Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 124)

இரண்டாம் ப்ரகரணம்

இவர்கள் தேடிநிற்கப் பொய்கை முதுமணல் முல்லைப்பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவருமுகக்கு நல்லவர் முழுசி ஆவரென்னும் தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகரஸ்த்ரீகள், நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிர மெண்ணிறந்தார் பாவம் – கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறல் கஞ்சனை மங்கநூற்ற வாயும் தீர்ப்பாரென்னு மவற்றிலே தோன்றும்.

இப்படி ப்ரதாந மஹிஷிகளான இவர்களோடுள்ள ஸாம்யமேயன்றிக்கே இவர்களை உபேக்ஷித்தும் தங்களை யுகக்கும்படி அவனுக்கு அபிமதைகளான திருவாய்ப்பாடியில் பெண்களுடையவும், அவர்களையும் தங்கள் பேச்சழகாலே அவன் மறக்கும்படி பண்ணும் ஸ்ரீமதுரையில் பெண்களுடையவும், நரகவதாநந்தரம் பரிக்ரஹித்த ஸ்ரீமத் த்வாரகையில் பதினாறாயிரம் தேவிமாருடையவும் பாவங்கள் இவர்க்குண் டென்னுமிடம் இவர்தம் பேச்சிலே தோன்றுமென்கிறார் (இவர்கள் தேடி நிற்கவென்று தொடங்கி).

– இப்படியாக உள்ள முதன்மையான பிராட்டிமார்களுடன் மட்டுமே நம்மாழ்வாருக்கு ஒப்புமை உள்ளது என்பது அல்லாமல், இந்த மூன்று பிராட்டிமார்களை விட்டுவிட்டு ஸர்வேச்வரனாகிய க்ருஷ்ணன் தங்களை விரும்பும்படியாக அவனுக்கு மிகவும் ப்ரியமான திருவாய்ப்பாடியில் உள்ள பெண்கள், அந்தப் பெண்களையும் தங்களுடைய பேச்சு மூலம் க்ருஷ்ணனை மறக்கும்படியாகச் செய்யும் மதுரா நகரத்தில் உள்ள பெண்கள், நரகாசுரனை வதைத்த பின்னர் அவனிடமிருந்து மீட்கப்பட்டு த்வாரகையிலே இருந்த பதினான்காயிரம் பெண்கள் ஆகியவர்களுடைய தன்மைகளும் நம்மாழ்வாருக்கு உண்டு என்பது இவருடைய பேச்சில் வெளிப்படுகிறது என்கிறார்.

– அதாவது, “தேடித்திருமகள் மண்மகள் நிற்க” என்கிறபடியே ப்ரதான மஹிஷிகளான விவர்கள் தன்னைத்தேடி நிற்கும்படி இவர்களை உபேக்ஷித்து, “இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்”, “முதுமணல் குன்றேறி”, “முல்லையின் பந்தர்நீழல் மன்னியவளைப் புணரப்புக்கு”, “முற்றத்தூடு புகுந்து”, “மச்சொடு மாளிகையேறி”, “அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கணுக்கனாய்” என்கிறபடியே இவர்கள் ஜலக்ரீடை பண்ணுமிடம், விளையாடுமிடம் மற்றும் அவர்களிச் சாநுகுணமாகத் திரளவும் தனியவு மிருக்கு மிடங்களான பொய்கை, மணற் குன்று, முல்லைப்பந்தல், முற்றம், மச்சொடு மாளிகை அவ்வவ ஸ்தலங்களிலே சென்று புக்கு, “துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்”, “பந்து பறித்து துகில் பற்றி”, “கச்சோடு பட்டைக் கிழித்து” என்கிறபடியே குடைந்து நீராடுகிறவர்கள் கூறைகள் வாரிக்கொள்வது. “இட்டமா விளையாடுகிறவர்க ளிழைத்த சிற்றிலைச் சிதைப்பது, பந்து கழல் முதலான லீலோப கரணங்களைப் பறிப்பது. அவர்களோடே இட்டீடு கொண்டு பட்டுக்கள் கச்சுக்களெட்டினவற்றைப் பற்றி வலித்துக் கிழிப்பதாய், “கோயின்மை செய்து கன்மமொன்றில்லை”, “குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற” என்னும்படி நியாமகரற்ற ஸ்வதந்த்ரர் செய்யுமத்தையும், நியாமகர் கீழடங்காமல் மூலையடியே நடத்துவார் செய்யுமத்தையும் செய்து, “அல்லல் விளைத்த பெருமான்” என்கிறபடியே பேராரவரம் விளைத்து, “ஆயர்பாடி கவர்ந்துண்ணும்” என்று திருவாய்ப்பாடியில் பெண்களை யடைய முற்றூட்டாக விரும்பி புஜிக்குமென்கிறபடியே அவன் விரும்பப்படும் மவர்களாய், அத்தாலே “நீயுகக்கு நல்லவர்” என்னும்படி அவனுகப்புக்கு விஷயமான வைலக்ஷண்யத்தை யுடையவர்களென்று நிரூபகமாயிருக்கிற திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவம் இவர்க்குண்டென்னுமிடம். – க்ருஷ்ண விரஹ மாற்றமாட்டாமல் “துஷ்ட காளிய திஷ்டாத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”, “க்ருஷ்ணோஹமேஷ லலிதம் வ்ரஜாம் யாலோக்யதாம் கதி:” இத்யாதிப்படியே அவர்கள் அநுகரித்தாப்போலே இவர் அவனைப் பிரிந்தாற்றாமையாலே அநுகரித்த “கடல்ஞாலத்”திலும், அந்யவிஷயங்களிலே பரப்பனாகையாலே அபேக்ஷித ஸமயத்தில் வாராமல் அவன் விளம்பித்து வந்தால் அவர்கள் ஊடுமாபோலே இவர் அவனோடூடின “மின்னிடை மடவாரிலும்”, பகலெல்லாம் பசு மேய்க்கப்போய் அவற்றுடனே வரும் க்ருஷ்ணனை பசுக்களின் முற்றொழுந்தில் காணாதே பிற்குழையிலே வருகிறவவன் வரப்பற்றாமல் ஒரு ஸந்த்யையிலே பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் பாதபதார்த்தங்களுக்கு இடைந்து கூப்பிட்டாப்போலே இவர் கூப்பிட்ட மாலைப்பூசலான “மல்லிகை கமழ்தென்ற”லிலும், இரவெல்லாம் க்ருஷ்ண ஸம்ச்லேஷம் பண்ணியிருந்து போதுவிடிந்தவாறே அவன் பசு மேய்க்கப் போகுங்காலமென்னும் நினைவாலே அவனை யணைத்துக் கொண்டிருக்கச் செய்தே போனானாகவே கருதி பாதகபதார்த்தங்களும் ஸம்ச்லேஷ தசையில் அவன் பரிமாற்றங்களும் புறம்புமுள்ளும் நின்று நலிகிற நலிவை அவர்கள் அவன்றனக்குச் சொல்லிக் கூப்பிட்டாப்போலே இவர் கூப்பிட்ட காலைப் பூசலான “வேய்மரு தோளிணை”யிலும், தனக்கு பாதங்களாய் வந்து கிட்டின பூதநா சகட யமளார்ஜுநாதிகள் நினைவை அவைதன்னோடே போக்கித் தன்னை நமக்காக நோக்கித் தந்த வுபகாரகனை நான் கிட்டுவதென்னோவென்றும், அப்படி செய்த க்ருஷ்ணனாகிற வுபகாரகனுக்கு என் ஸ்த்ரீத்வத்தை யிழந்தே னென்றும் சொன்ன “பேய் முலையுண்டு”, “முனிந்து சகட முதைத்து” என்கிற பாட்டுக்களிலும் தோன்றும். ஸ்ரீமாலாகாரரும் கூனியும் கொடுத்த திருமாலையையும் சாந்தையும் சாத்திக் கொண்டு ராஜமார்க்கத்தாலே யெழுந்தருளி, குவலாயாபீட நிரஸநம் பண்ணி நிற்கிறபோது, “முழுசி வண்டாடிய”, “ஆவரியை செய்தறிவார்” என்கிற பாட்டுக்களிற் சொல்லுகிறபடியே ஒப்பனையழகிலும் வடிவழகிலும் குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும் தோற்று, “ஸக்க்ய: பச்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம், சுஜயுத்த க்ருதாயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்” இத்யாதிப்படியே அந்யோந்யம் தங்களிலே பேசுகிற “மழறு தேன்மொழி” என்கிறபடியே மழலைத்தேன் போலே இனிதான பேச்சுக்களாலே “மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலமேஷ்யதி, நகர ஸ்த்ரீகலாலாபமது ச்ரோத்ரேண பாஸ்யதி” என்று கோகுலத்திற் பெண்கள் பேசும்படி அவன் கோகுலத்தை மறக்கப் பண்ணும் ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவம் இவர்க்குண்டென்னுமிடம், – “மற்பொரு தோளுடை மாயப்பிரானுக்கு என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே” என்று ப்ரபலரான மல்லரோடே தோளில் சாந்தழியாதபடி மல்லைப் பொருத ஆச்சர்யபூதனான உபகாரகனுக்கு அறிவுடையளா யிருக்கிறவென் பெண் தனக்குள்ளதடங்கலும் இழந்தாளென்றும், “விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சமென்றிவள் பட்டனவே” என்று பெருமிடுக்கனான கம்ஸனை அவன் வஞ்சனை அவனோடே போம்படி பண்ணினவரே! உம்மையே தனக்குத் தஞ்சமென் றிவள்பட்ட வெள்ளமென்தா னென்று தமக்குப் பரிவரானவர்கள் சொன்ன பாசுரத்தாலே மல்லைரையும் கம்ஸனையும் நிரஸித்த க்ருஷ்ணனை அச்சுவடோடே அநுபவிக்க ஆசைப்பட்டமையைப் பேசின பாசுரத்திலே தோன்றும். – “நரகனைத் தொலைத்த கரதலத்த” என்றும், “நரகன்றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து கன்னிமகளிர் தம்மைக் கவர்ந்த” என்றும் சொல்லுகிறபடியே நரகாஸுரன் கந்யகைகளாகக் கொண்டு வந்து திரட்டி வைக்க, அவனை நிரஸித்துப் பொகட்டுப் பரிக்ரஹித்தவர்களாய், “பதினாறாமாயிரவர் தேவிமார்”, “பல்லாயிரம் பெருந்தேவிமார்”, “எண்ணிறந்த பெருந்தேவிமார்” என்கிறபடியே ஆயிரமிரண்டாயிர மல்லாமையாலே பல்லாயிரமென்றும் எண்ணிறந்தவென்றும் சொல்லப்படுவாராய், “ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” என்று புராணஸித்தரான பதினாறாயிரம் தேவிமார் பாவம் இவர்க்குண்டென்னுமிடம், – “நூற்றுவரை யன்று மங்கநூற்ற நிகரில் முகில்வண்ணன் நேமியான் என்னெஞ்சம் கவர்ந்தெனை யூழியான்” என்று துர்யோதனாதிகள் மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணனுக்கு நெஞ்சு பறிகொடுத்தமை சொன்னதிலும், துர்யோதநாதிகளை நிரஸிக்கைக்காக அவனெழுந்தருளினபோது அவர்கள் பிரிவாற்றாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டு, “குரரி! விலபஸி த்வம் வீதநித்ரா நசேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யாமீச்வரக்ரஸ்தபோதே, வயமிவ ஸகி! கச்சித் காட நிர்விண்ணசேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந” இத்யாதிகளாலே ப்ரலாபித்தாப்போலே, நாரை அன்றில் தொடக்கமானவற்றுக்கு வெளுப்பு விரஹக்கூப்பீடு முதலானவை நியத ஸ்வபாவமென் றறியாதே தமக்குப்போலே பகவத் விரஹஜமான வைவர்ணயாதிகளாகக் கருதி, அவற்றுக்குமாகத் தாம் நோவுபட்டு ப்ரலாபித்த “வாயுந்திரையுகளி”லும், “தோர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே” என்று ஆச்ரிதர்க்காக ஸாரத்த்யம் பண்ணினவனை அநுபவிக்கைக்காக இவளந்த:கரணம் கலங்கி அறிவு கெடுகிறதென்று தொடங்கி, “வண் துவராபதி மன்னனை யேத்துமினேத்துதலும் தொழுதாடுமே” என்று ஸ்ரீமத்த்வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களாசாஸநம் பண்ண இவள் நோவு பரிஹ்ருதமா மென்றும் தலைக்கட்டின “தீர்ப்பாரையாமினி”யிலும் தோன்றுமென்றபடி.

– (இவர்கள் தேடி நிற்க) - பெரியதிருமொழி (10-8-9) – தேடித்திருமகள் மண்மகள் நிற்க - என்பதற்கு ஏற்ப முதன்மையான பிராட்டிமார்களான இவர்கள் மூவரும் தன்னைத் தேடி நிற்கும்படியாக அவர்களை விட்டுவிட்டு. (பொய்கை முதுமணல் முல்லைப்பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு) – நாச்சியார் திருமொழி (3-2) – இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய் - என்றும், பெரியாழ்வார் திருமொழி (1-10-8) - முதுமணல் குன்றேறி – என்றும், பெருமாள் திருமொழி (6-8) – முல்லையின் பந்தர்நீழல் மன்னியவளைப் புணரப்புக்கு – என்றும், நாச்சியார் திருமொழி (2-9) - முற்றத்தூடு புகுந்து - என்றும், பெரியாழ்வார் திருமொழி (2-7-2) - மச்சொடு மாளிகையேறி – என்றும், திருவாய்மொழி (6-2-6) - அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கணுக்கனாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப திருவாய்ப்பாடியில் உள்ள பெண்கள் நீராடும் இடம், விளையாடும் இடம், இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி கூட்டமாகக் கூடும் இடம் மற்றும் தனித்து இருக்கும் இடம் என்பதான பொய்கை, மணற்குன்று, முல்லைப்பந்தல், முற்றம், மாடியுடன் கூடிய மாளிகை போன்ற இடங்களில் சென்று புகுந்து. (வாரி) – நாச்சியார் திருமொழி (12-3) – துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் - என்றும், நாச்சியார் திருமொழி (13-10) - பந்து பறித்து துகில் பற்றி – என்றும், நாச்சியார் திருமொழி (14-2) – கச்சோடு பட்டைக் கிழித்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப நீரில் புகுந்து விளையாடும் அவர்களுடைய உடைகளை வாரி எடுத்துக்கொள்ளுதல். (சிதைத்து) – தங்களுடைய விருப்பம் போன்று விளையாடியபடி உள்ள அவர்கள் கட்டி வைத்த மணல் வீடுகளைச் சிதைத்தல். (பறித்து) - அவர்கள் விளையாடும் பந்து, கழல் போன்ற விளையாட்டுப் பொருள்களைப் பறித்தல். (கிழித்து) - அவர்களுடன் விவாதம் செய்து, அவர்கள் அணிந்துள்ள பட்டு ஆடைகள், கச்சுகள் ஆகியவற்றில் தனது கைக்கு எட்டியவற்றைப் பிடித்து இழுத்துக் கிழித்தல். (கோயின்மை குறும்பு செய்து) - திருவாய்மொழி (6-2-6) – கோயின்மை செய்து கன்மமொன்றில்லை – என்றும், நாச்சியார் திருமொழி (12-3) - குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற - என்று கூறுவதற்கு ஏற்ப தன்னை நியமிப்பவர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால் சுதந்திரமான ஒருவன் செய்யக்கூடியதையும், ஒரு எஜமானனுக்குக் கீழ் அடங்காமல் தனது விருப்பத்தின்படி நடந்துபவர்கள் செய்யக்கூடியதையும் செய்து. (அல்லல் விளைத்து) – நாச்சியார் திருமொழி (13-10) – அல்லல் விளைத்த பெருமான் – என்பதற்கு ஏற்ப மிகுந்த ஆரவாரம் ஏற்படுத்தி. (கவரும்) – நாச்சியார் திருமொழி (13-14, 14-2) – ஆயர்பாடி கவர்ந்துண்ணும் – திருவாய்ப்பாடியில் உள்ள பெண்களை அடைவதற்காக பரிபூர்ணமாக வெண்ணெய் போன்ற அனைத்தையும் கலந்து உண்பவன் - என்பதற்கு ஏற்ப அவனால் மிகவும் விரும்பப்படுபவர்களாக. அதன் காரணமாக, (உகக்கு நல்லவர் பாவம்) – திருவாய்மொழி (10-3-8) – நீ உகக்கு நல்லவர் – என்பதற்கு ஏற்ப, அவனுடைய மகிழ்வுக்கு விஷயமாக உள்ள மேன்மையைக் கொண்டவர்கள் என்று உணர்த்தவல்ல திருவாய்ப்பாடியில் உள்ள பெண்களுடைய தன்மை நம்மாழ்வாருக்கு உண்டு என்னும் நிலை [எங்கு வெளிப்படுகிறது என்று அடுத்து அருளிச்செய்கிறார்] … – (கடல்ஞாலம்) - க்ருஷ்ணனைப் பிரிந்த பிரிவாற்றாமையைப் பொறுத்துக் கொள்ள இயலாமல், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-13- 27) – துஷ்ட காளிய திஷ்டாத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா - காளியனே! நிற்பாயாக. நான் க்ருஷ்ணன் என்று அவன் உரைத்தான் – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-13-27) – க்ருஷ்ணோஹமேஷ லலிதம் வ்ரஜாம் யாலோக்யதாம் கதி: - நான் க்ருஷ்ணன் ஆவேன், உங்களுக்காக நான் அழகாக நடக்கப்போகிறேன் – என்றும் அவனைப் போன்றே தாங்களும் உள்ளதாக அந்த ஆயர்பாடிப்பெண்கள் செய்து காண்பித்தது போன்று, நம்மாழ்வார் அவனை விட்டுப் பிரிந்துள்ள துக்கம் தாங்காமல் அருளிச்செய்த திருவாய்மொழி (5-6-1) – கடல் ஞாலம் – என்ற திருவாய்மொழியிலும். (மின்னிடை) – மற்ற செயல்களிலும் அவன் ஈடுபட்டு நிற்பதால், இவர்கள் விரும்பி அழைக்கும் நேரத்தில் வராமல் அவன் தாமதமாக வந்தால் அந்தப் பெண்கள் அவனுடன் ஊடல் கொள்வது போன்று, இவர் அவனுடன் ஊடல் கொள்வதான திருவாய்மொழி (6-2-1) – மின்னிடை மடவாரிலும் - என்ற திருவாய்மொழியிலும். (மல்லிகை) - பகல்பொழுது முழுவதும் பசுக்களை மேய்ப்பதற்காகச் செல்லும் க்ருஷ்ணன், மாலைப்பொழுதில் அந்தப் பசுக்கூட்டத்திற்கு முன்பு வராமல், அவற்றின் பின்னே வரும் காலதாமதத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாமல், ஒருநாள் மாலையில் ஐந்து லக்ஷம் குடியில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களைத் துன்புறத்துகின்ற பொருள்களைச் சேர்த்து அழைத்தது போன்று, இவரும் அழைத்த மாலை நேரத்து துன்ப பாசுரமான திருவாய்மொழி (9-9-1) – மல்லிகை கமழ்தென்றல் - என்ற திருவாய்மொழியிலும். (வேய் மரு) - இரவுப்பொழுது முழுவதும் க்ருஷ்ணனுடன் சேர்ந்திருந்தாலும், பொழுது விடிந்தவுடன் அவன் பசுக்களை மேய்க்கச் செல்லும் காலம் வந்துவிடும் என்ற நினைவு காரணமாக, அவன் அணைத்தபடி உள்ளபோதிலும் தங்களை விட்டு அவன் சென்றுவிட்டான் என்றே எண்ணிக்கொண்டு, தங்களை வருத்துகின்ற பொருள்கள் மற்றும் அவன் தங்களுடன் சேர்ந்திருந்தபோது செய்த செயல்கள் ஆகியவை தங்களை உள்ளும் புறமும் நின்று வேதனை உண்டாக்கும் செயல்களை அந்தப் பெண்கள் க்ருஷ்ணனிடம் உரைத்து அவனை அழைத்தது போன்று இவர் அழைத்த திருவாய்மொழி (10-3-1) - வேய்மரு தோளிணை - என்ற திருவாய்மொழியிலும். (பேய்முலை முனிந்து) - க்ருஷ்ணனாகிய தனக்கு விரோதிகளாக வந்த பூதனை, சகடாசுரன், மருதமரங்கள் போன்றவற்றை அவற்றுடைய நினைவு கூட மீண்டும் வராதபடி அழித்து, நமக்காகவே தன்னைக் கொடுத்து உதவி செய்த க்ருஷ்ணனை நான் அடைவது எந்த நாளிலோ என்றும், இப்படியாகச் செய்த க்ருஷ்ணன் என்ற உபகாரகனுக்காக நான் என்னுடைய பெண்மைத் தன்மையை இழந்தேன் என்றும் உரைத்த திருவாய்மொழி (5-3-8) – பேய் முலை உண்டு – என்றும், திருவாய்மொழி (7-3-5) – முனிந்து சகடம் உதைத்து - என்றும் உள்ள திருவாய்மொழிகளிலும் வெளிப்படும். – (முழுசி ஆவரென்னும் தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகரஸ்த்ரீகள் பாவம்) - மாலை தொடுப்பவர் மற்றும் குப்ஜா என்னும் கூனி ஆகியோர் அளித்த மாலை மற்றும் சந்தை ஏற்றுக்கொண்டு, மதுரா நகரத்தின் ராஜமார்க்கத்தில் எழுந்தருளி, குவலயாபீடம் என்ற யானையை அழித்துவிட்டு க்ருஷ்ணன் நிற்கும்போது. பெரியதிருமொழி (2-8-7) – முழுசி வண்டாடிய - என்றும், பெரியதிருமொழி (3-3-7) – ஆவரியை செய்தறிவார் – என்றும் உள்ள பாசுரங்களில் கூறுவதற்கு ஏற்ப ஒப்பனை அழகு, வடிவழகு மற்றும் குவலயாபீடத்தை வீழ்த்திய செயல் போன்ற பலவற்றில் தோற்றுப்போய், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-20-53) – ஸக்க்ய: பச்யத க்ருஷ்ணஸ்ய முகம் அத்யருணேக்ஷணம், சுஜயுத்த க்ருதாயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம் - தோழிகளே! அழகாகச் சிவந்த திருக்கண்கள் கொண்டதும், யானையுடன் யுத்தம் செய்த காரணத்தால் ஏற்பட்ட களைப்பால் வியர்வை நிரம்பியதும் ஆகிய க்ருஷ்ணனுடைய திருமுகத்தைப் பாருங்கள் - என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதான, திருவாய்மொழி (6-2-5) – மழறு தேன்மொழி – என்பதற்கு ஏற்ப உள்ளதான மழலைகள் பேசும் தேன் போன்ற இனிமையான பேச்சுக்கள் மூலமாக. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-18-13) – மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலமேஷ்யதி, நகர ஸ்த்ரீகலாலாபமது ச்ரோத்ரேண பாஸ்யதி - மதுரா நகரத்தை அடைந்து, அங்குள்ள பெண்களுடைய இனிமையான சொற்கள் என்னும் தேனை, தனது காதுகள் கொண்டு பருகியபடி உள்ள க்ருஷ்ணன் இனி கோகுலத்திற்கு எப்படி வருவான்? - என்று கோகுலத்தில் உள்ள பெண்கள் புலம்பும்படியாக க்ருஷ்ணன் கோகுலத்தை மறந்து போகும் விதத்தில் செய்கின்ற மதுராநகரத்தில் உள்ள பெண்களுடைய தன்மை நம்மாழ்வாருக்கு உண்டு என்ற நிலை [எங்கு வெளிப்படுகிறது என்று அடுத்து அருளிச்செய்கிறார்] … – [மற்பொரு விறல் கஞ்சனை என்னுமவற்றிலே தோன்றும்] (மற்பொரு) – திருவாய்மொழி (6-6-10) – மற்பொரு தோளுடை மாயப்பிரானுக்கு என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே - என்ற பாசுரத்தில், “அனைவரும் அறிந்த மல்லர்களுடன், தனது தோளில் பூசப்பட்ட சாந்து கூட அழியாதபடி மல்யுத்தம் செய்து அழித்து வியப்பை ஏற்படுத்தவல்ல உபகாரகனான க்ருஷ்ணன் விஷயத்தில், மிகுந்த அறிவுள்ள எனது பெண் தன்னிடம் உள்ள அனைத்தையும் இழந்தாள்” - என்றும். (விறல் கஞ்சனை) - திருவாய்மொழி (2-4-8) - விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சமென்றிவள் பட்டனவே – என்ற பாசுரத்தில், “மிகுந்த வலிமை உள்ள கம்சனை, அவன் செய்த வஞ்சனைகள் அனைத்தும் அவனுடன் சேர்ந்து அழியும்படியாகச் செய்தவனே! உன்னை மட்டுமே தனக்குத் தஞ்சம் என்று எண்ணியபடி உள்ள இவள் அடைந்த துக்கம் எத்தகையது”, என்றும் தன்னிடம் அன்பு நிறைந்தவர்கள் கூறும் பாசுரங்கள் மூலமாக, மல்லரையும் கம்ஸனையும் அழித்த க்ருஷ்ணனை, அந்த அடையாளங்களுடன் அனுபவிக்க ஆசைப்பட்டது குறித்து உரைத்த பாசுரங்களில் வெளிப்படும். – [நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிர மெண்ணிறந்தார் பாவம்] (நரகனைத் தொலைத்து கவர்ந்த) – பெரியதிருமொழி (10-9-4) - நரகனைத் தொலைத்த கரதலத்த – என்றும், பெரியாழ்வார் திருமொழி (4-3-3) – நரகன் தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து கன்னிமகளிர் தம்மைக் கவர்ந்த – என்றும் கூறுவதற்கு ஏற்ப நரகாஸுரன் என்பவன் கன்னிப்பெண்கள் பலரையும் கவர்ந்து வந்து ஒரே இடத்தில் வைத்தபோது, அவனை அழித்து க்ருஷ்ணனாகிய தன்னால் மீட்கப்பட்டவர்களும். (பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தவர் பாவம்) – பெரியாழ்வார் திருமொழி (4-9-4) - பதினாறாமாயிரவர் தேவிமார் - என்றும், பெரியாழ்வார் திருமொழி (4-1-6) – பல்லாயிரம் பெருந்தேவிமார் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (4-2-10) – எண்ணிறந்த பெருந்தேவிமார் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஆயிரம் இரண்டாயிரம் என்று அல்லாத காரணத்தால் “பல்லாயிரம், எண்ணிறந்தவர்” என்று கூறப்படுபவர்களும், ஸ்ரீவிஷ்ணு புராணம் (5-31-18) – ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ராணி – பதினாறாயிரம் பெண்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப புராணங்களில் உரைக்கப்படுபவர்களும் ஆகிய பதினாறாயிரம் தேவிமார்களுடைய தன்மை நம்மாழ்வாருக்கு உண்டு என்னும் நிலை [எங்கு வெளிப்படுகிறது என்று அடுத்து அருளிச்செய்கிறார்] … – [மங்கநூற்ற வாயும் தீர்ப்பாரென்னு மவற்றிலே தோன்றும்] (மங்கநூற்ற) – திருவாய்மொழி (7-3-10) – நூற்றுவரை யன்று மங்கநூற்ற நிகரில் முகில்வண்ணன் நேமியான் என்னெஞ்சம் கவர்ந்தெனை யூழியான் - என்று துரியோதனன் உள்ளிட்ட பலரையும் இந்தப் பூமியானது உள்ளே இழுத்துக் கொள்ளும்படியாகச் செய்தருளிய க்ருஷ்ணனிடம் தனது நெஞ்சத்தைப் பறி கொடுத்தது குறித்துக் கூறிய பாசுரத்திலும். (வாயும்) துரியோதனன் போன்றவர்களை அழிப்பதற்காக அவன் சென்றபோது, அந்தப் பிரிவுத்துன்பம் காரணமாகத் தடுமாறி நின்ற அவர்கள் ஸ்ரீமத்பாகவதம் (10-90-15) – குரரி! விலபஸி த்வம் வீதநித்ரா நசேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யாமீச்வரக்ரஸ்தபோதே, வயமிவ ஸகி! கச்சித் காட நிர்விண்ணசேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந – அன்றில் பறவையே! ஸர்வேசவரனால் மறைக்கப்பட்ட அறிவு காரணமாக இரவில் உறங்கியபடி உள்ள உலகம் அனைத்தும் இவ்விதம் கிடக்கும்போது, நீ உறக்கம் இன்றி கத்துகிறாய்; உனது கூட்டில் படுத்துக்கொள்லவில்லை, தாமரை போன்ற திருக்கண்கள் மற்றும் புன்னகை ஆகியவற்றுடன் வியக்கவைக்கும் செயல்கள் மற்றும் மயங்க வைக்கும் பார்வை கொண்ட க்ருஷ்ணனால் எங்களைப் போன்று நீயும் மிகவும் துன்பப்பட்ட மனம் அடைந்தாயோ - என்று புலம்பியது போன்று, நாரை மற்றும் அன்றில் முதலான பலவற்றுக்கும் வெண்மை நிறம் மற்றும் பிரிவால் கத்துதல் போன்ற நிலைகள் எப்போதும் உள்ளதாகும் என்று அறியாமல், பகவானைப் பிரிந்த காரணத்தால் தனக்கு ஏற்பட்டுள்ள பசலை நிறம் போன்றவையாகவே எண்ணிக்கொண்டு அவற்றுக்கும் சேர்த்து தான் புலம்பிய திருவாய்மொழி (2-1-1) – வாயும் திரையுகளும் - என்ற பாசுரத்திலும். (தீர்ப்பார்) – திருவாய்மொழி (4-6-1) – தோர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே - என்ற பாசுரத்தில் தன்னை அண்டி நின்றவர்களுக்காகத் தேர்ப்பாகனாக நின்றவனை அனுபவிப்பதற்காக இவள் தனது உள்ளம் தடுமாறி அறிவை இழக்கின்றாள் - என்று தொடங்கி, திருவாய்மொழி (4-6-10) – வண் துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுதாடுமே – என்றுள்ள பாசுரத்தில் துவாரகையின் அரசனாக உள்ள அவனைப் புகழ்ந்து வாழ்த்தினால் இவளுடைய இந்த நோயானது தீர்ந்துவிடும் என்று முடிக்கப்பட்ட “தீர்ப்பாரையாம் இனி எங்ஙனம் நாடுதும்” என்ற பாசுரத்திலும் வெளிப்படும்.