Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 115)

இரண்டாம் ப்ரகரணம்

புணர்தொறு மென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக் காதுபெருக்குதலும் மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல மாபோகச் சிரமமாக.

இப்படி ப்ராப்தி ஸாதநம் க்ருபையாகில், “இந்நின்ற நீர்மை யினியா முறாமை” என்றபோதே இவரபேக்ஷிதம் செய்துவிடலாயிருக்க, இவரை வைத்து ஸ்வஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஜ்ஞாந பக்திகள் வளர்த்தது ஏதுக்காகவென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (புணர்தொறுமென்று தொடங்கி).

– இப்படியாக இவருடைய பேற்றுக்குக் காரணம் ஸர்வேச்வரனுடைய க்ருபையே ஆகும் என்றால், திருவிருத்தம் (1) – இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை – என்று உரைத்தபோதே, இவருடைய விருப்பத்தை அவன் நிறைவேற்றியிருக்கலாம்; அதனை விடுத்து தன்னுடைய சேர்க்கையால் இவருக்கு ஞானத்தையும், பிரிவால் பக்தியையும் ஏன் வளர்த்தான் என்ற சந்தேகம் எழலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

– அதாவது “புணர்தொறும் புணர்ச்சிக்காரா” இத்யாதியாலே ஸம்ச்லேஷிக்குந்தோறும் ஸம்ச்லேஷத்துக்குத் தக்க வளவல்லாத ஸுகஸாகரமானது, அபரிச்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து அவ்வருகுபட்டு, விபூதி த்வயத்தையும் விளாக்குலை கொள்ளவல்ல வறிவையும் முழுத்தும்படி பெருகி, இப்படி பெருகினவிது விச்லேஷ ப்ரஸங்கத்திலே, பெருக்காறுவற்றி அடிசுடுமாபோலே ஸ்வப்ந கல்ப மென்னலாம்படி வற்றிப்போய், அத்தசையிலே ப்ராண ஸ்தாநமான ஹ்ருதயத்தில் பூர்வ ஸம்ச்லேஷத்தாலுண்டான புடைதோறுமுள்ளே புகுந்து ஆச்ரயமான ஆத்மாவுக்குப் பொறுக்க வொண்ணாதபடி அபிநிவேசம் பெருகிவாரா நின்றதென்று சொல்லும்படியாகக் கலப்பது பிரிவதாய், கலவியாலே ஜ்ஞாநத்தையும் பிரிவாலே பக்தியையும் வளர்த்தது, கனத்த பணியிடுகைக் கிடமாம்படி. நூலிட்டுத் திரியிட்டுக் குதும்பையிட்டுக் காது பெருக்குமா போலவும், மாஸோபவாஸிகளுக்கு ப்ரதமத்திலே போஜனத்தையிடில் பொறாதென்று சோற்றையரைத்து உடம்பிலே பூசிப் பொரிக்கஞ்சி கொடுத்துப் பொரிக்கூழ் கொடுத்து, ஒடுக்கத்திலே போஜநம் பொறுப்பிக்குமா போலவும், – “ஆற்ற நல்லவகை காட்டுமம்மான்” என்று எனக்குப் பொறுக்கப் பொறுக்கத் தன் குணசேஷ்டிதாதிகளைக் காட்டி, அவ்வழியாலே என்னை யடிமை கொண்டவ னென்னும்படி பகவதநுபவம் கனாக்கண்டறியாத விவர்க்கு, “எம்மா வீடு” என்றும், “கட்டெழில் வானவர் போகம்” என்றும் சொல்லுகிறபடியே எவ்வகையாலும் லக்ஷணமாய்க் கொண்டு, கட்டடங்க நன்றாயிருப்பதாய் அபரிச்சிந்ந ஜ்ஞாநசக்திகரான நித்யஸூரிகளநுபவிக்கிற போகத்தை முதலிலே கொடுக்கில் ஸாத்மியாதென்று கருதி, அது ஸாத்மிக்கைக்காகச் சிரமம் செய்வித்தபடி யென்கை. ஆனபின்பு ஜ்ஞாபக்திகளை வளர்த்தது ப்ராப்தி ஸாதநதயாவன் றென்று கருத்து. மாஸோபவாஸிக்குப் புறப்பூச்சு மாத்ரத்தால் போஜநம் பொறாமையாலே புறப்பூச்சுச் சொன்னவிது மற்றையவற்றுக்கு முபலக்ஷணம். “மா போகம்” என்றது – “மா வீடு”, “வானவர் போகம்” என்கிற சந்தைகளி லாத்யந்தங்களைச் சேர்த்துச் சொன்னபடி.

– (புணர்தொறும் என்னக் கலந்து பிரிந்து) - திருவாய்மொழி (10-3-2) - புணர்தொறும் புணர்ச்சிக்காரா – என்று, சேரும்போது சேர்க்கைக்குத் தகுந்தபடி அளவற்ற இன்பம் என்ற வெள்ளமானது எல்லை காண இயலாத ஆகாயத்தையும் கடந்து, அத்துடன் நிற்லாமல், நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி என்ற இரண்டு விபூதிகளையும் பரவி நிற்கும் ஞானத்தையும் மூழ்கடிக்கும்படியாகப் பெருகி நின்றது; இப்படியாகப் பெருகிய இன்பமானது, அவனை விட்டுப் பிரியும் காலத்தில், அளவற்ற நீர் கொண்ட ஆறு வற்றிப் போனால் அதன் தரை சுடுவது போன்று, அந்த இன்பம் என்பது கனவில் கண்ட ஒரு பொருள் மட்டுமே ஆகும் என்று எண்ணலாம்படி வற்றுகிறது. அந்த நிலையில், உயிரின் இருப்பிடமான இதயத்தில், முன்பு சேர்ந்திருந்த சேர்க்கையால் ஏற்பட்டதான புடைதொறும் உட்புகுந்து, “அவனையே அண்டி நிற்பதான ஆத்மாவுக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதபடியான காதல் பெருகி நிற்கிறது” என்று கூறும் விதத்தில் சேர்வதும் பிரிவதுமாக, (வளர்த்தது) - சேர்க்கையால் ஞானத்தையும், பிரிவால் பக்தியையும் வளர்த்தது [எப்படி என்றால்] (கனம் குழை இடக்காது பெருக்குதல் போலே) - சுமையான ஆபரணங்கள் இடுவதற்கான இடம் கிட்டும்படியாக நூல் இட்டு, திரி இட்டு, குதம்பை இட்டு காதில் உள்ள துளையைப் பெரிதாக்குவது போன்று, (மாச உபவாசி போஜனைப் புறம் பூச்சு போலே) - ஒரு மாதம் உபவாசம் இருந்தவர்களுக்கு முதலில் உணவை அளித்தால் அது சேராது என்பதால், சோற்றினை நன்றாக அரைத்து உடலில் பூசி, பொரி கஞ்சி அளித்து, பொரி கூழ் அளித்து, இறுதியில் உணவை அளிப்பது போன்றும், – (ஆற்ற நல்ல) – திருவாய்மொழி (4-5-5) - ஆற்ற நல்லவகை காட்டுமம்மான் - நான் பொறுக்கப் பொறுக்க மெதுவாக எனக்குத் தனது திருக்கல்யாணகுணங்களையும் லீலைகளையும் காண்பித்து, அதன் மூலம் என்னை அடிமையாக்கிக் கொண்டான் என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுடைய அனுபவம் குறித்துக் கனவில் கூட அறியாத இவருக்கு. (மா போகம்) – திருவாய்மொழி (2-9-1) – எம்மா வீடு - என்றும், திருவாய்மொழி (6-6-11) - கட்டெழில் வானவர் போகம் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து விதங்களிலும் வேறுபட்ட சிறப்பு உள்ளதன் காரணமாக நன்றாக உள்ளதும், எல்லையற்ற ஞானம் மற்றும் சக்தி நினைத்து நித்யஸூரிகள் அனுபவிப்பதும் ஆகிய இன்பத்தை. (சிரமமாக) - முதலில் அளித்தால் பொறுக்க இயலாது என்று எண்ணி, அது பொறுத்துக் கொள்வதற்கான பயிற்சியை ஏற்படுத்திபடி என்று கருத்து. ஆகவே ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றை வளர்த்தது என்பது, பேற்றுக்குக் காரணமாக அல்ல என்றாகிறது. மாதம் முழுவதும் உபவாஸம் இருப்பவர்களுக்கு உணவு அளிக்காமல், மேலே பூசப்படும் உணவால் மட்டுமே வயிற்றுக்கு உணவு கிட்டாது அல்லவோ? ஆகவே அங்கு கூறப்படும் பொரிகஞ்சி, பொரிக்கூழ் போன்றவை அளிக்கப்படும் என்பதை, அந்த மேல் பூச்சு மறைமுகமாகக் கூறுகிறது. சூர்ணையில் உள்ள “மா போகம்” என்பது “மா வீடு”, “வானவர்போகம்” என்ற பாசுரங்களில் உள்ள முதல் ஈறுகளைக் குறிக்கும்.