Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 110)
இரண்டாம் ப்ரகரணம்
மதியால் இசைந்தோ மென்னும் அநுமதீச்சைகள் இருத்துவ மென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது.
அதுதான் வேணுமோ? தமக்கு அநுமதீச்சைக ளுண்டாக வருளிச்செய்தாரே? அவைதான் ஹேதுவானாலோ வென்ன, அவையும் அவனாலே யுண்டான தென்கிறார் “மதியா லிசைந்தோமென்று தொடங்கி).
அத்தகைய எண்ணம் இவரிடம் இருந்தது என்று இவர் வெளிப்படையாகக் கூறவேண்டுமோ? இவர் தம்முடைய பாசுரங்களில் தனக்கு அநுமதியும் [ஸர்வேச்வரனை விலக்காமல் இருத்தல்] இச்சையும் உள்ளதாக அருளிச்செய்தார்; ஆகவே அவை காரணமாக ஸர்வேச்வரன் கடாக்ஷித்தான் என்று கூறலாம் அல்லவோ என்றால், அவையும் தனக்கு அவனாலேயே ஏற்பட்டது என்று கூறுகிறார்.
– அதாவது “வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே” என்று அநுமதி மாத்ரத்தாலே அவனை என்னெஞ்சுக்குள்ளே வைத்தேனென்றும், “யானு மென்னெஞ்சு மிசைந்தோம்” என்று விரோதியைப் போக்கும்படியாக நானும் மென்னெஞ்சு மிசைந்தோ மென்றும் தமக்குண்டாகச் சொன்ன அநுமதியும் இச்சையும், “யானொட்டி யென்னு ளிருத்துவ மென்றிலன்” என்று அவன் தம்முள்ளே புகுந்திருப்பதாகக் கேட்டவளவில் நான் இசைந்து என்னுடைய ஹ்ருதயத்தில் இருத்துவோ மென்றிலே னென்றபடியே அவனை உள்ளேயிருத்தவோ மென்றிசையாத தம்மை “இசைவித்தென்னை” என்கிறபடியே வருந்தி இசையப் பண்ணி, “என்னிசைவினை” என்று நானல்லேனென்று அகலாதபடி என்னிசைவுதானாய்ப் புகுந்தவனை யென்னும்படி யத்னித்த ஈச்வரனுடைய க்ருஷி பலமென்கை. அநுமதீச்சைகள் தமக்கு முன்னே உண்டாயிருந்ததாகில், “இருத்துவமென்றிலன்”, “இசைவித்தென்னை” என்று மருளிச் செய்யக்கூடாதிறே.
(மதியால் என்னும் அநுமதி) – திருவாய்மொழி (8-7-10) – வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே – என்று அநுமதி மட்டுமே கொண்டு அவனை எனது நெஞ்சத்தில் வைத்தேன் என்று தனக்கு உள்ளதாகக் கூறிய அநுமதியும், (இசைந்தோம் என்னும் இச்சை) – பெரியதிருவந்தாதி (26) – யானும் என் நெஞ்சும் இசைந்தோம்- என்று அவனை அடையத் தடையாக உள்ள விரோதியைப் போக்கும்படியாக நானும் எனது நெஞ்சமும் ஒன்றாக ஒப்புக் கொண்டோம் என்று தனக்கு உள்ளதாகக் இச்சையும். (இருத்துவம் என்னாத என்னை) – திருவாய்மொழி (1-7-7) – யானொட்டி யென்னு ளிருத்துவ மென்றிலன் - அவன் எனது மனதில் புகுந்திருப்பதைக் குறித்து அறிந்தபோதிலும், நான் அதனை ஏற்றுக்கொண்டு அவனை எனது மனதிலேயே நிலைத்திருக்கும்படிச் செய்வேன் என்று கூறவில்லை – என்பதற்கு ஏற்ப, அவனை உள்ளேயே இருக்கும்படிச் செய்வேன் என்று இசையாத நம்மாழ்வாராகிய தன்னை. (இசைவித்த என் இசைவினது) – திருவாய்மொழி (5-8-9) – இசைவித்தென்னை - என்பதற்கு ஏற்ப வருந்தி இசையும்படிச் செய்து, திருவாய்மொழி (1-7-4) - என்னிசைவினை - என்பதற்கு ஏற்ப “நான் அதற்குத் தகுந்தவன் அல்லன்” என்று அகன்று செல்லாதபடி, எனது இசைவாகவே புகுந்தவனை - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்து முயற்சிகளும் செய்த ஸர்வேச்வரனுடைய செயல்பாடுகளின் பலனே ஆகும். அநுமதியும் இச்சையும் ஆழ்வாருக்கு முன்பே இருந்தது என்றால், “இருத்துவம் என்றிலன்” என்றும், “இசைவித்து என்னை” என்றும் அருளிச்செய்திருக்கமாட்டார் அல்லவோ?