Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 123)

இரண்டாம் ப்ரகரணம்

உண்ணாது கிடந்தோர் மாயையினா லென்னும் வீறுடைய முடிக்குரியாரோடு இத்திரு மண்ணேரென்ன வொண்ணுதல் பின்னைகொல் என்கிற ஒப்பு, தென்பால் நெடுமாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறேழவெரித்த பெருந்தோற்றத்தாருயிர் காகுத்தன் ஆதியங்காலம் மண்புரை பொன்மாதின் துகளாடி எருதேழ்தழீஇச் சறையினாரென்னு மவற்றிலே தோன்றும்.

இப்படி ஆறுப்ரகாரத்தாலே பரிசுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு தத்ஸாம்ய முண்டாகையாலே பிராட்டிதசை இவர்க்கு வந்தேறியல்லாமையை ப்ரகாசிப்பித்தாராய் நின்றார் கீழ். ஏவம் பூதாகாரத்தாலே பெரியபி்ராட்டியாரோடுள்ள ஸாம்யமே யன்றிக்கே, தம்முடைய பாவவிசேஷங்களாலே பகவதபிமத திவ்யமஹிஷிகளான பிராட்டிமார் மூவரோடும் இவர்க்குண்டான ஸாம்யம் இவர் பாசுரங்களிலே ப்ரகாசிக்கு மென்கிறார் மேல் (உண்டாதென்று தொடங்கி).

இப்படியாக மிகவும் தூய்மையாக உள்ள ஆத்மஸ்வரூபத்திற்கு, பெரியபிராட்டியுடன் ஆறுவிதங்களில் ஒப்புமை உள்ளது என்பதால், நாயகியாய் நிற்கும் தன்மையானது நம்மாழ்வாருக்கு வந்து சேர்ந்த ஒன்று அல்ல (இயற்கையாகவே உள்ளது) என்பதைக் கடந்த சூர்ணையில் வெளிப்படுத்தினார். இப்படியாக உள்ள தன்மைகளால் பெரியபிராட்டியாருடன் உள்ள ஒப்புமை மட்டும் அல்லாமல், இவருடைய மற்ற தன்மைகளுடைய சிறப்புகள் காரணமாகவும், ஸர்வேச்வரனுக்கு மிகவும் விருப்பமான அவனுடைய தேவிமார்கள் மூவருடனும் இவருக்கு ஒப்புமை உள்ளது என்பது, இவருடைய பாசுரங்களில் வெளிப்படுவதை இங்கு கூறுகிறார். குறிப்பு – இந்தச் சூர்ணைக்கான வ்யாக்யானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு பொருள் உணரவேண்டும். ஆகவே சூர்ணைக்கான வ்யாக்யானம் ஒரே பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம், தனித்தனியாக உள்ளது.

– அதாவது “உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப் பெண்ணாக்கை யாப்பூண்டு தாமுற்ற பேதெல்லாம்” என்கிறபடியே ஜநககுல ஸுந்தரியான தன்னைப் பிரிந்தபோது தீரோதாத்த நாயகனாகையாலே விகார ஹேதுக்களுண்டானாலும், தைர்யத்தாலே புறம் தோற்றாமலிருக்கும் சக்ரவர்த்தித்திருமகனை, “ந மாம்சம் ராகவோ புங்க்தே”, “அநித்ரஸ் ஸததம் ராம:”, “நைவ தம்சாந் ந மசகாந்” இத்யாதிப்படியே ஊணுமுறக்கமுமற்று, கடித்தது மூர்ந்தது மறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷண்யத்தால் வந்த முடிக்குரியளான பெரியபிராட்டியாரோடும், “கிடந்திருந்து நின்றளந்து” என்கிற பாட்டின்படியே ஸர்வஜ்ஞனாய் அவாப்த ஸமஸ்தகாமனான ஸர்வேச்வரனை, பஹு ப்ரகாரமாகத் தன்னை அனுபவித்தாலும் பர்யாப்தனாகாதபடி பிச்சேற்றவல்ல வைலக்ஷண்ய ப்ரயுக்தமான வீறுடையளாய் பெரியபிராட்டியாரோபாதி முடிக்குரியளான ஸ்ரீபூமிப்பிராட்டியாரோடும், “ஓர் மாயையினால்” இத்யாதிப்படியே நித்யஸூரிகள் ஸமாராதந பரராய் நிற்க அவர்களறியாதபடி அத்தை உபேக்ஷித்து தாழ்வுக்கெல்லையான இடைக்குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து தன்னைப் பெறுகைக்கு சுல்கமாகவிட்ட ம்ருத்யு ஸமங்களான ருஷபங்களின் கொம்பினிடையிலே கருமாறி பாய்ந்தாற்போலே தன்னைப் பேணாமல் சென்று விழும்படி பண்ணவல்ல வைலக்ஷண்ய வீறுடையளாய், முற்பட்ட மஹிஷிகளோபாதி முடிக்குரியளான நப்பின்னைப்பிராட்டியாரோடும் “மாயோன் திறத்தனளே இத்திரு” என்று “அநந்யா ராகவேணாஹம்” என்கிறபடியே ஸர்வதசையிலும் அவன் திறமல்லதறியாளாய் ஸாக்ஷால்லக்ஷ்மியோடு விகல்பிக்கலாம் ஸ்வபாவையான விவளென்றும், “மண்ணேரன்ன வொண்ணுதல்” என்று ஸ்ரீபூமிப்பிராட்டி யாரோடொத்த வைலக்ஷண்யத்தை யுடையவளென்றும், “பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல்” என்று நப்பின்னைப்பிராட்டியோ ஸ்ரீபூமிப் பிராட்டியோ பெரியபிராட்டியாரோ என்றும் சொல்லும்படி இவர்க்குண்டான ஸாம்யம்; “தென்பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையாநங்களை மாயை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே” என்று சக்ரவர்த்தித்திருமகனைப் பிரிந்து பாதக பதார்த்தங்களாலே நோவுபடுவது, “வழாநெடும் துன்பத்த ளென்றிரங்காரம்மனோ இலங்கைக் குழாநெடுமாட மிடித்த பிரானார் கொடுமைகளே” என்று ‘ப்ரணயித்வமில்லையானால் ஸாமாந்ய க்ருபையு மில்லையோ?’ என்று கொடுமை சொல்லுவது, “காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்” என்று எதிர்கள்பக்கல் தான் கண் பார்க்கிலும் கண் பாராத வில்லையுடைய காகுத்தன் இத்தசையில் வருகிறிலலென்று வெறுப்பது, “இலங்கைநகர் அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி வம்பவிழ் தண்ணந்தூழாய் மலர்க்கே இவள் நம்பும்” என்று இலங்கையை சராக்நியாலே தக்தமாக்கினவர் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படுவது, “தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ” என்று லங்கையையெல்லாம் அக்நிக்கு விருந்திட்டவன் திருவடிகளை யாசைப்பட்ட நான் பட்டது பட்டாயோவென்று ஸமதுக்கிகளைக் கட்டிக் கொண்டழுவது, “மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க் கென்னையுமுள ளென்மின்களே” என்று எதிரில்லாத போரையுடைய ராவணன் தனக்கு அரணாகவிட்ட மதிளைத் துகளாக்கிப் பொகட்ட ப்ரஸித்தமான சேவகத்தையுடையவருக்கு ரஷ்ய வர்க்கத்திலே நானு மொருத்தி யுண்டென்று சொல்லுங்கோளென்று தூது விடுவது, “கிளரரக்கன் நகரெரித்த களி மலர்த் துழாயலங்கல் கமழ் முடியன் கவராத வறிவினால் குறைவிலம்” என்று ஐச்வர்யோத்ததனான ராவணனுடைய நகரத்தை தக்தமாக்கி முடி சூடி வளையம் வைத்திருக்கிறவன் விரும்பாத அறிவினால் என்ன கார்யமுண்டென்று அவனுக்கு உறுப்பல்லாததை உபேக்ஷிப்பது, “காண் பெருந்தோற்றத்தென் காகுத்த நம்பிக்கு என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே” என்று கண்ணுக்கினியதாய், அபரிச்சேத்ய போக்யமான ஸந்நிவேசத்தையும் குணபூர்த்தியையுமுடைய சக்கரவர்த்தி திருமகனுக்கு இவள் தன்னழகை யிழந்தா ளென்னும்படி அவனை ஆசைப்பட்டு அழகழிவது, “என்னாருயிர் காகுத்தன் நின் செய்யவாயொக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளிப்பைதலே இன்குரல் நீ மிழற்றேல்” என்று விச்லேஷத்தில் தரிக்கவொண்ணாதபடி எனக்கு ப்ராண பூதனான சக்கரவர்த்தி திருமகன் என்னோடே கலந்து வைத்துப் பிரிந்தான்; இத்தசையிலே அவனுக்குப் போலியான உன் வடிவாலே நலிகிறதுக்கு மேலே பேச்சாலும் நலியாதே கொள் என்று கிளியைப் பார்த்து நிஷேதிப்பதாய்க் கொண்டு பேசின பாசுரங்களிலும், “ஆதியங் காலத்தகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொற்றுழாயென்றே யோது மாலெய்தினாள்” என்னும்படி வராஹ கல்பாதியில் மஹாப்ருதிவியை அண்டபித்தியில் நின்று ஒட்டு விடுவித்து, எடுத்தவனுடைய திருவடிகளில் திருத்துழாயென்றே பலகாலும் சொல்லும்படி பிச்சேறுவது, “மண் புரை வையமிடந்த வராகற்கு என் கண் புனை கோதை இழந்தது கற்பே” என்னும்படி அவனை ஆசைப்பட்டு அறிவிழப்பது, “ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே ஏலப் புனைந்தென்னைமா ரெம்மை நோக்குவதென்றுகொல்” என்று ஸ்ரீபூமிப்பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் சூடின திருத்துழாயை பந்துக்களானவர்கள் ஏற்கவே கொண்டு வந்து நம் குழலிலே சூட்டி நம்மை ரஷிப்பதென்றோ வென்பது. “ஏனமொன்றாய்  மண் துகளாடி வைகுந்தமன்னான் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலருளவோ நும் வியலிடத்தே” என்று அத்விதீய வராஹமாய், ப்ரளயங்கதையான பூமியை யெடுத்தபோது வடிவில் பெருமையால் திருவெயிற்றில் கிடக்கிற பூமி ஒரு துகள் மாத்ர மென்னும்படி நின்றவனுடைய அபதாநத்தை அநிபவித்திருக்கிறவிவள் போக்யதை உபயவிபூதியிலு முண்டோவென்று விசேஷஜ்ஞர் ச்லாக்கிக்கும்படியை ப்ரகாசிப்பதாய்க் கொண்டு பேசின பாசுரங்களிலும், “எருதேழ்தழீ இக்கோளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாளிணை மேலணி தண்ணந்துழா யென்றே நாளு நாள் நைகின்றது” என்னும்படி ஏறு தழுவுகை முதலான அபதாநங்களையுடைய க்ருஷ்ணன் திருவடிகளில்திருத்துழாயை ஆசைப்பட்டு நாள்தோறும் சைதில்யத்தை யடைவது; “கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோற்கைச் சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலம்” என்று கோப வேஷதரனாய் ரஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னுடம்பு பேணாமல் திரியும் க்ருஷ்ணன் விரும்பாத ஸ்நிக்தமான நிறம் எனக்கு வேண்டாவென்பதாய்ப் பேசின பாசுரங்களிலும் தோன்றுமென்றபடி. இத்தால் திவ்யமஹிஷிகள் மூவரோடும் இவருக்குண்டான ஸாம்யம் ஜநககுல ஸுந்தரியான பிராட்டிக்கு அஸாதாரணமான ராமாவதார ததபதாநங்களிலும், ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு அஸாதாரணமான வராஹாவதார ததபதாநங்களிலும், நப்பின்னைப் பிராட்டிக்கு அஸாதாரணமான கிருஷ்ணாவதார ததபதாநங்களிலும் அந்தப் பிராட்டிமார் தங்களைப்போலே அதிமாத்ர ப்ரவணராயருளிச்செய்த அவ்வவ திவ்யஸூக்திகளிலே அபிவ்யக்த மென்றதாயிற்று.

– [உண்ணாது என்னும் வீறுடைய முடிக்கு உரியாரோடு இத்திரு என்கிற ஒப்பு] (உண்ணாது என்னும்) – நாச்சியார் திருமொழி (11-7) – உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப் பெண்ணாக்கை யாப்பூண்டு தாமுற்ற பேதெல்லாம் - என்பதற்கு ஏற்ப ஜனகரின் குலத்தில் அவதரித்த சுந்தரியான தன்னைப் பிரிந்தபோது, தீரோதாத்த நாயகன் என்பதால், இராமனாகிய அவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்த்த பலவிதமான காரணங்கள் உள்ளபோதிலும், தைரியத்தால் அவற்றை வெளிக்காட்டாமல் நின்ற இராமனை, இராமாயணம் ஸுந்தரகாண்டம் (36-42) - ந மாம்சம் ராகவோ புங்க்தே - இராகவன் மாமிசம் உண்ணவில்லை - என்றும், ஸுந்தரகாண்டம் (36-44) - அநித்ரஸ் ஸததம் ராம: - இராமன் உறங்கவில்லை – என்றும், ஸுந்தரகாண்டம் (36-42) – நைவ தம்சாந் ந மசகாந் – ஈக்களும் கொசுக்களும் தனது சரீரத்தில் உள்ளபோதிலும் விரட்டவில்லை – என்றும் கூறுவதற்கு ஏற்ப உணவின்றி, உறக்கம் இன்றி, தன் மீது கடிப்பதையும் ஊர்வதையும் கூட அறியாதபடிச் செய்யவல்ல சிறப்பு காரணமாக ஏற்பட்ட, (வீறுடைய முடிக்கு உரியாரோடு) – வீறு உள்ளவளாகவும், ஸர்வேச்வரனுடைய ஸாம்ராஜ்யத்தில் அவனுக்கு நிகராக முடிசூட்டிக் கொள்வதால் முடிக்கு உரியவளாகவும் உள்ள பெரியபிராட்டியாரோடு, (இத்திரு என்கிற ஒப்பு) –திருவாய்மொழி (4-4-7) - மாயோன் திறத்தனளே இத்திரு – என்றும், ஸுந்தரகாண்டம் ( 21-15) – அநந்யா ராகவேணாஹம் – இராகவனைக் காட்டிலும் நான் வேறுபட்டவள் அல்லள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்து நிலைகளிலும் அவன் இருப்பு அல்லாமல் வேறு ஏதும் அறியாத பெரியபிராட்டியோ இவர் என்று வியக்கும்படியாக மஹாலக்ஷ்மியோடு ஒப்பிடத்தக்க தன்மை கொண்டவர் இவர் என்று கூறலாம்படியாக உள்ளது இவருக்குப் பெரியபிராட்டியாருடன் உள்ள ஒப்புமை (இத்தகைய ஒப்புமை இவருடைய பாசுரங்களில் எங்கு வெளிப்படுகிறது என்று அடுத்து கூறுகிறார்) ….. [தென்பால் நெடுமாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறேழவெரித்த பெருந்தோற்றத் தாருயிர் காகுத்தன் என்னுமவற்றிலே தோன்றும்] (தென்பால்) – திருவிருத்தம் (77) – தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையாநங்களை மாயை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – என்ற பாசுரத்தில், சக்ரவர்த்தித் திருமகனாகிய இராமனைப் பிரிந்து, பிரிந்த காதலர்களைத் துன்புறுத்தும் பொருள்களால் துன்பம் அடைதல். (நெடுமாடம்) – திருவிருத்தம் (36) - வழாநெடும் துன்பத்தள் என்றிரங்காரம்மனோ இலங்கைக் குழா நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகளே - என்று கூறுவதற்கு ஏற்ப, “ப்ரியம் இல்லை என்றாலும், பொதுவாகவே வெளிப்படும் கருணையும் இல்லையோ?”, என்று தனக்கு ஏற்பட்ட கொடுமையை உரைத்தல். (கடுஞ்சிலை) – திருவாய்மொழி (5-4-3) - காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் – என்ற பாசுரத்தில், “எதிரிகளிடம் இராமனாகிய தான் தனது கருணையைக் காண்பித்தபோதிலும், அவ்விதம் கருணையைக் காண்பிக்காத வில்லைக் கொண்ட இராமன் எனது இந்த நிலையிலும் வரவில்லையே”, என்று வெறுத்தல். (அம்பெரி) – திருவாய்மொழி (4-2-8) – இலங்கைநகர் அம்பெரி உய்த்தவர் தாளிணை மேல் அணி வம்பவிழ் தண்ணந்தூழாய் மலர்க்கே இவள் நம்பும் - என்ற பாசுரத்தில், இலங்கையைத் தனது அம்புகள் என்னும் அக்னியைக் கொண்டு சாம்பலாக்கிய இராமனின் திருவடிகளில் உள்ள துளசியைக் குறித்து ஆசைப்படுதல். (ஊட்டி) - திருவாய்மொழி (2-1-3) - தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்றது உற்றாயோ – என்ற பாசுரத்தில், இலங்கை முழுவதையும் அக்னிக்கு உணவாக அளித்தவன் திருவடிகள் மீது நான் கொண்ட ஆசை காரணமாக அனுபவித்த பிரிவுத் துன்பங்கள் அனைத்தையும் நீங்களும் அனுபவித்தீர்களோ என்று தனக்குச் சமமாக துக்கம் அடைந்த பலவற்றையும் ஒன்று திரட்டிக் கொண்டு புலம்புதல். (நீறேழ) – திருவாய்மொழி (6-1-10) – மாறில் போர் அரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே - என்ற பாசுரத்தில், எதிர் இல்லாத போர் கொண்ட இராவணன், தனக்குச் சரணாக அமைத்துக் கொண்ட மதிளைத் துகள்களாகத் தகர்த்த வீரம் கொண்ட இராமனால் காப்பாற்றத் தகுந்த பொருள்களில் நானும் ஒருவள் என்று கூறுவீர்களாக தூது விடுதல். (எரித்து) – திருவாய்மொழி (4-8-5) - கிளரரக்கன் நகரெரித்த களி மலர்த் துழாயலங்கல் கமழ் முடியன் கவராத வறிவினால் குறைவிலம் - என்ற பாசுரத்தில், ஐச்வர்யம் காரணமாக உயர்ந்து நின்ற இராவணனுடைய நகரத்தை முற்றிலுமாக எரித்துச் சாம்பலாக்கி, பின்னர் அயோத்தி வந்து முடிசூடி, திருத்துழாய் மாலை அணிந்துள்ள இராமனால் நான் விரும்பப்படவில்லை; என்னை விரும்பாமல் உள்ள அவன் அறிவால் என்ன ஆகப்போகிறது என்று அவனுக்குச் சேராதவற்றை வெறுத்தல். (பெரும் தோற்றத்து) – திருவாய்மொழி (6-6-9) - காண் பெருந்தோற்றத்தென் காகுத்த நம்பிக்கு என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே - என்ற பாசுரத்தில், கண்களுக்கு இனிமையானதும், எல்லையற்ற இன்பம் அளிக்கவல்லதும் ஆகிய தோற்றம் மற்றும் அனைத்து குணங்களும் பரிபூர்ணமாக உள்ள தன்மை ஆகியவற்றைக் கொண்ட இராமனுக்காக இவள் தன் அழகினை இழந்தாள் என்று கூறலாம்படி அவன் மீது ஆசை கொண்டு தனது அழகினை இழத்தல். (ஆருயிர்க் காகுத்தன்) - திருவாய்மொழி (9-5-6) – என்னாருயிர் காகுத்தன் நின் செய்ய வாயொக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளிப்பைதலே இன்குரல் நீ மிழற்றேல் - என்ற பாசுரத்தில், “தனது பிரிவால் நான் தரிக்க இயலாதபடியாக எனக்கு உயிர் போன்ற இராமன் என்னுடன் கலந்து, பின்னர் பிரிந்தான்; இந்த நிலையிர் அவனுடைய திருமேனி நிறம் போன்றுள்ள உனது நிறம் காரணமாக என்னைத் துன்புறுத்துவது மட்டும் அல்லாமல், உனது பேச்சாலும் என்னை வருத்தாதே”, என்று கிளியை நோக்கி விலக்குவதாகப் பேசுதல் போன்ற பல பாசுரங்களில் வெளிப்படுவதைக் காணலாம். [கிடந்த என்னும் வீறுடைய முடிக்குரியாரோடு மண்ணேரன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு] (கிடந்த என்னும்) - திருவாய்மொழி (2-8-7) – கிடந்து இருந்து நின்று அளந்து - என்பதற்கு ஏற்ப, அனைத்தும் அறிந்தவனும் அனைத்தும் விருப்பங்களும் நிறைவேறப் பெற்றவனும் ஆகிய ஸர்வேச்வரனை, பலவிதமாகத் தன்னை அவன் அனுபவித்தபோதிலும், மனநிறைவு கொள்ளாதவனாக அறிவுத் தடுமாற்றம் செய்யவல்ல சிறப்பு காரணமாக ஏற்பட்ட. (வீறுடைய முடிக்கு உரியாரோடு) - வீறு கொண்ட பெரியபிராட்டி போன்றே முடிசூட உரிமை உள்ள பூமிப்பிராட்டியாருடன். (மண்ணேரன்ன ஒண்ணுதல் என்கிற ஒப்பு) - திருவிருத்தம் (49) - மண்ணேரன்ன வொண்ணுதல் - என்பதற்கு ஏற்ப பூமிப்பிராட்டியோ இவர் என்று வியக்கும்படியாக பூமிப்பிராட்டியுடன் ஒத்த சிறப்பைக் கொண்டவர் என்று கூறலாம்படியாக இவருக்கு உள்ள ஒப்புமை [இத்தகைய ஒப்புமை வெளிப்படும் பாசுரங்களை அடுத்து உரைக்கிறார்] …. [ஆதியங்காலம் மண்புரை பொன்மாதின் துகளாடி என்னுமவற்றிலே தோன்றும்] (ஆதி அம் காலம்) திருவாய்மொழி (4-2-6) – ஆதியங் காலத்தகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினாள் – என்ற பாசுரத்தில், “வராஹ கல்பத்தின் தொடக்கத்தில் இந்தப் பெரிய பூமியை அண்டத்திலுருந்து குத்தி எடுத்து, அதனை விடுவித்து, எடுத்தவனுடைய திருவடிகளில் உள்ள துளசி”, என்று பலமுறை உச்சரித்தபடி புத்தி தடுமாறுதல். (மண்புரை) – திருவாய்மொழி (6-6-5) – மண் புரை வையமிடந்த வராகற்கு என் கண் புனை கோதை இழந்தது கற்பே - என்ற பாசுரத்தில் அவன் மீது ஆசை கொண்டு தனது அறிவை இழத்தல். (பொன்மாதின்) – திருவிருத்தம் (40) - ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே ஏலப் புனைந்து என்னைமா ரெம்மை நோக்குவதென்றுகொல் - என்ற பாசுரத்தில் பூமிப்பிராட்டியின் அழகினை ஏற்பதற்காக வந்து பிறந்தவன் சூடிக் கொண்ட துளசியை நம்முடைய உறவினர்கள் கொண்டு வந்து நம்முடைய அழகான தலைமுடியில் சூட்டி வைத்து நம்மைக் காப்பாற்றுவது எந்த நாளிலோ என்று கூறுதல். (துகளாடி) - திருவிருத்தம்(55) – ஏனம் ஒன்றாய்  மண் துகளாடி வைகுந்தமன்னான் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே - என்ற பாசுரத்தில், இதனைப் போன்று இன்னொன்று இல்லை என்று கூறலாம்படியான வராஹமாய் நின்று ப்ரளயவெள்ளத்தில் ஆழ்ந்த பூமியை எடுத்தபோது காணப்பட்ட திருவடிவின் பெருமை காரணமாக, இவனுடைய திருவயிற்றில் உள்ள பூமி ஒரு சிறிய துகள் மட்டுமே ஆகும் என்னும்படியாக நின்றவனுடைய வீரத்தை அனுபவித்துள்ள இவளுடைய இனிமையானது, பரமபதம் மற்றும் இதர லோகங்கள் ஆகியவற்றிலும் உள்ளதோ என்று சான்றோர்கள் வியப்பதாகக் கூறுதல். (என்னுமவற்றில் தோன்றும்) - போன்ற பல பாசுரங்களில் வெளிப்படுவதைக் காணலாம். [ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்குரியாரோடு பின்னைகொல் எக்னிற ஒப்பு] (ஓர் மாயையினால் என்னும்) – திருவிருத்தம் (21) – ஓர் மாயையினால் – என்ற பாசுரத்தில் கூறியதற்கு ஏற்ப, நித்யஸூரிகள் அன்றாடம் திருவாராதனம் செய்தபடி உள்ளபோதிலும், அவர்கள் அறியாதவிதத்தில் அந்த ஆராதனையை ஒதுக்கி வைத்து, தாழ்விற்கு எல்லையாக உள்ள ஆயர்குலத்தில் க்ருஷ்ணனாக வந்து அவதரித்து, நப்பின்னையாகிய தன்னை அடைவதற்காக வைக்கப்பட்டிருந்த யமன் போன்ற ரிஷபங்களுடைய கொம்புகளின் நடுவில், சூலத்தின் நடுவில் சென்று பாய்வது போன்று, தன்னைக் குறித்துக் கவலைப்படாமல் பாயும்படிச் செய்த. (வீறுடைய முடிக்கு உரியாரோடு) - முன்னர் கூறப்பட்ட பிராட்டிமார்களோடு சமமான, முடிசூடுவதற்கு உரிய மேன்மை கொண்ட. (பின்னைகொல் என்ற ஒப்பு) - திருவாய்மொழி (6-5-10) – பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல் – என்பதற்கு ஏற்ப நப்பின்னை பிராட்டியோ இவர் என்று வியக்கும்படியாக நப்பின்னைப்பிராட்டியுடன் இவருக்கு உள்ள ஒப்புமை [இத்தகைய ஒப்புமை வெளிப்படும் பாசுரங்களை அடுத்து உரைக்கிறார்] … [எருதேழ் தழீஇச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்] (எருது ஏழ் தழீஇ) - திருவாய்மொழி (4-2-5) – எருதேழ்தழீ இக்கோளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாளிணை மேலணி தண்ணந்துழா யென்றே நாளு நாள் நைகின்றது - என்ற பாசுரத்தில், ஏறு தழுவுதல் போன்ற பல வீரச்செயல்கள் கொண்ட க்ருஷ்ணனுடைய திருவடிகளில் உள்ள துளசி மீது ஆசை கொண்டு நாள்தோறும் தனது சரீரம் கெடும்படியாக இருத்தல். (சறையினார்) – திருவாய்மொழி (4-8-4) – கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோற்கைச் சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலம் – என்ற பாசுரத்தில், இடையன் போன்று வேடம் பூண்டு, தன்னால் காக்கப்பட வேண்டியவற்றைக் காப்பாற்ற தனது சரீரத்தையும் நோக்கிக் கொள்ளாமல் திரிகின்ற க்ருஷ்ணனால் விரும்பப்படாத தளிர் போன்ற நிறம் எனக்கு வேண்டாம் என்று கூறுதல். (என்னுமவற்றில் தோன்றும்) – போன்ற பாசுரங்களில் வெளிப்படுவதைக் காணலாம். – ஆக ஸர்வேச்வரனுடைய திவ்யமான பிராட்டிமார்கள் மூவருடனும் நம்மாழ்வாருக்கு உள்ள ஒப்புமை என்பது - ஜனகருடைய குலத்தில் வந்த சீதைக்கு மட்டுமே உரிய இராமாவதாரம் மற்றும் அந்த அவதாரத்தில் செய்த செயல்கள், பூமிப்பிராட்டிக்கு மட்டுமே உரிய வராஹ அவதாரம் மற்றும் அந்த அவதாரத்தில் செய்த செயல்கள், நப்பின்னையைப் பிராட்டிக்கு மட்டுமே உரிய க்ருஷ்ணாவதாரம் மற்றும் அந்த அவதாரத்தில் செய்த செயல்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட நின்ற அந்தந்த பிராட்டிகள் போன்று அளவற்ற காதலுடன் அருளிச்செய்த அந்தந்த திருப்பாசுரங்களில் வெளிப்பட்டது.