Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 111)

இரண்டாம் ப்ரகரணம்

மாதவன் மலை நீர் நிழலென்று ஏறிடுமது வ்யாவ்ருத்த்யுக்தி அந்யார்த்தம் அபுத்தி பூர்வகம் அவிஹிதம் பலவிஸத்ருசம் பலாந்தர ஹேது.

– இவையொன்றுமில்லையாகிலும் “மாதவன்” என்றும், “திருமாலிருஞ்சோலை மலை” என்றும் சொன்ன உக்தி மாத்ரங்களைப் பற்றாசாகக் கொண்டு விஷயீகரித்தானாக வருளிச்செய்கையால், அவைதானுண்டே யென்ன, அவை பேற்றுக்கடியாகச் சொல்லத் தக்கவை யன்றென்னு மிடத்தை மற்றுமிவற்றோடு ஸஹபடிதங்களாகச் தக்கவற்றையும் கூட்டிக்கொண் டருளிச்செய்கிறார் (மாதவன் மலை நீர் நிழலென்றேறிடுமதென்று தொடங்கி).

இது போன்று ஸர்வேச்வரன் இவரை ஏற்றுக்கொள்ள வேறு எந்தவிதமான காரணமும் இல்லை என்றாலும், “மாதவன்”, “திருமாலிருஞ்சோலை மலை” என்று இவர் கூறிய சொற்களை மட்டுமே ஒரு வாய்ப்பாகக் கொண்டு, ஸர்வேச்வரன் தன்னை ஏற்றுக் கொண்டதாக இவரே அருளிச்செய்துள்ளதால், அது போன்று உரைத்தவற்றையே காரணமாகக் கூறலாம் அல்லவோ? ஆனால் அவை பேற்றுக்குக் காரணமாகக் கூறத்தக்கவை அல்ல என்பதை, அவற்றுடன் ஒருசேர சிந்திக்கத்தக்க வேறு சிலவற்றையும் சேர்த்துக் கொண்டு விளக்குகிறார்.

– அதாவது, “மாதவனென்றதே கொண்டென்னை யினியிப்பாற்பட்டது யாதவங்களும் சேர்கொடேனென்று என்னுள் புகுந்திருந்து” என்று அந்த:புரவாஸிகள் சொல்லும் “மாதவன்” என்கிற திருநாமத்தை அஹ்ருதயமாகச் சொன்னவளவிலே, அத்தையே குவாலாகக் கொண்டு, அல்லாத திருநாமங்களுக்கும் இதுக்கும் வாசியறியாத வென்னை விஷயீகரித்து, என்னுள்ளே புகுந்திருந்து, ஸகல கர்மங்களையும் போக்கினானென்றும், “திருமாலிருஞ்சோலைமலை யென்றேனென்னத் திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான்” என்று ஓரோ தேசங்களில் மலைகளைச் சொல்லாநின்றால், ஓரோ விசேஷங்களை யிட்டுச் சொல்லுமோபாதி யாத்ருச்சிகமாக “திருமாலிருஞ்சோலைமலை யென்றேன்” என்னுங்காட்டில் தானுகந்தருளின திருமலையின் பேரை விரும்பிச் சொன்னேனாகக் கொண்டு நிரபேக்ஷனானதான், பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே பரிபூர்ணமாகப் புகுந்தானென்றும் சொல்லும்படி, மாதவனென்று நம் பேரைச் சொன்னார்; திருமாலிருஞ்சோலைமலை யென்று நம்மூரைச் சொன்னாரென்றும் ஏறிடுகிறவை - ஈச்வரனுகந்த திருநாமமென்றும், அவன் உகந்து வர்த்திக்கிற திருமலை யென்றும் சொன்னவையல்ல; பேருக்கும் பேருக்கும் மலைக்கும் மலைக்கும் வ்யாவ்ருத்தி சொன்ன மாத்ரம். மற்றுமிவற்றோடு ஸஹபடிதமாய்ப் போருமவையான, “என்னடியார் விடாயைத் தீர்த்தாய், அவர்களுக் கொதுங்க நிழலைக் கொடுத்தாய்” என்றேறிடுகிறவை - தன் பயிர் தீயாமைக்காக நீருள்ளவிடத்தில் நின்றும், நெடும்துலையிட்டு இறைக்கிறதும், தனக்குச் சூது சதுரங்கம் பொருகைக்கும், காற்று வரவுக் கிருக்கைக்குமாக விரிவுண்டாகப் புறந்திண்ணை கட்டிவைக்கிறது மொழிய, பாகவதர்கள் விடாயைத் தீர்க்கைக்கும் அவர்களுக்கொதுங்க நிழலாகைக்கும் செய்கிறதல்லாமையாலே அந்யார்த்தம். இவைதான் இத்தனையும் இத்தலையில் நினைவின்றியிருக்க, அவன் அடித்தேறிடுகிறவை யாகையாலே புத்தி பூர்வகமுமல்ல. இவைதான் பல ஹேது தயா சாஸ்த்ர விஹிதங்களுமன்று. பகவத்விஷயீகாரமாகிற மஹாபலத்துக்கு இவை ஸத்ருசமுமல்ல. இவையுண்டாய்த்தாகில் இவ்வருகே சில அல்பப்ரயோஜநங்களுக்கு ஹேதுவா மித்தனை யென்கை. ஆகையால் இவை பகவதங்கீகார ஹேதுவாக மாட்டாதென்று கருத்து. – கீழே “யாத்ருச்சிகாதிகளுண்டாகில் தோன்றும்” என்றதுவும், இங்கே மாதவனித்யாதியாலே அவனேறிடத்தக்கவை சிலவுண்டாக இவர் தம்முடைய உக்தியாலே கண்டெடுத்துக் கழிக்கிறவிதுவும் தன்னில் சேரும்படி யெங்ஙனே யென்னில், யாத்ருச்சிகாதிகள்தான் பலவுமுண்டாகையாலே, அத்யுத்கடங்களாய் மஹாபலத்துக் குறுப்பாய் வந்து விழுமவையும் ஆபாஸங்களா யிருக்குமவையு முண்டாகையால் அத்யுத்கடங்களாய் அவனுக்கு ஹேதுவாகக் கொள்ளலாம்படி யிருக்குமவற்றைக் கீழே சொல்லிற்றாக்கி, ஆபாஸங்களாய் அவனாரோபித்துக் கொள்ளத்தக்கவற்றை இங்கே சொல்லிற்றென்று விபஜித்துக் கொள்ளுமளவில் விரோதமில்லை.

– (மாதவன் என்று) – திருவாய்மொழி (2-7-3) – மாதவனென்றதே கொண்டென்னை யினியிப்பாற்பட்டது யாதவங்களும் சேர்கொடேனென்று என்னுள் புகுந்திருந்து - என்று கூறுவதற்கு ஏற்ப, அந்தப்புரத்தில் உள்ளவர்கள் கூறுவதான “மாதவன்” என்னும் திருநாமத்தை மனதளவில் ஒட்டும்படியாகச் சொல்லாமல் மேலோட்டமாக உரைத்தபோதிலும், அதனையே ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு, இதனைத் தவிர்த்து உள்ள திருநாமங்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு அறியாதபடி உள்ள என்னை ஏற்றுக் கொண்டு, என்னுள்ளே புகுந்து, அங்கேயே நிலைத்து நின்று எனது அனைத்து கர்மங்களையும் போக்கினான். (மலை என்று) – திருவாய்மொழி (10-8-1) - திருமாலிருஞ்சோலைமலை யென்றேனென்னத் திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான் - என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு இடங்களில் உள்ள மலைகள் குறித்துக் கூறியபடி வரும்போது, அவைகளுடைய சிறப்புகளை உரைப்பது போன்றே, தற்செயலாக “திருமாலிருஞ்சோலை” என்று உரைத்தேன்; அப்போது, தான் மகிழ்வுடன் உறையும் இடத்தை இவன் மிகவும் விருப்பத்துடன் உரைத்தான் என்று திருவுள்ளம் பற்றி, எதனையும் வேண்டாதபடி பெரியபிராட்டியுடன் கூடியவனாக எனது மனதில் பரிபூர்ணமாகப் புகுந்தான். (ஏறிடுமது) – இவ்விதம் ஆழ்வார் உரைப்பது போன்று, “மாதவன் என்று நம்முடைய திருநாமத்தை உரைத்தார், திருமாலிருஞ்சோலை என்று நம்முடைய இருப்பிடத்தை உரைத்தார்” என்று ஆழ்வார் கூறியவற்றில் ஸர்வேச்வரன் அவனுடைய எண்ணங்களை ஏற்றிக் கொள்ளும் சிந்தனைகள்; (வ்யாவ்ருத்த்யுக்தி) - ஸர்வேச்வரன் மகிழ்வுடன் ஏற்கும் திருநாமம், அவன் உறைகின்ற இடம் என்றெல்லாம் ஆழமாக மனதில் எண்ணிக் கூறப்பட்டவை அல்ல; இவ்விதம் உரைக்கப்பட்டது என்னவென்றால் மற்ற திருநாமங்கள் மற்றும் இந்தத் திருநாமம், மற்ற மலைகள் மற்றும் இந்த மலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு கூறிய அளவு மட்டுமே ஆகும். (நீர் நிழல் என்று ஏறிடுமது) - இது போன்று ஸர்வேச்வரன் தானாகவே கற்பித்துக் கொள்ளும் இவற்றுடன் சேர்த்துக் கூறுவதான, “எனது அடியார்களின் தாகம் தீர்த்தான், அவர்கள் ஒதுக்குவதற்கு நிழலை அளித்தான்” என்று கற்பித்துக் கொள்வதானவை, (அந்யார்த்தம்) - தனது பயிர் வாடாமல் இருப்பதற்காக நீர் நிறைந்த இடத்திலிருந்து நீண்ட துலை இட்டு இறைப்பதும்; தான் சூது மற்றும் சதுரங்கம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்காகவும், காற்று வாங்கவும் வீட்டின் வெளிப்புறம் திண்ணை கட்டிவைப்பதும், இந்த இந்த காரணத்திற்கு அல்லாமல், பாகவதர்களுடைய தாகம் தீர்க்கவும் அவர்கள் ஒதுங்குவதற்காக நிழல் அமைப்பதும் என்பதற்காக அல்ல என்பதால், இவை வேறு ஒன்றைக் கருதியே ஆகும்; ஆனால் ஸர்வேச்வரன் எண்ணிக் கொள்வது வேறுவிதமாக ஆகும். (அபுத்தி பூர்வகம்) - இது போன்றுள்ள பல செயல்களும் இவர்கள் “இதற்காகச் செய்கிறோம்” என்னும் எண்ணம் ஏதும் இன்றிக்கே செய்தபோதிலும், ஸர்வேச்வரன் இவற்றை வேறுவிதமாகக் கற்பித்துக் கொண்டு நிற்பதால், இவர்கள் புத்தி அறிந்து செய்வது அல்ல. (அவிஹிதம்) - இது போன்ற செயல்கள் பலன் அளிப்பதற்கான காரணங்கள் என்று சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டவையும் அல்ல. (பல விஸாத்ருசம்) - ஸர்வேச்வரனால் ஏற்கப்படுதல் என்னும் மிகப் பெரிய பலனுக்கு இவை ஒத்தது அல்ல. (பலாந்தர ஹேது) - இவை இருந்தது என்றால், இவை வேறு சில பலன்களுக்குக் காரணமாக உள்ளன அல்லாமல், பகவான் ஏற்றுக்கொள்வதற்கான காரணமாகி விடாது. ஆனால் சூர்ணை 107ல் - யாத்ருச்சிகாதிகளுண்டாகில் தோன்றும் – என்பதுடன், இந்தச் சூர்ணையில் – மாதவன் - என்று அவன் கற்பித்துக் கொள்ளத்தக்கபடியான செயல்கள் உள்ளன என்று கூறும் இவருடைய சொற்கள் மூலம் முரண்பாடு ஏற்படாதோ என்று கேட்கலாம். தற்செயலாக ஏற்படும் செயல்கள் என்பது பலவகைப்படும். மிகவும் பெரியவைகளாக, மிகப் பெரிய பலனை ஏற்படுத்தவல்ல செயல்கள் சில மட்டுமே இருக்கலாம்; மிகவும் சிறியதாக உள்ளவை சில மட்டுமே இருக்கலாம்; சூர்ணை 107ல், மிகவும் பெரியவைகளான, மிகவும் பெரிய பலன்களை அளிப்பதான காரணமாக வந்து சேர்வனவற்றை மட்டுமே கூறினார். ஆனால் இங்கு மிகவும் சிறியவைகளாய் உள்ளபோதிலும், அவனால் கற்பிக்கப்பட்டவற்றைக் கூறினார். ஆக இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதால் முரண்பாடு இல்லை.