Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 112)

இரண்டாம் ப்ரகரணம்

இவன் நடுவே அடியானென்று ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி ஸாஷி வன்களவி லநுபவமாக இந்திர ஞாலங்கள் காட்டிக்கொள்ளக் காப்பாரற்று விதி சூழ்ந்தது.

ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க வேண்டுவானென் னென்னு மபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் மேல் “இவன் நடுவேயென்று” தொடங்கி.

– ஆனால் ஸர்வேச்வரன் நம்மாழ்வாரை இப்படியாக எந்தவிதமான காரணமும் இன்றி ஏற்றுக் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும் விஷயீகரிக்குமிவன், “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்” என்கிறபடியே நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து, “அடியானிவ னென்றெனக் காரருள் செய்யும்” என்று “த்வம் மே” என்கிறபடியே இவன் என்னடியானென்று பிடிக்க, “அஹம் மே” என்கிறபடியே அதுக்கு இவர் இசையாமல் “என்னை நீ உன்னடியானென்றது எத்தாலே” என்ன; “இதம் மூல ப்ரமாணாத்” என்கிறபடியே இவரை இசைவிக்கைக்காக, “பதிம் விச்வஸ்ய”, “ப்ரதாந ஷேத்ரஜ்ஞபதி:”, “க்ஷராத்மாநாவீசநே தேவ ஏக:” இத்யாதிகளாலே சேதநாசேதநங்க ளடையத் தனக்கு சேஷமென்னுமித்தை ப்ரதிபாதிக்கிற வேதத்தை ப்ரமாணமாகக் காட்ட, அதுஎழுதா மறையாகையாலே அது ஓலைப்படா ப்ரமாணமென்று இவர் அத்தை அந்யதாகரித்துத் தம்முடைய அநாத்யநுபவத்தை ப்ரபலமாகக் கொண்டு நிற்கையாலே, ஆட்சியிலும் ப்ரபலமான தொடர்ச்சியை முன்னிட்டவளவில், அதுக்கும் ஸாக்ஷி ஆரென்று கேட்டவாறே, “ஸுதீஸ் ஸ்யாத்” என்கிறபடியே தத்வதர்சிகளான ஜ்ஞாநிகளை ஸாக்ஷியாகக் காட்ட, “தத்வ பக்ஷபாதீ ஸ:” என்கிறபடியே அவர்கள் உனக்குப் பக்ஷபாதிகளென்று அதுக்கும் இவர் கண்ணழிவு சொல்லுகையாலே, – “வன்கள்வன்” என்று விஷயீகாராநந்தரம், அநாதிகாலம் நாம் “அஹம் மம” என்றிருந்து போந்தவநுபவம், ஆத்மாபஹாரமாகிற வலிய களவாலே வந்ததென்று இவரநுதபிக்கும்படி “இந்திர ஞாலங்கள் காட்டி யிவ்வேழுலகுங் கொண்ட” என்று இந்த்ரஜாலங்கள் போலே த்ருஷ்டி சித்தாபஹாரிகளான வடிவழகையும், சீலத்தையும் சேஷ்டிதத்தையும் காட்டி, வாய்மாளப் பண்ணி, ஆஸுரப்ரக்ருதியான மஹாபலி “என்னது” என்றிருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டாப்போலே இவரையும், வடிவழகையும் சீலாதிகளையும் காட்டி வாய்மாளப் பண்ணி இவர் “என்னது” என்றிருந்த ஆத்மாவைத் தனதாக்கிக் கொள்ளும்படியாக, – “விதிவாய்க்கின்று காப்பாரார்” என்று க்ருபா ஜநிகையான இவள் காக்கவோ? க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா பாத்ரமான நான் காக்கவோ வென்னும்படி ஒருவரால் நிவாரிக்கவொண்ணாதபடி பெருகுவதாய், ஸ்வதந்த்ரனான தன்னாலும் தப்பவொண்ணாதபடியிருக்கையாலே விதி சப்த வாச்யையா யிருந்துள்ள க்ருபை, “எனைத்தோர் பிறப்பும் – எதிர்சூழல்புக்கு எனக்கே யருள்கள் செய்ய - அம்மான் த்ரிவிக்ரமனை – விதி சூழ்ந்தது” என்று அநேக ஜந்மங்கள் நான் பிறந்த பிறவிக்கு எதிராகப் பிறந்து கொடுவந்து, எனக்கொருவனுக்குமே தன் ப்ரஸாதங்களைப் பண்ணும்படியாக ஸர்வேச்வரனாய் வைத்து, த்ரிவிக்ரமாபதாந முகத்தாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுசீலனை க்ருபை சூழ்ந்ததென்னும்படி இவரை அங்கீகரித்தல்லது நிற்கவொண்ணாதபடி வளைந்து கொண்டதென்கை. காட்டிக்கொள்ள வென்கிறவிடத்தில் “காட்டி” என்கிறவிது “ப்ரமாணம் காட்டி, ஸாக்ஷி காட்டி, இந்திரஞாலங்கள் காட்டி” என்று ஸர்வத்ராந்விதமாய்க் கிடக்கிறது.

(இவன்) – இப்படியாக ஏதேனும் ஒரு காரணத்தைத் தானாகவே கற்பித்துக் கொண்டாவது அங்கீகரிக்கும் ஸர்வேச்வரன். (நடுவே) – திருவாய்மொழி (1-7-5) - நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன் – என்பதற்கு ஏற்ப, நாதன் என்பதால் எந்தவிதமான காரணமும் இன்றி, (அடியானென்று) - திருவாய்மொழி (9-4-10) – அடியானிவ னென்றெனக் காரருள் செய்யும் - என்பதற்கு ஏற்ப, த்வம் மே – நீ எனக்கு உரியவன் - என்று உரைத்தபடி ஸர்வேச்வரன் நம்மாழ்வாரை “இவர் எனக்கு அடியார்” என்று பிடிக்க முயல்கிறான். அப்போது இவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், அஹம் மே – நான் எனக்கே உரியவன் - என்பதற்கு ஏற்ப, “என்னை உனது அடியான் என்று நீ பிடிக்க முயல்வது எதனால்?”, என்கிறார். இதற்கு ஸர்வேச்வரன், இதம் மூல ப்ரமாணாத் – இதற்கு வேதமே மூலப்ரமாணம் ஆகும் - என்று கூறுவதற்கு ஏற்ப இவரை ஒப்புக் கொள்ளச் செய்யும் விதமாக, புருஷஸூக்தம் – பதிம் விச்வஸ்ய - உலகின் நாதன் - என்றும், ச்வேதாஸ்வதர உபநிஷத் – ப்ரதாந ஷேத்ரஜ்ஞபதி: - ப்ரக்ருதி மற்றும் உயிர்களின் நாதன் - என்றும், ச்வேதாஸ்வதர உபநிஷத் - க்ஷராத்மாநாவீசநே தேவ ஏக: - ஸர்வேச்வரன் மட்டுமே அனைத்து உயிர்களையும் நியமிக்கிறான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் தனக்கே வசப்பட்டவை என்பவை உணர்த்தும் வேதங்களை ப்ரமாணமாகக் கூறுகிறான். (ஓலைப்படா ப்ரமாணம்) - இதற்கு நம்மாழ்வார், “வேதங்கள் எழுதப்படாத மறைபொருள் என்பதால் அது ஓலைப்படா ப்ரமாணம்” என்று கூறி அதனைத் தள்ளி, எல்லையற்ற காலமாகத் தன்னைத் தொடர்ந்தபடி உள்ள கர்மம் போன்ற அனுபவங்களை மட்டுமே உறுதியாகப் பற்றியபடி நிற்பதால், தொடர்ந்து ஸர்வேச்வரன் தான் அனைத்தையும் நியமித்தபடி உள்ளதைக் கூறினான். (ஸாக்ஷி) இதனைக் கேட்ட நம்மாழ்வார், “அதற்குச் சாட்சி ஏதேனும் உள்ளதோ?”, என்றார். இதற்கு ஸர்வேச்வரன் - ஸுதீஸ் ஸ்யாத் - என்பதற்கு ஏற்ப ஞானிகளைச் சாட்சியாகக் காண்பித்தான். (பக்ஷபாதி) - அப்போது நம்மாழ்வார் அவனிடம், தத்வ பக்ஷபாதீ ஸ: - அவன் உனக்கு மட்டுமே ஒரு தலையாகப் பேசுவான் - என்பதற்கு ஏற்ப ஞானிகள் அனைவரும் உனக்காக மட்டுமே பாரபட்சமாகப் பேசுபவர்கள் ஆவர்”, என்று உரைத்தார். தொடர்ந்து, (வன்களவில் அநுபவமாக) - திருவாய்மொழி (5-1-4) – வன்கள்வன் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி வந்ததான “அஹம் மம – நான் எனக்கே உரியவன்” என்ற சிந்தனையானது, ஸர்வேச்வரனுக்கே சொந்தமான ஆத்மாவைத் தன்னுடையது என்று அபகரித்துக் கொண்ட பெரும் களவு காரணமாகவே வந்தது என்று உணர்ந்து இவர் வருந்தும்படியாக, (இந்திர ஞாலங்கள் காட்டி) - திருவாய்மொழி (9-5-5) – இந்திர ஞாலங்கள் காட்டி யிவ்வேழுலகுங் கொண்ட - என்பதற்கு ஏற்ப இந்த்ரஜாலங்கள் போன்று அனைவருடைய கண்கள் மற்றும் சித்தம் ஆகியவற்றைக் கவர்ந்து இழுக்கவல்ல தன்னுடைய வடிவழகு, சீலம், செய்கைகள் ஆகியவற்றைக் காண்பித்து வியக்கும்படிச் செய்து. (கொள்ள) - அசுரத்தன்மை கொண்ட மஹாபலியானவன், “என்னுடையது” என்று எண்ணியிருந்த அனைத்து லோகங்களையும் அவனிடமிருந்து அபகரித்துத் தன்னுடையதாக்கிக் கொண்டது போன்று வடிவழகு, சீலம் முதலானவற்றைக் காண்பித்து மயங்கும்படியாகச் செய்து, நம்மாழ்வார் “என்னுடையது” என்று எண்ணியிருந்த ஆத்மாவை ஸர்வேச்வரன் தன்னுடையது என்று கொள்ளும்படியாக, (காப்பார் அற்று) திருவாய்மொழி (5-1-1) – விதிவாய்க்கின்று காப்பாரார் - என்று க்ருபைக்கு இலக்காக உள்ள இவளால் அது கிட்டாமல் தன்னைக் காத்துக் கொள்ள இயலுமா? உன்னுடைய க்ருபைக்கு வசப்பட்டவனாகிய நீயே அது கிட்டாமல் தடுக்க இயலுமா? உனது க்ருபைக்கு இலக்காக உள்ள நான் அது கிட்டாமல் தடுக்க இயலுமா - என்று கூறுவதற்கு ஏற்ப யாராலும் தடுத்து நிறுத்து இயலாதபடி பெருகுவதாய். (விதி சூழ்ந்தது) - “விதி” என்ற பதம் முலம் அவனுடைய க்ருபை கூறப்படுகிறது; யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரம் கொண்ட அவனால் கூட தப்ப இயலாதபடி உள்ளதால் “விதி” என்ற பதம் மூலம் அவனுடைய க்ருபை கூறப்பட்டது. இப்படியாக உள்ள அவனுடைய க்ருபையானது, திருவாய்மொழி (2-7-6) – “எனைத்தோர் பிறப்பும் – எதிர்சூழல்புக்கு எனக்கே யருள்கள் செய்ய - அம்மான் த்ரிவிக்ரமனை – விதி சூழ்ந்தது” – என்பதற்கு ஏற்ப நான் பிறந்த பல பிறவிகளிலும் எனக்கு முன்பாகவே தான் வந்து தோன்றி, என் ஒருவனுக்கு மட்டுமே தனது க்ருபையைச் செய்யும்படியாக ஸர்வேச்வரனாக நின்று, த்ரிவிக்ரம அவதாரம் மூலம் அனைவருடைய தலைகளிலும் தனது திருவடிகளை வைத்தவனாகிய பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு ஆராயாமல் அனைவரிடமும் ஒரே போன்று பழகும் தன்மை உள்ள அவனை அவனுடைய க்ருபை சூழ்ந்து கொண்டது; அதாவது இவரை ஏற்றுக்கொண்டால் அல்லாமல் அவன் இருத்தல் இயலாது என்பதாக வளைத்துக் கொண்டது என்று கருத்து. சூர்ணையில் உள்ள “காட்டி” என்ற சொல்லை “ப்ரமாணம் காட்டி, ஸாக்ஷி காட்டி, இந்திரஞாலங்கள் காட்டி” என்று அனைத்து இடங்களிலும் சேர்த்துப் படிக்கவேண்டும்.