Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 101)

இரண்டாம் ப்ரகரணம்

இது உபயமுமன்றிக்கே அறியாக்காலத்தே ஒக்கப் பிறந்து தழுவி நின்று கட்டமே நோயாயுலர்த்தி வீழ்ந்தலப்பாய் த்யாக ஸ்வீகாரநிஷ்டா ஹாநிகளாக்கி ஸத்தா போக வ்ருத்த் யுபகரணமாவ தொன்று.

இனி இவ்வாழ்வாருடைய பக்தி விசேஷமிருக்கும்படியை அறிவிக்கிறார் (இதுவென்று தொடங்கி).

இனி நம்மாழ்வாருடைய பக்தி விசேஷம் எத்தகையது என்பதை அருளிச் செய்கிறார்.

– அதாவது, கீழுக்தையான விவ்வாழ்வாருடைய பக்தி ஸ்வயத்ந ஸாத்யையாய் உபாயபூதையாயிருக்கும் பக்தியும், உபாய பரிக்ரஹாநந்தர மபேக்ஷிக்க உபாய பலமாய் வரும் பக்தியுமாகிற நடுவிற் சொல்லுகிற விரண்டு மன்றிக்கே, “அறியா காலத்துள்ளே யடிமைக்கணன்பு செய்வித்து” என்று “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:” என்கிறபடியே அறிவுக்கு ஸம்பாவநையில்லாத பால்யத்திலே ப்ராப்தி பலமான வடிமையிலே அதிப்ராவண்யத்தைப் பிறப்பித்தென்னும்படி திருத்துழாய்க்கு மணம் போலே ஒக்கப் பிறந்து “தழுவி நின்ற காதல்” என்று விடுவேனென்றாலும் விடவொண்ணாதபடி உடன்வந்தியாய் “கட்டமே காதல்”, “வேட்கை நோய் கூர” என்று அநுபாவ்ய விஷயத்தை யதா மநோரத மநுபவிக்கப் பெறாதபோது, போஜநம் பெறாத தசையில் பசி போலே கஷ்டமென்பது, வ்யாதியென்பதாம்படி வெறுப்பை விளைத்து, “வேவாரா வேட்கை மெல்லாவி யுள்ளுலர்த்த” என்றும், “உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து” என்றும், “உன்னைக் காண்பான் நானலப்பாய்” என்றும் சொல்லுகிறபடியே அசோஷ்யமான ஆத்மவஸ்துவைக் குருத்து வற்றாம்படி சோஷிப்பித்துக் கடலிலே விழுந்தாப்போலே கரையேறவொண்ணாதபடி அபிநிவேச ரூபமான தன்னுள்ளே யாழ்ந்து போக்யமான அவ்விஷயத்தைக் காணவேணுமென்று அலமாக்கப் பண்ணி. – “உன்னாலல்லால் யாவராலுமொன்றும் குறை வேண்டேன்” என்கிறபடியே இதரோபாய பரித்யாக பூர்வகமாக அவனே உபாயமென் றறுதியிட்டிருக்கு மிவரை “குதிரியாய் மடலூர்தும்”, “யாமடலூர்ந்து மெம்மொழி யங்கைப் பிரானுடைய தூமடல் தண்ணந்துழாய் மலர் கொண்டு சூடுவோம்” என்னும்படி த்யஜித்த உபாயத்திலே மூட்டுகையாலே த்யாக நிஷ்டா ஹாநியையும், “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”, “கழல்களவையே சரணாகக் கொண்ட”, “அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்”, “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்”, “அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” என்று அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணும்படி யாக்குகையாலே “ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: க்ருதோயம் தாரயேந்நரம்”, “ஸக்ருதேவ ப்ரபந்நாய” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ஸக்ருத் கர்த்தவ்யமான ஸ்வீகாரத்தில் நிஷ்டா ஹாநியை யுண்டாக்கி. பகவத் விஷயத்தை நினையாமையென்றும் ஸத்தா ஹாநியென்றும் இரண்டில்லை யென்றிருக்கு மிவர்க்கு அநவரத தத்விஷய ஸ்மரண ஹேதுவாகையாலே ஸத்தைக்கும், “எல்லாம் கண்ணன்” என்றிருக்குமிவர்க்கு தத்விஷயாநுபுபூஷையை மேன்மேலும் விளைக்கையாலே போகத்துக்கும், “வழுவிலாவடிமை செய்யவேண்டும்” என்றிருக்குமிவர்க்கு அசேஷ சேஷதைக ரதித்வத்துக் குடலாகையாலே வ்ருத்திக்கும் உபகரணமாயிருக்கு மென்கை. அன்றிக்கே, ஸத்தாபோகேத்யாதிக்கு “நாகிஞ்சித் குர்வதச் சேஷத்வம்” என்று கிஞ்சித்கரியாத வஸ்துவுக்கு சேஷத்வமில்லை யென்கையாலே சேஷத்வைக நிரூபணீயனான இவனுடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாதலால் இவனுக்கு ஸத்தா ஹேதுவாய், “தனக்கேயாக”, “உன்றன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும்”, “கதா ப்ரஹர்ஷ யிஷ்யாமி” இத்யாதிகளிற்படியே இதுதான் பரமப்ரயோஜநமாகப் பண்ணுமதாகையாலே அவனுக்கு போகமாயிருக்குமதான கைங்கர்ய வ்ருத்திக்கு உபகரணமாயிருப்ப தொன்றென்னவுமாம். ஆக கீழ்ச்செய்தாயிற்றது, இவருடைய பக்தி – ஸாதித்துப் பெற்றதுமன்று, அபேக்ஷித்துப்பெற்றதுமன்று. ஸஹஜையாய் ஸத்தாதிகளுக்கு உபகரணமாயிருப்ப தொன்றென்றதாய்ந்து.

– (இது) - சூர்ணை 97ல் கூறப்பட்ட நம்மாழ்வாருடைய பக்தியானது, (உபயமும் அன்றிக்கே) தனது முயற்சியால் செய்யப்படுவதான உபாயமாக உள்ள ஸாதன பக்தியும் [சூர்ணை 99], ஸர்வேச்வரனைப் பற்றிய பின்னர் விரும்பி உபாயத்தின் பலனாக வரும் ஸாத்ய பக்தியும் [சூர்ணை 100] ஆகிய இரண்டும் அல்லாமல். (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து) – திருவாய்மொழி (2-3-3) – அறியா காலத்துள்ளே யடிமைக்கணன்பு செய்வித்து – என்றும், இராமாயணம் பாலகாண்டம் (18-27) - பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: - இராமனிடம் லக்ஷ்மணன் தொட்டில் பருவம் தொடங்கியே பக்தியுடன் இருந்தான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அறிவானது முழுமை பெறாத பாலபருவம் முதலாகவே பேற்றின் பலனாகிய அடிமைத்தனம் குறித்து மிகவும் ஆழ்ந்த காதலை உண்டாக்கி என்னும்படியாக, துளசியில் நறுமணம் போன்று பக்தியும் ஒன்றாகவே பிறந்து. (தழுவி நின்று) - திருவாய்மொழி (4-7-11) – தழுவி நின்ற காதல் - என்பதற்கு ஏற்ப “விட்டுவிடுவேன்” என்றாலும் விட இயலாதபடி தொடர்ந்து உடன் வருவதாய். (கட்டமே நோயாய்) – திருவாய்மொழி (7-2-4) – கட்டமே காதல் - என்றும், திருவாய்மொழி (9-6-7) - வேட்கை நோய் கூர – என்பதற்கு ஏற்ப, வரும்போது அனுபவிக்கும் விஷயத்தை விருப்பத்தின்படி அநுபவிக்க இயலவில்லை என்றால், உணவு கிட்டாதபோது பசி போன்று, இந்தக் கஷ்டம் என்பது நோய் என்று வெறுக்கும்படியான நிலையை ஏற்படுத்தி. (உலர்த்தி) – திருவாய்மொழி (2-1-10) - வேவாரா வேட்கை மெல்லாவி யுள்ளுலர்த்த - என்பதற்கு ஏற்ப உலர்த்த இயலாத ஆத்மாவை, குருத்து போன்று உலர வைத்து. (வீழ்ந்து) - திருவாய்மொழி (5-7-2) - உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து - என்பதற்கு ஏற்ப கடலில் விழுந்தது போன்று கரையேற இயலாதபடி ஆழ்ந்த காதலே உருவமான தன்னுள்ளே ஆழ்ந்து. (அலப்பாய்) – திருவாய்மொழி (5-8-4) – உன்னைக் காண்பான் நானலப்பாய் - என்பதற்கு ஏற்ப தனக்கு இன்பமான ஸர்வேச்வரனைக் காணவேண்டும் என்று தவிக்க வைத்து. – (த்யாக நிஷ்டா ஹாநி ஆக்கி) – திருவாய்மொழி (5-8-3) – உன்னாலல்லால் யாவராலுமொன்றும் குறை வேண்டேன் - என்பதற்கு ஏற்ப மற்ற உபாயங்கள் அனைத்தையும் கைவிட்டு அவன் மட்டுமே உபாயம் என்று உறுதியுடன் உள்ள நம்மாழ்வாரை, திருவாய்மொழி (5-3-9) - குதிரியாய் மடலூர்தும் - என்றும், திருவாய்மொழி (5-3-10) - யாமடலூர்ந்து மெம்மொழி யங்கைப் பிரானுடைய தூமடல் தண்ணந்துழாய் மலர் கொண்டு சூடுவோம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப கைவிட்ட உபாயத்தில் ஈடுபடும்படி வைத்து, இவருடைய “மற்ற உபாயங்களைத் துறந்தார்” என்ற நிலைக்குக் கேட்டினை ஏற்படுத்தியும். (ஸ்வீகார நிஷ்டா ஹாநி ஆக்கி) – திருவாய்மொழி (5-7-10) – ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் - என்றும், திருவாய்மொழி (5-8-1) – கழல்களவையே சரணாகக் கொண்ட - என்றும், திருவாய்மொழி (5-9-11) – அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் – என்றும், திருவாய்மொழி (5-10-11) - நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் – என்றும், திருவாய்மொழி ( 6-10-10) – அடிக்கீழமர்ந்து புகுந்தேனே – என்றும் அடுத்தடுத்து நம்மாழ்வ்வார் ப்ரபத்தியைச் செய்யும்படிச் செய்வதாகையாலே, லக்ஷ்மீ தந்த்ரம் (17) - ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: க்ருதோயம் தாரயேந்நரம் - சாஸ்த்ரங்கள் கூறுவதான இந்த ப்ரபத்தி என்பது ஒருமுறை மட்டுமே இயற்றப்பட்ட வேண்டியதாய், பிறவிக்கடலைத் தாண்ட வைப்பதாய் - என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (18-33) – ஸக்ருதேவ ப்ரபந்நாய - ஒருமுறை ப்ரபத்தி செய்தவன் விஷயத்தில் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டிய ப்ரபத்தியின் நிலைக்குக் கேட்டினை ஏற்படுத்தியும். – (ஸத்தா போக வ்ருத்தி உபகரணம் ஆவது ஒன்று) - பகவத் விஷயத்தைத் தவிர மற்றொன்றை நினையாமை என்றும், அவ்விதம் எண்ணினால் தனது இருப்புக்குக் களங்கும் என்றும், அந்த விஷயம் அல்லாமல் இரண்டாவது என்று ஏதும் இல்லை என்றும் இருக்கின்ற நம்மாழ்வார்க்கு, எப்போதும் அவன் விஷயம் குறித்து எண்ணியபடி உள்ள நிலைக்குக் காரணமாக உள்ளதால் இருப்பு என்ற நிலைக்கும்; திருவாய்மொழி (6-7-1) - எல்லாம் கண்ணன் – என்று உள்ள நம்மாழ்வாருக்கு, அவனை அனுபவிக்க வேண்டும் என்று மேன்மேலும் ஆர்வத்தை அதிகரிப்பதால் இன்பத்துக்கும்; திருவாய்மொழி (3-3-1) - வழுவிலாவடிமை செய்யவேண்டும் – என்று உள்ள நம்மாழ்வாருக்கு, அனைத்து விதங்களிலும் கைங்கர்யத்தின் சுவையை அனுபவிப்பதற்கு உறுப்பாகையால் கைங்கர்யத்துக்கும் உதவியாக உள்ளது ஒன்றே என்று கருத்து [அதாவது மேலே கூறப்பட்ட “உலர்த்தி, தவிக்க வைத்து, புலம்ப வைத்து” என்று பலவிதமான நிலைக்கு ஆளாக்குவது இந்தப் பக்தி ஒன்றே ஆகும் என்று கருத்து]. – அடுத்து “ஸத்தா போக வ்ருத்தி உபகரணம்” என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். நாகிஞ்சித் குர்வதச் சேஷத்வம் - தொண்டு செய்யாத எந்த ஒரு ஜீவனுக்கும் அடிமை என்னும் தகுதி இல்லை - என்பதற்கு ஏற்ப, கைங்கர்யம் செய்யாத ஆத்மாவுக்கு அடிமைத்தனம் என்பது இல்லை என்பதால், “அடிமைத்தனம்” என்பதை மட்டுமே கொண்டு அறியத்தக்கவனாகிய ஜீவாத்மாவுடைய இருப்பு என்பது கைங்கர்யம் செய்வதால் மட்டுமே கைகூடுவதால், ஜீவாத்மாவின் இருப்பு என்பதற்குக் காரணமாகவும்; திருவாய்மொழி (2-9-4) – தனக்கேயாக – என்றும், திருவாய்மொழி (10-3-9) – உன்றன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும் – என்றும், ஸ்தோத்ரரத்னம் (46) – கதா ப்ரஹர்ஷ யிஷ்யாமி - நான் உன்னை எப்போதும் மகிழ்விப்பேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப இந்தக் கைங்கர்யம் என்பதே மிகவும் உயர்ந்த ப்ரயோஜனம் ஆகும் என்று செய்யப்படுவதால், அவனுக்கு இன்பத்தை விளைவிப்பதான கைங்கர்யத்தைச் செய்வதற்கு உதவியாகவும் உள்ள ஒன்று – எனவும் பொருள் கூறலாம். ஆகவே நம்மாழ்வாருடைய பக்தி என்பது ஒரு உபாயத்தைக் கைக்கொண்டு, அதனால் விளைந்தது அல்ல. இவராக விரும்பிப் பெற்றுக் கொண்டதும் அல்ல. இவருடன் அதுவும் கூடவே பிறந்து, இவரை எப்போதும் தழுவி நிற்பதாகவும், இவருடைய இருப்பு – இன்பம் - கைங்கர்யம் ஆகியவற்றுக்கு உதவியாக இருப்பதும் அந்தப் பக்தி ஒன்றே என்கிறார்.