Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 117)
இரண்டாம் ப்ரகரணம்
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை அளை சரித்தவர்க்கு ப்ரிய ஹிதபரன் தான் துளக்கற வெங்கும் தழக்க நடத்தும்.
ஆனால் அபிமதவிஷய ஸம்ச்லேஷ விச்லேஷங்கள் புண்ய பாப நிபந்தநமாகவன்றோ லோகத்தார்க்கு வருவது. லோக வ்யாவ்ருத்தரான விவர்க்கு இவை வருகைக்கு நிதான மேதென்னு மபேக்ஷையிலே யருளிச்செய்கிறார் (புண்ணியமென்று).
– பொதுவாகச் சேர்த்தி மற்றும் பிரிவு என்பது இந்த உலகில் உள்ளவர்களுக்கு அவரவர்கள் செய்த புண்ணியம், பாபம் காரணமாக அல்லவோ ஏற்படுகிறது; ஆனால் நம்மாழ்வாரோ இது போன்ற உலகியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு வேறுபட்டவராக உள்ளபோது, இவருக்கு இந்த நிலைகள் உண்டாகக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்” என்கிறபடியே நாட்டார்க்குப் புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ச்லேஷ விச்லேஷங்களை, “சார்ந்தவிரு வல்வினைகளும் சரித்து” என்று, “திலதைலவத் தாருவஹ்நிவத்” என்கிறபடியே ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற புண்யபாப ரூபமான ப்ரபல கர்மங்களை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே, தான் போக்குகையாலே, அவை யிரண்டுமற்றிருக்கிற விவர்க்கு ப்ரியபரனும் ஹிதபரனுமான ஈச்வரன்தான் ஜ்ஞாநபக்திகளை வளர்க்கையில் நினைவாலே “துளக்கற் றமுதமா யெங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக்கண்ணன்” என்று விபூதி ரக்ஷணத்தைப் பற்ற வருமந்யபரதை கலசாதபடி அத்தை ஒருங்க விட்டுக்கொண்டு வந்து இனிப் பேராதபடி என்னுள்ளே புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸர்வஜ்ஞனுமாய், “விஜ்வர:” என்கிறபடியே உள்நடுக்கமும் தீர்ந்து எனக்கு நிரதிசய போக்யனுமாய் நாய்ச்சிமாரையும் புரிந்து பாராமல் என்னையே பார்த்துக் கொண்டு, இதனாலே திருக்கண்களும் செவ்வி பெற்று, இப்படி என்னோடே கலந்திருந்தானென்று இவர் அதிப்ரீதராம்படியாகவும், “தழை நல்லவின்பம் தலைப்பெய்தெங்கும் தழைக்க” என்று விச்லேஷ வ்யஸனத்தாலே நான் முடியாநின்றேன்; இனி என் துக்கம் காணாமையாலே லோகமெல்லாம் விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று ஸம்ருத்தமாகக் கடவதென்னும்படி அதிமாத்ர துக்க நிமக்நராம்படியாகவும் நடத்திக் கொண்டு போருமென்றபடி.
– (புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை) – திருவாய்மொழி (6-3-4) - புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் - என்பதற்கு ஏற்ப உலகில் உள்ளவர்களுக்குப் புண்ணியம் மற்றும் பாபம் ஆகியவற்றின் பலனாக ஏற்படுகிற சேர்க்கை மற்றும் பிரிவு ஆகியவற்றை. (அளை சரித்தவர்க்கு) – திருவாய்மொழி (1-5-10) - சார்ந்தவிரு வல்வினைகளும் சரித்து – என்று, சரணாகதிகத்யம் - திலதைலவத் தாருவஹ்நிவத் - எள்ளில் மறைந்துள்ள எண்ணெய் போன்றும் மரத்தில் மறைந்துள்ள அக்னி போன்றும் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஆத்மாவுடன் பிரிக்க இயலாதபடியாகப் பொருந்தியுள்ள புண்ணியம் மற்றும் பாபம் ஆகிய வடிவில் உள்ள கர்மங்களை, சாமர்த்தியம் உள்ளவர்கள் நெடுஞ்சுவரைத் தள்ளுவது போன்று, ஸர்வேச்வரனாகிய தான் போக்குவதால், புண்ணிய பாபங்கள் ஆகிய இரண்டும் அற்ற இவருக்கு, (ப்ரிய ஹிதபரன் தான்) – ப்ரீதி உள்ளவனும், நன்மையை எண்ணுபவனும் ஆகிய ஸர்வேச்வரன், தானாகவே வலிய வந்து ஞானம் மற்றும் பக்தியை வளர்க்கத் திருவுள்ளம் கொள்வதால், (துளக்கிற) – திருவாய்மொழி (2-6-2) – துளக்கற் றமுதமா யெங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக்கண்ணன் - என்பதற்கு ஏற்ப உலகத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதான மற்ற சிந்தனைகள் ஏதும் கலந்து விடாதபடி அவற்றை ஒதுக்கி வைத்து, வேறு எங்கும் இனி செல்லாதபடியாக எனது மனதில் புகுந்து, அதன் காரணமாக இயல்பாகவே மலர்ந்துள்ள அனைத்து அறிந்தவனுமாய்; இராமாயணம் பாலகாண்டம் (1-85) – அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ - விபீஷணனுக்கு முடிசூட்டிய பின்னர், இராமன் தான் செய்யவேண்டிய அனைத்தும் செய்த முடித்தவனாக நடுக்கம் அற்றவனாக மகிழ்ந்திருந்தான் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தனது நடுங்கங்கள் நீக்கப்பெற்றவனாய்; எங்கும் எல்லையற்ற இன்பம் அளிப்பவனாய்; பிராட்டிமார்களைக் கூட நோக்காமல் என்னையே உற்று நோக்கிக் கொண்டு பார்ப்பதால் தனது திருக்கண்கள் அழகு பெற்றவனாய்; இவ்விதமாக என்னுடன் இவன் கலந்துள்ளான் என்று நம்மாழ்வார் மிகவும் மகிழ்ந்திருக்கும்படியாகச் செய்கிறான் [இது சேர்தலால் ஏற்படும் மகிழ்ச்சி நிலை - ஸர்வேச்வரனால் ஏற்படுத்தப்படுகிறது]. (எங்கும் தழைக்க) – திருவாய்மொழி ( 9-5-10) – தழை நல்லவின்பம் தலைப்பெய்தெங்கும் தழைக்க – என்பதற்கு ஏற்ப பிரிவுத் துன்பம் காரணமாக நான் முடிந்து போகும்படியாக உள்ளேன்; இனி எனது இந்தத் துக்கத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால், உலகம் முழுவதும் நிறைந்த சுகம் பெற்று இன்பமாக நிறைவுடன் இருக்கக்கடவது என்று எல்லையற்ற துன்பத்தில் அழுந்தியபடிக் கிடந்தார். (நடத்தும்) – இப்படியாக இந்த இரண்டு நிலைகளையும் அவன் இவர் விஷயத்தில் நடத்துகிறான்.