Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 114)
இரண்டாம் ப்ரகரணம்
நலமருளினன் என்கொலென்று ஆமூலசூடம் அருளால் மன்னு மிவர்க்கு அன்புக் கடியானதுவே அடிசேருகைக்கும் ஸாதநம்
இப்படி நிர்ஹேதுக விஷயீகார பாத்ரபூதரான விவருடைய பக்தி, பகவத் க்ருபை கலப்தையா யிருந்ததாகிலும் உபாஸகனுக்கு கர்மஜ்ஞாந ஜநிதையான பக்தியோபாதி இவர்க்கு ப்ராப்தி ஸாதநமிதுவோவென்ன வருளிச்செய்கிறார் மேல் (நலமருளினனென்று தொடங்கி).
– எந்தவிதமான காரணமும் இன்றி ஸர்வேச்வரனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்மாழ்வாருடைய பக்தியானது, ஸர்வேச்வரனுடைய க்ருபையால் உண்டானது என்றாலும், ஒரு உபாஸகனுக்குக் கர்மம் மற்றும் ஞானம் ஆகியவை காரணமாக ஏற்படும் பக்தி போன்று, இவருக்கு உண்டான பேற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம் அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “மயர்வற மதிநல மருளினன்” என்று தம்முடைய பக்தியுத்பத்தி காரணம் கேவல பகவத் க்ருபையென்று உபக்ரமித்து “என்கொலம்மான் திருவருள்கள்” என்னுமளவாக ஜ்ஞாந தசையோடு ப்ராப்தி தசையோடு வாசியற, ஆமூலசூடம் “மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்” என்று பிடிதோறும் நெய்யொழியச் செல்லாத ஸுகுமாரரைப்போலே நின்ற நிலைதோறும் அவனருள் கொண்டே தரிக்கவேண்டும் ஸ்வபாவரான விவர்க்கு, “ஆராவன்பிலடியே னுன்னடிசேர் வண்ணமருளாய்” என்கையாலே, “நலமருளினன்” என்று பக்தி காரணமாகச் சொன்ன க்ருபையே அடிசேருகையாகிற ப்ராப்திக்கும் ஸாதநமென்றபடி.
– (நலம் அருளினன் என்று) - திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் அருளினன் - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாராகிய தனக்கு பக்தி ஏற்படக் காரணம் ஸர்வேச்வரனுடைய க்ருபை மட்டுமே ஆகும் என்று தொடங்கி, (என்கொல் என்று) – திருவாய்மொழி (10-7-4) – என்கொலம்மான் திருவருள்கள் - என்று நிறைவு செய்து. (ஆமுல சூடம்) – ஞான நிலை மற்றும் பேறு பெற்ற நிலை ஆகியவற்றுக்கு இடையே எந்தவிதமான வேறுபாடும் ஆராயாமல், தொடக்கம் முதல் இறுதிவரையிலும், (அருளால் மன்னும் இவர்க்கு) - திருவாய்மொழி (1-5-11) – மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் - என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு பிடி சோறும் உண்ணும்போதும் அதில் நெய் விடாமல் உணவு இறங்காமல் உள்ள சுகுமாரர்கள் போன்று, ஒவ்வொரு நிலையிலும் அவனுடைய க்ருபை கொண்டு மட்டுமே தரிக்கவேண்டும் என்ற இயல்பு கொண்ட நம்மாழ்வாருக்கு. (அன்புக்கு அடியானதுவே) - நலம் அருளினான் – என்று கூறுவதற்கு ஏற்ப பக்திக்குக் காரணமாக உரைக்கப்பட்ட க்ருபை என்பதே, (அடிசேருகைக்கும் ஸாதநம்) – திருவாய்மொழி (6-10-2) – ஆராவன்பிலடியே னுன்னடிசேர் வண்ணமருளாய் - என்று கூறுவதால், அவன் திருவடிகளைப் பற்றுதல் என்ற பேற்றுக்கான காரணம் ஆகும்.