Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 120)
இரண்டாம் ப்ரகரணம்
அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோமடிக் கீழ் குற்றேவலாகை அவஸ்தாந்தரம்.
– ஆனால் இவர்க்கு அவஸ்தாந்தரமாவதே தென்னுமபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் (அடியோமித்யாதி).
ஆனால் இவருக்கு வேறு நிலை என்று கூறப்படுவது என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “அடியோம் போற்றியோவாதே”, “தொடர்ந்து குற்றேவல் செய்து” என்று தாமான தன்மையில் சொல்லுமோபாதி, “அடிச்சியோம் தலைமிசை நீயணியாய்”, “திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய” என்று சொல்லுகையாலே, ஸ்வரூபத்திலும், ஸ்வரூபாநுரூப வ்ருத்தி ப்ரார்த்தனையிலும் பேதமில்லை. பிராட்டியான பாவனையாலே,தம் பேச்சானவிது போய், பெண் பேச்சாகை இவர்க்கு, அவஸ்தாந்தர மாவதென்றபடி. “அடியோம் தொடர்ந்து குற்றேவல்” என்று தம் பேச்சாலே சொல்லுகிறவிது, “அடிச்சியோம் அடிக்கீழ் குற்றேவல்” என்று பெண் பேச்சாகை இவர்க்கு அவஸ்தாந்தர மாவதென்று வாக்யத்துக்குச் சொல்படுத்தும் க்ரமம்.
(அடியோம்) – திருவாய்மொழி (9-2-9) - அடியோம் போற்றியோவாதே - என்றும், (தொடர்ந்து குற்றேவல்) – திருவாய்மொழி (9-2-3) – தொடர்ந்து குற்றேவல் செய்து – என்றும், “தான்” என்று நிலையில் நின்று உரைப்பது போன்றே, (அடிச்சியோம்) - திருவாய்மொழி (10-3-6) – அடிச்சியோம் தலைமிசை நீயணியாய் – என்றும், (அடிக்கீழ் குற்றேவலாகை) – திருவாய்மொழி (1-4-2) – திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய - என்றும் கூறுவதால், (அவஸ்த்தாந்தரம்) - ஸ்வரூபத்திலும், ஸ்வரூபத்திற்கு ஏற்ற செயல்களை மட்டுமே விரும்புவதிலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நாயகி பாவத்தில் இவர் உரைப்பதன் காரணமாகத் தன்னுடைய இயல்பான பேச்சு மாறி, பெண் பேசுவது போன்று உள்ள நிலையே இவருக்கு நிலை மாறுபாடு என்றாகிறது. அதாவது, “அடியோம் தொடர்ந்து குற்றேவல்” என்று, தான் தன்னுடைய நிலையில் இருந்தபடி உரைத்தல் என்பது, “அடிச்சியோம் அடிக்கீழ் குற்றேவல்” என்று பெண் பேசுவது போன்று மாறுவதால், இவருடைய நிலை வேறுபாடு என்பது, வாக்கியங்களில் சொற்கள் அமையப் பெறும் நிலையே ஆகிறது.