Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 106)
இரண்டாம் ப்ரகரணம்
பட்டத்துக்குறிய வானையு மரசும் செய்யுமவை ஆராயாது.
ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்குமளவில் எல்லாரையும் விஷயீகரிக்கலாயிருக்க, இங்ஙனே இவரொருவரை விஷயீகரிக்கைக்கு அடியென்னென்னு மபேக்ஷையிலே, நிரங்குச ஸ்வதந்த்ரனானவன் ஈச்வரத்வச் செருக்காலே செய்யுமவற்றுக்கு அடி ஆராயப்படாதென்னுமத்தை லௌகிக த்ருஷ்டாந்தத்தாலே தர்சிப்பிக்கிறார் (பட்டத்துக்குரியவானையும் அரசும் செய்யுமவை யாராயாது) என்று.
“ஆனாலும் காரணம் இன்றி ஸர்வேச்வரன் ஒருவரைத் தன்னிடம் ஏற்றுக்கொள்வான் என்றால், அனைவரையும் அது போன்று ஏற்கலாம் அல்லவோ? இப்படி உள்ளபோது நம்மாழ்வார் ஒருவரை மட்டும் இவ்விதம் ஏற்பதற்குக் காரணம் என்ன?”, என்று கேட்கலாம் இதற்கு விடையாக, “தடையற்ற சுதந்திரம் கொண்டவனாகிய ஸர்வேச்வரன் தன்னுடைய ஈச்வரத்தன்மை என்பதன் காரணமாகச் செய்யும் செயல்களுக்குக் காரணம் ஆராய இயலாது”, என்று கூற முடிவு செய்து, அதனை இந்த உலகில் காணப்படும் ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறார்.
– அதாவது, அராஜகமான தேசத்திலே பட்டத்துக்குரிய ஆனையைக் கண்ணைக் கட்டிவிட்டால் அவ்வானை யெடுத்தவ னொருவன் ராஜாவாமளவில் அல்லாதாரெல்லாம் கிடக்க, இவனை இப்படி இது எடுக்கைக்கடி யென்னென்றும், ராஜாவானவன் தன் செருக்காலே ஒருத்தியைத் தனக்கு மஹிஷியாகப் பரிக்ரஹிக்கு மளவில் இங்ஙனொத்த ஸ்த்ரீகள் பலருமுண்டாயிருக்க இவளை இப்படி இவன் பரிக்ரஹிக்கைக் கடியென்னென்றும் ஆராய்வாரில்லை யென்றபடி. இத்தால் சொல்லிற்றாயிற்று, “ஸ்வாதந்த்ர்ய மைச்வர மபர்யநு யோஜ்யமாஹு:” என்கிறபடியே பர்யநுயோஜ்யமல்லாத ஐச்வர ஸ்வாதந்த்ர்ய யுக்தனாய், “பவ மோக்ஷணயோஸ் த்வயைவ ஜந்து: க்ரியதே” என்கிறபடியே ஸ்வாதீந பந்தமோக்ஷனாய், வேண்டினபோது வேண்டின வஸ்துவை வேண்டினபடியாக்க வல்லனுமான ஸர்வேச்வரன், அஹேதுகமாயிருக்க ஆதர விஷயமாம்படி பட்டத்துக்குரிய வானையும் அரசும் செய்யுமவைபோலே ஸ்வாதீனமுமாய் ஸ்வார்த்தமுமான ஆத்மவஸ்துக்களிலே ஓரொன்றை ஈச்வரத்வச் செருக்கடியான ஸ்வேச்சையாலே ஸ்வவிநியோகார்ஹமாம்படி விஷயீகரித்தால், அல்லாத ஆத்மவஸ்துக்களெல்லாம் கிடக்க இவ்வஸ்துவை இவனிப்படி விஷயீகரிப்பானென்னென்று இதுக்கடி ஆராயப்படா தென்கை.
(பட்டத்துக்கு உரிய ஆனை செய்யுமது ஆராயாது) - அரசன் இல்லாத நாட்டில், பட்டத்துக்கு உரிய யானையுடைய கண்களைக் கட்டிவிட்டால், அந்த யானை யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவனே அரசன் என்று கூறுவர்; அப்போது, “மற்ற பலரும் உள்ளபோது இவனை மட்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?” என்று யாரும் ஆராய்வதில்லை. (அரசு செய்யும் அவை ஆராயாது) - அரசன் ஒருவன் தனது செருக்கிற்கு ஏற்றபடி ஒரு பெண்ணைத் தனது பட்டமஹிஷியாக ஏற்கும்போது, “இவளைப் போன்றே பல பெண்கள் உள்ளபோது இவளை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன்?” என்று யாரும் ஆராய்வதில்லை. ஆக இங்கு கூறப்பட்டது என்னவென்றால் ஸ்ரீவைகுண்டஸ்தவம் (55) – ஸ்வாதந்த்ர்ய மைச்வர மபர்யநு யோஜ்யமாஹு: - ஸர்வேச்வரனாக அவன் உள்ளதால் அவனுடைய சுதந்திரத்தன்மை என்பது “நீ ஏன் இவ்விதம் செய்தாய்” என்று யாராலும் கேட்பதற்குத் தகுந்தது அல்ல - என்பதற்கு ஏற்ப, எந்தவிதமன தடையும் இல்லாத ஈச்வரத் தன்மை என்னும் சுதந்திரம் கொண்டவனாகவும், ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-88) – பவ மோக்ஷணயோஸ் த்வயைவ ஜந்து: க்ரியதே - உன்னாலேயே ஒருவன் பந்த மோக்ஷத்திற்கு உட்படுத்தப்படுகிறான், ஆகவே நீயே காப்பாற்ற்றவேண்டும் - என்பதற்கு ஏற்ப, பந்தம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்தவனாகவும், விண்ணப்பிக்கும்போது விண்ணப்பித்தவனை அவ்விதமே ஆக்கவல்லவனும் ஆகிய ஸர்வேச்வரன், எந்தவிதமான காரணமும் இன்றி, அனைவருடைய விருப்பத்திற்கும் ஏற்கலாம்படியாக பட்டத்து யானையும் அரசனும் செய்யும் செயல்கள் போன்று, தனக்கு உரிமையாக உள்ளவையும் தனக்காகவே உள்ளவையும் ஆகிய ஆத்மாக்களில் ஏதோ ஒன்றை, தனது ஈச்வரத்தன்மை என்ற செருக்கு ஏற்படக் காரணமாக உள்ள தனது இச்சையால், தனது பயனுக்குத் தகுதியாகும்படிச் தேர்ந்தெடுக்கிறான். அப்போது “மற்ற பல ஆத்மாக்களும் உள்ளபோது இந்த ஆத்மாவை மட்டுமே இவன் இவ்விதம் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?” என்று அந்தக் காரணத்தை ஆராய இயலாது என்று கருத்து.