Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 107)

இரண்டாம் ப்ரகரணம்

முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவையாழி யென்கிற ஸாக்ஷாத் க்ருத ஸ்வபர வ்ருத்தாந்தர்க்கு யாத்ருச்சிநாதிகளுண்டாகில் தோன்றும்.

இங்ஙன் சொல்லுவானென்? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதங்களன்றோவில்லை யென்றது; யாத்ருச்சிகாத்ய ஜ்ஞாத ஸுக்ருதங்களடியாக அங்கீகரித்தானானாலோ வென்ன வருளிச்செய்கிறார் (முந்நீரென்று தொடங்கி).

“நம்மாழ்வாரை இவ்விதம் ஸர்வேச்வரன் ஏற்பதற்கு, அவரிடம் அவராகவே அறிந்த செய்து வந்த புண்ணியங்கள் ஏதும் இல்லை. ஆனால் அவர் அறியாமல் செய்த நற்செயல்கள் காரணமாக அவன் ஏற்றான்”, என்று கூறலாம் அல்லவோ? இந்தக் கேள்விக்கு விடை அருச்செய்கிறார்.

– அதாவது “முந்நீர் ஞாலம் படைத்த வெம்முகில் வண்ணனே” என்று தொடங்கி, ஸர்வேச்வரன் “விசித்ரா தேஹ ஸம்பத்தி” இத்யாதிப்படியே ஸ்வசரண கமல ஸமாச்ரயணோபகரணமான கரண களேபரங்களை இவ்வாத்மாவுக்குண்டாக்கி உஜ்ஜீவிப்பிக்கையே ப்ரயோஜநமாக ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ண, நான் அவன் தந்த சரீரத்தைக் கொண்டு அவனை ஆச்ரயிக்கையன்றிக்கே, அதன் வழியேயொழுகி ஸம்ஸரித்துப் போந்தேனென்று ஸ்வவ்ருத்தாந்தத்தையும், – “வாழ்ந்தார்கள்” என்று தொடங்கி, முன்பு ஜீவித்தவர்கள் ஜீவித்த ப்ரகாரம் மஹாவர்ஷ ஜலபுத்புதம் போலே நசித்து நசித்து அத:பதித்தார்களென்னுமதொழிய, ஸ்ருஷ்டிகாலம் தொடங்கி இன்றளவும் வர ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட ஜீவித்தே போந்தார்களென்னு மிவ்வர்த்தந்தானில்லை யென்று ஐச்வர்யவான்களாய் முன்பு ஜீவித்துப் போந்தவர்கள் வ்ருத்தாந்தத்தையும், – “சூட்டு நன்மாலைகளை” என்று தொடங்கி, பரமபதவாஸிகள் ஸமாராத நோபகரணங்களை தரித்துக் கொண்டு ஸமாராதநம் பண்ணாநிற்கச் செய்தே அத்தை யுபேக்ஷித்துத் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விரும்பி வந்தவரித்தமை சொல்லுகையாலே பரமபதத்திலுள்ளார் வ்ருத்தாந்தத்தையும், – “கோவை வாயாள் பொருட்டு” என்று தொடங்கி, தேச கால விப்ரக்ருஷ்டங்களான ராமக்ருஷ்ணாத்யவதாரங்களில் விரோதி நிரஸநாபதாநங்களை தத்தத் தேசகாலங்களிற்போலே தர்சித்து, நீ இப்படி விரோதி நிரஸநம் பண்ணுகிற தசைகளிலே உதவி சிசிரோபசாரம் பண்ணப்பெற்றிலே னாகிலும், என்னுடைய ஹ்ருதயாதிகளே உனக்கு போகோபகரணமாம்படி என் பக்கலிலே வ்யாமுக்தனாவதே யென்கையாலும், “ஆழியெழ” என்று தொடங்கி, த்ரைவிக்ரமக்ரமணம், ஸமுத்ர மதநம், பூம்யுத்தரணம், ஜகந்நிகரணம், பாரத ஸமர நிர்வஹணம், ஹிரண்ய நிரஸநம், ராவணவதம், பாண கரச்சேதநம், ஜகத்ஸ்ருஷ்டி, கோவர்த்தநோத்தரண மாகிற பூர்வ சரிதங்களைப் பத்தும் பத்தாகப் பேசுகையாலும், ஈச்வர வ்ருத்தாந்தங்களையும் ஒரு உபாதியற ஒரு போகியாக ஸாக்ஷாத்கரித் தருளிச்செய்கிற விவர்க்கு – அஜ்ஞாதமான தொன்றில்லாமையாலே தம்மை ஈச்வரனங்கீகரிக்கைக்கடியான யாத்ருச்சிகாதி ஸுக்ருதங்க ளுண்டாகில் அல்லாதவற்றோபாதி ப்ரகாசிக்குமிறே யென்றபடி. இத்தால், ப்ரகாசித்ததாகில் அருளிச்செய்வர்; இப்படி யருளிச்செய்யக் காணாமையாலும், கேவல நிர்ஹேதுக ப்ரஸாத ப்ரகாசக வசநங்கள் பலவுமருளிச்செய்தமை காண்கையாலும், அவையும் இவர்க்கில்லை யென்றதாய்த்து.

(முந்நீர் என்கிற ஸ்வவ்ருத்தாந்தர்க்கு) - திருவாய்மொழி (3-2-1) – முந்நீர் ஞாலம் படைத்த வெம்முகில் வண்ணனே – என்ற பாசுரத்தில், விசித்ரா தேஹ ஸம்பத்தி -அவனை வணங்குவதற்காக விசித்ரமாக உள்ள இந்தச் சரீரம் அளிக்கப்பட்டது - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனாகிய தன்னுடைய தாமரை போன்ற திருவடிகளை அண்டுவதற்கு ஏற்ற உபாயமாக உள்ள இந்தச் சரீரத்தை இந்த ஜீவாத்மாவுக்கு உண்டாக்கி, இந்த ஆத்மாவானது மோக்ஷத்தினை அடையும்படிச் செய்வதையே பலனாகக் கொண்டுள்ள இந்த உலகத்தைப் படைத்தான்; ஆனால் நானோ அவன் தந்த சரீரத்தைக் கொண்டு அவனை அடையாமல், அதனைக் கொண்டு ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளேன் என்று [நம்மாழ்வாராகிய] தனது செயல்பாடுகளையும். – (வாழ்ந்தார் என்கிற பர வ்ருத்தாந்தர்க்கு) - திருவாய்மொழி (4-1-6) – வாழ்ந்தார்கள் - என்று தொடங்கி, முன்பு வாழ்ந்தவர்கள் அவ்விதம் வாழ்ந்த விதம் என்பது, மிகுதியான மழையில் எழுகின்ற சிறிய செடிகள் அல்லது பூச்சிகள் போன்று அழிந்து அழிந்து ஆழ்ந்தபடியே இருந்தார்கள் அல்லாமல், ஸ்ருஷ்டிகாலம் தொடங்கி இன்று முடிய வாழ்ந்தவர்கள் ஒரே போன்று வாழ்ந்தனர் என்னும் நிகழ்வு இல்லை என்பதை உணர்த்தும்விதத்தில், மிகுந்த செல்வம் கொண்டவர்களாக முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சரிதங்களையும், (சூட்டும்) - திருவிருத்தத்தில் (21) - சூட்டு நன்மாலைகளை - என்று தொடங்கி பரமபதத்தில் உள்ளவர்கலள் அவனை ஆராதனம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவனை ஆராதனம் செய்தபடி உள்ளபோது, அதனை விடுத்து திருவாய்ப்பாடியில் உள்ள வெண்ணெயை மிகவும் விரும்பி வந்து அவதரித்த செயலைக் கூறுவதால் பரமபதத்தில் உள்ளவர்களுடைய செயல்களையும். (கோவை) - திருவாய்மொழி (4-3-1) - கோவை வாயாள் பொருட்டு - என்ற பாசுரத்தில் இடம், காலம் போன்றவற்றால் வெவ்வேறாக உள்ளதான இராமன் மற்றும் க்ருஷ்ணன் ஆகிய அவதாரங்களில் பகைவர்களை அழித்தமை என்பதை அந்தந்த இடம் மற்றும் காலம் ஆகியவற்றில் உள்ளது போன்றே தரிசித்து, “நீ இவ்விதம் பகைவர்களை அழிக்கும்போது, அந்த இடம் மற்றும் காலம் ஆகியவற்றில் நான் இருந்து உனக்கு அந்தக் களைப்பு நீங்கும்படியாக ஏதும் உதவவில்லை; ஆனாலும் எனது நெஞ்சம் போன்றவை உனது இன்பத்துக்குப் பயன்படும்படியாக என்னிடம் நீ ப்ரேமை கொண்டவனாக உள்ளாயே”, என்பதாலும். (ஆழி) – திருவாய்மொழி (7-4-1) – ஆழி எழ - என்ற பாசுரத்தில் மூன்றடி அளத்தல், கடலைக் கடைதல், பூமியை மேலே உயர்த்தல், உலகத்தை உண்ணுதல், மஹாபாரத யுத்தத்தை நடத்துதல், ஹிரண்யனை அழித்தல், இராவணனை வதைத்தல், பாணாஸுரனுடைய தோள்களைத் துண்டித்தல், உலகத்தைப் படைத்தல், கோவர்த்தன மலையை எடுத்தல் போன்ற பலவிதமான நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பலமடங்கு உரைப்பதாலும், (என்கிற ஸாக்ஷாத்க்ருத பர வ்ருத்தாந்தர்க்கு) - ஸர்வேச்வரன் செய்த செயல்களை எந்தவிதமான தடையும் இன்றி ஒரு போகியாக மட்டுமே நின்று அருளிச்செய்கிற நம்மாழ்வாருக்கு. (யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும்) - அறியாத விஷயங்கள் என்று ஏதும் இல்லாததால், தம்மை ஸர்வேச்வரன் ஏற்றுக் கொண்டதற்கான காரணமாக “தற்செயலாக விளைந்த புண்ணியங்கள்” என்று தன்னிடம் ஏதும் இருந்தது என்றால், மற்ற விஷயங்கள் போன்று அதுவும் நம்மாழ்வாருக்கு விளங்கியிருக்கும். அவ்விதம் அவருக்கு விளங்கியிருந்தால் அதனை அவர் அருளிச்செய்திருப்பார்; ஆனால் இவ்விதம் அவர் அருளிச்செய்யவில்லை என்பதாலும், ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி அருள் புரிவான் என்பது போன்ற பல வரிகளை இவர் அருளிச்செய்துள்ளதாலும், அது போன்றுள்ள “தற்செயலான புண்ணியங்கள்” முதலான ஏதும் இவரிடம் இல்லை என்றாகிறது.