த்திமாந், தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசா தர்மமவாப்நுஹீ” என்று ஸத்தையோடே கிடக்கிறவென்னை இஸ்ஸத்தை போவதற்கு முன்னே யாதொருபடி பெருமாள் வந்து நோக்கிக் கொள்வர்; அப்படி அவர்க்கு விண்ணப்பம் செய்யென்று தூது விட்டாப்போலே, இவரும், “ஏறுசேவகனார்க் கென்னையு முளளென்மின்களே” என்று என் ஸத்தை கிடந்தமையை அவர்க்கு அறிவியுங்கோளென்று ஆற்றாமை தோற்றத் தூதுவிடுகையாலும், (சுடரையடைந்து) அவள், “அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா” என்று ஆதித்யனோடு ப்ரயைபோலே நான் பெருமாளோடு அநந்யையா யிருப்பனென்றாப்போலே, இவரும் “அரக்கியை மூக்கீர்ந்தாயை – சுடரை - அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்று அநாதியான ப்ரகாரதயா சேஷத்வத்தாலே அவனோடு தாம் நித்யஸம்யுக்தராகப் பேசுகையாலும். – (அகலகில்லா) அவள், “அகலகில்லே னிறையுமென் றலர்மேல்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே உன்னை க்ஷணகாலமுமகல சக்தையல்லே னென்னுமாப்போலே, இவரும் “அடியே னுனபாத மகலகில்லே னிறையும்” என்று உன்னை க்ஷணகாலமும் பிரியச் சக்தனல்லே னென்கையாலும், (முற்றுவமை பெருமகளோடே) இவர்க்கு ஸர்வதா ஸாத்ருச்யம் “பெருமகள் பேதைமங்கை” என்கிற பெரியபிராட்டியாரோடே யென்றபடி. “இரானெனில் நசவாக” என்று தொடங்கி “அகலகில்லா” என்று தலைக்கட்டுகையாலும், ஜீவிதாதிகளால் குறைவின்றி முதலாக ஆள்விடுகையீறாக நடுச்சொன்னவையும், விரஹ து:கா ஸஹத்வ கார்யங்களாகையாலும், பிரியில் தரியாமையிறே இச்சூர்ணையிலே ப்ராசுர்யேண ப்ரதிபாதிக்கப்பட்டது.

– [இரானெனில் நசவாகக் குழைத்தவன் பின்தொடரவிருந்த வன்சிறையிலும்] (இரான் எனில் நச ஆக) - இராமாயணம் அயோத்யாகாண்டம் (53-31) – நச ஸீதா – இராமா! உன்னிடமிருந்து விலக்கப்பட்ட சீதை உயிர் தரிக்கமாட்டாள், நானும் உயிர் தரிக்கமாட்டேன், உயிர் வாழ்ந்தாலும் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் போன்று ஒரு சில நொடிகளே உயிர் வாழ்வோம் - என்பதற்கு ஏற்ப, தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் போன்று தனது பிரிவின் காரணமாக உயிருக்கு ஆபத்து உண்டாகும்படியாக. (குழைத்தவன்) - இராமாயணம் பாலகாண்டம் (77-25) – மநஸ்வீ தத்கத: - தாராள மனம் கொண்டவன், சீதையை அடைந்தவன் – என்பதற்கு ஏற்ப, ஒரு பொருளின் தன்மை என்பதை அந்தப் பொருளிலிருந்து பிரிக்கமுடியாது என்பது போன்று பிரிக்க இயலாதபடி சீதையுடன் ஒரு நீராகக் கலந்துவிட்ட சக்ரவர்த்தித்திருமகன், (பின் தொடர) – நாச்சியார் திருமொழி (11-7) – உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்து - என்பதற்கு ஏற்ப உண்ணாமலும் உறங்காமலும் இருந்து மிகுந்த ஓசையுடன் கூடிய ஸமுத்திரத்தைக் கடந்து இலங்கையுடைய வாசல் முடிய அவள் உள்ள இடம் தேடிப் பின் தொடர்ந்து வரும்படியாக, (இருந்த) - திருவாய்மொழி (4-8-5) – தனிச்சிறையில் விளப்புற்ற – என்பதற்கு ஏற்ப “சீதையைச் சிறையில் இருந்து விடுவிக்க இராமன் செய்த முயற்சிகள் எத்தகையது” என்று உலகம் கொண்டாடும்படியாக, (வன்சிறையிலும்) - மறைமுகமாகத் தேவலோகப் பெண்களைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக சீதை இலங்கையில் உள்ள சிறையில் தனியாக இருந்தது போன்று [சீதையைப் போன்றே நம்மாழ்வாராகிய தான் இந்தச் சரீரம் என்ற சிறையில் உள்ளதாகக் கூறுவதை அடுத்து உரைக்கிறார்] … – (இரான் எனில் நச ஆக) - திருவாய்மொழி (1-7-6) - மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ - என்ற பாசுரத்தில், “சக்ரவர்த்தித் திருமகன் என் அருகில் இருக்கமாட்டேன் என்று அகன்றால் அதன் பின்னர் நான் இந்தச் சரீரத்தில் நிலைப்பேனோ” என்று அவனைப் பிரிந்தால் ஏற்படும் விரஹதாபம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும்படியாக, (குழைத்தவன்) – திருவாய்மொழி (2-6-9) - இலங்கை செற்றாய் உன்னை என்னுள்ளே குழைத்த எம்மைந்தா - என்பதற்கு ஏற்ப, நானும் அவனும் ஒரே பொருள் என்று கூறலாம்படியாக என்னுடன் கலந்தான். (பின் தொடர) – அவன் என்னை விட்டுப் பிரிந்தால் எனது பிரிவுத்துன்பம் என்பது மாட்டின் குளம்பின் மூலம் ஏற்படும் பள்ளத்தில் நிற்கும் நீரின் அளவே உள்ளது; ஆனால் அவனுக்கு அந்தப் பிரிவுத்துன்பம் என்பது ஸமுத்திரத்தின் அளவாக உள்ளதால், மிகுந்த துன்பம் காரணமாக எனக்கு விண்ணுலகம் தருவதற்காக, நம்மாழ்வாராகிய நான் உள்ள இடம் தேடி வரும்படியாக, (இருந்த வன்சிறையிலும்) – திருவாய்மொழி (1-4-1) – வன்சிறையில் அவன் வைக்கில் - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாராகிய தன்னை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, அவன் இந்த உலகில் உள்ள ஸம்ஸாரிகளுடைய சிறையை விடுவிக்கும் பொருட்டு, அவனால் இந்தச் சரீரம் என்ற சிறையில் நம்மாழ்வாராகிய இவர் உள்ள நிலை உள்ளது [அதாவது தேவலோகப் பெண்களை இராவணனுடைய சிறைலிருந்து விடுவிப்பதற்காக இலங்கையின் சிறையில் சீதை இருந்தது போன்று, ஸம்ஸாரத்தில் உள்ளவர்களை விடுவிக்கும் பொருட்டு நம்மாழ்வார் இந்தச் சரீரம் என்னும் சிறையில் உள்ளார் என்று கருத்து]. – (விதிதன் புணைவன் என்று) - அப்படிப்பட்ட சிறையில் சீதை இருந்தபோதிலும் அவள் தனது எதிரியாகவே இருந்த இராவணனுக்கு, இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21-20) – விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி - இராமன் அனைத்து தர்மங்களையும் அறிந்தவன், தன்னைச் சரணம் புகுந்தவர்களிடம் மிகந்த அன்பு காண்பிப்பவன் என்பதை அனைவரும் அறிவர், ஆகவே நீ உயிருடன் இருக்க விரும்பினால் இராமனிடம் நட்புடன் இருப்பாயாக - என்பதற்கு ஏற்ப, “நீ உயிருடன் இருக்க எண்ணினால் சரணாகதி தர்மத்தை அறிந்தவர் என்றும், சரணாகதி செய்தவரிடம் மிகுந்த வாத்ஸல்யம் கொண்டவர் என்றும் அறியப்படும் இராமனுடன் நட்புறவு கொள்வாயாக”, என்று உபதேசம் செய்தாள். இதே போன்று நம்மாழ்வாரும் ஸர்வேச்வரனிடம் ஈடுபாடு இன்றி உள்ள ஸம்ஸாரிகளிடம், திருவாய்மொழி (2-8-1) – புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே - என்ற பாசுரத்தில் ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலைக் கடக்கும் விருப்பம் கொண்டவர்களுக்கு, அதனை நீந்துவதற்கான உபாயம் அவன் மட்டுமே ஆவான் என்று நன்மையை உபதேசிப்பதாலும். – (ஜீவித ஆதிகளால் குறைவின்றி) - சீதையானவள் இராமாயணம் ஸுந்தரகாண்டம் (26-5) - நஹி மே ஜீவிதேநார்த்தோ நைவார்த்தைர் பூஷணை: வஸந்த்யா ராக்ஷஸீ மத்யே விநா ராமம் மஹாரதம் – சிறந்த வீரனாகிய இராமனைப் பிரிந்து இந்த ராக்ஷஸிகள் நடுவில் உள்ள எனக்கு, எனது உயிரால் எந்தப் பயனும் இல்லை; செல்வத்தால் பயன் இல்லை, ஆபரணங்களால் பயன் இல்லை - என்பதற்கு ஏற்ப, “இராமனைப் பிரிந்து இந்த ராக்ஷஸிகள் நடுவில் உள்ள எனக்கு, உயிர் போன்றவற்றால் என்ன பயன்?”, என்று எண்ணியவளாக, இராமனுடைய அனுபவத்தைத் தவிர உள்ள மற்றவற்றை விரும்பாமல் வெறுத்தாள். இதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (4-8-1) – மாறாளன் கவராத மணீமாமை குறைவிலம் - என்ற பாசுரம் தொடக்கமாக உள்ளவற்றில், ஸர்வேச்வரனுடன் ஸம்பந்தம் கொள்ளாத உயிரையும், அந்த உயிருடன் தொடர்புள்ள அனைத்து வஸ்துக்களையும் வெறுப்பதாலும். – (மாயும் வகை விஷ சஸ்த்ரங்கள் தேடி) - சீதை தனது ஆற்றாமையின் மிகுதி காரணமாக, இராமாயணம் ஸுந்தரகாண்டம் (28-16) – விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்ய வா வேச்மநி ராக்ஷஸஸ்ய - இந்த ராக்ஷஸனுடைய இடத்தில் எனக்கு விஷத்தையோ அல்லது வாள் போன்ற ஆயுதத்தையோ அளிக்க யாரும் இல்லையே - என்பதற்கு ஏற்ப, “நான் உயிருடன் உள்ளபோதே என்னை இறந்தவள் போன்று ஆக்கியவன் வீட்டில் நற்கொலை ஆக்குவது போன்று சிறிதளவேனும் விஷம் தருபவர்கள் யாரும் இல்லையோ? அல்லது விஷம் போன்று தாமதமாக உயிரை எடுக்காமல், அந்த நொடியிலேயே உயிரை மாய்த்துக் கொள்ள ஏதுவான ஆயுதம் தருபவர் இல்லையோ?”, என்று, தான் இறப்பதற்கான வழியைத் தேடினாள். இதே போன்று நம்மாழ்வாரும், திருவாய்மொழி (5-4-3) – மாயும் வகை அறியேன் – என்று, தான் முடியும் வழியைத் தேடுவதாலும். – (வில்வலவா ஹாவென்று) - சீதை மிகுந்த துக்கம் காரணமாகத் தன்னைக் காப்பாற்றவல்ல இராமனுடைய வீரம் போன்றவற்றை எண்ணியவளாக, இராமாயணம் ஸுந்தரகாண்டம் (28-8) – ஹா ராமா - என்று அழைத்தாள். இதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (6-10-5) – புணரா நின்ற மரமேழு அன்று எய்த ஒரு வில்வலவா வோ - என்று அவனுடைய வீரமான செயல்களை நினைத்து அழைப்பதாலும். – (இரக்கம் எழாக் கொடுமைகள் சங்கித்து) - சீதையாகிய தனது பிரிவாற்றாமையை இராமன் உணர்ந்த பின்னரும் வந்து நிற்காத காரணத்தால், இராமாயணம் ஸுந்தரகாண்டம் (26-13) – க்யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராகவ: ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோசச் சங்கே - இராமன் குற்றம் நிறைந்தவர்களிடம் கூட குணத்தைக் காண்பவர், செய்ந்நன்றி மறவாதவர், மிகுந்த க்ருபை உள்ளவர், சிறந்த ஒழுக்கம் கொண்டவர் என்று அணைவராலும் புகழப்பட்டாலும், எனது புண்ணியங்களின் குறைவு காரணமாகவே என் விஷயத்தில் க்ருபை இன்றி உள்ளார் என்று நான் ஐயம் கொள்கிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, இராமன் க்ருபை இல்லாதவன் என்று சந்தேகப்பட்டாள். இதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (2-4-3) – இரக்கம் எழீர் - என்றும், திருவிருத்தம் (36) – வழாநெடுந்துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ! இலங்கைக் குழா நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகளே - என்று கூறுவதற்கு ஏற்ப இவர் விஷயத்தில் அவன் க்ருபை செய்யாமல் உள்ள கொடுமை காரணமாக திருவாய்மொழி (8-1-7) - அறிவொன்றும் சங்கிப்பன் - என்பதற்கு ஏற்ப அவன் க்ருபை அற்றவனோ என்று சந்தேகம் கொள்வதாலும். – (என்னையும் ஜீவந்தீம் என்று ஆள்விட்டு) - சீதையானவள் இராமாயணம் ஸுந்தரகாண்டம் (39-10) - ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் ஸம்பாவயதி கீர்த்திமாந், தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசா தர்மமவாப்நுஹீ – அனுமனே! மிகுந்த கீர்த்தி நிரம்பிய இராமன், நான் உயிரோடு உள்ளபோதே என்னை வந்து காண்கிற வழிகளை மேற்கொள்ளவேண்டும் என்று நீ உரைப்பாயாக. இந்த உபகாரத்தை நீ செய்தால், வாக்கு மூலம் தர்மம் செய்த புண்ணியத்தை நீ பெறுவாய் – என்று கூறுவதற்கு ஏற்ப, “உயிருடன் உள்ள என்னை, இந்த உயிர் போவதற்கு முன்பாக எந்தவிதத்திலாவது இராமன் வந்து காணவேண்டும் என்று நீ அவரிடம் விண்ணப்பம் செய்வாயாக”, என்று தூதுவிட்டாள். இதே போன்று நம்மாழ்வாரும், திருவாய்மொழி (6-1-10) – ஏறுசேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே - என்ற பாசுரத்தில், “எனது உயிர் உள்ள நிலையை அவனுக்குத் தெரிவிப்பீர்களாக” என்று தனது பிரிவாற்றாமை வெளிப்படும்படி தூதுவிடுவதாலும். – (சுடரை அடைந்து) - சீதையானவள் இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21-65) - அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா - சூரியனை விட்டுப் பிரிக்க முடியாத கதிர்கள் போன்று நான் இராமனை விட்டுப் பிரிக்க இயலாதவள் – என்று கூறுவதற்கு ஏற்ப, “சூரியனுடன் உள்ள கதிர்கள் போன்று நான் இராமனை விட்டு வேறுபடாமல் இருப்பேன்”, என்று கூறினாள். இதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (2-3-6) - அரக்கியை மூக்கீர்ந்தாயை சுடரை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே – என்ற பாசுரத்தில், எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள அடிமைத்தன்மை காரணமாக தான் அவனுடன் எப்போதும் சேர்ந்தே உள்ளதாக உரைப்பதாலும். – (அகலகில்லா) – பெரியபிராட்டியார் திருவாய்மொழி (6-10-10) – அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா – என்று கூறுவதற்கு ஏற்ப, “உன்னை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட பிரிவதற்கான சக்தி எனக்கு இல்லை” என்றாள். இதே போன்று நம்மாழ்வாரும், திருவாய்மொழி (6-10-9) – அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும் - என்ற பாசுரத்தில், “உன்னை ஒரு நொடிப்பொழுது கூடப் பிரியும் சக்தி கொண்டவன் அல்லன்”, என்று கூறுவதாலும், (முற்றுவமை பெருமகளோடே) - நம்மாழ்வாருக்கு அனைத்துவிதங்களிலும் பெரியதிருமொழி (4-5-5-) – பெருமகள் பேதைமங்கை – என்று கூறப்படும் பெரியபிராட்டியுடன் ஒப்பாகும் தன்மை உள்ளது என்று கருத்து. ஆக இந்தச் சூர்ணையில், “இரான் எனில் நசவாக” என்று தொடங்கி, “அகலகில்லா” என்று முடிப்பதாலும், “ஜீவாதாதிகளால் குறைவின்றி” என்று தொடங்கி, “ஆள்விட்டு” என்று நடுவில் உரைக்கப்பட்ட அனைத்தும் பிரிவாற்றாமை காரணமாக ஏற்படும் துக்கத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் செய்யப்படும் செயல்கள் என்பதாலும், இந்தச் சூர்ணையில், “பிரிந்தால் உயிர் தரியாமை” என்பதே முக்கியமான கருத்தாக உரைக்கப்பட்டது என்றாகிறது.