Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 109)

இரண்டாம் ப்ரகரணம்

எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமில்லை.

ஆனால் பரமபக்திக்கு முகம் காட்டுமோபாதி, பரிகணனைக்கும் முகம் காட்டு மென்றாரிறே அவர்தாமே; அந்தப் பரிகணனைதான் இவர்க்குண்டாய்த்தானாலோ வென்ன வருளிச்செய்கிறார் (எண்ணிலும் வரும் கணனைக் கெண்தானுமில்லை) என்று.

– ஸர்வேச்வரன் ஒருவனுடைய பரமபக்திக்கு முகம் காண்பிப்பது போன்று, அவனை எண்ணுவதற்கும் முகம் காண்பிப்பான் என்று இவரே அருளிச்செய்துள்ளார். ஆகவே அத்தகைய “எண்ணியபடி இருத்தல்” என்ற நிலையே இவருக்கு ஏற்பட, அதன் காரணமாகவே ஸர்வேச்வரன் இவருக்கு க்ருபை செய்தான் என்று கூறலாம் அல்லவோ? இந்த ஐயத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “எண்ணிலும் வருமென்னினி வேண்டுவம்” என்றது, ஈச்வர குணாதிக்யம் சொன்ன வித்தனை போக்கி, அந்த பரிகணனைக்குத் தம்மோடு அந்வய மில்லாமை கண்டு, “நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓரெண்டானு மின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” என்று கார்யங்கள் பலிக்குமிடத்தில், “எண்ணிலும் வரும்” என்றது தான் மிகையாம்படி ஓரெண்தானுமின்றி யிருக்கச்செய்தே பலித்துக்கொடு நிற்கிறபடி கண்டாயே யென்று தம் திருவுள்ளத்துக்கு மூதலிக்கையாலே அதுவும் இவர்க் கில்லை யென்கை.

(எண்ணிலும் வரும் கணனைக்கு) – திருவாய்மொழி (1-10-2) - எண்ணிலும் வருமென்னினி வேண்டுவம் - என்ற பாசுரத்தில், ஸர்வேச்வரனுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கூறிய பின்னரும், அவற்றைக் குறித்தும் அவனைக் குறித்தும் எண்ணியபடி இருத்தல் என்பது தன்னிடம் இல்லை என்பதைக் கண்டார். அதனால், (எந்தானும் இல்லை) – திருவாய்மொழி (1-10-5) – நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓரெண்டானு மின்றியே வந்தியலுமாறு – கண்டாயே – என்பதற்கு ஏற்ப, செயல்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கு “எண்ணிலும் வரும்” என்பது அவசியம் என்றாலும், அத்தகைய எண்ணியபடி இருத்தல் என்பது இல்லாதபோதிலும், ஸர்வேச்வரன் குறித்த செயல்கள் அனைத்தும் நிறைவேறியபடி உள்ளதைக் கண்டாய் அல்லவோ என்று தனது திருவுள்ளத்திற்கு நிரூபிப்பதால், இவருக்கு “அவனை எண்ணியபடி இருத்தல்” என்ற நிலை இருந்தது, அதன் காரணமாகவே ஸர்வேச்வரன் இவரைக் கடாக்ஷித்தான் என்பதும் பொருந்தாது.