Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 102)

இரண்டாம் ப்ரகரணம்

இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்க ளென்கையாலே ஸாதந த்ரய பூர்வ அப்யாஸஜமல்ல.

இங்ஙனன்றிக்கே, இவருடைய இந்தப் பரமபக்தி – கர்ம ஜ்ஞான பக்திகளாகிற ஸாதந த்ரயத்தையும் இஜ்ஜந்மத்திலே அநுஷ்டிக்கையாலேயாதல், பூர்வ ஜந்மங்களி லப்யாஸத்தாலேயாதல் உண்டானதானாலோவென்கிற சங்கையிலே இரண்டுபடியாலும் வந்ததன்றென்னுமிடத்தை இவர் தம்முடைய உக்திகளாலே ஸாதிக்கிறார் (இடகிலேனென்று தொடங்கி).

மேலே கூறியபடி அல்லாமல், நம்மாழ்வாருக்கு உள்ள இத்தகைய பரமபக்தி என்பது, கர்மம் – ஞானம் - பக்தி ஆகிய மூன்று சாதனங்களையும் இந்தப் பிறவியில் கைக்கொண்டதால் ஏற்பட்டது என்றோ அல்லது கடந்த பிறவிகளில் இவற்றைக் கைக்கொண்ட பயிற்சி காரணமாக ஏற்பட்டது என்றோ கூறலாம் அல்லவா என்று ஒரு கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கு, “இரண்டு விதங்களிலும் வந்தது அல்ல” என்பதை ஆழ்வாருடைய திருவாக்கு கொண்டே கூறுகிறார்.

– அதாவது, “இடகிலேன்” இத்யாதியாலே பசித்தார்க்குச் சோற்றையிடுதல், தாஹித்தார்க்குத் தண்ணீர் வார்த்தல் செய்தேனாகில் “யஜ்ஞோ தாநம் தப: கர்ம” என்கிறடியே தாநமும் கர்மயோகாந்தர்ப்பூதமாகையாலே கர்மயோகத்திலே நிவேசிப்பிக்கலாம்; அது செய்ய மாட்டுகிறிலேன். இந்த்ரியங்களை விஷயங்களில் போகாதபடி நியமித்தேனாகில் ஜ்ஞாநயோகத்திலே நிவேசிப்பிக்கலாம்; அதுவும் செய்ய மாட்டுகிறிலேன். நியதனாய்க் கொண்டு சாஸ்த்ரோக்தமான காலங்களிலே புஷ்பாத் யுபகரணங்களை ஸம்பாதித்து ஆராதித்து ஸ்துதித்தேனாகில் பக்தி சரீரத்திலே நிவேசிப்பிக்கலாம்; அதுவும் செய்ய மாட்டுகிறிலேனென்றும், “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று பலவ்யாப்தமாம்படி அநுஷ்டிதமான கர்மயோகமுடையே னல்லேன். அதில்லாமையாலே ஸூக்ஷ்மரூபமான ஜீவ பர விஷய ஜ்ஞாநயோகத்தையு முடையேனல்லேன். ஆகையாலே உபய ஸாத்யையான பக்தியில்லை என்னுமிடம் அர்த்தாத் ஸித்தமென்று மருளிச்செய்கையாலே வர்த்தமாந ஜந்மத்தில் கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற ஸாதந த்ரயாநுஷ்டானத்தா லுண்டானதல்ல. – “கிற்பன்கில்லே னென்றிலன் முனநாளால்” என்று முன்புண்டான காலமெல்லாம் “குர்யாத்” என்று நன்மை செய்யவடுக்குமென்றால் வல்லேனென்று இசைந்திலேன். “ந குர்யாத்” என்று தீமை செய்யலாகாதென்றால் மாட்டேனென்று தவிர்ந்திலேன். இப்படி விஹிதத்தைச் செய்யாமல், நிஷித்தத்தைச் செய்து போந்தே னென்றும், “தெரிந்துணர் வொன்றின்மையால் தீவினையேன் ... ஆழியங்கை யம்மானை யேத்தாதயர்த்து … வாளாவிருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம்” என்று பகவத் விஷயத்தை ஆராயும் ஜ்ஞாநமொன்று மில்லாமையாலே பகவதநுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின பாவியான நான், பிராட்டி சொன்னது செய்தல்லது நிற்கமாட்டாமையாலே மாயாம்ருகத்தை அன்று பின்பற்றிப்போன அருகாழியைத் திருக்கையிலேயுடைய ஸர்வேச்வரனை மங்களாசாஸநம் பண்ணப் பெறாதே அறிவு கெட்டு வ்யர்த்தமேயிருந்து விட்டேன் கீழுள்ள காலமெல்லாமென்று மருளிச் செய்கையாலே பூர்வ ஜந்மங்களி லப்யாஸத்தா லுண்டானதுமல்லவென்கை.

(இடகிலேன் என்கையாலே) - திருவாய்மொழி ( 4-7-9) – இடகிலேன் - என்பதன் மூலம் கூறுகிறார். பசியுடன் வந்தவர்களுக்கு உணவு அளித்தல், தாகம் கொண்டு வந்தவர்களுக்கு நீர் அளித்தல் போன்றவற்றைச் செய்திருந்தேன் என்றால், கீதையில் (18-5) - யஜ்ஞோ தாநம் தப: கர்ம – யஜ்ஞம், தானம், தவம் போன்றவை தூய்மைப்படுத்தவல்ல கர்மங்கள் - என்பதற்கு ஏற்ப, தானம் என்ற அவை அனைத்தும் கர்மயோகத்தில் அடக்கம் என்பதால் கர்மயோகத்தில் இழிந்தேன் எனலாம்; ஆனால் அதனைச் செய்யவில்லை. இந்த்ரியங்களை வசப்படுத்தி, அவை உலகவிஷயங்களின் மீது செல்லாமல் அடக்கினேன் என்றால் ஞானயோகத்தில் இழிந்தேன் எனலாம்; அதனையும் செய்யவில்லை. தகுந்த விதிகளுக்கு உட்பட்டு, சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட அந்தந்த நேரத்தில் மலர்கள் போன்றவற்றைக் கொண்டு ஆராதனை செய்து பகவானைத் துதித்தேன் என்றால் பக்தியோகத்தில் இழிந்தேன் எனலாம்; அதனையும் செய்யவில்லை. மேலும், (நோன்பு அறிவிலேன் என்கையாலே) – திருவாய்மொழி (5-7-1) - நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் - பலனுடன் கூடியதான கர்மயோகத்தைக் கொண்டவன் அல்லேன். அதன் காரணமாக மிகவும் நுண்ணியதான ஜீவாத்மா - பரமாத்மா விஷயங்கள் குறித்த ஞானயோகத்தையும் கொண்டவன் அல்லேன். ஆகவே கர்மம் மற்றும் ஞானம் ஆகியவற்றால் சேர்க்கப்படுவதான பக்தியும் இல்லை என்பது தானகவே விளங்கும். இப்படியாக நம்மாழ்வார் அருளிச்செய்த காரணத்தால் (ஸாதந த்ரயஜம் அல்ல) - நம்மாழ்வாருக்குள்ள பரமபக்தி என்பது இந்தப் பிறவியில் அவர் இயற்றிய கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகியவற்றால் ஏற்பட்டது அல்ல என்று தேறுகிறது. (கிற்பன் என்கையாலே) - திருவாய்மொழி (3-2-6) - கிற்பன்கில்லே னென்றிலன் முனநாளால் - எனபதைக் கூறுகிறார். அதாவது இதுவரை கழிந்த நாட்களில் - குர்யாத் - செய்வதற்கு ஏற்றது - என்பதற்கு ஏற்ப நன்மையைச் செய்ய இயலும் என்றாலும், “என்னால் அதற்கு இயலாது” என்று செய்யாமல் இருந்தேன். ந குர்யாத் – செய்யக்கூடாது - என்று கூறுவதற்கு ஏற்ப தீமையைச் செய்தலாகாது என்றால், “சரி, செய்யவில்லை” என்று செய்யாமல் விட்டதில்லை. இப்படியாக விதிக்கப்பட்டதைச் செய்யாமலும், தவிர்க்கப்பட்டதைச் செய்தபடியும் இருந்தேன் என்றார். மேலும் கூறுகிறார். (கீழ்நாள்கள் என்கையாலே) – பெரியதிருவந்தாதி (82) - தெரிந்துணர் வொன்றின்மையால் தீவினையேன் ... ஆழியங்கை யம்மானை யேத்தாதயர்த்து … வாளாவிருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம் - என்பதைக் கூறுகிறார். பகவத் விஷயத்தைக் குறித்து ஆராய்ந்து தெளியும் ஞானம் ஏதும் இல்லாத காரணத்தால், பகவானைப் பற்றிச் சிந்தித்து அந்த அனுபவம் கொண்டு மகிழ்வதற்கு ஏற்றதான காலம் இருந்தபோதிலும் அதனை வீணாக நான் கழித்தேன். சீதை விண்ணப்பித்தாள் என்ற காரணத்தால் அதனை நிறைவேற்றாமல் இருத்தல் ஆகாது என்பதால், மாயமான் ஒன்றைப் பின்தொடர்ந்து போனவனும், அருள் சுரக்கும் சக்கரத்தைத் திருக்கரத்தில் கொண்டவனும் ஆகிய ஸர்வேச்வரனைப் புகழ்ந்து தொழாமல், எனது அறிவை இழந்து, இதுவரை கழிந்த காலங்கள் அனைத்திலும் ஏதும் செய்யாமல் இருந்தேன். இப்படியாகக் கூறுவதால், நம்மாழ்வாருக்கு உள்ள பரமபக்தி என்பது முற்பிறவிகளில் இவர் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகத்தைக் கைக்கொண்ட பயிற்சியாலும் வந்தது அல்ல என்று தேறுகிறது.