Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 122)
இரண்டாம் ப்ரகரணம்
இன்புமன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமாமலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே.
இப்படி கேவலம் ஸ்த்ரீ ஸாம்யமேயன்றிக்கே நாரீணாமுத்தமையான பிராட்டியோடே ஸாம்யமும் பரிசுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு உண்டென்னுமத்தை ஸ்பஷ்டமாக வருளிச்செய்கிறார் மேல் (இன்புமன்புமென்று தொடங்கி).
– இவ்விதம் பெண் என்ற ஒப்புமை மட்டும் அல்லாமல், பெண்களில் உயர்ந்தவளாகிற பெரியபிராட்டியுடன் ஒப்புமையும் இந்தத் தூய்மையான ஆத்மஸ்வரூபத்திற்கு உண்டு என்பதை மிகவும் தெளிவாக இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” என்று இன்றாச்ரயித்த நமக்கும் நித்யஸூரிகளுக்கு மவ்வருகாய ரூபகுணத்தாலும் ஆத்மகுணத்தாலும் பூர்ணையாயிருக்கிற பிராட்டிக்கும் இன்பனாமிடத்தில், முற்பட இங்கே இன்பனாய், பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹிப்பதென்னும்படி, பிராட்டிக்கு முன்னே இவர்பக்கல் இன்பனாவது; “கோலமலர்ப்பாவைக் கன்பாகிய வென்னன்பே” என்று நிரதிசய போக்யையான பிராட்டிக்கு அன்பனாகையாலே, அவள் பரிக்ரஹமான என்பக்கலிலும் அன்பனானவனே யென்னும்படி, அவள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் இவ்வளவும் வளர வருவதாய், இப்படி இன்புமுற்படுவது அன்பு கொழுந்து விடுவதாகிறது, “கடிமாமலர்ப் பாவை யொப்பாள்” என்று பரிமள ப்ரசுரமான பூவில் பிறப்பாலும் நிருபாதிக ஸ்த்ரீத்வத்தாலும் நிரதிசய போக்ய பூதையான பிராட்டியோ டொக்கச் சொல்லலாமவளென்னும்படி, பிராட்டியோடு இத்தலைக்குள்ள ஸாம்யத்துக் குடலான அநந்யார்ஹ சேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம், ஸம்ச்லேஷத்தில் தரிக்கை, விச்லேஷத்தில் தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வமாகிற ஆறு ப்ரகாரத்தாலேயென்கை. – “இன்பன்” என்றது – ஸ்நிக்தனென்றபடி. ஆகையால் அன்போபாதி இன்பும் ஸ்நேஹவாசியாகையாலே, ஸ்நேஹம் முற்படுவது கொழுந்து விடுவதாகிற தென்றபடி. “இன்பும், அன்பும்” என்று இரண்டு போலச் சொல்லிற்று - முற்படுதலும் கொழுந்துவிடுதலும் சொல்லுகிற ஸ்தலங்களில் ஸ்நேஹ வாசகதயா ப்ரயுக்த சப்தங்கள் இவையாகையாலே இரண்டு சந்தையும் தோற்றுகைக்காக. “பிராட்டியோடுள்ள” என்ன வமைந்திருக்க, “கடிமாமலர்ப் பாவையோடுள்ள” என்றது - அந்த சந்தையிலே பிராட்டி ஸாம்யம் முக்தகண்டமாகச் சொல்லியிருக்கையாலும், கந்தல் கழிந்த ஸ்வரூபத்தை யுடையவர்க ளெல்லாரையும் இப்படிச் சொல்லுகிற - ஸ்வரூபாநுபந்தியான இஸ்ஸாம்ய ஷட்கத்தாலே யென்றறிவிக்கைக்காகவும், ஸாம்யத்தாலே யென்னாமல், ஸாம்ய ஷட்கத்தாலே யென்றது - நிரூபகத்வம், அநுரூபத்வம், அபிமதத்வம், சேஷத்வ ஸம்பந்த த்வாரபாவம், புருஷகாரத்வம், ப்ராப்ய பூரகத்வம் முதலான ஸ்வபாவ விசேஷங்கள் ததஸாதாரணங்க ளாகையாலே.
– (இன்பு முற்படுவது) - திருவாய்மொழி (4-5-8) – நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை - என்பதற்கு ஏற்ப, இன்று திருந்தி அவனை அடைந்த நமக்கும், நித்யஸூரிகளுக்கும் எட்டாதவளாக உள்ள ரூபம், குணம் மற்றும் ஆத்மகுணத்தால் நிறைந்துள்ள பெரியபிராட்டிக்கும் இனிமையாக உள்ளவனாக இருக்கும்போதிலும், முதலில் நம்மிடம் இன்பனாக இருந்த பின்னரே பெரியபிராட்டியிடம் இன்பனாக உள்ளான்; இதற்கு ஏற்றபடி பெரியபிராட்டிக்கு முன்பாக, நம்மாழ்வாரிடமே அவன் இன்பனாக உள்ளான் என்று கருத்து. (அன்பு கொழுந்து விடுவதாகிறது) - திருவாய்மொழி (10-10-7) - கோலமலர்ப்பாவைக் கன்பாகிய வென்னன்பே – என்பதற்கு ஏற்ப எல்லையற்ற இனியவளாக உள்ள பெரியபிராட்டிக்கு அன்பனாக உள்ளதால், அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட என்னிடமும் அன்பாக உள்ளவனே - என்னும்படியாக பெரியபிராட்டியிடம் அவன் காண்பிக்கும் அன்பானது, நம்மாழ்வார் வரை வளர்ந்து நிற்பதாய்; இவ்விதம் இன்பம் முற்பட்டு அன்பு கொழுந்து விடுவதாகிறது. (கடிமா மலர்ப் பாவையோடு உள்ள) - பெரியதிருமொழி (3-7-9) – கடிமாமலர்ப் பாவை யொப்பாள் – என்பதற்கு ஏற்ப, மிகுந்த நறுமணத்துடன் கூடிய மலரில் பிறந்த காரணத்தாலும், எந்தக் காரணமும் இன்றி உள்ளதான பெண்மைத்தனத்தாலும் எல்லையற்ற இனிமையுடன் கூடியவளாக பெரியபிராட்டி உள்ளாள்; இப்படிப்பட்ட பெரியபிராட்டிக்கு ஒப்புமை கூறவல்லவள் என்பதற்கு ஏற்ப பெரியபிராட்டியுடன் நம்மாழ்வாருக்கு உள்ளதான. (ஸாம்ய ஷட்கத்தாலே) - ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல் [அநந்யார்ஹ சேஷத்வம்], அவனை மட்டுமே சரணம் என்று புகுதல் [அநந்ய சரணத்வம்], அவனுக்கு மட்டுமே இனியவளாக இருத்தல் [அநந்ய போக்யத்வம்], அவனுடன் சேர்ந்திருந்தால் மட்டுமே உயிர் தரித்தல், அவனைப் பிரிய நேர்ந்தால் உயிர் தரிக்க இயலாதபடி தவித்தல், அவனால் மட்டுமே காப்பாற்றப்படுதல் - என்பதான ஆறுவகையான ஒற்றுமைகள். “இன்பன்” என்றால் “சிநேஹிதன்” என்று பொருள். எனவே “அன்பு” என்ற சொல்லைப் போன்றே “இன்பு” என்ற சொல்லும் சிநேஹத்தைக் குறிப்பது என்பதால், சிநேஹம் முற்படுதல் கொழுந்துவிடுவதாகிறது என்று கருத்து. அப்படியென்றால், “இன்பம், அன்பு” என்று இரண்டு சொற்களாக ஏன் கூறவேண்டும் என்று கேட்கலாம். இதற்கு விடை அருளிச்செய்கிறார். முற்படுதல் மற்றும் கொழுந்துவிடுதல் என்பதைக் கூறும் இடங்களில், சிநேஹத்தை உணத்துவதற்காக கூறப்பட்ட சொற்களே இவை இரண்டும் ஆகும் என்று உணர்த்துவதற்காக ஆகும். “பிராட்டியோடு உள்ள” என்று கூறினாலே போதுமானதாயிருக்க, “கடிமாமலர்ப் பாவையோடு உள்ள” என்று ஏன் கூறினார்? இதற்கு விடை அருளிச்செய்கிறார். “கடிமாமலர்ப்பாவை” என்று கூறுவதான பெரியதிருமொழி பாசுரத்தில் (3-7-9), பெரியபிராட்டி மற்றும் ஆத்மஸ்வரூபம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒப்புமை மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாலும், கந்தல் கழிந்த ஸ்வரூபம் [இந்தச் சரீரத்தை நீக்கிய தன்மை] கொண்ட அனைவரையும் இவ்விதம் உரைப்பது என்பது மேலே கூறப்பட்ட ஆறுவகையான ஒப்புமை உள்ளதாலும் ஆகும் என்று உணர்த்தவே ஆகும். “ஸாம்யம்” என்று கூறாமல் “ஸாம்ய ஷட்கம் = ஆறு ஒற்றுமைகள்” என்று ஏன் கூறினார்? இதற்கான விடையை அருளிச்செய்கிறார். ஸர்வேச்வரனுக்கு மட்டுமே சேரும் தர்மமாக இருத்தல், அவனுக்கு ஒத்த ரூபத்தில் இருத்தல், அவனுக்கு விருப்பமானவளாக இருத்தல், அனைவரும் அவனுக்கு அடிமையாக இருத்தல் என்பது இவள் மூலமாக நிகழும்படி இருத்தல், அனைத்து உயிர்களுக்கும் சிபாரிசு செய்பவளாக இருத்தல் [புருஷகாரத்வம்], நாம் செய்யும் கைங்கர்யம் அனைத்தும் அவனுடைய திருவுள்ளத்தில் பூர்ணமாக நிறையும்படிச் செய்தல் போன்ற தன்மைகள் பெரியபிராட்டிக்கு மட்டுமே உரித்தானவை என்பதால் ஆகும்.