Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 105)
இரண்டாம் ப்ரகரணம்
கோஸல கோகுல சராசரம் செய்யும் குணமொன்றின்றியே அற்புதம் மென்னக் கண்டோம்.
– இப்படி இத்தலையிலொரு நன்மையற்றிருக்கச் செய்தே, ஈச்வர க்ருஷி பலிக்கக் கண்டவிடமுண்டோவென்ன வருளிச்செய்கிறார் மேல் (கோஸலேத்யாதி).
இவ்விதம் ஜீவாத்மாவிடம் எந்தவிதமான நன்மையும் (அல்லது முயற்சி) இல்லாமல் உள்ளபோதிலும், ஸர்வேச்வரனுடைய இத்தகைய செயல்பாடுகள் கைகூடுவதை எங்கேயாவது காண இயலுமா என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, “த்வாமாமநந்தி கவய: கருணாம்ருதாப்தே ஜ்ஞாந க்ரியா பஜநலப்யமலப்ய மந்யை:, ஏதேஷு கேந வரதோத்தர கோஸலஸ்தா: பூர்வம் ஸதூர்வம பஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்” என்கிறபடியே “அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்” என்று திருவயோத்யாதி கோஸல தேசவர்த்திகளான சராசரங்களெல்லாம் நிர்ஹேதுகமாக “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதா:, ராம பூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி”, “அபிவ்ருக்ஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குர கோரகா:, விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்சிதா:, உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸிச, பரிசுஷ்க பலாசாநி வநாந்யுபவநாநிச”, “அகால பலநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா:” இத்யாதிப்படியே, ஸ்வஸம்ச்லேஷ விச்லேஷைக ஸுக து:க்கங்க ளாகையாகிற நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி நடத்தினானென்றும், கோகுலத்திலுண்டான சராசரங்களெல்லாம், “அவனொருவன் குழலூதின போது மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும், மலர்கள் வீழும், வளர்கொம்புகள் தாழும், இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கியவை செய்யும் குணமே”, “மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய்வழி சோர, இரண்டுபாடும் துலுங்கா புடைபெயரா வெழுது சித்திரங்கள் போல நின்றனவே”, “பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப, கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே”, “கோவலர் சிறுமியரிளங் கொங்கை குதுகலிப்ப வுடலுளவிழ்ந்தெங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே” என்கிறபடியே சைதந்ய ப்ரஸரணமில்லாத வ்ருக்ஷங்களோடு, சைதந்யலேசமுள்ள திர்யக்குக்களோடு, சைதந்ய விசேஷார்ஹ மநுஷ்ய ஜாதீயரான சிறு பெண்களோடு வாசியற நிர்ஹேதுகமாக பகவத் ப்ராவண்ய பரவசங்களானமை கண்டு, “நங்கைமீர்க ளிதோரற்புதம் கேளீர்” என்று விசேஷஜ்ஞர் வித்தராய்ச் சொல்லும்படியாகக் கண்டோமென்கை. இத்தால் பகவந் நிர்ஹேதுக விஷயீகாரம் இப்படிப் பலிக்கக் காண்கையாலே, ஆழ்வாருடைய பக்தியும் பகவந் நிர்ஹேதுக க்ருஷி பலமென்னத் தட்டில்லை யென்றதாய்த்து.
(கோஸல சராசரம் ஒன்று இன்றியே) - ஸ்ரீவரதராஜஸ்தவம் (69) – த்வாமாமநந்தி கவய: கருணாம்ருதாப்தே ஜ்ஞாந க்ரியா பஜநலப்யமலப்ய மந்யை:, ஏதேஷு கேந வரதோத்தர கோஸலஸ்தா: பூர்வம் ஸதூர்வம பஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம் - கருணைக்கடலே! நீ ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் ஆகியவற்றால் மட்டுமே அடைய இயன்றவனாகவும், மற்ற உபாயங்களால் அடைய இயலாதவனாகவும் உள்ளாய் என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வரதனே! உத்தரகோசலத்தில் இருந்த உயிர்கள் அனைத்தும், அங்கிருந்த புற்கள் உட்பட, எந்த உபாயத்தால் உன்னை அடைந்தன – என்பதற்கு ஏற்பவும், திருவாய்மொழி (7-5-1) – அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன் - என்பதற்கு ஏற்பவும், அயோத்தி முதலான கோசல நாட்டில் வசிக்கின்ற அசையும் பொருள்கள் மற்றும் அசையாப் பொருள்கள் ஆகிய அனைத்தும் எந்த ஒரு காரணமும் இன்றி. (அற்புதம் என்னக் கண்டோம்) - இராமாயணம் யுத்தகாண்டம் (131-96) - ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதா:, ராம பூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி - இராமன் இந்தப் பூமியை ஆளும்போது, அனைத்து மக்களுக்கும் “ராமா ராமா” என்பதாகவே சொற்கள் வெளிவந்தன; ஆகவே இந்த உலகம் முழுவதும் இராம ராஜ்யமாகவே ஆனது – என்றும், இராமாயணம் அயோத்யாகாண்டம் (59-4,5) – அபிவ்ருக்ஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குர கோரகா:, விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்சிதா:, உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸிச, பரிசுஷ்க பலாசாநி வநாந்யுபவநாநிச - இராமனைப் பிரிந்து துக்கத்தால் மலர்கள், அரும்புகள், மொட்டு போன்ற அனைத்தும் வாடி, கருகி, உதிர்ந்தன; இராமனைப் பிரிந்து காரணத்தால் அங்கிருந்த ஆறுகள் கொதித்ததால் அந்த நீரை யாரும் அண்ட இயலாமல் காணப்பட்டன; சிறிய குட்டைகள் மற்றும் பெரிய குளங்களும் அது போன்றே ஆயின; காடுகளும் தோட்டங்களும் ஒரே போன்று காய்ந்த இலைகளுடன் கூடியவையாக ஆயின - என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (127-17) – அகால பலநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா: - காலம் அல்லாதபோதிலும் அனைத்து மரங்களும் பழங்கள் கொண்டவையாகவும், பெருகி ஓடிய தேன் நிறைந்தவையாகவும் ஆயின - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தன்னுடைய பிரிவு மற்றும் சேர்க்கையால் முறையே துக்கம் மற்றும் சுகம் என்பதான நல்ல தன்மை கொண்டவையாக மாற்றியதைக் கண்டோம். (கோகுல சராசரம் செய்யும் குணம்) - கோகுலத்தில் இருந்த அனைத்து பொருள்களும், பெரியாழ்வார் திருமொழி (3-6-10) – அவனொருவன் குழலூதின போது மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும், மலர்கள் வீழும், வளர்கொம்புகள் தாழும், இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கியவை செய்யும் குணமே – என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-6-9) - மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய்வழி சோர, இரண்டுபாடும் துலுங்கா புடைபெயரா வெழுது சித்திரங்கள் போல நின்றனவே – என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-6-8) – பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப, கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே - என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-6-1) – கோவலர் சிறுமியரிளங் கொங்கை குதுகலிப்ப வுடலுளவிழ்ந்தெங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அறிவு என்பது வெளிப்படாத மரங்கள், சிறிதளவு அறிவுள்ள விலங்குகள், சிறந்த அறிவு கொண்ட மனிதப் பிறவிகளான ஆயர்குலப் பெண்கள் என்றுள்ள பலவும் எந்தவிதமான வேற்றுமையும் இன்றி, எந்தவிதமான காரணமும் இல்லாமல், க்ருஷ்ணனிடம் ஏற்பட்ட ப்ரேமையால் ப்ரவசப்பட்டதைக் கண்டு, (அற்புதம் என்னக் கண்டோம்) - பெரியாழ்வார் திருமொழி (3-6-1) - நங்கைமீர்க ளிதோரற்புதம் கேளீர் - என்பதற்கு ஏற்ப, ஈடுபட்டு நிற்பதைச் சான்றோர்கள் கூறக்கண்டோம். எனவே எந்தவிதமான காரணமும் இன்றி பகவான் ஏற்பது என்பதை இவ்விதம் உள்ள செயல்பாடுகளால் காண்கிறோம் என்பதால், நம்மாழ்வாருடைய பக்தியும், பகவான் எந்தவிதமான காரணமும் இன்றி முயற்சி செய்ததன் பலனே ஆகும் என்று கூறுவதில் எந்தவிதமான தோஷம் இல்லை.