Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 119)
இரண்டாம் ப்ரகரணம்
தேறும் கலங்கியென்று தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.
இப்படி தெளிவும் கலக்கமுமான இத்தசைகளில், பேச்சில் பேதமொழிய ஸ்வரூபத்திலும் பேதமமுண்டோ வென்ன வருளிச்செய்கிறார் (தேறும் கலங்கி)என்று தொடங்கி.
– இப்படியாகத் தெளிவான நிலை மற்றும் கலக்கமான நிலை ஆகியவற்றில் நம்மாழ்வார் உள்ளபோது அவர் பேசும் பேச்சுக்களில் வேறுபாடு உள்ளது; இதே போன்று இந்த கடந்த சூர்ணையில் கூறப்பட்ட இரண்டு நிலைகளில் காணப்படும் வேறுபாடு பேச்சில் மட்டும் அல்லாமல் ஸ்வரூபத்திலும் உண்டா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “தேறும் கை கூப்பும்”, “கலங்கிக் கை தொழும்” என்று தெளிந்த தசையிலும் கலங்கின தசையிலும், சேஷத்வ ப்ரகாசமான அஞ்ஜலி மாறாமையாலே, பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற அவஸ்தாந்தரங்களை பஜித்தாலும், ம்ருத்தானவாகாரத்துக்கு அழிவில்லாதாப்போலே, “தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே” என்கிறபடியே, தெளிந்த தசையோடு கலங்கிய தசையோடு வாசியற உபயாவஸ்தையிலும்,சேஷத்வ ரூபமான ஸ்வரூபம் நிலை குலையாதென்றபடி.
– திருவாய்மொழி (7-2-5) – தேறும் கை கூப்பும் - என்றும், திருவாய்மொழி (2-4-4) – கலங்கிக் கை தொழும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தெளிந்த நிலை மற்றும் கலங்கிய நிலை என்று எந்த நிலையாக உள்ளபோதிலும், அடிமைத்தன்மையை வெளிப்படுத்தும் அஞ்ஜலி மாறாமல் உள்ளது. மண்ணானது பிண்டமாதல், குடமாதல், ஓடாதல், பொடியாகதல் போன்ற பலவிதமான நிலை மாற்றங்களை அடைந்தாலும் “மண்” என்ற தனது தன்மையை இழப்பதில்லை; அது போன்றே, திருவாய்மொழி (4-4-7) - தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே - என்ற கூறுவதற்கு ஏற்ப, தெளிந்த நிலை மற்றும் கலங்கின நிலை ஆகிய இரண்டிலும், எந்தவிதமன வேறுபாடு இல்லாமல், இரண்டு நிலைகளிலும் அடிமைத்தனம் என்பதன் இயல்பு மாறாது.