Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 104)
இரண்டாம் ப்ரகரணம்
பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெரும்செய் கலியாரேவ ஆளும் வன்குறும்பர் குடியேறிப் பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்குக் காவல் செய்து குமைத்துத் திரித்து வீழ்த்தி வலித்தெற்றி அருவி யறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதியானவாறே தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி ஒள்வாளுருவி வினைத்தூற்றை வேரறுவித்துத் தீக்கொளீஇக் கவ்வை யெருவிட்டு அமுதவாறுதலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல் வித்தி எழு நாற்றுக்களையையும் வேர் முதல் மாய்த்துப் பட்டிச்சேவதக்கி மீது கொள்ளாமல் குறிக்கொள்வித்துக் கடல் புரைய விளைந்து தலைவணக்கினவாறே நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்துப் போர்த்த தோல் விடுத்து ஸூக்ஷ்ம வொட்டும் நீரிலே கழுவி வேறோர் கலத்திட்டுப் பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்குண ரஸாந்நமாக்கி வானோர்க்கு ஆராவமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தியுழவன் க்ருஷீ பலமிறே.
ஆனால் இவர்க்கு இந்த பக்தியுண்டாகைக்கு ஹேதுவென்? என்னு மாகாங்க்ஷையிலே பல போக்தாவன ஈச்வரன் க்ருஷி பலமென்னுமத்தை க்ஷேத்ரமும் கர்ஷகனும் க்ருஷியும் தத்பலமுமாக ரூபித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் (பெரும்பாழி லித்யாதி சூர்ணையாலே).
– இத்தகைய பக்தியானது நம்மாழ்வருக்கு உண்டாகக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். இதற்கான காரணம், இவருடைய பக்தியின் பலனை அனுபவிப்பவனாக உள்ள ஸர்வேச்வரன் செய்த முயற்சியின் பலனே ஆகும் என்று விடை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஆகவே, அதற்கு ஏற்றபடி விளைநிலம், உழவன், பயிர், பலன் என்று கூறி விளக்குகிறார்.
(பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெரும்செய்) “முடிவில் பெரும்பாழ்” என்று நித்யமாய் அபரிச்சேத்யமாய் சேதனர்க்கு போகமோக்ஷங்களை விளைத்துக்கொள்ளலாம் நிலமான ப்ரக்ருதி தத்த்வத்தில் க்ஷேத்ரஜ்ஞனாகிற பத்தசேதநனுடைய “நெஞ்சப் பெரும்செய்” என்று பக்திக்கு விளைநிலமான மனஸ்ஸானது, (பாழ்த்த விதியானவாறே) என்றத்தோடு இதுக்கு ஸம்பந்தம். பாழ்படுகைக்கு அடி சொல்லுகிறது நடுவுள்ள தடங்கலும். (கலியாரேவ ஆளும் வன்குறும்பர் குடியேறி) “ஏவினார் கலியார் நலிகவென்று என் மேல்” என்கிறபடியே கலியுகமாகிற வன்னியன் “இவனை நலியுங்கோள்” என்று ஏவ, “மனமாளுமோரைவர் வன்குறும்பர்” என்கிறபடியே சேதந சேஷமான மனஸ்ஸை தங்களுக்கு சேஷமாக்கிக் கொண்டு நடத்துமவர்களாய், முன்கை மிடுக்கராய், அத்விதீயரா யிருந்துள்ள இந்த்ரியங்களாகிற குறும்பர். “கோவாயைவரென் மெய்குடியேறி” என்கிறபடியே இச்சேதநனுக்கு நியாமகராய்க் கொண்டு தேஹத்திலே குடி புகுந்து. (கலியாரேவ) என்றது, இத்ரியங்களினுடைய நலிவுக்குக் கலிகாலம் ப்ரவர்த்தக மாகையாலே. “கலியார்” என்றும், “ஐவர்” என்றும் சேதந ஸமாதியாலே சொல்லுகிறது தனக்கென்ன ஆக்ரஹமுடையாரைப்போலே நலிகிற கொடுமையைப் பற்ற. கலியாரென்று ரேபாந்தமாக ஆழ்வாரருளிச்செய்தது கலிகாலத்துக்கு அஞ்சின படியாலேயிறே. (பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கி) முன்னின்று முறைபோக்கும் பெருங்குடிபோலே தங்களுக்கு ப்ரதாநமான மனஸ்ஸையும் “ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை” என்கிறபடியே தங்கள் நினைத்த வழியே ஒழுகும்படியாகப் பண்ணி. (படிந்துண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்குக் காவல் செய்து) “புலன் படிந்துண்ணும் போகம்” என்று விஷயங்களிலே அவகாஹித்து புஜிக்கிற போகத்திலே “தூராக்குழி” என்கிறபடியே ஒருகாலும் பூர்ணமாகாதே “பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான்” என்கிறபடியே இவற்றால் வந்த நலிவை ஆற்றியிருப்போமென்றால் ஆற்றவொண்ணாதபடியான விஷய போகங்களை புஜிக்கவேணுமென்று “கடியார் காளையரைவர் புகுந்து காவல் செய்த” என்கிறபடியே க்ரூரராய் நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடையராய்க் கொண்டு இவனைச் சிறை செய்து. (குமைத்துத் திரித்தி வீழ்த்தி வலித்தெற்றி யருவி யறுத்துக் கடனாயின விறுப்பிக்க) “கூறைசோறிவை தாவென்று குமைத்துப் போகார்”, “செக்கிலிட்டுத் திரிக்கு மைவர்”, “கொடு வன்குழியினில் வீழ்க்கு மைவர்”, “ஐவர் திசைதிசை வலித்தெற்றுகின்றனர்”, “ஐவர் அருவித் தின்றிட” என்கிறபடியே தனக்கபீஷ்டமான வற்றைத் தாவென்று துகைத்திழுத்து, சரீரமாகிற செக்கிலேயிட்டுச் சுழற்றி க்ரூரமாய் கரையேற வொண்ணாதபடியாயிருக்கும் விஷயங்களாகிற படுகுழியிலே தள்ளி, அவைதான் அனேகங்களாகையாலே ஸ்வஸ்வவிஷயங்களிலே கொடுபோகைக்காக நாலு திக்கிலுமிழுத்து நலிந்து அருவித் தின்னுமா போலவும், அறுத்துத் தின்னுமாபோலவும், “என் விஷயத்தைக் காட்டு, என் விஷயத்தைக் காட்டு” என்று நெருக்கி, இப்படி பஹுவிதமாகத் தண்டித்து, “பொருளின்பமென விரண்டு மிறுத்தேன் ஐம்புலன்கட் கடனாயின” என்று ச்ரோத்ராதிகளுக்கு ப்ராப்தமாயிருக்கிற அர்த்தகாமங்களென்று சொல்லப்படுகிற விரண்டையும் கடமையிறுப்பாரைப்போல அவற்றாலே பரிபூதனாய்க் கொடுத்துப் போந்தேனென்னும்படி தங்களுக்கு ப்ராப்த கரங்களை யிறுப்பித்துக் கொள்ள. (பாழ்த்த விதியானவாறே) இப்படியாகையாலே “வாழ்த்தியவனடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்து இருகை கூப்பென்றால் கூப்பாத பாழ்த்த விதி” என்கிறபடியே வகுத்த சேஷியானவனை வாழ்த்தி ஆராதித்து வணங்கிக் கும்பிடுகைகளாகிற இவற்றிலொன்றிலும் அந்வயியாமையாலே ததங்கீகாரப் பற்றாசான ஸுக்ருத கந்தமற்று மனஸ்ஸு பாழ்பட்டவாறே. (தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி) “தன்பால் மனம் வைக்கத் திருத்தி” என்கிறபடியே இந்த்ரிய வச்யதையாலே இப்படிப் பாழ்பட்ட மனஸ்ஸைப் பயிர்படும்படி தன்பக்கலிலே வைக்கப் பண்ணுகைக்காக, “எனதேழை நெஞ்சாளும் திருந்தாதவோ ரைவரைத் தேய்ந்தற மன்னி இருந்தான்” என்கிறபடியே கண்டதெல்லாத்திலும் சபலமாயிருக்கிற மனஸ்ஸை அதுவே பற்றாசாகப் பொதியெடுத்து ஆளாநிற்பாராய், எத்தனையேனும் பலவான்கள் திருத்தப் புக்காலும் திருந்தாதே இனி இப்படி ஓரைவரில்லை யென்னும்படியிருக்கிற இந்த்ரியங்களாகிற ஐவர் க்ஷயித்து முடிந்துபோம்படி ஆஸந பலத்தாலே குறும்பரை அழிக்கும் ராஜாக்களைப் போலே ஸ்தாவர ப்ரதிஷ்டை யாயிருந்து. (ஒள்வாளுருவி வினைத்தூற்றை வேரறுவித்து) “நீ பணித்தவருளென்னு மொள்வாளுருவி” என்கிறபடியே “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று என்னுடைய ப்ரஸாதத்தையே உனக்கு உஜ்ஜீவந ஹேதுவாக அத்யவஸி யென்ன, “ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ” என்னும்படி ஸகல ஸந்தேஹங்களையும் துணித்துப் பொகடவற்றாய் “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று அருளிச்செய்தபடியே ஸர்வ பாபங்களையும் சேதிக்கைக்கு ஸமர்த்தமுமான ஒண்மையையுடைய க்ருபையாகிற வாளை அப்ரதிஹதமாக்கி. பக்தியாகிற பயிருக்கு விளைநிலமாகக் கல்பிதமாயிருந்துள்ள மனஸ்ஸு பாழே கிடந்து போம்படி “கொடு வினைத்தூறு” என்கிறபடியே இவனா லடிகாணவும் அறுக்கவு மொண்ணாதபடி மூடின பாபமாகிற தூற்றை “வினைகளை வேரற” என்றும், “வல்வினைத் தொடர்களை முதலரிந்து” என்றும் சொல்லுகிறபடியே மறுகிளை யுண்டாகாதபடி வாஸநா ருசிகளாகிற ஊசி வேரோடும் பக்க வேரோடும் அறுப்பித்து. வினைத்தூற்றை வேரறுத்தென்னாதே, “வேரறுவித்து” என்கையாலே ணிஜர்த்தமும் தோற்றுகிறது; வினையறுக்கையில் ப்ரயோஜக கர்த்ருத்வம் ஈச்வரனுக்கும், ஸாக்ஷாத் கர்த்ருத்வம் க்ருபைக்கு மாகலாமிறே. (தீக்கொளீஇ) வெட்டின காட்டைச் சுட்டுப் பொகடுமாபோலே “மோக்ஷ யிஷ்யாமி” என்கிற க்ருபா ப்ரயுக்த ஸங்கல்பத்தால் முந்துற அடியறுத்தவற்றை “இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்” என்று இவ்வாத்மாவை முடிக்கிற கர்மஸந்தாநம் நெருப்புக் கொளுந்தி வேகாநின்ற தென்னும்படி “யதேஷிக தூலமக்நௌ ப்ரோதம் ப்தூயேத; ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே” என்கிறபடியே உருமாய்ந்து போம்படி தக்தமாக்கி. (கவ்வையெருவிட்டு) “ஊரவர் கவ்வை எருவிட்டு” என்கிறபடியே பகவதாபிமுக்க்யம் பிறந்தவளவிலே இவன் பாகவதனானானென்று ஸம்ஸாரிகள் சொல்லும் பழிமொழியை பக்தியாகிற பயிருக்கு வர்த்தகமான எருவாக விட்டு; (அமுதவாறு தலைப்பற்றி) “அறிவையென்னு மமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டது” என்கிறபடியே ஜ்ஞாநமாகிற அம்ருத நதியை வாயளவாய்த் தலைக்கு மேலே போம்படி பெருகப் பண்ணி. (ஈரியாய்க் கசிந்ததிலே) “கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள்”, “கசிந்த நெஞ்சினளாய்” என்று சொல்லுகிறபடியே அந்த ஜ்ஞாநவாரியாலே நல்லது கண்டால் அவனுக்கென்னு மநுஸந்தாநத்தாலே ஆர்த்ரதை விளையும்படி நெஞ்சு பதம் செய்து செவ்விவாய்த்தவாறே அந்நெஞ்சிலே. (ஈரநெல்வித்தி) ஸங்கமாகிற நெல்லை விரைத்து. (எழுநாற்றுக் களையையும் வேர்முதல் மாய்த்து) “செய்த்தலை யெழுநாற்று” என்கிறபடியே தத்ப்ரத்யாஸந்நமாய் ததேக பரதந்த்ரமாய் ததேக போக்யமாய் வளருகிற இப்பயிரில் கர்த்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மமகாரங்களாகிற களையையும், “நீர்நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து” என்கிறபடியே ஊசிவேரோடே பறித்து பொகட்டு. (பட்டி சேவதக்கி) களை பறித்தாலும் போராதே, பட்டி புகாமல் நோக்கினாலிறே பயிர் தலைப்பெற்றுச் செல்லுவது. ஆகையாலே “வன்புலச்சேவை அதக்கி” என்கிறபடியே விஷயாந்தரங்களில் ப்ரவணமாய் பகவத்பக்தியைத் தலை யழிக்கையாலே பக்தியாகிற இப்பயிருக்குப் பட்டியான இந்த்ரியங்களாகிற சேக்களினுடைய ஸ்வைர ஸஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி. (மீது கொள்ளாமல் குறிக்கொள்வித்து) பயிர் பலபர்யந்தமானாலும் பலிதாம் சத்தை ராத்ரி சரரபஹரிக்க யோக்யதையுண்டாகையாலே ரக்ஷை பண்ணி வைக்க வேணுமாய்த்து; அப்படியே “விளைந்த தானியமு மிராக்கதர் மீது கொள்ளகிலார்கள்” என்கிறபடியே அநந்யார்ஹமாம்படி “அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” என்று ராக்ஷஸப்ரக்ருதிகளும் ஆஸுரப்ரக்ருதிகளுமாகச் சொல்லலாம்படியான அபாகவத ஜனங்கள் “எங்களுக்கு இவன் ஸ்நேஹி” என்றிருக்கு மவ்வழியாலே இத்தை அபஹரிக்கைக்கு அவகாசமற பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சுக்கு, “பள்ளியறை குறிக்கொள்மின்” என்கிறபடியே காவலடைத்து, (கடல் புரைய விளைந்து தலைவணக்கினவாறே) “காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி” என்கிறபடியே எருவும் நீருமுண்டானாலும் மேல் வர்ஷமில்லாதபோது பயிர்த் தலைகுளிர்ந்து வளராதென்று காளமேக நிபச்யாமமான வடிவழகை வர்ஷித்து வளர்க்கையாலே, அந்த பக்தியாகிற பயிர் கடல்போலே அபரிச்சேத்யமாம்படி பலித்து “வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள் சாய்த்துத் தலைவணக்கும்” என்கிறபடியே பலித்த பயிரானது பரிபக்வமாய்த் தலைவணக்குமாபோலே பலிதமான அதனுடைய பரிபாக நிபந்தநமான ஆர்த்தியாலே வரும் பாரவச்யம் பிறந்தவாறே, (நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு ஆராமையுண்டு) பக்தி பரிணாமம் சொன்னவித்தால் பலித்தது - ததாச்ரயமான ஆத்மவஸ்து பகவத் போக்யமாம்படி திருந்தினமையிறே. ஆகையாலே “நாளுநாள் வந்தென்னை மற்றவும் தானுண்டான்”, “கோட்குறைபட்ட தென்னாயிருர்”, “நின்றாரறியாவண்ணம் என்னெஞ்சு முயிருமைவ யுண்டு” என்கிறபடியே ஒருநாள் புஜித்து விடுகையன்றிக்கே, நாள்தோறும் வந்து புஜியா நிற்கச் செய்தே, பின்னையும் பர்யாப்தனன்றிக்கே படுகிற அலமாப்புக்கண்டு இத்தலையிலே சிறிது தொங்கிற்றுண்டென்று திருவனந்தாழ்வான் முதலானாரு மறியமாட்டாதபடி, பெரும் பசியரானவர்கள் விளைந்த நெல்லைச் சேரவறுத்துக் கொண்டு போய் புஜிக்கப் பற்றாமே முற்றின வளவுகளைக் குந்தங்கொண்டு புஜிக்குமாபோலே, முக்தனானவாறே பின்னைச் சேர புஜிக்கப் பற்றாத தன் அபிநிவேசத்தாலே இச்சரீரத்தோடே யிருக்கச்செய்தே விளைந்த பரிபாகாநுகுணமாக “மனக்காராமை மன்னியுண்டிட்டாய்” என்கிறபடியே மனஸ்ஸுக்கு ஒருகாலும் த்ருப்தி பிறவாதே மேன்மேலும் விரும்பி புஜித்து. (காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்து) “காலக்கழிவு செய்யேல்” என்றும், “மண்ணும் வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோலே” என்றும் சொல்லுகிறபடியே பரிபக்வமான விவ்வஸ்து காலக்ஷேபத்தாலே தரைப்பட்டு மங்கிப் போகாமல் “வினை பற்றறுக்கும்” என்கிறபடியே ப்ராப்தி விரோதியான கர்மங்களை யறுத்து. (தண்டாலடித்துப் பதறறுத்து) அறுத்த நெற்கதிரைத் தடியாலே யடித்துப் பதரும் மணியும் பிரிக்குமாபோலே “அருளென்னும் தண்டாலடித்து” என்கிறபடியே தன்னுடைய க்ருபையாகிற த்ருடதர ஸாதநத்தாலே நெல்லோடொக்க விளைந்திருப்பதாய் அஸாரமான பதர் போலே யிருக்கிற ஆத்மாநுபவத்தில் ருசியையறுத்து; (போர்த்த தோல் விடுத்து) அந்நெல்லில் உமியை விடுவிக்குமாபோலே “போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து” என்கிறபடியே ஆத்மாவைப் பொதிந்துகொண்டு கிடப்பதாய் ஆதிவ்யாதிகளுக்கும் ஷட்பாவ விகாரங்களுக்கும் அடியான ஸ்தூல தேஹத்தினுடைய விமோசநத்தைப் பண்ணி, (ஸூக்ஷ்மவொட்டும் நீரிலே கழுவி) அநந்தரம் தண்டுலத்தைத் தவிடறக் கழுவுமாபோலே ஸ்தூல தேஹம் போனாலும், தான் போகக்கடவதன்றிக்கே ஸம்ஸரண ஹேதுவாய்க் கொண்டு போந்ததாய், பகவதநுபவ விரோதியுமா யிருக்கச் செய்தே, விரஜா பர்யந்தமாந ஸாதநமாய்க் கிடந்த ஸூக்ஷ்ம சரீரத்தையும் “தத்தோய ஸ்பர்ச மாத்ரேண” என்கிறபடியே விரஜா ஜலஸ்பர்சத்தாலே வாஸநா ரேணுக்களோடே போக்கி. “கர்ம ஸம்பந்தமறுக்கையாலே ஸூக்ஷ்ம சரீரமிருக்கைக்கு ஹேதுவில்லாமையால் இங்கே கழித்து விடலாயிருக்கச்செய்தே விரஜா பர்யந்தம் இவனுக்கு கமந ஸாதநமாக ஈச்வரன் தன்னிச்சையாலே வைத்து, விரஜையிலே உள்புக்கவாறே கழித்துவிடும்” என்றிறே நம்மாசார்யர்க ளருளிச்செய்வது. ஸூக்ஷ்ம ப்ரக்ருதி ஸம்பந்தம் கிடக்குமளவும் வாஸநா ரேணுவும் கிடக்கையாலே அதுவும் அப்போதாய்த்து நிவ்ருத்தமாவது”; “விரஜையைச் சென்று கிட்டி வன்சேற்றள்ளலையும் வாஸநா ரேணுவையும் கழுவி” என்றாரிறே. (வேறோர் கலத்திட்டு) “சீரார் தயிர் கடைந்த வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு” என்கிறபடியே ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபையான ப்ரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ்வாத்ம வஸ்துவை அமாநவ கர ஸ்பர்சத்தாலே அப்ராக்ருத தேஹத்திலே ப்ரவேசிப்பித்து. (பைந்தொடி மடந்தையரைக் கொண்டு க்ஷட்குண ரஸாந்நமாக்கி) “அணைவர் போயமருலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய்மரு தோளிணை” என்கிறபடியே, “தம் பஞ்சசதாந் யப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா:” இத்யாதி ப்ரகாரேண வந்தெதிர் கொண்டு, “தம் ப்ரஹ்மா லங்காரேணா லங்குர்வந்தி” என்று தங்கள் கையாலே இவ்வாத்ம வஸ்துவுக்கு ப்ரஹ்மாலங்காரத்தைப் பண்ணி ஸத்கரிக்கும் திவ்யாப்ஸரஸ்ஸுக்களைக் கொண்டு தன்னுடைய போகத்துக்கர்ஹமாம்படி அலங்கரிப்பியா நின்று கொண்டு, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே” என்கிறபடியே ஸ்வரூபாவிர்ப்பாவம் பிறந்து, முன்பு திரோஹிதமாய்க் கிடந்த ஆத்மகுணங்களெல்லாம் ப்ரகாசிக்கப் பெற்றிருக்கிற இவ்வஸ்துவை, ஜ்ஞாநாதி ஷட்குணங்களாகிற ஷட் ரஸ யுக்தமாய், “அஹமந்நம்” என்கிற அந்நமாம்படி அவர்கள் கரஸ்பர்சத்தாலே பக்வமாக்கி. சேஷவஸ்துகதமான ஜ்ஞாந சக்த்யாதி ஷட்குணங்களும், சேஷி விநியோகத்துக்கு உறுப்பாகையாலே இக்குணங்களோடே கூடி “அஹமந்நம்” என்றிருக்கு மிவ்வஸ்து அவனுக்கு அறுசுவை யடிசிலாயிறே யிருப்பது. (வானோர்க்காராவமுதானவாறே) “வானோர்க்காராவமுதே” என்கிறபடியே, “வைகுந்தன் தமரெமரெமதிடம் புகுது” என்பது, “விதிவகை புகுந்தனர்” என்பதாய், “பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்” இத்யாதிப்படியே ஆதரிக்கும் நித்யஸூரிகளுக்குப் பரமபோக்யமாம்படி யானவாறே. (முற்றுமுண்ண முன்னம் பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” என்கிறபடியே இவ்வாத்ம வஸ்துவை முழுக்க புஜிப்பதாக “என்னில் முன்னம் பாரித்து” என்கிறபடியே இவ்வாத்மாவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே பிடித்தும் பாரித்து. (உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தியுழவன் க்ருஷி பலமிறே) “உழுவதோர் படையும்”, “ஒற்றைக்குழையும் நாஞ்சிலும்” என்கிறபடியே இவன் கர்ஷகனென்று தோற்றும்படி க்ருஷி ஸாதநத்தைக் கையிலே கொண்டு “அரிய தெளிதாகுமாற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப் பெற்றால்” என்கிறபடியே அரிதான தன் திருவடிகளில் ப்ராப்தியு மெளிதாம்படி இவ்வாத்மோஜ்ஜீவநத்துக்கு மிகவும் யத்நியா நிற்கும் ஸ்வபாவனாய், “பக்தியுழவன்” என்கிறபடியே இவ்வாத்மாவுக்கு ஸ்வவிஷய பக்தியை விளைக்கைக்கு க்ருஷி பண்ணித் திரியும் ஸர்வேச்வரனுடைய க்ருஷி பலமிறே இவ்வாழ்வாருக்குண்டான இந்த பக்தியென்றபடி. இத்தால் இவருடைய பக்த்யுத்பத்தி காரணம் பகவத்க்ருஷி யென்றதாய்த்து.
(பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெரும்செய்) - திருவாய்மொழி (10-10-10) - முடிவில் பெரும்பாழ் – என்பதற்கு ஏற்ப எப்போதும் உள்ளதாகவும், அளவிடுவதற்கு அரியதாகவும், அனைத்து சேதநர்களுக்கும் இன்பம் மற்றும் மோக்ஷத்தை ஏற்படுத்தல்லதாகவும் உள்ள இடமான ப்ரக்ருதியில், அறிபவனான ஆத்மாவாகவும், பந்தப்பட்டும் உள்ள சேதநனுடைய, திருவாய்மொழி (5-3-4) – நெஞ்சப் பெரும்செய் - என்று கூறப்படும் பக்திக்கு விளைநிலமாக உள்ள மனமானது, (கலியாரேவ) - பெரியதிருமொழி (1-6-8) – ஏவினார் கலியார் நலிகவென்று என் மேல் - என்பதற்கு ஏற்ப கலியுகம் என்ற பகைவன், “இந்த மனதைக் கலங்குங்கள்” என்று ஏவி விட, (ஆளும் வன்குறும்பர்) – பெரியதிருவந்தாதி (51) - மனமாளுமோரைவர் வன்குறும்பர் – என்பதற்கு ஏற்ப ஆத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளதான மனத்தினை, தங்களுக்கு உடைமை என்று எடுத்தபடி, அதனை வழிநடத்துபவர்களாகவும், ஒப்பற்றவர்களாகவும் உள்ள இந்த்ரியங்கள் என்னும் குறும்பர். (குடி ஏறி) – பெரியதிருமொழி (7-7-9) – கோவாயைவரென் மெய்குடியேறி – என்பதற்கு ஏற்ப இந்தச் சேததனை நியமிப்பவர்கள் போன்று அவனுடைய சரீரத்தில் புகுந்து. இந்த்ரியங்கள் மனத்தினைக் கலக்குவதற்குக் காரணம் கலிகாலம் என்பதால் ஆகும் என்பதை விளக்கவே “கலியார் ஏவ” என்றார். “கலியார், ஐவர்” என்று இவற்றை ஏன் உயர்திணையில் கூறினார்? தனக்கு என்று பகைமை பூண்டது போன்று வந்து செய்கின்ற கொடுமையை எண்ணி “கலியார்” என்றார். இதே கருத்தினை “ஐவர்” என்று இந்த்ரியங்களைக் கூறியதற்கும் கொள்ள வேண்டும். “கலியார்” என்று ஆழ்வார் அருளிச்செய்தது, கலிகாலத்துக்கு அஞ்சிய காரணத்தால் ஆகும். (பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கி) - முன்னின்று முறைபோக்கும் பெருங்குடி போன்று, தங்களைக் காட்டிலும் முதன்மையாக உள்ள மனத்தினைக் கூட, பெரியதிருமொழி (1-1-8) – ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை – என்பதற்கு ஏற்ப இந்த்ரியங்களாகிற தாங்கள் எண்ணிய வழியில் செல்லும்படியாகச் செய்து. (படிந்து உண்ணும் போகத்தே) – பெரியதிருமொழி (1-6-2) - புலன் படிந்துண்ணும் போகம் – என்பதற்கு ஏற்ப உலகவிஷயயங்கள் என்பவற்றில் மூழ்கி அனுபவிப்பதான இன்பத்தில், (தூராதே) - திருவாய்மொழி (5-8-6) – தூராக்குழி - என்பதற்கு ஏற்ப எப்போதும் த்ருப்தி அடையாமல். (பொறுக்கொணாப் போகத்துக்கு) - பெரியதிருமொழி (7-7-7) – பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் - என்பதற்கு ஏற்ப இந்த விஷயங்கள் மற்றும் இந்த்ரியங்களால் ஏற்பட்டபடி உள்ள துன்பங்களைப் பொறுத்துக்கொள்வோம் என்றால் கூட, பொறுக்க இயலாதபடி “விஷயங்களை அனுபவிக்கவேண்டும்” என்று எண்ண வைத்து, (காவல் செய்து) – பெரியதிருமொழி (7-7-8) – கடியார் காளையரைவர் புகுந்து காவல் செய்த - என்பதற்கு ஏற்ப மிகவும் கொடியவராகவும், துன்புறுத்தத் துன்புறுத்தச் சிறிதும் இரக்கம் கொள்ளாமல் உள்ள பருவம் கொண்டவராகவும் இருக்கின்ற இந்த்ரியங்கள் இவனைச் சிறைப் பிடித்து. (குமைத்து) – பெரியதிருமொழி (7-7-9) - கூறைசோறிவை தாவென்று குமைத்துப் போகார் – என்பதற்கு ஏற்ப தங்களுக்கு விருப்பமானவற்றைக் கொடு என்று துகைத்து இழுத்து. (திரித்து) – திருவாய்மொழி (7-1-5) – செக்கிலிட்டுத் திரிக்கு மைவர் - என்பதற்கு ஏற்ப சரீரம் என்ற செக்கில் இட்டுச் சுழற்றி. (வீழ்த்தி) - திருவாய்மொழி (7-1-9) - கொடு வன்குழியினில் வீழ்க்கு மைவர் - என்பதற்கு ஏற்ப மிகவும் கொடூரமாகவும், கரை ஏற முடியாதபடியும் உள்ளதான உலகவிஷயங்கள் என்ற படுகுழியில் தள்ள. (வலித்து ஏற்றி) – திருவாய்மொழி (7-1-10) - ஐவர் திசைதிசை வலித்தெற்றுகின்றனர் – என்பதற்கு ஏற்ப இந்த இந்த்ரியங்கள் பலவாக உள்ளதால், ஒவ்வொன்றும் இவனைத் தங்கள் தங்கள் விஷயங்களில் கொண்டு செல்வதற்காக நான்கு திசைகளிலும் இழுத்துத் துன்புறுத்தி. (அருவி அறுத்து) – பெரியதிருமொழி (7-7-1) - ஐவர் அருவித் தின்றிட – என்பதற்கு ஏற்ப அருவியும் அறுத்தும் உண்பது போன்று, “எனக்கு விருப்பமான விஷயத்தை எனக்குக் காட்டு, எனக்கு விருப்பமான விஷயத்தை எனக்குக் காட்டு” என்று பலவந்தப்படுத்தி, இப்படியாக இவனைப் பலவிதமாகத் தண்டித்து. (கடனாயின இறுப்பிக்க) - பெரியதிருமொழி (6-2-1) - பொருளின்பமென விரண்டு மிறுத்தேன் ஐம்புலன்கட் கடனாயின - என்பதற்கு ஏற்ப செவி போன்ற இந்த்ரியங்களுக்கு விஷயமாக உள்ளதான பொருள், இன்பம் [அர்த்தம், காமம்] என்று கூறப்படும் இரண்டையும், கடமையைச் செய்வதில் ஆழ்ந்த பற்று உள்ளவைகள் போன்று இந்த்ரியங்களை இவனைக் கட்டாயப்படுத்த, அவற்றால் அடக்கப்பட்ட இவனும் “அப்படியே அளித்தேன்” என்று உரைக்கும்படியாகத் தங்களுக்கு ஏற்ற கப்பத்தை எடுத்துச் செல்ல. (பாழ்த்த விதியானவாறே) - இதன் காரணமாக, பெரியதிருவந்தாதி (84) – வாழ்த்தியவனடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்து இருகை கூப்பென்றால் கூப்பாத பாழ்த்த விதி - என்பதற்கு ஏற்ப இவனுடைய மனமானது, தனக்கு இயல்பான எஜமானனாக உள்ள ஸர்வேச்வரனை வாழ்த்தி, ஆராதித்து, வணங்கி, இரு கரங்கள் குவித்து என்பது போன்றதான எந்தவிதமான செய்கைகளிலும் நாட்டம் இல்லாததால், அந்த ஸர்வேச்வரனும் இவனை ஏற்றுக்கொள்ளக் காரணமாக இவனிடம் புண்ணியம் போன்ற எந்தவிதமான நற்செயலும் சிறிதும் இன்றிப் பாழடைந்தபோது. (தன்பால் மனம் வைப்பிப்பதாக) திருவாய்மொழி (1-5-10) - தன்பால் மனம் வைக்கத் திருத்தி – என்பதற்கு ஏற்ப இந்த்ரியங்களுக்கு வசப்பட்ட காரணத்தால் இவ்விதம் பாழ்பட்ட மனம் என்ற வயலை ஸர்வேச்வரனாகிய தன்னிடம் ஈடுபடுதல் என்பதாகிய பயரிடும்படியாகச் செய்வதற்காக, (தேய்ந்து அற மன்னி) – திருவாய்மொழி - (8-7-2) – எனதேழை நெஞ்சாளும் திருந்தாதவோ ரைவரைத் தேய்ந்தற மன்னி இருந்தான் – என்பதற்கு ஏற்ப எதனைக் கண்டாலும் அதன் மீது ஆசை கொள்ளும் எனது மனத்தினை, அந்த ஆசைகளையே காரணமாகக் கொண்டு இந்த்ரியங்கள் அழுத்தத் தொடங்கும்; அப்போது எத்தனை வலிமை கொண்டுள்ளவர்களாக இருந்தாலும், அதனைத் தடுக்க முயன்றால் திருந்தாமல் இருக்கும்; இந்த்ரியங்கள் என்னும் இப்படிப்பட்ட கொடூரமான வேறு ஓர் ஐவரை இனிக் காண இயலாது என்னும்படி உள்ள அவை, தேய்ந்து முடிந்து போகும்படி ஸர்வேச்வரன் செய்கிறான்; எப்படி என்றால், அரசர்கள் தங்களுடைய அரியணையில் அமர்ந்துள்ள பதவி என்னும் பலம் காரணமாக விரோதிகளை அழிப்பது போன்று, “ஸர்வேச்வரனாகிய நம்முடைய இருப்பால்தான் இந்த இந்த்ரியங்களை வெல்ல வேண்டும்” என்று எண்ணியவனாக நம் உள்ளே புகுகிறான். (ஒள்வாள்) – பெரியதிருமொழி (6-2-4) - நீ பணித்தவருளென்னு மொள்வாளுருவி – என்பதற்கு ஏற்ப, கீதையில் (18-66) - மாமேகம் சரணம் வ்ரஜ – என்னை மட்டுமே சரணம் புகுவாய் - என்று “நீ பிழைப்பதற்கு வழியாக எனது இரண்டு திருவடிகளை மட்டுமே உறுதியாக நம்பி இருப்பாயாக” என்று கூறுகிறான். இதனைக் கேட்டவுடன், கீதையில் (18-73) - ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ – எனது சந்தேகங்கள் அனைத்தும் நீங்கி நான் திடமாக உள்ளேன் – என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்துவிதமான ஐயங்களும் நீங்கும்படியாக, கீதையில் (18-66) – ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி - நான் உன்னை அனைத்து பாபங்களிருந்தும் விடுவிக்கிறேன் - என்று அருளிச்செய்தபடி, அனைத்துவிதமான பாபங்களையும் அறுப்பதற்கு வலிமை கொண்டதான தகுதியான அருள் என்ற வாளைத் தடையின்றி நமக்கு அளித்து. – (வினைத்தூற்றை) - பக்தி என்னும் பயிர் தழைத்து வளரக்கூடிய விளைநிலமாக உள்ள மனம் பாழடைந்து கிடக்கும்படி, திருவாய்மொழி (3-2-9) – கொடு வினைத்தூறு - என்பதற்கு ஏற்ப சேதநனால் இதன் அடிவேர் என்று காண இயலாமலும், அறுக்க இயலாமலும் மூடிக்கிடக்கும் பாபம் என்கிற புதர்களை, (வேர் அறுவித்து) - திருவாய்மொழி (3-2-1) – வினைகளை வேரற - என்றும், திருவாய்மொழி (3-2-2) - வல்வினைத் தொடர்களை முதலரிந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப மேலும் அவற்றிலிருந்து பல கிளைகள் தோன்றாதபடி, வாசனை மற்றும் ருசி என்பதான ஊசிவேர் மற்றும் பக்கவேருடன் அறுப்பித்து. இங்கு “விளைகளை வேரறுத்து” என்று கூறாமல் “வேர் அறுப்பித்து” என்று, தான் செய்யாமல் யாரையோ கொண்டு செய்வித்தது போன்று ஏன் கூறவேண்டும்? இதன் கருத்து – தனது அருள் என்பதை அவ்விதம் அவற்றை அறுக்கும்படிச் செய்கிறான் - என்பதாகும். அதாவது, வினைகளை அறுப்பதில் ஸர்வேச்வரன் இயக்கும் பணியைச் செய்கிறான்; அவனுடைய திருவருள் என்பது அறுப்பதைச் செய்கிறது என்று கருத்து. – (தீக்கொளீஇ) - வெட்டிய காட்டினைத் தீயிட்டுக் கொளுத்துவது போன்று, கீதை (18-66) – மோக்ஷயிஷ்யாமி – மோக்ஷம் அளிப்பேன் - என்று அவன் தனது க்ருபையை மூலமாகக் கொண்டு, தனது ஸங்கல்பத்தால் முதலில் அடியுடன் அறுத்த அனைத்தையும் [இவை வினைகள் ஆகும்], பெரியாழ்வார் திருமொழி (5-4-2) – இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் - என்பதற்கு ஏற்ப இந்த ஆத்மாவின் இயல்பான தன்மையை அழிக்கவல்லதான “கர்மங்களின் தொடர்ச்சி” என்னும் நெருப்பைக் கொளுத்தி அவற்றை வேகும்படிச் செய்து; அதாவது சாந்தோக்ய உபநிஷத் (5-24-3) – யதேஷிக தூலமக்நௌ ப்ரோதம் ப்தூயேத; ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே - தீயில் இடப்பட்ட பஞ்சானது எவ்விதம் உடனே எரிகிறதோ அது போன்று உபாஸகனுடைய அனைத்து பாபங்களும் எரிகின்றன - என்பதற்கு ஏற்ப அவற்றின் உருவத்தை அழித்துச் சாம்பலாக்கி. (கவ்வையெருவிட்டு) - திருவாய்மொழி (5-3-4) – ஊரவர் கவ்வை எருவிட்டு - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனிடம் இவனுக்கு ஆழமாக ஈடுபட்டுத் தொழுகின்ற மனம் வந்த உடனேயே “இவன் பாகவதன் ஆகிவிட்டான்” என்று ஸம்ஸாரிகள் கூறுகின்ற சொல்லைப் பக்தி என்னும் பயிரை வளர்க்கவல்ல எருவாக இட்டு. (அமுத ஆறு தலைப்பற்றி) – பெரியாழ்வார் திருமொழி (5-4-2) – அறிவையென்னு மமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டது - என்பதற்கு ஏற்ப ஞானம் என்னும் அமிர்த நதியை வாய் அளவிற்குச் செல்லும்படியாகத் தலைக்கு மேல் செல்லும்படிப் பெருக்கி. (ஈரியாய்க் கசிந்ததிலே) – திருவாய்மொழி (6-7-9) – கண்ணனுக்கென்று ஈரியா யிருப்பாள் – என்றும், திருவாய்மொழி (6-7-8) - கசிந்த நெஞ்சினளாய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அந்த ஞான வெள்ளத்தின் காரணமாக நல்லவற்றைக் கண்ட உடனேயே ப்ரீதி விளையும்படி நெஞ்சத்தைப் பதமாக்கி, அந்த அன்பு வந்தவுடன் அந்த நெஞ்சத்தில். (ஈரநெல்வித்தி) - அவனுடன் கலத்தல் என்ற நெல்லை விதைத்து. (எழுநாற்று)- பெரியாழ்வார் திருமொழி (3-7-9) – செய்த்தலை யெழுநாற்று - என்பதற்கு ஏற்ப அவனுக்கு அருகில் உள்ளதும், அவனுக்கு மட்டுமே வசப்பட்டதும், அவனுக்கு இனிமையாக உள்ளதுமாக வளர்கின்ற இந்தப் பயிரில். (களையையும் வேர் முதல் மாய்த்து) - “நான் இதனைச் செய்கிறேன், நான் இவற்றை அனுபவிக்கிறேன்” என்ற சிந்தனைகளை உண்டாக்குவதான அஹங்காரம் மற்றும் மமகாரங்களான [நான், எனது] களைகளையும், திருவாய்மொழி (1-2-3) – நீர்நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து – என்பதற்கு ஏற்ப ஊசி வேருடன் பறித்து எடுத்து. (பட்டிச் சேவதக்கி) – களையை நீக்கினால் மட்டும் போதாது, ஆடுமாடு மேயாமல் இருந்தால் அல்லவோ பயிர் நன்றாக விளையும்! ஆகவே, பெரியாழ்வார் திருமொழி (5-2-3) - வன்புலச்சேவை அதக்கி - என்பதற்கு ஏற்ப உலக விஷயங்களில் ஈடுபட்டு, பகவானிடம் காண்பிக்க வேண்டிய பக்தியை அழிப்பதால், பக்தி என்னும் இந்தப் பயிருக்கு ஆடுமாடு போன்றதான இந்த்ரியங்களாகிற சேக்களுடைய தனது விருப்பத்தின்படி திரிதலுக்குக் காரணமான கர்வத்தை நீக்கி. (மீது கொள்ளாமல் குறிக்கொள்வித்து) - பயிர் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் காலம் வந்தாலும், அந்தப் பலனை இரவில் அங்கு திரிபவர்கள் அவற்றை அபகரித்துச் செல்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டும்; [இது போன்றே] பெரியாழ்வார் திருமொழி (4-4-8) – விளைந்த தானியமு மிராக்கதர் மீது கொள்ளகிலார்கள் - என்பதற்கு ஏற்றபடி அவனுக்கு மட்டுமே சொந்தமான இவனை, திருவாய்மொழி (5-2-5) – அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல் – என்பதற்கு ஏற்ப ராக்ஷஸர்கள் மற்றும் அஸுரர்கள் என்பவர்களாகிய பாகவதர்கள் அல்லாதவர்கள், “இவன் எங்களுக்கு நண்பன்” என்றுள்ள சிந்தனையால் கவர்ந்து செல்வதற்கு இடம் அளிக்காதபடி. (குறிக்கொள்வித்து) - பக்தி என்னும் பயிர் தழைத்துள்ள நெஞ்சுக்கு, பெரியாழ்வார் திருமொழி (5-3-9) – பள்ளியறை குறிக்கொள்மின் - என்பதற்கு ஏற்ப காவல் ஏற்படுத்தி. (கடல் புரைய விளைந்து) – திருவாய்மொழி (5-3-4) - காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி – என்பதற்கு ஏற்ப எருவும் நீரும் இருந்தால் கூட, வானத்திலிருந்து பெய்யும் மழை இல்லை என்றால் பயிரானது தலைகுளிர்ந்து வளராது என்பதால், காளமேகம் போன்ற கரிய நிறம் கொண்ட தனது வடிவழகைப் பெய்ய வைத்து வளர்ப்பதால், பக்தி என்ற அந்தப் பயிரானது கடல் போன்று அளவிட இயலாதபடி வளர்ந்து. (தலை வணக்கினவாறே) – பெரியாழ்வார் திருமொழி (4-9-8) – வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள் சாய்த்துத் தலைவணக்கும் - என்பதற்கு ஏற்ப நன்கு விளைந்த பயிர் நன்றாகக் காய்ந்து தலைவணங்குவது போன்று, ஆத்மாவுக்கு முதிர்ந்த பக்தி ஏற்பட்டதன் விளைவாக ஸர்வேச்வரனைப் பிரிந்து இருக்கும் துன்பத்தால் தன் வசம் இழந்து தவிக்கின்ற நிலை உண்டாகும்போது. (நாளுநாள்) – பக்தியின் முதிர்ச்சியைக் கூறிய இதனால் என்ன நிகழ்ந்தது என்றால், பக்திக்கு இருப்பிடமான அந்த ஆத்மாவானது ஸர்வேச்வரனுக்கு இனிமையாக உள்ள விதத்தில் திருந்தியமை ஆகும். ஆகவே, திருவாய்மொழி (9-6-8) - நாளுநாள் வந்தென்னை மற்றவும் தானுண்டான் - என்பதற்கு ஏற்ப ஏதோ ஒருநாள் ஸர்வேச்வரன் ஜீவாத்மாவை அனுபவித்துவிட்டு பின்னர் விடுதல் என்பது இன்றி, அன்றாடம் வந்து அனுபவித்தபடி இருந்தாலும், மனநிறைவு அடையாத காரணத்தால் அடைகின்ற தடுமாற்றத்தைக் கண்டு. (கோள் குறையாக) திருவாய்மொழி (9-6-7) – கோட்குறைபட்ட தென்னாயிருர் - என்பதற்கு ஏற்ப ஜீவாத்மாவுக்கும் சிறிதளவாவது துக்கம் உண்டு என்று ஆராய்ந்து அறியும்படியாக. (நின்றார் அறியாமல்) – திருவாய்மொழி (10-7-1) – நின்றாரறியாவண்ணம் என்னெஞ்சு முயிருமைவ யுண்டு - என்பதற்கு ஏற்ப இத்தகைய பந்தம் ஏற்படுவதற்குச் சிபாரிசாக நின்ற பெரியபிராட்டி, கருடன், ஆதிசேஷன் போன்றவர்கள் யாரும் அறியாதபடி. (குந்தம் கொண்டு ஆராமை உண்டு) – மிகுந்த பசி எடுத்தவர்கள், வயலில் விளைந்த நெல்லை அறுத்து எடுத்துச் சென்று, அதனைச் சமைத்து உண்ணும்வரை தாங்க இயலாமல், நன்றாக முற்றின சிலவற்றை அந்த இடத்திலேயே அமர்ந்து, சமைக்காமல் உண்பது போன்று, இந்த ஜீவாத்மா மோக்ஷம் அடைந்து தன்னை வந்தடைந்த பின்னர் அவனுடன் சேர்ந்து அனுபவித்துக் கொள்ளலாம் என்பதுவரை காத்திருக்க இயலாத ஸர்வேச்வரன், தனது மிகுந்த அன்பு காரணமாக, இந்தச் சரீரத்துடன் ஆத்மா உள்ளபோதே, அந்த ஆத்மாவுக்கு ஏற்பட்ட முதிர்ந்த பக்திக்கு ஏற்ப, திருவாய்மொழி (10-10-6) – மனக்காராமை மன்னியுண்டிட்டாய் - என்பதற்கு ஏற்ப எப்போதும் மனநிறைவு ஏற்படாதபடி மேன்மேலும் இந்த ஜீவாத்மாவுடன் சேர்ந்து அனுபவித்து, (காலக்கழிவாலே நிலத்து உகாமல்) – திருவாய்மொழி (2-9-2) – காலக்கழிவு செய்யேல் - என்றும், பெரியதிருமடல் (89) - மண்ணும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோலே - என்றும் கூறுவதற்கு ஏற்ப, பக்தியின் முதிர்ச்சியை அடைந்த இந்த ஆத்மா காலம் செல்லச்செல்ல அந்த நிலை மறந்து மங்கி விடாமல். (பற்று அறுத்து) - பெரியதிருமொழி (11-4-9) – வினை பற்றறுக்கும் - என்பதற்கு ஏற்ப பேற்றுக்குத் தடையாக உள்ள கர்மங்கள் அனைத்தையும் அறுத்து. (தண்டால் அடித்துப் பதர் அறுத்து) - அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களைத் தடி கொண்டு அடித்து பதரையும் நெல்மணிகளையும் பிரிப்பது போன்று, பெரியதிருவந்தாதி (26) – அருளென்னும் தண்டாலடித்து - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தனது அருள் என்ற உறுதியான கருவி கொண்டு நெல்லுடன் சேர்ந்து விளைந்துள்ளதான சாரம் அற்ற பதர் போன்றதான ஆத்மானுபவம் என்பதில் ஜீவாத்மாவுக்கு ஏற்படக்கூடிய ஈடுபாட்டை விலக்கி. (போர்த்த தோல் விடுத்து) - அந்த நெல்லில் உள்ள உமியை விடுவிப்பது போன்று, திருவாய்மொழி (7-5-10) - போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து – என்பதற்கு ஏற்ப ஆத்மாவைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளதும், அனைத்துவிதமான நோய்களுக்கும் ஆறுவிதமான மாறுபாடுகளுக்கும் [கருவில் புகுதல் (அஸ்தி), பிறத்தல் (ஜாயதே), வளர்தல் (வர்ததே), இளமை - வாலிபம் - முதுமை போன்ற மாறுபாடுகளை அடைதல் (விபரிணமதே), மூப்பின் காரணமாக தளர்ச்சி அடைதல் (அபச்சியதே), இறுதியில் மரணமடைதல் (நாசம்)] காரணமாக உள்ள ஸ்தூல சரீரத்தை விடுவித்து. (ஸூக்ஷ்மவொட்டும் நீரிலே கழுவி) – தொடர்ந்து அந்த நெல்லிலிருந்து வெளிவந்த அரிசியை, தவிடு நீங்கும்படியாகக் கழுவுவது போன்று, ஸம்ஸாரத்தில் உழல்வதற்குக் காரணமாகவும் பகவானை அனுபவிப்பதற்கு விரோதியாக உள்ளபோதிலும் ஜீவாத்மாவை விரஜாநதி முடிய கொண்டு செல்வதற்கு உதவியாக உள்ளதும், ஸ்தூல சரீரம் நீங்கினாலும் தான் நீங்காமல் உள்ளதான ஸூக்ஷ்ம சரீரத்தையும், தத்தோய ஸ்பர்ச மாத்ரேண - விரஜாநதியின் தீர்த்தத்தை ஸ்பர்சித்த உடனேயே - என்பதற்கு ஏற்ப விரஜாநதியின் ஜலத்தைத் தொட்டதால் வாசனைகள் அனைத்தையும் அவற்றின் அணுக்களுடன் நீக்கி. ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அர்ச்சிராதியில் – கர்ம ஸம்பந்தமறுக்கையாலே ஸூக்ஷ்ம சரீரமிருக்கைக்கு ஹேதுவில்லாமையால் இங்கே கழித்து விடலாயிருக்கச்செய்தே விரஜா பர்யந்தம் இவனுக்கு கமந ஸாதநமாக ஈச்வரன் தன்னிச்சையாலே வைத்து, விரஜையிலே உள்புக்கவாறே கழித்துவிடும் – கர்மங்களுடைய ஸம்பந்தம் அறுக்கப்படுவதால் ஸூக்ஷ்ம சரீரம் தொடர்ந்து உள்ளதற்குக் காரணம் இல்லை என்பதால் அதுவும் இந்த உலகிலேயே நீங்கிவிடலாம் என்றாலும், விரஜாநதி முடிய ஜீவாத்மா பயணிப்பதற்கு அந்த ஸூக்ஷ்ம சரீரத்தை உபாயமாக ஸர்வேச்வரன் தனது விருப்பத்தால் வைத்து, விரஜாநதியில் நீராடிய பின்னர் கழித்து விடுகிறான் - என்று அல்லவோ அருளிச்செய்தார்! ஸூக்ஷ்ம சரீரத்தின் ஸம்பந்தம் உள்ளவரை கர்மவாசனை போன்றவை உள்ளதால், அந்த ஸூக்ஷ்ம சரீரம் நீங்கும்போதுதான் அவையும் விலகும். அர்ச்சிராதியில் - விரஜையைச் சென்று கிட்டி வன்சேற்றள்ளலையும் வாஸநா ரேணுவையும் கழுவி – என்பது காணலாம். (வேறோர் கலத்து இட்டு) - சிறியதிருமடல் (30) - சீரார் தயிர் கடைந்த வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு - என்பதற்கு ஏற்ப, ஸ்தூலம் மற்றும் ஸூக்ஷ்மம் ஆகிய சரீரங்களிலிருந்து பிரிக்கப்பட்ட இந்த ஜீவாத்மாவை, அமானவன் என்பவனுடைய கையின் தொடுதல் காரணமாக, இந்த உலகத்துடன் தொடர்பு இல்லாத வேறு ஒரு சரீரத்தில் ப்ரவேசிக்கும்படிச் செய்து. (பைந்தொடி மடந்தையரைக் கொண்டு) – திருவாய்மொழி (10-2-11) – அணைவர் போயமருலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய்மரு தோளிணை - என்பதற்கு ஏற்ப கௌக்ஷீதகீ உபநிஷத் (1-35) – தம் பஞ்சசதாந் யப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா: – அந்த முக்தாத்மாவை ஜந்நூறு தேவலோகப் பெண்கள் எதிர் கொண்டு தங்களுடைய கைகளில் மாலைகள் கொண்டவர்களாக – என்பதற்கு ஏற்ப எதிர்கொண்டு அழைத்து, தம் ப்ரஹ்மா லங்காரேணா லங்குர்வந்தி - தங்களுடைய கைகளால் அந்த ஆத்மாவுக்கு ப்ரஹ்மாலங்காரம் செய்து – என்பதற்கு ஏற்ப தங்களுடைய கரங்கள் கொண்டு அந்த ஆத்மாவுக்கு ப்ரஹ்மாலங்காரங்கள் போன்ற உபசாரங்கள் செய்கின்ற தேவலோகப்பெண்கள் கொண்டு அந்த ஆத்மாவுடைய இன்பத்துக்கு ஏற்கும் விதத்தில் அவனை அலங்கரித்து. (க்ஷட்குண ரச அன்னமாக்கி) – சாந்தோக்ய உபநிஷத் - ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே - தனது உண்மையான ஸ்வரூபத்துடன் உள்ளான் - என்பதற்கு ஏற்ப தனது உண்மையான ஞானஸ்வரூபம் வெளிப்பட்டு, முன்பு மறைந்து கிடந்த ஆத்மகுணங்கள் அனைத்தும் ப்ரகாசிக்கப் பெற்றுள்ள இந்த ஆத்மாவை, ஞானம் முதலான ஆறுகுணங்கள் என்னும் அறுசுவையுடன் கூடியவனாக, தைத்திரீயம் – அஹம் அன்னம் - நான் பரமாத்மாவுக்கு உணவாகிறேன் [அதாவது இன்பம் ஆவேன்] – என்பதற்கு ஏற்ப அன்னமாகும்படி அவர்களுடைய கரங்களின் தீண்டுதலால் பக்குவமாக்கி. அதாவது அடிமையாக உள்ள ஆத்மாவுடைய ஞானம், சக்தி போன்ற ஆறு குணங்களும் அவனுடைய எஜமானனாக உள்ள ஸர்வேச்வரன் அனுபவிப்பதற்கு ஏற்றதாக உள்ளதால், இந்த குணங்களுடன் கூடியவனாக, தைத்திரீயம் – அஹம் அன்னம் - நான் உணவாகிறேன் - என்றுள்ள இந்த ஆத்மா, ஸர்வேச்வரனுக்கு ஆறு சுவை கொண்ட அடிசிலாக உள்ளான் என்று கருத்து. (வானோர்க்கு ஆராவமுது ஆனவாறே) – திருவாய்மொழி (5-7-11) – வானோர்க்காராவமுதே - என்பதற்கு ஏற்ப, திருவாய்மொழி (10-9-9) – வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது – என்று கூறுவது என்னவென்றால், திருவாய்மொழி (10-9-10) - விதிவகை புகுந்தனர் - என்பதாகவும், திருவாய்மொழி (10-9-10) - பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் – என்பதாகவும் உள்ளது போன்று ஆதரிக்கும் நித்யஸூரிகளுக்கும் மிகுந்த இனிமையான பொருள் ஆகிறான். தொடர்ந்து, (முற்றும் உண்ண) – திருவாய்மொழி (10-7-3) – என்னை முற்றும் உயிருண்டு – என்பதற்கு ஏற்ப, இந்த ஆத்மாவை முற்றிலும் அனுபவிப்பதற்காக, (முன்னம் பாரித்து) - திருவாய்மொழி (9-6-10) - என்னில் முன்னம் பாரித்து – என்பதற்கு ஏற்ப இந்த ஆத்மாவுக்கு அவன் விஷயத்தில் ருசி உண்டாவதற்கு முன்பாகவே ஈடுபடுத்தி. (உழுவது ஓர் நாஞ்சில் கொண்டு) பெரியாழ்வார் திருமொழி (4-7-5) – உழுவதோர் படையும் – என்றும், பெரியதிருமொழி (8-8-8) – ஒற்றைக்குழையும் நாஞ்சிலும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப இவனே [ஸர்வேச்வரன்] பயிர் செய்பவன் என்பது வெளிப்படும்படியாக, பயிர் செய்வதற்கு வேண்டியதான கருவியைத் திருக்கரத்தில் கொண்டு. (பெருக முயலும்) – இரண்டாம் திருவந்தாதி (22) – அரிய தெளிதாகுமாற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப் பெற்றால் - என்பதற்கு ஏற்ப அடைவதற்கு அரியதாக உள்ள தனது திருவடிகளை அந்த ஜீவாத்மா எளிதாக அடையலாம்படி, அந்த ஆத்மா கரை ஏறுவதற்கு மிகுந்த முயற்சிகளை தானாகவே செய்யும் தன்மை கொண்டவனாக. (பக்தி உழவன்) – நான்முகன் திருவந்தாதி (23) – பக்தி உழவன் - என்பதற்கு ஏற்ப அந்த ஆத்மாவுக்கு தன்னிடம் பக்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்தபடி உள்ள ஸர்வேச்வரனுடைய முயற்சிகளின் பலன் அல்லவோ, நம்மாழ்வாருக்கு ஏற்பட்ட இந்த பக்தியாக உள்ளது! ஆக இதன் மூலம் ஸர்வேச்வரனுடைய முயற்சிகளே நம்மாழ்வாருக்கு இத்தகைய பக்தி ஏற்படக் காரணம் என்று கருத்து.