Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 113)
இரண்டாம் ப்ரகரணம்
வரவாறில்லை வெறிதே என்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸுக்ருத மொழியக் கற்பிக்கலாவதில்லை.
எல்லாம் செய்தாலும், ஏவம்பூத க்ருபைதான் அநாதிகாலம் இவ்வாத்ம விஷயமாகப் பெருகாமல் இன்று பெருகுமளவில் இதுக்கு உடலாகக் கற்பிக்கலாவதொரு ஸுக்ருதமில்லையோ வென்ன, அருளிச்செய்கிறார் (வரவாறென்று தொடங்கி).
அனைத்தும் செய்தபோதிலும், இவனுடைய க்ருபை என்பது இத்தனை காலம் நம்மாழ்வாருடைய விஷயத்தில் பெருகாமல், இந்தப் பிறவியில் இந்த அளவிற்குப் பெருகி நிற்பதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும்; ஆக அந்தக் காரணமாக அமையும் பொருட்டு ஒரு நல்வினையாவது உண்டு அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, “வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்” என்று இது வந்த வழி இன்னதென்று இதுக்குச் சொல்லலாவதொரு ஹேதுவில்லை, பேறும் மிகவும் இனிதாயிரா நிற்குமென்றும், “வெறிதேயருள் செய்வர் செய்வார்கட்கு” என்று – தாம் செய்ய நினைத்தவர்களுக்கு நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுவரென்றும், இப்படி விஷயீகாரம் நிர்ஹேதுகமென்று தாமே அறுதியிட்ட பின்பு, “தனியென் வாழ்முதலே” என்று ஸம்ஸாரத்திலொரு துணையின்றிக்கே யிருக்கிற வென்னுடைய அநுபவத்துக்கு ப்ரதம ஸுக்ருதமானவனே என்று தம்முடைய பேற்றுக்கு மூலஸுக்ருதமாக இவரருளிச் செய்த அவன் தன்னையொழிய வேறு கற்பிக்கலாவதொரு ஸுக்ருதமில்லை யென்கை. அன்றிக்கே, “யாத்ருச்சிகாதிகளுண்டாகில் தோன்றும்” என்று அஜ்ஞாத ஸுக்ருதமும் இவர்க்கு இல்லை யென்றவாறே இப்படி நேராகக் கழிக்க வேணுமோ? அநாதிகாலம் அங்கீகரியாதவன் இன்று செய்கையாலும், அல்லாத வாத்மாக்க ளெல்லாம் கிடக்க இவரை இப்படி விஷயீகரிக்கையாலும், இதுக்குடலானது ஏதேனுமொரு ஸுக்ருதம் இவர்க்குண்டாகக் கூடுமென்று கார்யத்தையிட்டு அநுமித்தாகிலும் கல்பிக்கலாவ தொன்றில்லையோவென்ன; அப்படி கல்பிக்கலாவதில்லை யென்னு மிடத்தை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறாரென்று ஸங்கதியாக்கி “செய்த நன்றி தேடிக் காணாதே” என்று தொடங்கி, “வெறிதே யென்றறுதியிட்டபின்” என்னுமளவும் ஏகவாக்யமாகக் கொண்டு இவ்வாழ்வார் கருத்தைச் சொல்லிக் கொண்டு செல்லுகிறதாய், “எந்நன்றி செய்தேனா” என்று பகவதங்கீகாரத்துக்குடலாகத் தாம் செய்த ஸுக்ருதமுண்டோவென்று தேடிக்காணதே அங்கீகாரத்துக்குடலான தில்லையாகில் அத்வேஷாபி முக்க்யங்களுக்குத் தக்கதுதானுண்டோ வென்னில், அவையும் அவனாலே வந்தது, ஸத்கர்மத்தாலே வந்ததல்ல. “எண்ணிலும் வரும்” என்ற பரிகணனை தானுண்டோ வென்னில், அதுக்கு “எண்டானுமில்லை”, “வைத்தேன் மதியால்”, “யானு மென்னெஞ்சு மிசைந் தொழிந்தோம்” என்கிற அநுமதீச்சைகள் தானுண்டோவென்னில், அவையும் அவனுண்டாக்கினது; “மாதவனென்றதே கொண்டு”, “திருமாலிருஞ்சோலை மலை யென்றேனென்ன” இத்யாதிகளால் ஈச்வரன் வலியவேறிடுகிறவை – வ்யாவ்ருத்த் யுக்த்யாதிகள். இவன் நடுவே வந்து அடியானென்று பிடித்து ப்ரமாண ஸாக்ஷிகள் காட்டி, அவை கார்யகரமாகாதவளவில் வடிவழகைக் காட்டி இப்படி இவ்வஸ்துவை ஸ்வாதீனமாக்கிக் கொள்ளும்படி இவனை நிவாரகரற்ற க்ருபை சூழ்ந்தது. இவ்விஷயீகாரத்துக்கு “வரவாறொன்றில்லை”, “வெறிதேயருள் செய்தவித்தனை” - என்று இவர்தாமே அறுதியிட்டபின்பு, “தனியேன் வாழுதலே” என்று தம்பேற்றுக்கு மூல ஸுக்ருதமாக இவரருளிச் செய்த ஈச்வரன் தன்னை யொழிய இவர்க்கு வேறு கல்பிக்கலாவதொரு ஸுக்ருதைமில்லை யென்று இங்ஙனே யோஜிக்கவுமாம்; இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவரருளிச் செய்த மர்யாதைக்குச் சேரும். – ஆக இதுக்குக்கீழ் இவர் ப்ரபாவத்தையும், அதுக்கடி பகவந்நிர்ஹேதுக கடாக்ஷமென்னுமத்தையும், அத்தால், இவர்க்குண்டான பக்தியின் வ்யாவ்ருத்தியையும், அதுதான் கர்ம ஜ்ஞாந ஸாத்யை யல்லாமையையும், இவரை ஈச்வரனங்கீகரித்ததுக்கு கேவல க்ருபையொழிய ஹேத்வந்தர மில்லாமையையும் சொல்லிற்றாய்த்து.
(வரவாறு இல்லை என்று) – பெரியதிருவந்தாதி (56) – வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால் - என்று இத்தகைய க்ருபை வந்ததற்கான வழி இன்னது ஆகும் என்று இதற்குக் கூறும்படியான காரணம் ஏதும் இல்லை. கிட்டிய பேறு மிகவும் இனிதாக இருந்தது என்றும், (வெறிதே) – திருவாய்மொழி (8-7-8) - வெறிதேயருள் செய்வர் செய்வார்கட்கு – என்று, தான் யாருக்கு க்ருபை செய்யவேண்டும் என்று எண்ணுகிறானோ அவர்களுக்கு எந்தவிதமான காரணமும் இன்றி க்ருபை செய்வான் என்றும், (அறுதியிட்ட பின்) - இப்படியாக அவன் நம்மாழ்வாராகிய தன்னை ஏற்றுக் கொண்டதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்று தானே உறுதியாக உரைத்த பின்னர். (வாழ்முதல் என்கிற ஸுக்ருதம் ஒழிய) - திருவாய்மொழி (2-3-5) – தனியென் வாழ்முதலே - என்பதற்கு ஏற்ப “இந்த ஸம்ஸாரத்தில் எந்த ஒரு துணையும் இல்லாமல் உள்ள என்னுடைய அனுபவத்துக்கு மூலமாக உள்ள புண்ணியமானவனே” என்று தனது பேற்றுக்கு மூல புண்ணியமாக நம்மாழ்வார் அருளிச்செய்த அவன் அல்லாமல் வேறு எதனையும் கற்பிக்க இயலாது; ஆகவே வேறு எந்த நல்வினையும் இல்லை என்று கருத்து. – அல்லது வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். சூர்ணை (107) – யாத்ருச்சிகாதிகளுண்டாகில் தோன்றும் - என்று இவர் அறியாதபடி இவரிடம் உள்ள புண்ணியம் என்று இவரிடம் ஏதும் இல்லை என்று கூறிய பின்னர் இவ்விதம் நேரடியாக “இவரிடம் நல்வினை என்று ஏதும் க்ருபைக்குக் காரணம் கூறும்படி இல்லை” என்று விலக்க இயலுமா? அதாவது, எல்லையற்ற காலமாக இவரை ஏற்றுக்கொண்டு க்ருபை செய்யாதவன் இன்று இவரை ஏற்றதாலும், மற்ற பல ஆத்மாக்கள் உள்ளபோது இவரை மட்டும் இவ்விதம் ஏற்பதாலும், இவ்விதம் இவரை ஏற்பதற்குக் காரணமான நல்வினை ஏதேனும் ஒன்றாவது இவரிடம் இருத்தல் வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டாவது அவை இவரிடம் உள்ளதாகக் கற்பிக்கலாம் அல்லவோ எனலாம். இவ்விதம் கற்பிப்பதற்குக் கூட இவரிடம் இடம் இல்லை என்பதை இந்தச் சூர்ணையில் விரிவாக அருளிச்செய்கிறார் என்றும் உரைக்கலாம். இவ்விதம் பொருள் கொண்டு விளக்கம் அளித்தால், சூர்ணை (108) – செய்த நன்றி தேடிக் காணாதே – என்பது முதல், இந்தச் சூர்ணையில் உள்ள “வெறிதே என்று அறுதியிட்ட பின்” என்பது முடிய உள்ள அனைத்தையும் ஒரே வரியாகக் கொண்டு, இவை நம்மாழ்வருடைய திருவுள்ளத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளவேண்டும் (இதனை அடுத்து கூறுகிறார்). எந்நன்றி செய்தேனா - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் நம்மாழ்வாராகிய தன்னை ஏற்றுக் கொண்டதற்குத் தன்னிடம், தான் செய்த நற்செயல் ஏதேனும் உள்ளதோ என்று தேடினார்; ஆனால் ஏதும் கிடைக்கவில்லை. சரி, அவன் ஏற்பதற்கான காரணம் தன்னிடம் இல்லை என்றாலும், அவனை வெறுக்காமலும் அவனை ஏற்றலும் என்பதான அத்வேஷ ஆபிமுக்க்யம் தன்னிடம் உள்ளதா என்று ஆராய்ந்தார்; பின்னர் அவை தம்மிடம் இருந்தாலும், அவையும் அவன் அளித்தே வந்தன அல்லாமல், தன்னுடைய நற்செயல்களால் வந்தவை அல்ல என்று தெளிந்தார். “எண்ணிலும் வரும்” என்பதற்கு ஏற்ப அவனை எண்ணியபடி இருத்தல் என்பது உண்டோ என்றால், “எண் தானும் இல்லை” என்றார். தொடர்ந்து, “வைத்தேன் மதியால்”, “யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்” என்று கூறும்படியான அநுமதி மற்றும் இச்சை ஆகியவையேனும் உள்ளதா என்றால், அவையும் அவன் உண்டாக்கியவையே ஆகும் என்றார்; “மாதவன் என்றதே கொண்டு”, “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன” என்ற சொற்களைக் கொண்டு, ஸர்வேச்வரன் அந்தச் சொற்களை வேறுவிதமாகத் தனது திருவுள்ளத்தில் நிறுத்தியதால் இவை ஏற்பட்டன என்றார். மேலும் இவன் வந்து “இவர் தனக்கே உரியவர்” என்பதற்கான சான்றுகளையும் காண்பித்தான். அந்த முயற்சியும் பயனற்றுப் போகவே, தனது வடிவழகைக் காண்பித்தான். இப்படியாக இவருடைய ஆத்மாவைத் தன்னுடையது என்று ஆக்கிக்கொள்ளும்படியாக, ஸர்வேச்வரனுடைய க்ருபையானது அவனை அவ்விதம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்து சுற்றி வளைத்துக் கொண்டது. இவ்விதம் அவன் தன்னை ஏற்றுக்கொண்டதற்கு “வரவாறொன்றில்லை”, “வெறிதேயருள் செய்தவித்தனை” என்று இவர் உறுதியாக உரைத்த பின்னர், “தனியேன் வாழுதலே” என்று தனது பேற்றுக்கு மூல புண்ணியமாக ஸர்வேச்வரனே உள்ளான் என்று இவர் அருளிச்செய்த ஸர்வேச்வரன் அல்லாமல், கற்பிப்பதற்கு வேறு எந்த ஒரு புண்ணியமும் இவரிடம் இல்லை என்று பொருள் கொள்ளலாம். ஆக இதுவரை நம்மாழ்வாருடைய ப்ரபாவம், அதற்குக் காரணம் ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி வெளிப்படுத்தும் க்ருபை, அதனால் இவருக்கு ஏற்பட்ட பக்தியின் வேறுபாடு, அத்தகைய நிலையானது கர்மத்தாலோ அல்லது ஞானத்தாலோ வந்தது அல்ல, இதுவரை ஸர்வேச்வரன் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அவனுடைய க்ருபை அல்லாமல் வேறு எந்தக் காரணமும் அல்ல என்று பலதையும் அருளிச்செய்தார்.