Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 116)
இரண்டாம் ப்ரகரணம்
இவற்றால் வரும் ஸம்ச்லேஷ விச்லேஷங்களாகிறன - எளியனாய் நிற்குமரியனாய் எய்தானென்கிற தர்சந ஸமமான மாநஸாநுஸந்தானமும், திண்கொள்ளப் பெறாத மநச் சைதில்யமும்.
ஆனால் ஜ்ஞாநபக்திகளை வளர்த்தது அதுக்காகிறது, “முனியே நான்முகன”ளவும் மாநஸாநுபவமொழிய, ப்ரத்யக்ஷாநுபவமில்லாத விவர்க்கு, இவற்றை வளர்க்கைக்குறுப்பாக வரும் ஸம்ச்லேஷ விச்லேஷங்களாகிறவை எவை யென்ன அருளிச்செய்கிறார் மேல் (இவற்றாலென்று தொடங்கி).
– ஞானம் மற்றும் பக்தியை நம்மாழ்வாருக்கு வளர்த்தது என்பது அளவற்ற இன்பத்தை ஏற்கக்கூடிய பயிற்சியை அளிப்பதற்காக ஆகும். ஆனால் திருவாய்மொழியில் – முனியே நான்முகனே - என்பது முடிய உள்ள திருவாய்மொழிகளில், மனம் கொண்டு அனுபவிக்கும் அனுபவம் அல்லாமல், நேரடியாகக் கண்டு அனுபவித்த அனுபவம் இவருக்கு இல்லை; இப்படி உள்ளபோது ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றை வளர்ப்பதான சேர்க்கையும் பிரிவும் இவர் விஷயத்தில் எவை என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது கீழ்ச்சொன்ன இக்காரியங்களடியாக வரும் ஸம்ச்லேஷமும் விச்லேஷமுமாகிறன – “கருத்துக்கு நன்று மெளியனாய்”, “நிற்கும் முன்னே வந்து” என்று - நெஞ்சுக்கு மிகவும் விசததமாநுபவ விஷயமாய்க் கொண்டு என் முன்னே வந்து நிற்குமென்றும், “கண்கள் காண்டற்கரியனாய்”, “கைக்கு மெய்தான்” என்று கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலணைகைக்கு எட்டுகிறிலனென்றும் சொல்லுகிற ப்ரத்யக்ஷ துல்யமான மாநஸாநுஸந்தாநமும், “கண்கட்குத் திண்கொள்ள வொரு நாளருளாயுன் திருவுரு” என்று அபேக்ஷிதமான பாஹ்யாநுபவம் பெறாமையாலே, ஆந்தராநுபவமும் அடிமண்டியோடே கலங்கும்படி பிறந்த அந்த:கரண சைதில்யமு மென்கை.
– (இவற்றால் வரும் ஸம்ச்லேஷ விச்லேஷங்கள் ஆகிறன) - இதுவரை கூறப்பட்ட ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றின் காரணமாக வருகின்ற சேர்க்கை மற்றும் பிரிவு எவை என்றால், (எளியனாய்) – திருவாய்மொழி (3-6-11) – கருத்துக்கு நன்று மெளியனாய் – என்றும், (நிற்கும்) - திருவாய்மொழி (7-3-6) - நிற்கும் முன்னே வந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப, (மாநஸ அநுஸந்தானம்) - மனத்தின் மிகவும் தெளிவான அனுபவத்திற்கு விஷயமாகக் கொண்டு என் முன்பு வந்து நிற்கும் என்றும்; (அரியனாய்) - திருவாய்மொழி (3-6-11) - கண்கள் காண்டற்கரியனாய் – என்றும், (எய்தான்) – திருவாய்மொழி (7-3-6) - கைக்கு மெய்தான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப புறக்கண்களுக்குப் புலப்படாதவனாக இருந்து, கைகளால் அணைப்பதற்கு எட்டாமல் உள்ளதான, நேரே காண்பதற்குச் சமமாக உள்ளதாகிய மனத்தின் அனுபவம் என்பது சேர்க்கை ஆகின்றது. திருவாய்மொழி (5-10-7) – கண்கட்குத் திண்கொள்ள வொரு நாளருளாயுன் திருவுரு – என்று கூறுவதற்கு ஏற்ப, தான் விரும்பிய புறக்கண்களால் கண்டு அனுபவிக்கவேண்டும் என்ற அனுபவம் கிட்டாத காரணத்தால் உள்ளத்தில் ஏற்படும் கலக்க நிலையும், அடியுடன் அந்தகரணம் கலங்கி நிற்கும்படியாகச் சிதிலம் அடையும் நிலையும் பிரிவு ஆகின்றது.