Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 108)

இரண்டாம் ப்ரகரணம்

செய்தநன்றி தேடிக்காணாதே கெடுத்தாய் தந்தாயென்ற அத்வேஷாபிமுக்யங்களும் ஸத்கர்மத்தாலல்ல.

இப்படி அங்கீகார ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும் அத்வேஷாபிமுக்யங்கள் ஸுக்ருதமடியாக வானாலோ வென்ன வருளிச்செய்கிறார் மேல் (செய்த நன்றி தேடிக்காணாதே) என்று தொடங்கி.

இவ்விதம் நம்மாழ்வாரை ஸர்வேச்வரன் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமாக இவரிடம் புண்ணியங்கள் ஏதும் இல்லை என்றாலும், “அவனை வெறுக்காமை, அவனிடம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருத்தல்” போன்ற தன்மைகள் இவரிடம் இருந்து, அதனால் அவன் இவரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

– அதாவது, “வாட்டாற்றாற் கெந்நன்றி செய்தேனா வென்னெஞ்சில் திகழ்வதுவே” என்று ஸர்வேச்வரன் தம்மை விஷயீகரிக்கைக்கு உடலாகத் தாம் செய்த ஸுக்ருதமேதேனுமுண்டோவென்று தேடிக் காணாதே, “என்னைத் தீமனம் கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று தீமனம் போகையாகிற அத்வேஷமும், மருவித் தொழும் மனமுண்டாகையாகிற ஆபிமுக்யமும், இரண்டும் அவனாலே உண்டாய்த்தென்று தாமே நிஷ்கர்ஷிக்கையாலே அத்வேஷாபிமுக்யங்களும் ஸத்கர்மமடியாக வந்ததன்றென்கை.

– (செய்த நன்றி தேடிக் காணாதே) - திருவாய்மொழி (10-6-8) - வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தன்னை ஏற்றுக் கொண்டதற்குக் காரணமாகத் தன்னிடம் நற்செயல்கள் ஏதும் உண்டோ என்று ஆராய்ந்தபடி இருந்து அவற்றைக் காணாத காரணத்தால், (கெடுத்தாய் என்ற அத்வேஷமும் தந்தாய் என்ற ஆபிமுக்யமும்) - திருவாய்மொழி (2-7-8) – என்னைத் தீமனம் கெடுத்தாய் - என்பதற்கு ஏற்ப தீயமனம் என்ற வெறுப்பு நிலையும், திருவாய்மொழி (2-7-7) - மருவித் தொழும் மனமே தந்தாய் - என்பதற்கு ஏற்ப அவனை அண்டி நின்று தொழும்படி உள்ள மனம் ஏற்படுவதான நிலையும், (ஸத்கர்மத்தால் அல்ல) - இந்த இரண்டு நிலைகளும் அவனால் ஏற்பட்டன என்று நம்மாழ்வாராகிய தானே உறுதியாக உரைப்பதால், அத்வேஷம் மற்றும் ஆபிமுக்யம் ஆகிய இரண்டும், நல்ல கர்மங்கள் காரணமாக வந்தது அல்ல என்றாகிறது.