Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 121)

இரண்டாம் ப்ரகரணம்

வித்யை தாயாகப் பெற்றுப் பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள்போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல் விச்வபதி லோகபர்த்தா வென்னும் மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்க, பரம்புருடன் கைக் கொண்டபின் சதுர்த்தி யுள்புக்கு இடையீடு நடுக்கிடக்கும் நாள் கழித்து ஜந்மபூமியை விட்டகன்று சூழ்விசும்பிற்படியே உடன் சென்று குடைந்து நீராடி வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்துப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய நிறைகுட விளக்கமேந்தி இளமங்கைய ரெதிர் கொள்ள வைகுந்தம் புக்கிருந்து வாய்மடுத்துப் பெருங்களிச்சியாக வானவர் போகமுண்டு கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து பரதா க்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகு மார்பிலே குருமாமணியா யணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று.

ஆனால் இவர்க்குத் தம் பேச்சன்றோ ஸ்வாபாவிகம்; பிராட்டிமார் தசையை ப்ராபித்துப் பேசும் பெண்பேச்சு வந்தேறியன்றோ வென்ன; பகவதேக பரதந்த்ரமுமாய் பகவதேக போகமுமாயிருக்கு மாத்ம வஸ்துவுக்கு ஸ்த்ரீ ஸாதர்ம்யம் ஸ்வரூபாநுபந்தி யாகையாலே தத்ப்ரயுக்தமான பேச்சு இவர்க்கு வந்தேறியன் றென்னுமிடத்தை ரூபகத்வேந வருளிச்செய்கிறார் மேலோரு சூர்ணையாலே.

– ஆனால் நம்மாழ்வார் தன்னுடைய நிலையிலிருந்து தான் பேசுவதாக உள்ளதே இயல்பு அன்றோ? பிராட்டிமார் நிலையை அடைந்து உரைக்கும்போது, பெண் போன்று பேசுதல் என்பது வந்தேறிய இயல்பு என்று ஆகிவிடும் அல்லவோ? இந்தக் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். அதாவது, ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டதாகவும், அவனுக்கு இனிமையாக உள்ளதாகவும் இருக்கிண்ற இந்த ஆத்மாவிற்குப் பெண்ணுடன் ஒப்பான தன்மையானது ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றதாகவே உள்ளது; ஆகவே அதன் மூலம் வருவதான பெண்பேச்சு என்பது இவருக்கு வந்து சேர்ந்த இயல்பு அல்ல என்பதை இந்தச் சூர்ணையில் உருவகம் மூலம் உணர்த்துகிறார்.

– அதாவது, (வித்யை தாயாகப் பெற்று) “ஸஹி வித்யாதஸ் தம் ஜநயதி” என்கிறபடியே ஆசார்யன் திருமந்த்ரமுகேந ஸ்வரூபஜ்ஞாநத்தை யுண்டாக்கினபோது இவ்வாத்ம ஸத்பாவமாகையாலே, வித்யையை மாதாவாகக் கொண்டு இவ்வாத்ம வஸ்துவை ஜநிப்பித்து. (பாலுமமுதுமான திருநாமத்தால் திருமகள் போலே வளர்த்த) “தேனும் பாலுமமுதுமாய் திருமால் திருநாமம்” என்கிற போக்ய பதார்த்தமான திருமந்த்ரத்தாலே, “திருமகள் போல வளர்த்தேன்” என்கிறபடியே அநந்யார்ஹ சேஷத்வாதிகளாலே லக்ஷ்மீஸத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த (தஞ்சமாகிய தந்தை) தேஹோத்பாதகனாய் “ஸ பித்ரா ச” இத்யாதிப்படியே ஆபத்தசைகளிலே கைவிடும் பிதாவைப் போலன்றிக்கே, “பூதாநாம் யோவ்யய: பிதா” என்கிறபடியே ஸம்பந்தம் கண்ணழிவற்றிருக்க, “பவ மோக்ஷணயோஸ் த்வயைவ ஜந்து: க்ரியதே” என்னும்படி ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் பிதாவைப் போலுமன்றிக்கே; ஸ்வரூபோத்பாதகனாய் ஒரு தசையிலும் கைவிடாதே ஹிதைஷியாய், உஜ்ஜீவநைக பரனாய்க் கொண்டு மோக்ஷைக ஹேதுவாயிருக்கையாலே ஆபத் ரக்ஷகனான ஆசார்யனாகிற பிதா. (மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல்) “மற்றொருவர்க்கு என்னைப் பேசலோட்டென்”, “மானிடவர்க்கென்று பேச்சுபடில்” என்கிற அந்ய சேஷத்வ ப்ரஸங்கம் வாராதபடி, (விச்வபதி லோகபர்த்தாவென்னும் மணவாளரை) “பதிம் விச்வஸ்ய”, “கௌஸல்யா லோகபர்த்தாரம்” என்று பதி சப்தத்தாலும் பர்த்ரு சப்தத்தாலும் ஸர்வலோக நாயகராகச் சொல்லப்படுகிற “பணவாளரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை, (நாலிரண்டிழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்மஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்க) எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்களஸுத்ரம்போலே, எட்டக்ஷரமாய் மூன்று பதமாய் ஈச்வர ஸம்பந்த ப்ரகாசகமான திருமந்த்ரமாகிற மங்கள ஸூத்ர பந்தத்தோடே, “பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” என்கிறபடியே வரிக்கும்படி பண்ண, (பரம்புருடன் கைக்கொண்டபின்) “பரம் புருடா நீ என்னைக் கைக்கொண்ட பின்” என்கிறபடியே பரமபுருஷரான மணவாளர் பரிக்ரஹித்த வநந்தரம், (சதுர்த்தியுள் புக்கு) விவாஹாநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர்திவஸத்திலும் அகலுதலு மணுகுதலுமற்று, அநந்யார்ஹ சேஷத்வாநுகுணமான பரிமாற்றத்துக்கு அர்ஹமென்னுமளவை ப்ரகாசிப்பித்துக் கொண்டிருக்குமோபாதி, ப்ரணவோக்தமான அநந்யார்ஹ சேஷத்வத்தில் கண்ணழிவற அங்கீகரிக்கையாலும், ததநுகுணமாகக் கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும், அகலுதலு மணுகுதலுமற்று, கைங்கர்ய ப்ரார்த்தனையோடே செல்லும் சரமசதுர்த்தியிலே உள்புக்கு (இடையீடு நடுக்கிடக்கும் நாள் கழித்து) தம்பதிகளிருவரும் ஏகசய்யையிலே வர்த்திக்கச் செய்தே அந்யோந்ய ஸ்பர்ச யோக்யதை யில்லாதபடி இடையீடரான ஸோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே, சேஷத்வ ஜ்ஞாநமும் சேஷ வ்ருத்தி ப்ரார்த்தனையு முண்டாகையாலே இரண்டு தலைக்கும் அண்ணிமை யுண்டாயிருக்கவும் சேர்ந்து பரிமாற வொண்ணாதபடி “நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருடம்பலிட்டு” என்கிறபடியே அநுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும், “நாள் கடலைக் கழிமின்” என்கிறபடியே கழித்து. (ஜந்மபூமியை விட்டகன்று) “முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் ஏசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை” என்கிறபடியே ஒருவராலும் விடவரிதான ஜந்மபூமியான ஸம்ஸார விபூதியை முன்பு ஆதரணீயமாய்ப் போந்த வஸ்துக்களோடே கூட புரிந்து பாராமல் விட்டு நீங்கி. அன்றிக்கே “அன்று நான் பிறந்திலேன்” என்னும்படி கிடந்த தனக்கு, ஆசார்யன் திருமந்த்ரத்தினா லுண்டாக்கின ஜந்மம் பெற்றது இங்கேயாகையாலே ஜந்மபூமியான இவ்விபூதியை, பகவதநுபவ ப்ராவண்யத்தாலே “முற்றிலும் பைங்கிளியும்” இத்யாதிப்படியே முன்பு ஆதரணீயமாய்ப் போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்றென்னவுமாம்; பிறந்தகத்தை விட்டுப் புக்ககத்துக்குப் போகிறதாகச் சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு இது மிகவும் சேருமிறே. (சூழ்விசும்பிற்படியே உடன்சென்று) “சூழ்விசும்பு” என்கிற திருவாய்மொழியில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழியிலுள்ளாரடைய ஸத்கரிக்க, “அங்கவனொடு முடன் சென்று” என்கிறபடியே, “நயாமி” என்கிற நாயகன் முன்னே போக, பின்னே போய். (குடைந்து நீராடி) “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்கிறபடியே, பர்த்ரு க்ருஹத்துக்குப் போகிற பெண் அவ்வூரெல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்டக் குளிக்குமாபோலே, அம்ருதவாஹிநியான விரஜையிலே இப்பாலுள்ள அழுக்கறும்படி நீராடி. (வியந்துழாயஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியரலங்கரித்து) குளித்தேறின பெண்ணை பர்த்ரு பந்துக்களான ஸ்த்ரீகள் வந்து அலங்கரிக்குமாபோலே, “வியந்துழாய் கற்பென்று சூடும்”, “ஆராரயிர்வேற் கணஞ்சனத்தின் நீறணிந்து”, “மெய்திமிரு நானப்பொடி”, “உடுத்துக் களைந்த நின் பீதகவாடை”, “பல்கலனும் யாமணிவோம்” என்கிறபடியே அலங்காரோபகரணங்களான திவ்யமால்ய திவ்யாஞ்ஜந திவ்யசூர்ண திவ்யவஸ்த்ர திவ்யாபரணங்களை, “தம் பஞ்சச தாந்யப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி சதம் மாலாஹஸ்தா: சதமஞ்ஜந ஹஸ்தா: சதம் சூர்ணை ஹஸ்தா: சதம் வாஸோ ஹஸ்தா: சதம் பூஷண ஹஸ்தா:” என்கிறபடியே ஏந்திக் கொண்டு, “மானேய் நோக்கி”யரான திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் எதிரே வந்து, “தம் ப்ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” என்கிறபடியே போக்த்ருபூத ஈச்வர போக்யமாம்படி அலங்கரித்து. (பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) “தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வரேழையரே” என்கிறபடியே இவ்விஷயத்தில் கிஞ்சித்கரிக்கையிலுண்டான சாபலம் தோற்றத் திரள நின்று மங்களாசாஸநம் பண்ணி சாமரம் பணிமாற. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள) அலங்க்ருதையாய் உபலாலநத்தோடே செல்லுகிற பெண், பர்த்ரு க்ருஹத்தை அணுகச்சென்றவாறே அங்குள்ள ஸ்த்ரீகள் மங்களதீபாதிகளை யேந்திக்கொண்டு எதிரே வந்து ஸத்கரிக்குமாபோலே, “நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுக மடந்தையரேந்தினர்” என்கிறபடியே மங்களாவஹமான பூர்ணகும்ப தீபாதிகளை தரித்துக் கொண்டு; “சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள” என்கிறபடியே நித்ய நவ யௌவந ஸ்வபாவைகளான வேறு சில திவ்யாப்ஸரஸ்ஸுக்க ளெதிர்கொள்ள. (வைகுந்தம் புக்கிருந்து) உபலாலநத்தோடே சென்ற பெண் பர்த்ரு க்ருஹத்திலே புகுருமாபோலே, “மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார்” என்கிறபடியே ஸ்ரீய:பதியானவனுக்கு போகஸ்தாநமான ஸ்ரீவைகுண்டத்தை ப்ராபித்து அவனோடே கூடியிருந்து. (வாய்மடுத்துப் பெருங்களிச்சியான வானவர் போகமுண்டு) பர்த்ரு க்ருஹத்திலே பெண் வந்த பின்பு தம்பதிகளும், மற்றுமுள்ள பந்துக்களும் கூடியிருந்து பெருங்களிச்சி யுண்ணுமாபோலே, “அடியார்கள் குழாங்களும்” அவனுமாக விருக்கிற சேர்த்தியிலே, “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்று பெருங்களிச்சியாக முழுமிடறு செய்து, “கட்டெழில் வானவர் போகமுண்பாரே” என்கிறபடியே நித்யஸூரிகள் புஜிக்கிற போகத்தை, “ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா” என்கிறபடியே புஜித்து. (கோப்புடைய கோட்டுக்காற் கட்டில் மிதித்தாரோஹித்து) பர்த்ரு ஸம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே யேறுமாபோலே “கோப்புடைய சீரிய சிங்காசனம்” என்றும், “கோட்டுக்காற் கட்டில்” என்றும் சொல்லுகிறபடியே உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டு ஸர்வாச்சர்யமயமான திவ்யபர்யங்கத்திலே, “தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி” என்கிறபடியே பாதபீடத்திலே அடியிட்டேறி. (பரதாக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகு மார்விலே) “தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்தச் சிரஸ்யாக்ஷி பதம் கதம், அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” என்றும், “ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந: பாணிநா, ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே” என்றும், “ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:, மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந:” என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரீபரதாழ்வானையும் அக்ரூரனையும் திருவடியையும் ஆதரித்தணைத்துக் கொண்ட “மணிமிகு மார்பு” என்று ஸ்ரீகௌஸ்துபம் நிறம் பெறும்படி அழகிய திருமார்பிலே (குருமாமணியாயணையும் வஸ்துவுக்கு) “குருமாமணிப் பூண்” என்று ச்லாக்யமாய் ஈச்வரத்வ சிஹ்நமான ஸ்ரீகௌஸ்துபத்தோபாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணைகிற ஆத்மவஸ்துவுக்கு. (மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று) “வண்பூமணிவல்லி” என்று உதாரமாய் போக்யமாய்த் தனக்குத்தானே ஆபரணமாம்படி அழகியதாய், கொள்கொம்பு பெறாவிடில் தலையெடுக்க மாட்டாமை தரைப்பட்டுக் கிடக்கும் கொடி போன்றவளென்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறியன்று; ஸ்வாபாவிகமென்றபடி. பெண் பேச்சென்ன வமைந்திருக்க மணிவல்லிப் பேச்சென்றது – “மணிமிகு மார்பிலே மணியாயணையும்” என்றத்தோடொக்க “மணிவல்லி” என்றால் சொற்கட்டளையால் வரும் ரஸமுண்டாகையாலே. இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மவஸ்துவுக்கு ஸ்வாபாவிகமாகையாலே அத்தை உள்ளபடி தர்சித்த விவர்க்கு தத் ப்ரயுக்தமான பேச்சு ஸ்வாபாவிகமென்று சொல்லிற்றாய்த்து.

(வித்யை தாயாகப் பெற்று) - ஆபஸ்தம்பஸூத்ரம் (16-17) – ஸஹி வித்யாதஸ் தம் ஜநயதி - ஆசார்யன் அவனைக் கல்வி மூலம் பிறக்கும்படிச் செய்கிறான் - என்பதற்கு ஏற்ப ஆசார்யன் திருமந்த்ரத்தின் மூலம் ஆத்மஸ்வரூபத்தைக் குறித்த ஞானத்தை உணர்த்தும்போது, இந்த ஆத்மா “இருக்கின்ற ஒரு வஸ்து” என்ற தன்மையை அடைவதால், கல்வி என்பதையே தாயாகக் கொண்டு இந்த ஆத்மாவைப் பிறக்கும்படிச் செய்து. (பாலும் அமுதுமான திருநாமத்தாலே) - பெரியதிருமொழி (6-10-6) - தேனும் பாலுமமுதுமாய் திருமால் திருநாமம் - என்பதற்கு ஏற்ப இனிமையான பொருளாக உள்ள திருமந்திரத்தினால், (திருமகள் போல வளர்த்த) – பெரியாழ்வார் திருமொழி (3-8-4) - திருமகள் போல வளர்த்தேன் – என்பதற்கு ஏற்ப மற்ற யாருக்கும் உரியவன் என்று இல்லாமல், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமை என்னும் தன்மைகள் கொண்டு, மஹாலக்ஷ்மிக்குச் சமமாக வளர்த்து வந்த, (தஞ்சமாகிய தந்தை) - சரீரம் உண்டாவதற்குக் காரணமானவனாய், இராமாயணம் ஸுந்த்ரகாண்டம் (38-32) – ஸ பித்ரா ச - தந்தையாலும் கைவிடப்பட்ட காகாஸுரன் - என்பதற்கு ஏற்ப ஆபத்து ஏற்படும் காலங்களில் கைவிடுகின்ற காகாஸுரன் தந்தை போன்று அல்லாமல், ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் – பூதாநாம் யோவ்யய: பிதா - அனைத்து காலங்களிலும் அழிவற்ற தந்தை யாரோ – என்பதற்கு ஏற்ப அவனுடனான ஸம்பந்தம் குறைவற்றிருக்க, ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-88) – “பவ மோக்ஷணயோஸ் த்வயைவ ஜந்து: க்ரியதே – பிறவிக்கும் மோக்ஷத்திற்கும் உரியவன் என்று ஒருவன் உன்னாலேயே ஆகிறான் – என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டிற்கும் பொதுவாக உள்ள தந்தையைப் போன்று அல்லாமல், ஆத்மஸ்வரூபத்தை வெளிக்கொண்டு வருபவனாய், எந்த நிலையிலும் கைவிடாமல் நம்முடைய நன்மையை மட்டுமே விரும்புபவனாய், நம்மைக் கரை ஏற்றுவதிலேயே நோக்கம் கொண்டவனாய் இருப்பதால் மோக்ஷத்திற்கு மட்டுமே காரணமாக உள்ளதால் ஆபத்து ஏற்படும்போது காப்பாற்றும் ஆசார்யனாகிற தந்தை. (மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல்) – பெரியாழ்வார் திருமொழி (3-4-5) - மற்றொருவர்க்கு என்னைப் பேசலோட்டென் – என்றும், நாச்சியார் திருமொழி (1-5) – மானிடவர்க்கென்று பேச்சுபடில் - என்றும் கூறுவதற்கு ஏற்ப மற்றவர்களுக்கு வசப்பட்டது என்னும் பேச்சு வராதவிதத்தில், (விச்வபதி லோகபர்த்தா என்னும்) – புருஷஸூக்தம் - பதிம் விச்வஸ்ய - இந்த உலகின் பதி - என்று “பதி” சப்தம் மூலமாகவும், இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-55) - கௌஸல்யா லோகபர்த்தாரம் – உலகிற்குக் கணவனாக உள்ள யாரை கௌஸலை பெற்றாளோ - என்று “பர்த்ரு” சப்தம் மூலமாகவும் அனைத்து லோகங்களுக்கும் நாயகன் என்று கூறப்படும், (மணவாளரை) – நாச்சியார் திருமொழி (10-6) - பணவாளரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை – என்பதற்கு ஏற்ப உள்ள அழகியமணவாளனை, (நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்மஸூத்ர பந்தத்தோடே) – முமுக்ஷுப்படியில் - எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்களஸுத்ரம் - என்பதற்கு ஏற்ப எட்டு எழுத்துக்கள் மற்றும் மூன்றும் சொற்கள் கொண்டதாக, ஸர்வேச்வரனுடன் உள்ள ஸம்பந்தத்தை விளக்கவல்ல திருமந்த்ரம் என்ற தாலிக்கொடியுடன், (வரிப்பிக்க) - இராமாயணம் பாலகாண்டம் (73-26) - பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா - உம்முடைய திருக்கரத்தால் இவளுடைய திருக்கரத்தைப் பற்றிக் கொள்வாயாக - என்பது போன்று கையைப் பிடிக்கும்படிச் செய்ய, (பரம் புருடன் கைக்கொண்டபின்) – பெரியாழ்வார் திருமொழி (5-4-2) – பரம் புருடா நீ என்னைக் கைக்கொண்ட பின் - என்று கூறப்படுகின்ற பரமபுருஷனாகிய அழகியமணவாளன் ஏற்றுக் கொண்ட பின்னர். (சதுர்த்தியுள் புக்கு) - திருமணம் முடிந்த பின்னர், சேஷ ஹோமம் முடியும்வரை உள்ள நான்கு நாட்களிலும் அகன்றும் செல்லாமல் அணுகவும் செய்யாமல், அவனுக்கு மட்டுமே அடிமை என்னும் நிலைக்கு ஏற்றபடி, அவனுடன் இணைவதற்குத் தகுதி உள்ளது என்ற தன்மையை வெளிப்படுத்தியபடி உள்ளது போன்று, [இவ்விதமாக உள்ளது எது என்று அடுத்து கூறுகிறார்] ப்ரணவத்தில் கூறுவதாகிய அவனுக்கு மட்டுமே அடிமை என்றுள்ள தன்மையில் எந்தவிதமான தடையும் இன்றி அங்கீகரிப்பதாலும், அதற்குத் தகுதியாக அவனை அண்டி நின்று அவனுடன் சேர்வதற்கு இயலாமல் உள்ளதாலும், இதன் மூலம் அணுகுதல் மற்றும் அகலுதல் ஆகியவை அற்று, “கைங்கர்யம் செய்தல் வேண்டும்” என்ற ப்ரார்த்தனையுடன் கூடியதான “நாராயணாய” என்ற சொல்லில் காணப்படும் “ஆய” என்ற நான்காம் வேற்றுமை உருபின் பொருளில் ஈடுபட்டு, (இடையீடு நடுக்கிடக்கும் நாள் கழித்து) - தம்பதிகள் இரண்டு பேரும் ஒரே படுக்கையில் உள்ளபோதிலும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு உரிய தகுதி ஏற்படாதவிதத்தில் தடுக்கின்ற சந்த்ரன் போன்றவர்கள் நடுவில் கிடக்கும் நாள்கள் போன்று, [இவ்விதம் உள்ளது எது என்று அடுத்து கூறுகிறார்], அடிமைத்தனம் குறித்த ஞானம் மற்றும் கைங்கர்யம் வளரவேண்டும் என்ற ப்ரார்த்தனை ஆகிய இரண்டும் ஏற்படுவதால், ஸர்வேச்வரனுக்கும் நம்மாழ்வாருக்கும் சேர்ந்து இருக்கவல்ல நிலை உள்ளபோதிலும், சேர்ந்து இருக்கமுடியாதபடி, திருவாய்மொழி (5-1-5) - நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருடம்பலிட்டு - என்பதற்கு ஏற்ப அந்த அனுபவத்திற்கு விரோதியாக அதனைத் தடுக்கவல்ல சரீரம் நடுவில் உள்ள நான்கு நாள்களையும், திருவாய்மொழி (1-7) – நாள் கடலைக் கழிமின் – என்பதற்கு ஏற்பக் கழித்து. (ஜந்மபூமியை விட்டு அகன்று) – பெரியதிருமொழி (3-7-8) - முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் ஏசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை – என்பதற்கு ஏற்ப யாராக இருந்தாலும் விடுவதற்கு மிகவும் அரிதான, பிறப்பு ஏற்படும் இடமான இந்த ஸம்ஸார உலகத்தினை, முன்பு நமக்கு விருப்பமான பொருள்களுடன் சேர்ந்து கைவிட்டு அகன்று. அல்லது வேறுவிதமாகவும் கூறலாம்; திருச்சந்தவிருத்தம் (64) - அன்று நான் பிறந்திலேன் - என்பதற்கு ஏற்பக் கிடந்த தனக்கு, ஆசார்யன் திருமந்த்ரத்தை உபதேசம் செய்ததன் காரணமாக, புதியதாக ஒரு பிறவி அடைந்தது இங்கே என்பதால், பிறவியைப் பெற்ற பூமியான இந்த உலகத்தை, ஸர்வேச்வரனை அனுபவித்தல் என்ற ஈடுபாடு காரணமாக, திருச்சந்தவிருத்தம் (64) - முற்றிலும் பைங்கிளியும் - என்ற பாசுரத்தில் உரைத்தபடி, முன்பு விருப்பத்திற்கு ஏற்றபடி இருந்த பொருள்களுடன் கூடச் சேர்ந்து அகற்றி, புகுந்த வீட்டிற்குச் செல்வது போன்று எனக் கூறுவது பொருத்தமாகும். (சூழ்விசும்பிற்படியே உடன்சென்று) – திருவாய்மொழி (10-9-1) – சூழ்விசும்பு - என்ற திருவாய்மொழியில் கூறுவதற்கு ஏற்ப அர்ச்சிராதி மார்க்கத்தில் உள்ள பலரும் உபசாரம் செய்து வரவேற்க, (உடன் சென்று) – நாச்சியார் திருமொழி (6-10) – அங்கவனொடு முடன் சென்று – என்பதற்கு ஏற்ப, வராக சரமச்லோகத்தில் – நயாமி – அழைத்துச் செல்கிறேன் - என்று கூறுவதான நாயகன் முன்னே செல்ல, (குடைந்து நீராடி) – திருப்பாவை (13) - குள்ளக் குளிரக் குடைந்து நீராடி – என்பதற்கு ஏற்ப கணவன் வீட்டிற்குச் செல்லும் புதிய மணப்பெண், அந்த ஊரின் எல்லைக்குச் சென்றவுடன், அவர்கள் நீராட்டிவிட நீராடுவது போன்று, அமிர்தம் பெருகின்ற விரஜாநதியில் தன்னிடம் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கும்படி நீராடி. (வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு) – இவ்விதம் நீராடி கரை ஏறிய புது மணப்பெண்ணை அவளுடைய கணவனின் உறவுப்பெண்கள் வந்து அலங்கரிப்பது போன்று, மூன்றாம் திருவந்தாதி (69) - “வியந்துழாய் கற்பென்று சூடும் – என்றும், சிறியதிருமடல் (10) - ஆராரயிர்வேற் கணஞ்சனத்தின் நீறணிந்து - என்றும், பெரியாழ்வார் திருமொழி (1-4-9) – மெய்திமிரு நானப்பொடி - என்றும், திருப்பல்லாண்டு (9) - உடுத்துக் களைந்த நின் பீதகவாடை - என்றும், திருப்பாவை (27) – பல்கலனும் யாமணிவோம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அலங்காரம் செய்வதற்கு ஏற்றபடி உள்ளவைகளும், தெய்வீகமாக உள்ளவைகளும் ஆகிய மாலை, அஞ்சனம், வாசனைப்பொடி, புடவை, ஆபரணங்கள் போன்ற பலவற்றை. (நோக்கியர் அலங்கரித்து) - கௌஷீதகீ உபநிஷத் - தம் பஞ்சச தாந்யப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி சதம் மாலாஹஸ்தா: சதமஞ்ஜந ஹஸ்தா: சதம் சூர்ணை ஹஸ்தா: சதம் வாஸோ ஹஸ்தா: சதம் பூஷண ஹஸ்தா: – நூறு பெண்கள் தங்களுடைய கைகளில் மாலை ஏந்தியபடியும், நூறு பெண்கள் தங்களுடைய கைகளில் அஞ்சனம் ஏந்தியபடியும், நூறு பெண்கள் தங்களுடைய கைகளில் ஸ்ரீசூர்ணம் ஏந்தியபடியும், நூறு பெண்கள் தங்களுடைய கைகளில் வஸ்த்ரம் ஏந்தியபடியும், நூறு பெண்கள் தங்களுடைய கைகளில் ஆபரணங்கள் ஏந்தியபடியும் அந்த முக்தனை நூறு தேவலோகப் பெண்கள் எதிர் கொள்கிறார்கள் – என்பதற்கு ஏற்ப, திருவாய்மொழி (5-8-11) – மானேய் நோக்கி – என்பதான தேவலோகப்பெண்கள் வந்து நின்று, கௌஷீதகீ உபநிஷத் - தம் ப்ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி - அவனை ப்ரஹ்ம அலங்காரம் செய்கிறார்கள் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய அனுபவத்திற்கு இனிமையாக உள்ள விதத்தில் அலங்காரம் செய்து. – (பல்லாண்டு இசைத்துக் கவரி செய்ய) திருவாய்மொழி (7-6-11) - தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வரேழையரே - என்பதற்கு ஏற்ப இவர்களுக்கு இந்த விஷயத்தில் கைங்கர்யம் செய்வதில் ஏற்பட்ட ஆசை வெளிப்படும்படியாக, திரளாக நின்று, துதித்து, சாமரம் வீச. (நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர் எதிர்கொள்ள) - நன்கு அலங்காரம் செய்யப்பட்டவளாக, மிகுந்த கொண்டாட்டங்களுடன் செல்லும் புதுமணப்பெண், தனது கணவன் வீட்டின் அருகில் சென்றவுடன், அங்குள்ள பெண்கள் அனைவரும் மங்களதீபம் போன்றவற்றைக் கைகளில் ஏந்தியபடி எதிரே வந்து உபசரிப்பது போன்று, திருவாய்மொழி (10-9-10) – நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுக மடந்தையரேந்தினர் – என்பதற்கு ஏற்ப, மங்களத்தை ஏற்படுத்தவல்லதான பூர்ணகும்பம், தீபம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, திருவாய்மொழி (10-9-10) – சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள – என்பதற்கு ஏற்ப, எப்போதும் புதுமையுடன் கூடிய இளமையைக் கொண்டுள்ளதான தன்மை கொண்ட வேறு சில தேவலோகப் பெண்கள் எதிர் கொள்ள. – (வைகுந்தம் புக்கிருந்து) - நன்கு அலங்கரிக்கப்பட்டவளாக சென்ற அந்தப் பெண், தனது கணவன் வீட்டில் புகுவது போன்று, நாச்சியார் திருமொழி (3-10) - மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் – என்பதற்கு ஏற்ப, மஹாலக்ஷ்மியின் நாயகனுடைய இன்பத்திற்கு இடமான ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து, அவனுடன் கூடியிருந்து, வீட்டிற்கு அந்தப் பெண் வந்த பின்னர் தம்பதிகளும் அங்குள்ள மற்ற உறவினர்களும் கூடி நின்று பெருங்களிச்சி உண்பது போன்று, திருவாய்மொழி (2-3-10) – அடியார்கள் குழாங்கள் - என்பதற்கு ஏற்ப அடியார்கள் கூட்டமும், அவனுமாக உள்ள சேர்த்தியில், திருவாய்மொழி (2-3-9) – அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன் - என்பதற்கு ஏற்ப பெருங்களிச்சியாக முற்றிலும் உண்டு. (வானவர் போகம் உண்டு) - திருவாய்மொழி (6-6-11) - கட்டெழில் வானவர் போகமுண்பாரே - என்பதற்கு ஏற்ப நித்யஸூரிகள் அனுபவிக்கின்ற இன்பத்தினை, தைத்திரீயம் - ஸோச்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா - அனைத்து விருப்பங்களையும் பரமாத்மாவுடன் சேர்ந்து நின்று அனுபவிக்கிறான் - என்பதற்கு ஏற்ப அனுபவித்து. – (கோப்புடைய கோட்டுக்காற் கட்டில் மிதித்து ஆரோஹித்து) - கணவனுடன் சேர்வதற்காகக் கட்டிலில் ஏறுவது போன்று, திருப்பாவை (23) - கோப்புடைய சீரிய சிங்காசனம் – என்றும், திருப்பாவை (19) – கோட்டுக்காற் கட்டில் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, இரண்டு விபூதிகளில் உள்ள அனைத்தையும் படைத்தல் போன்றவற்றைச் செய்து, அனைத்திற்கும் புகலிடமாக உள்ள தெய்வீகமான கட்டிலில், கௌஷீதகீ உபநிஷத் (1-5) – தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி – இவ்விதம் ப்ரஹ்மத்தை அறிந்தவன் தனது கால்கள் கொண்டு அந்தக் கட்டிலில் ஏறுகிறான் - என்பதற்கு ஏற்ப, பாதபீடத்தில் தனது கால்கள் கொண்டு அடியெடுத்து ஏறி, (பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகு மார்விலே) - இராமாயணம் யுத்தகாண்டம் (130-39) – தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்தச் சிரஸ்யாக்ஷி பதம் கதம், அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே – தனது தலை கொண்டு முன்னால் விழுந்துள்ள பரதனை இராமன் மெதுவாக எடுத்துத் தனது தொடையில் அமர்த்தி, நன்கு தழுவிக் கொண்டான் – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-13-5) – ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந: பாணிநா, ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே - த்வஜம், வஜ்ரம், தாமரை போன்ற பலவிதமான அடையாளங்கள் கொண்ட தனது கைகளால் க்ருஷ்ணன், அக்ரூரரை மிகவும் அன்புடன் தொட்டும் தழுவியும் செய்தான் - என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (1-13) – ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:, மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந: – இரண்டு முறை எனக்குச் சரீரம் அளித்த உதவிய அனுமனுக்குச் சரியான நேரத்தில் என்னால் அளிக்கப்பட்ட இந்த அரவணைப்பு என்பது, அனைத்துவிதமான கொடைகளுக்கும் ஒப்பாகும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப பரதன், அக்ரூரர் மற்றும் அனுமன் ஆகியவர்களை அணைத்துக் கொண்ட, திருவாய்மொழி (10-3-5) – மணிமிகு மார்பு – என்பதான, ஸ்ரீகௌஸ்துப மணியும் அழகு பெறுகின்ற, அழகான திருமார்பில். – (குருமாமணியாயணையும் வஸ்துவுக்கு) – பெரியாழ்வார் திருமொழி (1-3-10) – குருமாமணிப் பூண் - என்று மேன்மையுடன் கூறப்படுவதாகவும், ஸர்வேச்வரத் தன்மையை வெளிப்படுத்தும் அடையாளமான ஸ்ரீகௌஸ்துபம் போன்று இனிமையாக உள்ளதாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளதாகக் கொண்டு அணைகிற ஆத்மாவுக்கு. (மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று) – திருவிருத்தம் (9) – வண்பூமணிவல்லி - என்பதற்கு ஏற்ப வள்ளல் தன்மை கொண்டதாய், இனிமையாய், தனக்குத்தானே ஆபரணமாக உள்ளது போன்று அழகியதாய், கொள்கொம்பு கிடைக்கவில்லை என்றால் மேலே எழும்ப இயலாமல் தரையுடன் தரையாகக் கிடக்கும் கொடி போன்றவள் என்று பெண் தன்மையுடன் கூடியதாய் உள்ள பேச்சுக்கள் அனைத்தும் வந்து சேர்ந்தவை அல்ல; இயல்பாகவே உள்ள தன்மைகள் என்று கருத்து. “பெண் பேச்சு” என்று கூறினாலே போதுமானதாக உள்ளபோது, “மணிவல்லிப் பேச்சு” என்று ஏன் கூறினார்? “மணிமிகு மார்பிலே மணியாய் அணையும்” என்று கூறுவதுடன் சேரும் விதத்தில், “மணிவல்லி” என்று கூறினால், கூடுதல் ரஸம் ஏற்படும் என்பதால் ஆகும். இதன் மூலம் - பெண் தன்மை என்பது ஆத்மாவுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்றாகும்; ஆகவே இதனை உள்ளது உள்ளபடி அறிந்து கொண்ட இவருக்கு, அத்தகைய பெண் தன்மையால் ஏற்படும் பேச்சு இயல்பானதே ஆகும் – என்று கூறப்பட்டது.