Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 103)

இரண்டாம் ப்ரகரணம்

இப்பிறப்பே சில நாளிலென்றபோதே இரண்டும் கழியும்

இன்னமும் இவர் தம்முடையதொரு திவ்யஸூக்தி விசேஷத்தாலே இது தன்னை வ்யக்தீகரிக்கிறார் (இப்பிறப்பே யித்யாதியால்).

கடந்த சூர்ணையில் கூறப்பட்டதை மேலும் ஒரு பாசுரம் கொண்டு விளக்குகிறார்.

– அதாவது, “குறிக்கொள் ஞானங்களாலெனை யூழி செய் தவமும் கிறிக்கொண்டிப் பிறப்பே சில நாளிலெய்தினன் யான்” என்று யம நியமாத்ய வஹிதராய்க் கொண்டு ஸம்பாதிக்கவேண்டும் வேதந த்யாநோபாஸ நாத்யவஸ்தா விசேஷங்களான ஜ்ஞாநங்களாலே அனேக கல்பம் கூடி ச்ரவணமாய் மநநமாய் த்ருவாநுஸ்ம்ருதியாய் வரக் கடவ பக்தியோகமாகிற தபஸ்ஸினுடைய பலத்தை ஒரு யத்நமு மின்றிக்கே யிருக்க, நல்விரகான வவனாலே இஜ்ஜந்மத்திலே அது தன்னிலும் அல்பகாலத்திலே பெற்றே னென்கையாலே ஜந்மாந்தராப்யாஸஜமென்றும், இஜ்ஜந்மந் தன்னிலே ஸாதந த்ரயாநுஷ்டானஜமென்றும் சொல்லுகிற விரண்டும் போமென்றபடி. “இப்பிறப்பே” என்றும், “சில நாளில்” என்றுமிரண்டு மருளிச் செய்தது, ஜந்மாந்தரங்களி லப்யாஸத்தையும் இஜ்ஜந்மந் தன்னிலே சிரகால ஸாத்யமான வவற்றி லந்வயத்தையும் வ்யாவர்த்திக்கைக்காகவிறே. – அன்றிக்கே, (இடகிலேன்) இத்யாதி வாக்யத்திலே யெடுத்த சந்தைக ளெல்லாத்தாலும் பூர்வஜந்ம ஸித்தமான ஸாதந த்ரயாப்யாஸ பலமல்லாமையை ஸாதித்ததாய், அதில்லையாகில் இஜ்ஜன்மந் தன்னிலே அவற்றை யப்யஸித்து வந்ததானலோ வென்கிற சங்கை வர, பூர்வஜந்மத்திலும் இஜ்ஜன்மத்திலும் இவர்க்கு அவற்றி லந்வயமில்லை யென்னுமிடத்தை, “இப்பிறப்பே” இத்யாதியான விவருடைய ஸூக்தி விஷேத்தாலே தர்சிப்பியா நின்று கொண்டு உபயசங்கையும் சேரத் தள்ளுகிறா ரென்று இங்ஙனே யோஜிக்கவுமாம். இந்த யோஜனையைப் பற்றவும் பூர்வயோஜனையே இதனுடைய பட்டோலையான பெரியபடிக்குச் சேருவது.

(இப்பிறப்பே சிலநாளில் என்றபோதே) - திருவாய்மொழி (2-3-8) - குறிக்கொள் ஞானங்களாலெனை யூழி செய் தவமும் கிறிக்கொண்டிப் பிறப்பே சில நாளிலெய்தினன் யான் - என்ற பாசுரத்தை கூறுகிறார். யமம், நியமம் போன்ற யோக பயிற்சிகள் மூலம் அடையவேண்டுவதான வேதநம், த்யானம், உபவாஸம் போன்ற பலவிதமான நிலை வேறுபாடுகளாக உள்ள ஞானங்கள் மூலம், பல கல்ப காலங்கள் இணைந்து கேட்பதாலும், மனனம் செய்வதாலும், இடைவிடாமல் எண்ணியபடி உள்ளதாலும் வரக்கூடியது இந்த பக்தியோகம் ஆகும். இத்தகைய பக்தியோகம் என்ற தவத்தின் பலனை எந்தவிதமான முயற்சியும் இல்லாமல், நல்லவழி காண்பிக்கின்ற ஸர்வேச்வரன் மூலமாக இந்தப் பிறவியிலேயே, இதிலும் மிகவும் சில நாட்களிலேயே பெற்றேன் என்று கூறுவதால், (இரண்டும் கழியும்) - இத்தகைய பக்தி என்பது முற்பிறவிகளில் கைக்கொண்ட பயிற்சியின் விளைவால் ஏற்பட்டது என்றும், இந்தப் பிறவியிலேயே கர்மம் - ஞானம் – பக்தி என்ற மூன்றுவிதமான உபாயங்களைக் கைக்கொண்டதால் ஏற்ப்ட்டது என்று கூறுகின்ற இரண்டுவிதமான கருத்துகளும் மறைகின்றன. மேலே கூறப்பட்ட பாசுரத்தில் உள்ள “இப்பிறப்பே” மற்றும் “சிலநாளில்” போன்ற இரண்டு சொற்களை அருளிச்செய்தது ஏன்? இதன் மூலம் முறையே, முற்பிறவிகளில் கைக்கொண்ட பயிற்சி, இந்தப் பிறவியிலேயே பலகாலமாக கர்மம் – ஞானம் - பக்தி ஆகியவற்றை இயற்றியபடி இருத்தல் போன்றவற்றில் தான் ஈடுபடவில்லை என்ற இரண்டையும் உணர்த்தவே ஆகும். அல்லது வேறு ஒரு கேள்வி எழுப்பலாம். கடந்த சூர்ணையில் – இடகிலேன் - என்பதன் மூலம், முற்பிறவிகளில் கர்மம் - ஞானம் - பக்தி ஆகிய உபாயங்களைக் கைக்கொண்ட பயிற்சி காரணமாக இவருக்கு இந்தப் பரமபக்தி ஏற்படவில்லை என்று உரைத்தார். சரி; அப்படி வரவில்லை என்றால், அந்த மூன்றுவிதமான சாதனங்களையும் இவர் இந்தப் பிறவியில் செய்தபடி உள்ளதால் இந்தப் பக்தி இவருக்கு ஏற்பட்டது என்று ஏன் கூறக்கூடாது என்று கேட்கலாம். முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் நம்மாழ்வாருக்கும் அந்த இரண்டு நிலைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் திருவாய்மொழி (3-2-8) – இப்பிறப்பே - என்பதான இவருடைய பாசுரம் மூலம் தெளிவுபடுத்தி, அதனுடன் சேர்த்து இந்த இரண்டு சந்தேகங்களையும் ஒன்றாகத் தள்ளுகிறார் என்றும் கூறலாம். ஆனால் இந்தக் கருத்தைவிட முதலில் கூறப்பட்ட கருத்தே திருவாய்மொழியின் பட்டோலையாக உள்ள பெரியபடிக்குச் சேரும்விதமாக உள்ளது