Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 99)
இரண்டாம் ப்ரகரணம்
ஜந்மாந்தர ஸஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்க் குளித்து ஓதி உருவெண்ணு மந்தி ஐவேள்வி அறுதொழில்களால் மிக்கு ஊன்வாடப் பொருப்பிடைத் தாம் வருந்தித் துன்ப வினைகளை விடுத்து விவேக சமாதிகள் வளர எட்டு நீக்கி எட்டுமிட்டு எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவகார்யம் செய்து உள்ளம் தூயராய் வாரிப் புன்புலவகத்தினுள் இளைப்பினையடைவே விளக்கினைக் கண்டு யோகநீதி நண்ணி அறம் திகழுமறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெரும் சுடரைக் கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய் கனவில் மிக்க தர்சந ஸமமாய் ஆகத்துப் புல்கு மத்யர்த்த ப்ரியமாய் வைகும் சிறப்பு விட்டுக் குற்றேவலென்னாத அநந்ய ப்ரயோஜநமாய் வேதநோபாஸந ஸேவாத்யாநாதிகளென்று சொல்லுமது ஸாத்ய ஸாதந பக்தியாக சாஸ்த்ர ஸித்தம்.
(ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி: நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும், “ஒன்றி நின்று நற்றவம் செய்தூழி யூழிதோறெலாம்” என்றும் சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே த்ரிவித பரித்யாக பூர்வகமாக பகவத் ஸமாராதந ரூபேண அநுஷ்டிதங்களான ஸத் கர்மங்களாலே, (க்யாத குலங்களிலே பிறந்து) “சுசீநாம் ஸீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே, அதவா யோகிநாமேவ குலே மஹதி தீமதாம்” என்றும், “ஜநித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசஸாம் சுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்வ ஸ்திதி விதாம்” என்றும் சொல்லுகிறபடியே தத்வ வித்துக்களாய், பரமயோகிகளென்று ஜகத்ப்ரஸித்தரானவர்களுடைய குலங்களிலே பிறந்து, (எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்) “தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்” என்கிறபடியே பகவத்விஷயத்தை அநுஸந்தித்து தத்விஷயமான சப்தங்களை லிகிப்பது, வாசிப்பது, பிறர் சொல்லக் கேட்பதாய்க் கொண்டு இந்த சாஸ்த்ராப்யாஸ முகேந பிறந்த தத்வ ஜ்ஞானத்தையுடையராய், (குளித்தோதி யுருவொண்ணும் அந்தி யைவேள்வி யறு தொழில்களால் மிக்கு) “குளித்து மூன்றனலை யோம்பும்” என்கிறபடியே உபாஸநாங்கமான நித்யகர்மாநுஷ்டாநோப யுக்தமாய் இருந்துள்ள காயசுத்யர்த்தமான ஸ்நாநத்தைப் பண்ணி, “ஓதியுருவெண்ணுமந்தி” என்றும், “ஐவேள்வி” என்றும் “அறு தொழில்” என்றும் சொல்லுகிற ஸந்த்யாவந்தந காயத்ரீ ஜபமென்ன, தேவயஜ்ஞ பித்ருயஜ்ஞ பூதயஜ்ஞ மநுஷ்யயஜ்ஞ ப்ரஹ்மயஜ்ஞங்க ளாகிற ஷட்கர்மங்களென்ன, இப்படி யிருந்துள்ள நித்ய நைமித்திக கர்மாநுஷ்டானங்களால் பரிபூர்ணராய், (ஊன்வாடப் பொருப்பிடைத்தாம் வருந்தி) “ஊன்வாட வுண்ணாதுயிர் காவலிட்டு” என்றும், “பொருப்பிடையே நின்றும் புனல் குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவும்” என்றும், “வீழ் கனியுமூழிலையு மென்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி” என்றும் சொல்லுகிறபடியே நித்ய கர்மாதிகளை அவிகலமாக அநுஷ்டிக்கையாலே தபச்சர்யா யோக்யதை பிறந்தவாறே காயசோஷணார்த்தமாக அந்நத்தைக் குறைத்து ப்ராண தாரணத்துக்குத் தக்கவளவாக்கி, உஷ்ண காலங்களில் பர்வதாக்ரத்திலும் பஞ்சாக்நி மத்யத்திலும் நின்றும், சீத காலங்களில் அறாக்கயமான தடாகத்திலே மூழ்கிக் கிடந்தும் ஜீர்ண பர்ண பலாசநராயும், இப்படி தபச்சர்யையாலே சரீரத்தை சோஷிப்பித்து, (துன்ப வினைகளை விடுத்து) கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டானத்தாலே, “மேவு துன்ப வினைகளை விடுத்து” என்கிறபடியே திலதைலாதிவத் ஆத்மாவோடே பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற துக்க ஹேதுவான பாபங்களை “தர்மேண பாபமபநுததி” என்கிறபடியே போக்கி, (விவேக சமாதிகள் வளர) இப்படி ப்ரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனச்சுத்தி ஹேதுவான விவேகாதி ஸப்தகமும், “சம தம நியதாத்மா ஸர்வபூதாநுகம்பீ” இத்யாத்யுக்த சமதமாதிகளும் அபிவ்ருத்தமாக. – (குறிப்பு - கடந்த பத்தியில் “விவேகம் போன்ற ஏழு தன்மைகள்” என்று கூறப்பட்டது. அவையாவன - விவேகம், விமோகம், அப்யாஸம், க்ரியை, கல்யாணம், அநவஸாதம் மற்றும் அநுத்தர்ஷம் போன்றவை ஆகும். இவை இப்போது விளக்கப்படுகின்றன) இதில் விவேகமாவது – “ஜாத்யாச்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத் காயசுத்திர் விவேக:” என்கிறபடியே ஜாதிதுஷ்டமும் ஆச்ரயதுஷ்டமும் நிமித்ததுஷ்டமு மன்றிக்கே யிருந்துள்ள அன்னத்தாலுண்டான காயசுத்தி. ஜாதி துஷ்டங்களாவன களஞ்ஜக்ருஞ்ஜநாதிகள். ஆச்ரயதுஷ்டமாவது அபிசஸ்த பதித சண்டாளாதிகளுடைய த்ரவ்யம். ஆச்ரயமென்று த்ரவ்யஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது. நிமித்ததுஷ்டமாவது உச்சிஷ்ட கேசாத்யுபஹதமானது. இந்த த்ரிவித தோஷமுமில்லாத ஆஹாரத்தின் விவேசந பலமான காயசுத்தியிலே விவேக சப்தம் உபசாரேணோக்தம். அன்றிக்கே, விவிக்தாஹார ஸேவையாலே ராஜஸ தாமஸாஹார ஆப்யாயித தேஹத்திற் காட்டில் ஸ்வதேஹத்தினுடைய விவேசனம் விவேகமென்னவுமாம். சுத்தியாவது அசுத்தேப்யோ விவேசநமிறே, “காயசுத்தி:” என்கிறவிடத்தில் காயசப்தத்தால் அந்த:கரணத்தைச் சொல்லுகிறது. “ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி:” என்றிறே ச்ருதி சொல்லிற்று. ஸத்வமாவது அந்த:கரணமிறே. “அபயம் ஸத்வ ஸம்ஸுத்தி:” என்றும், “ஸத்வாநுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி” என்றும் சொல்லுகிறவிடங்களில் ஸத்வம் அந்த:கரணமென்று, ஸத்வசப்தம் அந்த:கரணவாசியாக பாஷ்யகார ரருளிச்செய்தாரிறே. ஆகையிறே விவேகமாவது “ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி:” என்கிறபடியே அந்த:கரண சுத்திக்கடியான அந்நசுத்தியென்று ஆச்சான்பிள்ளை யருளிச்செய்தது. – விமோகமாவது “விமோக: காமாநபிஷ்வங்க:” என்கிறபடியே காமத்தில் அநபிஷ்வங்கம். யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாமல் நிற்கமாட்டான், அந்த விகாரம் அபிஷ்வங்கம். அதில்லாமை அநபிஷ்வங்கம். “காமாத் க்ரோதோபி ஜாயதே” இத்யாதி வசநத்தாலே க்ரோதாத்யபாவமும் இவ்விடத்திலே பலிதம். அப்யாஸமாவது, “ஆரம்பண ஸம்சீலநம் புந புநரப்யாஸ:” என்கிறபடியே த்யாநாலம்பநமான வஸ்துவிலே பலகாலும் பரிசீலனம் பண்ணுகை. ஆரம்பணமென்றது ஆலம்பனமென்றபடி. இவ்விடத்தில் ஆலம்பனமாவது சுபாச்ரயம். க்ரியையாவது “பஞ்ச மஹாயஜ்ஞாத் யநுஷ்டாநம் சக்தித: க்ரியா” என்கிறபடியே பஞ்சமஹாயஜ்ஞாதி நித்யகர்மங்களை வல்லவளவும் அநுஷ்டிக்கை. – கல்யாணமாவது, “ஸத்யார்ஜவ தயா தாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி” என்கிறபடியே ஸத்யம், ஆர்ஜவம், தயை, தானம், அஹிம்ஸை, அநபித்யை ஆகிறவிவை. இவற்றில், ஸத்யம் - பூதஹிதம், ஆர்ஜவம் – மநோ வாக்காயாநா மைகரூப்யம். தயை – ஸ்வார்த்த நிரபேக்ஷ பரது:க்கா ஸஹிஷ்ணுத்வம், தாநம் – லோபராஹித்யம், அஹிம்ஸை – கரண த்ரயேண பரபீடா நிவ்ருத்தி:, அபித்யை – பரகீயே ஸ்வத்வபுத்தி:, அன்றிக்கே நிஷ்ப்பல சிந்தையாதல், பர க்ருதாபகார சிந்தை யாதலாகவுமாம், அதில்லாமை - அநபித்யை. – அநவஸாதமாவது, “தேச கால வைகுண்யாத் சோகவஸ்த்வாத் யநுஸ்ம்ருதேச்சதஜ்ஜம் தைந்யமபாஸ்வரத்வம் மநஸோவஸாத:” என்கிறபடியே தேச காலங்களுடைய வைகுண்யத்தாலும், சோகஹேதுவாயும் பயஹேதுவாயுமுள்ள வஸ்துக்களின் அநுஸ்ம்ருதியாலுமுண்டான தைந்யமாகிற மநஸ்ஸினுடைய அபாஸ்வரத்வம் அவஸாதமாகையாலே, அதினுடைய விபர்யயம். சோகவஸ்துவென்றது சோக நிமித்த வஸ்துவென்றபடி; அதாவது அதீதமான புத்ரமரணாதி. ஆதி சப்தத்தாலே பய நிமித்தமான ஆகாமிவஸ்து விவக்ஷிதம். சோகம் – அதீத விஷயமாய், பயம் - ஆகாமி விஷயமாயிறேயிருப்பது. அபாஸ்வரத்வமென்கிறவிது - தைந்ய சப்த விவரணம். தைந்யமாவது – அபீஷ்ட கார்ய ப்ரவ்ருத்த்ய க்ஷமத்வம். பாஸ்வரத்வ விரோதியென்று தைந்ய விசேஷணமாகவுமாம். அநுத்தர்ஷமாவது – “தத் விபர்ய யஜா துஷ்டிருத்தர்ஷ:” என்கிறபடியே தேசகால ஸாத்குண்யத்தாலும் ப்ரியவஸ்த்வாத் யநுஸ்ம்ருதியாலு முண்டான துஷ்டி உத்தர்ஷமாகையாலே, அதினுடைய விபர்யயம்; அதாவது – ஹர்ஷஹேதுக்க ளுண்டானாலும் அதிப்ரீதனாகாதொழிகை. இனி சமாதிகளில். சமமாவது - அந்த:கரண நியமநம். தமமாவது – பாஹ்ய கரண நியமநம். “சமச் சித்த ப்ரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹ:” என்னக் கடவதிறே. “க்ஷமா ஸத்யம் தமச்சம:” என்கிறவிடத்தில், “தமோ பாஹ்ய கரணாநாமநர்த்த விஷயேப்யோ நியமநம்; சம: - அந்த:கரணஸ்ய ததாவித நியமநம்” என்றிறே பாஷ்யகார ரருளிச்செய்தது. மாறிச் சொல்லுமிடங்களுமுண்டு. ஆத்மகுணங்களில் ப்ரதானங்களிறே இவை. “சாந்தோதாந்த உபரதஸ் திதிக்ஷு: ஸமாஹிதோ பூத்வா ஆத்மந்யே வாத்மாநம் பச்யேத்” என்கையாலே உபாஸநத்திலிழியுமவனுக்கு ப்ரதமாபேக்ஷிதங்கள் இவை யாகவிறே ச்ருதியும் சொல்லிற்று. மற்றுமுண்டான ஆத்மகுணங்களுக்கு யதாயோகம் அர்த்தம் கண்டு கொள்வது. ஆக இப்படியிருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவ்ருத்தமாய் வளர. (எட்டு நீக்கி) “ஈனமாயவெட்டு நீக்கி” என்று ஜ்ஞாநஸங்கோசகதயா ஆத்மாவுக்கு குறையான அவித்யாதிகளைந்தும், சரீர ஸம்பந்த ப்ரயுக்தமான தாபத்ரயங்களுமாகிற எட்டையும் போக்கி. “துன்பவினைகளை விடுத்து” என்று கீழேயும் கர்ம விமோசநம் சொல்லிற்றேயென்னில்; அங்குச் சொல்லிற்று - ஜ்ஞாநோத்பத்தி விரோதி ப்ராசீந கர்ம மாத்ரமாகையால் விரோதமில்லை; அன்றிக்கே ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணுவதான காம க்ரோத லோப மோஹ மத மாத்ஸர் யாஜ்ஞாநாஸூயைக ளாகிற எட்டையும் போக்கியென்னவுமாம். காமமாவது - அர்த்தித்த பதார்த்தம் அநுபவித்தல்லது நிற்கவொண்ணாத தசை. க்ரோதமாவது – அதின் கார்யமாய் அர்த்தித்த பதார்த்தாலாபத்தில் ஸந்நிஹிதர் பக்கல் பிறக்கும் சீற்றம். லோபமாவது – ஸந்நிஹித பதார்த்தத்தி லதிப்ராவண்யம். மோஹமாவது - கர்த்தவ்யாகர்த்தவ்யங்களை விவேகிக்க மாட்டாதொழிகை. மதமாவது – அர்த்திதார்த்த லாபத்தால் வரும் களிப்பு. மாத்ஸர்யமாவது - ப்ரஸம்ருத்தி பொறாமையை அநுஷ்டாந பர்யந்தமாக நடத்துகை. அஜ்ஞானமாவது - இவற்றால் மேல்வருமனர்த்தம் நிரூபியாமை. அஸூயையானது - குணங்களிலே தோஷத்தை ஆவிஷ்கரிக்கை. ஏவம் பூதங்களான விவற்றைப் போக்கி யென்றபடி. – (எட்டுமிட்டு) “இனமலரெட்டுமிட்டு” என்றும், “கந்தமாமல ரெட்டுமிட்டு” என்றும் சொல்லுகிறபடியே ஓரோவக்ஷரங்கள் பரிமளோத்தரமான புஷ்பம்போலே அவனுக்கு போக்யமாம்படி யிருக்கையாலே அஷ்டவிதமான புஷ்பத்தை ஸமர்ப்பிப்பாரைப் போலே திருமந்த்ரத்தை யநுஸந்தித்து. “அவன் பெயரெட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்றும், “ஆர்வமோடிறைஞ்சி நின்றவன் பெயரெட்டெழுத்தும் வாரமாக வோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்றும் சொல்லக் கடவதிறே. அன்றிக்கே “அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: ஸர்வ பூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத: ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்யாநம் புஷ்பம் ததைவச ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்” என்கிறபடியே அஹிம்ஸாத் யஷ்டவித புஷ்பங்களையு மிட்டென்றுமாம். கீழே “விவேக சமாதிகள்” என்றதிலந்தர்ப்பூதங்களானவை இதிலேயும் வந்ததாகிலும், ஈச்வரனுக்கு இவற்றை போக்யத்வேந அநுஸந்தித்து அநுஷ்டிக்கையைச் சொல்லுகிறதாகையாலே விரோதமில்லை. ஆகையிறே இவற்றைப் புஷ்பஸமர்ப்பணமாகச் சொல்லுகிறது. – (எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவகாரியம் செய்து) “எட்டினாய பேத மோடிறைஞ்சி” என்கிறபடியே “மநோ புத்த் யபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே கூர்மவச்சதுர: பாதாந் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்” என்கிறபடியே பக்நாபிமாநனாய் விழுகையும், மநோபுத்திகளுக்கு ஈச்வரனே விஷயமாகையும், பாத த்வயங்களும் கர த்வயங்களும் சிரஸ்ஸும் பூமியிலே பொருந்துகையுமாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி, “பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து”, “சாந்தோடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்லவாய்ந்து கொண்டு” என்கிறபடியே புஷ்பாங்கராகாதிகளான ஸமாராதநோபகரணங்களை பல ஸங்க கர்த்ருத்வங்களாகிற துராலும் மயிரும் புழுவும் படாதபடி ஆராய்ந்து மிகவும் ஸம்பாதித்துக் கொண்டு “தேவகாரியம் செய்து” என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைச் செய்து. (உள்ளம் தூயராய்) “ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளம் தூயராய்” என்கிறபடியே, நித்ய கர்மாநுஷ்டாநம் தொடங்கி பகவதாராதந பர்யந்தமாகப் பண்ணும் த்ரிவித பரித்யாக பூர்வகமான கர்மாநுஷ்டாநந்தாலும் பகவத்குணாநுஸந்தாநத்தாலும், “கஷாயே கர்மபி: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்த்ததே” என்கிறபடியே ஜ்ஞாநயோகார்ஹமாம்படியே ம்ருதித கஷாயராகையாலே பரிசுத்தாந்த:கரணராய். (வாரிப் புன்புல வகத்தி னுளிளைப்பினை யடைவே விளக்கினைக் கண்டு) “ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதாவந்தம் ப்ரமாதிநம், ஜ்ஞாநாங்குசேந க்ருஹ்ணீயாத் வச்ய மிந்த்ரிய தந்திநம்” என்று விஸ்தீர்ணமான விஷயாடவியிலே ஓடாநிற்பதாய், அகப்பட்டாரைக் கொல்லுமதான இந்த்ரியமாகிற வானையை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகிற அங்குசத்தாலே வச்யமாகப் பண்ணுவானென்கிறபடியே. “வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும் சேரி தரியாமற் செந்நிறீஇ” என்று மதித்தவானைகளைத் தண்ணீரிலே செறுப்பிக்குமாபோலே இந்த்ரியங்களாகிற மதஹஸ்திகளை விஷயாநுபவ மாகிற போகத்தைத் குலைத்து. அவ்வளவுமன்றிக்கே விஷயங்கள் நடையாடுமிடத்தில் போகாதே ப்ரத்யக் வஸ்து விஷயமாகையாகிற செவ்வையிலே நிறுத்தி யென்றும், “புன்புல வழியடைத் தரக்கிலச்சினை செய்து நன்புலவழி திறந்து ஞான நற்சுடர் கொளீஇ” என்று அல்பாஸ்திரத்வாதி தோஷதுஷ்டமான க்ஷுத்ர விஷயங்களைப் பற்றிப்போகிற இந்த்ரிய மார்க்கத்தை நிரோதித்து அவற்றினுடைய க்ஷுத்ரதாநுஸந்தாநத்தாலே வாஸநாநு வ்ருத்தியு மறும்படி அத்தை உறைப்பித்து, விலக்ஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை ப்ரகாசிப்பித்து. நன்றான ஜ்ஞாந ப்ரபையை மிகவுமுண்டாக்கி யென்றும், “ஐம்புலனகத்தினுள் செறுத்து” என்று ச்ரோத்ராதீந்த்ரியங்கள் சப்தாதி விஷயங்களிற் போகாமே உள்ளேயடக்கி யென்றும் சொல்லுகிறபடியே நிக்ருஹீதேந்த்ரிய க்ராமராய், – “இளப்பினை யியக்கம் நீக்கி” என்கிற பாட்டில் சொல்லுகிறவடைவிலே “அவித்யாஸ்மிதா ராக த்வேஷாபி நிவேசா: பஞ்ச க்லேசா:” என்றும் சொல்லுகிற ச்லேசங்களுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து, “நாத்யுச்சரிதம் நாதிநீசம்” இத்யாதியில் சொல்லுகிறபடியே ஓராஸநத்தேயிருந்து, “ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவலோகயந்” என்னும்படியே நாஸாக்ரந்யஸ்த லோசநராய், ஓரளவில் நில்லாத இந்த்ரியங்களை ப்ரத்யக்காக்கி, த்யேயமான பகவத் விஷயத்திலே ஸ்நேஹத்தை வைத்து விடாம லநுஸந்தித்து, சுடர் விட்டுத் தோன்றுகிற ஜ்ஞாநத்தாலே ஸ்வயம் ப்ரகாசமான ஆத்மஸ்வரூபத்தை சாஸ்த்ரோக்த ப்ரகாரத்தாலே ஸாக்ஷாத்கரித்து ஸத்கர்மாநுஷ்டாநத்தாலே க்ஷீண பாபனாய், நிர்மலாந்த:கரண னானவனுக்கு பகவத் ஸாக்ஷாத்காரத்துக் குறுப்பாக விளையும் யோகஜந்ய ஜ்ஞாநந்தான் ப்ரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்துக் கொண்டிறே மேல்போவது. – “விளக்கினை விதியில் காண்பார்” என்கிறவிது பகவத் ஸாக்ஷாத்காரமாக பூர்வர்கள் வ்யாக்யாநம் பண்ணி வைத்தார்களாகிலும், இவர் ஆத்மபரமாகவே அருளிச் செய்தாரென்று கொள்ளவேணும்; பகவத் த்யாந தர்சநங்களை மேலே சொல்லுகையாலே “விதியில் காணும் ப்ரதம மத்யம தசைகளை” யென்று ஆத்மபரமாகவிறே கீழும் இவரருளிச் செய்தது. யோஜநா பேதங்களுண்டா யிருக்குமிறே. (யோகநீதி நண்ணி) “யோகநீதி நண்ணுவார்கள்” என்கிறபடியே யோகமாகிற உபாயத்தாலே கிட்டி. (அறத்திகழு மறையோர் மனந்தன்னு ளமர்ந்துறையும் அரும் பெருஞ்சுடரை) “மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி வன்புலன்களடக்கி யிடர்ப்பாரத் துன்பம் துறந்து இருமுப்பொழுதேத்தி யெல்லையில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம் கதியை” என்று கொலையும் சினமும் கொடுமையுமாகிற மறத்தால் விளங்கா நின்றுள்ள மநஸ்ஸை வாஸனையோடே போக்கி, பொய்யைத் தவிர்ந்து, வன்புலச்சேக்களைப் பட்டி புகாமே கட்டி மிக்க துக்கத்தை விளைப்பதான “பாரமாய பழவினையைப் பற்றறுத்து” ச்லாக்யமா யிருந்துள்ள ஆதிநடுவந்தியாகிற மூன்றுபொழுதிலுமேத்தி அளவிறந்த பழைய மர்யாதையிலே சிலவரால் கலக்கவொண்ணாதபடி நிலைநின்ற வைஷ்ணவர்களான ஆந்ருசம்ஸ் யோஜ்ஜ்வல சித்தர்க்குப் பரமப்ராப்யனானவனை யென்றும், “மறையோர் மனந்தன்னுள் விண்ணுளார் பெருமானை” என்று ப்ராஹ்மணருடைய ஹ்ருதயங்களைத் தனக்கு வாஸ ஸ்தாநமாக வுடையனா யிருக்கும் “அயர்வறு மமரர்க ளதிபதியை” என்றும், “மாதவமானவர் தங்கள் நிந்தை யமர்ந்துறைகின்ற வெந்தை” என்று மஹா தபஸ்ஸை யுடையரா யிருக்கும் மனுஷ்யர்களுடைய ஹ்ருதயங்களிலே அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியென்றும் சொல்லுகிறபடியே பரிசுத் தாந்த:கரணரான பரமயோகிகள் ஹ்ருதயங்களிலே “ஆரமார்வ னரங்கனென்னு மரும் பெரும் சுடரொன்றினைச் சேரும் நெஞ்சினர்” என்னும்படி ஆபரணாத் யலங்க்ருதமாய் அத்யுஜ்ஜவலமான விக்ரஹத்தோடே யெழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனை. (கண்கள் சிவந்தில்படியே மனவுட்கொண்டு) “கண்கள் சிவந்து” என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே அவயவசோபை ஆபரணசோபை ஆயுதசோபைகளோடே கூடி, காளமேக நிபச்யாமமாயிருந்துள்ள திவ்ய விக்ரஹத்துடனே “கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு” என்று அறிவுடையரான யோகிகளானவர்கள் தந்தாமுடைய ஹ்ருதயத்திலே கொண்டு என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்யாநம் பண்ணி, (நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய்) “நிரந்தரம் நினைப்பதாக” என்றும், “மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்” என்றும் சொல்லுகிறபடியே அந்த த்யாநத்துக்கு விச்சேதமும் விஸ்ம்ருதியுமற்று, “சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய்” என்று ஸர்வகாலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை யுடையராகையாலே தத் ஸம்ச்லேஷ வியோகைக ஸுகதுக்கராம்படி “ஸத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி:” என்கிறபடியே த்யேய வஸ்துவில் துடக்கறாமல் நடக்கும் த்ருவாநுஸ்ம்ருதியாய். (கனவில் மிக்க தர்சன ஸமமாய்) “கனவில் மிகக் கண்டேன்” என்று இந்த்ரியங்களால் கலக்கவொண்ணாதபடி மாநஸ ஜ்ஞாநத்தாலே அழகிதாகக் கண்டே னென்னலாம்படி “ஸா ச ஸ்ம்ருதிர் தர்சந ஸமாநாகாரா” என்கிறபடியே, அதுதான் ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமாய். (ஆகத்துப் புல்கு மத்யர்த்தப் ப்ரியமாய்) அப்படி தர்சந ஸமமானவதுதான், “நாடோறும் ஞாநத்தா லாகத்தணைப்பார்க்கு”, “ஆகத்தணைப்பா ரணைவரே”, “எல்லை யிலந் நலம் புல்கு”, “ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்” என்னும்படி அங்கநா பரிஷ்வங்கம் போலே “ப்ரியோ ஹி ஜ்ஞாந நோத்யர்த்த மஹம்” என்கிற ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும் அத்யர்த்த ப்ரியமாய். (வைகும் சிறப்புவிட்டுக் குற்றேவலென்னாத அநந்ய ப்ரயோஜநமாய்) “நின்புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென் றருளும் வான்” என்று உன்னுடைய கல்யாண குணங்களிலே விச்சேதமின்றியே சொல்லுகிற சிந்தையிலுங் காட்டில் இனிதோ நீ அவர்க்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்கும் பரமபதமென்றும், “உலகு படைத்தித்யாதி – அமுத வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு ஒரு பொருட்கசைவோரசைக … நல்வீடு பெறினும் கொள்ளவதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பு” என்று பரத்வ ஸௌலப்யாதிகளால் பரிபூர்ணனான ஸர்வேச்வரனுக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை அநுபவிக்கையிலுண்டான அபிநிவேசத்தாலே த்ரவீபூதமாய் ஓரவவியாக்கிக் காணவொண்ணாதபடி மங்கின ஆத்மவஸ்துவிலே அந்த ஆதரமடியாகப் பிறந்த விலக்ஷணமான ஸங்க காமாத்யவஸ்தைகளையுடைய பக்தியால் விளைகிற நிரதிசய ரஸத்திலே உளனாகையாகிற லாபத்தை விட்டு க்ஷுத்ர புருஷார்த்தங்களுக்கு க்லேசப்படுவார் அங்ஙனே க்லேசப்படுக; ச்லாக்யமான ஐச்வர்யம், அதில் விலக்ஷணமான ஆத்மாநுபவம், அவ்வளவன்றிக்கே பரமபுருஷார்த்த லக்ஷணமான மோக்ஷம், இவற்றைப் பெறுமளவானாலும் ஸாராஸார விவேகஞ்ஜரானவர்களுடைய ஹ்ருதயத்தில் அவற்றை ஸ்வீகரிக்கவும் நினைவுண்டோவென்றும், “உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்றடிக் கீழ்க் குற்றேவலன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு” என்று உன்னுடைய ஸ்மர்யமாண தசையே தொடங்கி இனிதான குணங்களிலே பழுத்தொழிந்தேன்; பின்பு ஒருகால் பிறவாமை பெற்றுத் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணுகையன்று எனக்கு வேண்டுவது, பிறந்த ஜ்ஞானத்துக்கு மறப்பில்லாமை எனக்கு வேண்டும் தனமானது - என்றும் சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாநத்தாலே தேசவிசேஷத்தி லநுபவத்தையு முபேக்ஷிக்கும்படி தானே பரம ப்ரயோஜநமாம்படி ரஸிக்கையாலே அநந்ய ப்ரயோஜனமாய். (வேதநோபாஸந ஸேவா த்யாநாதிகளென்று சொல்லுமது ஸாத்யஸாதந பக்தியாக சாஸ்த்ர ஸித்தம்) வேதநமென்றும், உபாஸனமென்றும், ஸேவையென்றும், த்யாநமென்றும் ஏவமாதி சப்தங்களாற் சொல்லப்படுகிற பக்தியானது “உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய” என்கிறபடியே கர்மஜ்ஞான ஸம்ஸ்க்ருதாந்த:கரணனுக்குப் பிறக்கும தொன்றாகையாலே சேதந ஸாத்யமாய் பகவத்ப்ரஸாதநோபாயதயா தத் ப்ராப்தி ஸாதநமான பக்தியான ஸோபப்ரீம்ஹண வேதாந்த சாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட தென்கை.
(ஜந்மாந்தர ஸஹஸ்ர நல்தவங்களாலே) - ஸ்ம்ருதியில் – ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி: நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே - பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கர்மம் மற்றும் ஈட்டப் பெற்ற ஞானம், பக்தி போன்றவை மூலம் பாவம் அனைத்தும் அழிந்ததன் விளைவாகவே ஒருவனுக்கு க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது - என்றும், திருச்சந்தவிருத்தம் (75) – ஒன்றி நின்று நற்றவம் செய்தூழி யூழிதோறெலாம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான முற்பிறவிகளில், மூன்றுவிதமான த்யாகங்களை முன்னிட்டு [இவை பகவானுக்குச் செய்யும் ஆராதனத்தில் பலன் எதிர்பாராமல் இருத்தல், பற்று வைக்காமல் இருத்தல், இதனை நான் செய்கிறேன் என்று சிந்திக்காமல் இருத்தல் என்பதாகும்] ஸர்வேச்வரனைக் குறித்து செய்து வந்த ஆராதனங்கள் என்று வடிவத்தில் உள்ளதான தூய்மையான கர்மங்களால், (க்யாத குலங்களிலே பிறந்து) - கீதையில் ( 6-41) – சுசீநாம் ஸீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே, அதவா யோகிநாமேவ குலே மஹதி தீமதாம் – யோகத்திலிருந்து நமுவியர்கள் ஸ்வர்க்கம் போன்ற இடங்களில் வசித்த பின்னர் மறுபடியும் நல்லொழுக்கம் உள்ள செல்வந்தர்கள் வீட்டில் பிறக்கிறார்கள் - என்றும், ஸ்தோத்ரரத்னம் (61) – ஜநித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசஸாம் சுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்வ ஸ்திதி விதாம் - உலகில் உள்ளவர் அறியும்படியான கீர்த்தியைப் பெற்றவர்களும், தூய்மையானவர்களும், யோகம் இயற்றியபடி உள்ளவர்களும், குணம் – புருஷன் - ப்ரக்ருதி ஆகியவற்றினைக் குறித்து உள்ளது உள்ளபடி அறிந்தவர்களும் ஆகியவர்களுடைய குலத்தில் நான் பிறந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப [முன்பு கூறப்பட்ட கர்மங்களின் விளைவாக] தத்வஞானிகள் மற்றும் பரமயோகிகள் என்று உலகினரால் போற்றப்படுவர்களுடைய குலங்களில் பிறந்து. – (எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்) - நான்முகன் திருவந்தாதி (63) – தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் - என்பதற்கு ஏற்ப பகவத் விஷயத்தை எப்போதும் எண்ணியபடி இருந்து, அவனைக் குறித்துள்ள சொற்களை எழுதுதல், படித்தல், மற்றவர்கள் கூறக் கேட்டல் என்பதைச் செய்தபடி இருந்து, இப்படிப்பட்ட சாஸ்த்ர ரூபமான பயிற்சிகள் மூலமாக ஏற்பட்ட மெய்ஞ்ஞானத்தைக் கொண்டவர்களாக, (குளித்து ஓதி உருவெண்ணும் அந்தி ஐவேள்வி அறுதொழில்களால் மிக்கு) – திருமாலை (25) - குளித்து மூன்று அனலை ஓம்பும் - என்பதற்கு ஏற்ப உபாஸனம் செய்வதற்கு அங்கமாக உள்ளதான நித்ய கர்மாநுஷ்டானங்களுக்கு அடிப்படையாக உள்ள சரீரத்தைத் தூய்மையாக்குவதற்காக நீராடி, முதல்திருவந்தாதி (33) – ஓதி உருவெண்ணும் அந்தி – என்று கூறப்படுவதான ஸந்த்யாவந்தனம் மற்றும் காயத்ரீஜபம்; பெரியதிருமொழி (3-8-4) – ஐ வேள்வி - என்று கூறப்படுகின்ற தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், பஞ்சபூத யஜ்ஞம், மனுஷ்ய யஜ்ஞம், ப்ரஹ்ம யஜ்ஞம் என்னும் ஐந்துவிதமான மஹாயஜ்ஞங்கள்; திருவெழுகூற்றிருக்கை – அறு தொழில் - என்பதற்கு ஏற்ப உள்ளதான வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் அளித்தல், தானம் பெறுதல் என்னும் ஆறுவிதமான கர்மங்கள் என்பதான நித்ய நைமித்திக கர்மங்களை எப்போதும் இயற்றியவர்களாக. – (ஊன்வாடப் பொருப்பிடைத்தாம் வருந்தி) – பெரியதிருவாய்மொழி (3-2-1) – ஊன்வாட உண்ணாது உயிர் காவலிட்டு – என்பதற்கு ஏற்ப நித்யகர்மங்களை எந்தவிதமான குறைகளும் இன்றிச் செய்வதால், தவம் இயற்றுதலுக்குரிய தகுதி ஏற்படுகிறது; இதன் காரணமாக, சரீரம் வாழும்விதமாக அதற்கு அளிக்கிற உணவினைக் குறைத்து, அத்தகைய உணவை உயிர் வாழத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொண்டு, மூன்றாம் திருவந்தாதி (76) – பொருப்பிடையே நின்றும் புனல் குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவும் - என்பதற்கு ஏற்ப உஷ்ணமான காலங்கள் வந்தவுடன் மலை உச்சியிலும், ஐந்து அக்னிகளின் நடுவிலும் நின்றும், மழைக்காலங்களில் அறாக்யமான நீர் நிலைகளில் மூழ்கிக் கிடந்தும், பெரியதிருமடல் – வீழ் கனியுமூழிலையு மென்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி - என்பதற்கு ஏற்ப தானாகவே விழுந்த இலை மற்றும் கனிகளை மட்டுமே உட்கொண்டு, இவ்விதமாகத் தவங்கள் இயற்றி, அதனால் சரீரத்தை வாடும்படிச் செய்து. (துன்பவினைகளை விடுத்து) - இதுவரை கூறப்பட்ட பலவிதமான கர்மாநுஷ்டானம் காரணமாக, திருவாய்மொழி (3-2-8) - மேவு துன்ப வினைகளை விடுத்து - என்பதற்கு ஏற்ப, எள்ளில் எண்ணெய் உள்ளது போன்று ஆத்மாவிடம் பிரிக்க இயலாதபடி உள்ளதான துக்கங்களுக்குக் காரணமான பாபங்களை, தைத்திரீயம் - தர்மேண பாபமபநுததி - அன்றாடம் செய்யும் கர்மங்களால் பாவம் போக்குகிறான் - என்பதற்கு ஏற்ப விலக்கி, (விவேக சமாதிகள் வளர) – தடையாக இருந்துள்ள பாபங்கள் விலகுவதன் காரணமாக, மனதின் தூய்மைக்குக் காரணமாக உள்ள விவேகம் போன்ற ஏழு தன்மைகளும் [இவை அடுத்த பத்தியில் உள்ளன], சம தம நியதாத்மா ஸர்வபூதாநுகம்பீ – மனதைத் தன்வசப்படுத்துதல், இந்த்ரியங்களை அடக்குதல் போன்றவற்றில் மனம் பொருந்தியவன் அனைத்து உயிர்களுடமும் கருணை உள்ளவனாகிறான் - என்பதற்கு ஏற்ப உள்ள தன்மைகளும் மேன்மேலும் வளர, இவற்றில் விவேகம் என்பது, போதாயந வ்ருத்தி - ஜாத்யாச்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத் காயசுத்திர் விவேக: - ஜாதி, ஆச்ரயம், நிமித்தம் என்ற மூன்று விதமான தோஷங்களும் இல்லாத உணவு மூலம் ஏற்படும் சரீர சுத்தம் விவேகம் - என்பதற்கு ஏற்ப ஜாதிதோஷம், ஆச்ரயதோஷம் மற்றும் நிமித்ததோஷம் போன்றவை இல்லாத உணவால் ஏற்படும் சரீரத் தூய்மை ஆகும். ஜாதிதோஷம் என்றால் வெங்காயம், காளான் போன்றவை; ஆச்ரயதோஷம் என்றால் மற்றவரால் இகழப்பட்டவன், தனது நிலையில் இருந்து தாழ்ந்தவன், சண்டாளன் ஆகியோர் தொடர்புடையவை, இங்கு ஆச்ரயம் என்றால் அந்தந்த பொருள்களுக்கான எஜமானனைக் குறிக்கிறது; நிமித்ததோஷம் என்றால் எச்சில், தலைமுடி போன்றவற்றுடன் கூடியவை. இத்தகைய மூன்றுவிதமான தோஷங்கள் இல்லாத உணவு எது என்று பகுத்தறிந்து, அதன் விளைவாக ஏற்படும் சரீரத்தூய்மை என்பதே விவேகம் எனப்படும். அதாவது இந்த மூன்று விதமான தோஷங்களும் இல்லாத உணவை உட்கொள்வதன் காரணமாக, ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகிய உணவுகளை உட்கொண்டு வளர்க்கப்பட்ட சரீரத்தைக் காட்டிலும், தன்னுடைய சரீரத்திற்கு உள்ள வேறுபாட்டினை பிரித்து அறியும் ஞானம் என்பது விவேகம் எனப்படுகிறது. சுத்தி என்றால், அசுத்தங்கள் எவை என்று உணர்ந்து, பிரித்து அறிதலாகும். “காயசுத்தி” என்ற பதத்தில் உள்ள “காய” என்பது இங்கு அந்தகரணத்தைக் கூறுவதாகவும் கொள்ளலாம். சாந்தோக்ய உபநிஷத்தில் - ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி: - ஸத்வகுணத்தை வளர்க்கும் உணவை உண்பவர்களுடைய ஸத்வம் தூய்மை பெறுகிறது - என்றது காண்க; இங்கு இறுதியில் உள்ள ஸத்வம் என்பது அந்தகரணம் ஆகும். கீதை (16-1) – அபயம் ஸத்வ ஸம்ஸுத்தி: - ஸத்வத்திற்குத் தூய்மை என்பது, பயம் இன்றி இருத்தல் ஆகும் – என்றும், கீதை (17-3) - ஸத்வாநுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி - ச்ரத்தை என்பது அவரவர்களுடைய ஸத்வத்திற்கு ஏற்றபடி அமைகிறது - என்றும் கூறுகின்ற இடங்களில் “ஸத்வம் = அந்தகரணம்” என்று ஸத்வம் என்ற பதம் அந்தகரணத்தைக் குறிக்கும் என எம்பெருமானார் அருளிச்செய்தார். ஆகையால்தான், “விவேகம் என்றால், சாந்தோக்ய உபநிஷத் – ஆஹார சுத்தௌ ஸத்வசுத்தி: - ஸத்வகுணத்தை வளர்க்கும் உணவை உண்பவர்களுடைய ஸத்வம் தூய்மை பெறுகிறது - என்பதற்கு ஏற்ப, அந்தகரணத்தின் தூய்மைக்கு அடிப்படை உணவின் தூய்மையே ஆகும்”, என்று ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தார். – அடுத்து விமோகம் என்பது என்ன? போதாயன வ்ருத்தி - விமோக: காமாநபிஷ்வங்க: - என்பதற்கு ஏற்ப, விமோகம் என்றால் காமத்தின் அநபிஷ்வங்கம்; அபிஷ்வங்கம் என்றால், தான் விரும்பிய ஒரு பொருளை அனுபவிக்காமல் நில்லாமை என்பதற்கு உறுப்பான விகாரம்; அத்தகைய விகாரம் இன்றி இருத்தல் அநபிஷ்வங்கம் ஆகும். கீதை (2-62) - காமாத் க்ரோதோபி ஜாயதே - காமம் காரணமாகவே க்ரோதம் ஏற்டுகிறது - என்பது போன்ற வரிகள் மூலம், க்ரோதம் இல்லாத தன்மையும் இங்கே கொள்ளப்பட வேண்டும். அடுத்து அப்யாஸம் என்றால் என்ன? போதாயந வ்ருத்தி – ஆரம்பண ஸம்சீலநம் புந புநரப்யாஸ: - என்பதற்கு ஏற்ப, த்யானத்திற்கு உறுப்பாக உள்ள வஸ்துவில் பலமுறை ஆழ்ந்திருத்தல். ஆரம்பணம் என்றால் ஆலம்பனம், அதாவது த்யானிக்கப்படும் வஸ்து என்று பொருள். அடுத்து க்ரியை என்றால் என்ன? போதாயந வ்ருத்தி - பஞ்ச மஹாயஜ்ஞாத் யநுஷ்டாநம் சக்தித: க்ரியா - ஐந்து வேள்வி போன்ற நித்யகர்மங்களைத் தனது சக்திக்கு இயன்ற அளவு இயற்றுதல் என்பது க்ரியை ஆகும். அடுத்து கல்யாணம் என்றால் என்ன? போதாயந வ்ருத்தி - ஸத்யார்ஜவ தயா தாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி - என்பதற்கு ஏற்ப ஸத்யம், ஆர்ஜவம், தயை, தானம், அஹிம்ஸை மற்றும் அநபித்யை ஆகியவை கல்யாணம் எனப்படும். ஸத்யம் என்றால் உயிர்களுக்கு நன்மையைச் செய்தல்; ஆர்ஜவம் என்றால் மனம், வாக்கு, சரீரம் ஆகியவற்றின் செயல்பாடு ஒரே போன்று இருத்தல்; தயை என்றால் தனக்காக எந்தப் பயனையும் கருதாமல் இருத்தல் மற்றும் மற்றவர்களுடைய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இருத்தல்; தானம் என்றால் கஞ்சத்தன்மை இன்றி இருத்தல், அஹிம்ஸை என்றால் மனம், வாக்கு, சரீரம் ஆகிய மூன்றாலும் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல்; அபித்யை என்றால் மற்றவர்கள் பொருளைத் தனது பொருள் என்று கருதாமை அல்லது பயனற்ற சிந்தனைகளைக் கொள்ளுதல் அல்லது மற்றவர்கள் தனக்குச் செய்த தீமைகளை எண்ணியபடி இருத்தல் ஆகும்; இவை இல்லாத தன்மை அநபித்யை ஆகும். அடுத்து அநவஸாதம் என்றால் என்ன? போதாயந வ்ருத்தி - தேச கால வைகுண்யாத் சோகவஸ்த்வாத் யநுஸ்ம்ருதேச்சதஜ்ஜம் தைந்யமபாஸ்வரத்வம் மநஸோவஸாத: – என்பதற்கு ஏற்ப இடம், காலம் ஆகியவற்றின் குணக்கேடு காரணமாகவும், சோகம் மற்றும் பயம் ஏற்படக் காரணமாய் உள்ள பொருள்கள் மீது வைத்துள்ள இடைவெளி இல்லாத நினைவு காரணமாகவும் ஏற்படுகின்ற மனதின் தெளிவற்ற நிலையாகும். மேலே உள்ள போதாயன வ்ருத்தியில் காணப்படும் “சோக வஸ்து” என்றால் துயரம் ஏற்படக் காரணமாக உள்ள பொருள், அதாவது முன்பு உண்டான புத்திர மரணம் போன்றவை ஆகும். அதே வரியில் உள்ள “வஸ்து ஆதி” என்பதில் காணப்படும் “ஆதி” என்பதன் மூலம் பயத்திற்குக் காரணமான “இனி நிகழ உள்ளது” என்று எண்ணும் எண்ணங்கள் கூறப்பட்டன. சோகம் என்பது முன்பே நிகழ்ந்த நிகழ்வால் ஏற்படுவது, பயம் என்பது இனி நிகழ உள்ள நிகழ்வை எண்ணி ஏற்படுவது என்று கருத்து. அபாஸ்வரத்வம் என்பது தைந்யம் என்ற சொல்லுடைய விளக்கம் ஆகும். தைந்யம் என்றால், தான் விரும்பிய செயலில் முயற்சி செய்யாமல் பொறுமையுடன் இருப்பதாகும். அல்லது அபாஸ்வரத்வம் என்பதை தைந்யம் என்பதன் அடைமொழியாகக் கொள்வர்; இவ்விதம் கொண்டால், தைந்யம் பாஸ்வரத்திற்கு விரோதி என்று கருத்து. பாஸ்வரம் என்றால் விளக்கம், அபாஸ்வரம் என்றால் தெளிவற்ற நிலை. அநுத்தர்ஷம் என்றால், போதாயந வ்ருத்தி – தத் விபர்ய யஜா துஷ்டிருத்தர்ஷ: - என்பதற்கு ஏற்ப உத்தர்ஷம் இல்லாத தன்மை; உத்தர்ஷம் என்றால், இடம் மற்றும் காலம் ஆகியவற்றின் உதவி காரணமாகவும், விரும்பிய பொருள் மீது கொண்டுள்ள தடையில்லாத நினைவு காரணமாகவும் ஏற்படும் மகிழ்ச்சி ஆகும்; ஆக மகிழ்ச்சி ஏற்படக் காரணங்கள் இருந்தாலும் அவற்றைக் கண்டு பெரிதும் மகிழாமல் இருத்தல் அநுத்தர்ஷம் ஆகும். அடுத்து சமம் போன்றவை என்ன? சமம் என்றால் அந்தகரணத்தை அடக்குதல், தமம் என்றால் புற இந்த்ரியங்களைத் தன்வசப்படுத்துதல். சமச் சித்த ப்ரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹ: - சமம் என்பது மனதினை அடக்குதல், தமம் எனபது இந்த்ரியங்களை அடக்குதல் - என்பது காண்க. க்ஷமா ஸத்யம் தமச்சம: - என்று கூறும் இடத்தில், தமோ பாஹ்ய கரணாநாமநர்த்த விஷயேப்யோ நியமநம்; சம: - அந்த:கரணஸ்ய ததாவித நியமநம் - தமம் என்பது இந்த்ரியங்களை ஐம்புலன்களுடைய விஷயங்களில் செல்லாமல் காத்தல், சமம் என்றால் அந்தகாரணத்தைக் காத்தல் - என்று அல்லவோ எம்பெருமானார் அருளிச்செய்தார். இவற்றை மாற்றிப் பொருள் கூறுவதும் உண்டு. ஆத்மகுணங்களில் முதன்மையானவை இந்த இரண்டுமே ஆகும். ப்ருஹத் உபநிஷத்தில் - சாந்தோதாந்த உபரதஸ் திதிக்ஷு: ஸமாஹிதோ பூத்வா ஆத்மந்யே வாத்மாநம் பச்யேத் - மனதைத் தன் வயப்படுத்தியவனும், இந்த்ரியங்களை அடக்கியவனும், பலன் அளிக்கவல்ல கர்மங்களில் விருப்பம் அற்றவனும், பொறுமை நிறைந்தவனும், எப்போதும் மனநிறைவு கொண்டவனும் ஆகியபடி இந்த உயிர்களிடமே பரமாத்மாவைக் காண்பான் - என்று கூறுவதற்கு ஏற்ப, உபாஸநத்தில் ஈடுபடும் ஒருவனுக்கு, இவை இரண்டுமே முதன்மையாக இருத்தல் வேண்டும் என்று ச்ருதியும் உரைத்தது காண்க. மேலும் உள்ள பல ஆத்மகுணங்களுக்கும் பொருந்தும் விதத்தில் பொருள் கொள்க. ஆக, இப்படியாக உள்ள விவேகம் போன்றவைகளும், சமம் போன்றவைகளும் மேன்மேலும் அதிகரித்து வளர. (எட்டும் நீக்கி) திருச்சந்தவிருத்தம் (114) – ஈனமாயவெட்டு நீக்கி - என்பதற்கு ஏற்ப ஞானச்சுருக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆத்மாவிற்குக் குறைபாடாக உள்ள அவித்யை போன்ற ஜந்தும் [ஐந்து = அவித்யை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேசம்], சரீரத் தொடர்பு காரணமாக ஏற்படும் மூன்றுவிதமான துன்பங்களும், ஆக மொத்தம் எட்டையும் நீக்கி. ஆனால், “துன்பவினைகளை விடுத்து” என்று முன்பு கூறப்பட்டதே என்று கேட்கலாம். இதற்கு விடை அளிக்கிறார். அங்கு கூறப்பட்டது - ஞானம் ஏற்படுவதற்குத் தடையாக உள்ள இரண்டு வினைகளைக் குறித்து மட்டுமே என்பதால், கூறுவது கூறல் என்ற தோஷம் இல்லை. அல்லது “எட்டு” என்பதற்கு ஆத்மாவிற்குக் கெடுதல் ஏற்படுத்துவதான காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம், அஜ்ஜானம், அஸூயை என்பதான எட்டையும் கொள்ளலாம். இவற்றை விலக்கி என்று பொருள். இவற்றை இப்போது விளக்குகிறார். காமம் என்றால் – விரும்பும் பொருள் கிடைத்தால் அன்றி ஓயாத நிலை; க்ரோதம் என்றால் – காமத்தின் செயல் காரணமாக விளைவதான தான் விரும்பிய பொருள் கிட்டாமல் போனால் அந்தப் பொருள் யாருக்குக் கிட்டியதோ அவர்கள் மீது ஏற்படும் கோபம்; லோபம் என்றால் - தன்னிடம் உள்ள பொருள்கள் குறித்த பேராசை; மோகம் என்றால் – செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதது எது என்று பிரித்து அறிய இயலாத நிலை; மதம் என்றால் - பொருள் போன்றவற்றைப் பெற்றதன் காரணமாக உண்டாகும் களிப்பு; மாத்ஸர்யம் என்றால் – மற்றவர்களிடம் உள்ள பலவற்றையும் நோக்கி பொறாமைப்படுதல் மற்றும் அதனை வெளியிலும் காண்பித்தல்; அஜ்ஞானம் என்றால் - இவற்றின் காரணமாக வரக்கூடிய தீயவற்றை உணராமை; அஸூயை என்றால் - நல்ல குணங்களிலும் குற்றங்களை ஆராய்தல். இப்படியாக உள்ள எட்டு தோஷங்களை நீக்கி. (எட்டுமிட்டு) – பெரியதிருமொழி (1-2-7) – இனமலரெட்டுமிட்டு – என்றும், பெரியதிருமொழி (3-5-6) – கந்தமாமல ரெட்டுமிட்டு – என்றும் கறுவதற்கு ஏற்ப, திருவஷ்டாக்ஷரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மிகுந்த பரிமளம் பொருந்திய மலர்கள் போன்று அவனுக்கு இன்பமாக உள்ளதன் காரணமாக, எட்டுவிதமான மலர்களைச் சமர்ப்பிப்பவர்கள் போன்று திருமந்திரத்தை ஓதி. திருச்சந்தவிருத்தம் (77) – அவன் பெயரெட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வானமாளவே – என்றும், திருச்சந்தவிருத்தம் (78) – ஆர்வமோடிறைஞ்சி நின்றவன் பெயரெட்டெழுத்தும் வாரமாக வோதுவார்கள் வல்லர் வானமாளவே – என்றும் கூறுவது காண்க. அல்லது இதற்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: ஸர்வ பூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத: ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்யாநம் புஷ்பம் ததைவச ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத் – மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமை முதல் மலர், இந்திரியங்களை அடக்குதல் இரண்டாவது மலர், அனைத்து உயிர்களிடமும் தயை காண்பிப்பது மூன்றாவது மலர், பொறுமை என்பது நான்காவது மலர், ஞானம் என்பது ஐந்தாவது மலர், தவம் என்பது ஆறாவது மலர், த்யானம் என்பது ஏழாவது மலர், ஸத்யம் என்பது எட்டாவது மலர் என்று இப்படியாக உள்ள எட்டுவிதமான மலர்கள், மஹாவிஷ்ணுவிற்கு ப்ரீதியை ஏற்படுத்துகின்றன - என்பதற்கு ஏற்ப உள்ள எட்டு மலர்களை இட்டு - என்றும் கொள்ளலாம். ஆனால் முன்பு கூறப்பட்டதான “விவேக சமாதிகள்” என்பதில் உள்ள பல தன்மைகளும், இந்த எட்டிலும் மீண்டும் காணப்படுகின்றனவே என்று கேட்கலாம். இங்கு இவை ஸர்வேச்வரனுக்கு ஏற்படக்கூடிய இன்பத்தைக் கருத்தில் கொண்டு நடக்கவேண்டும் என்று கூறப்பட்டதால், கூறியதுகூறல் என்ற தோஷம் இல்லை. அதனால்தான் இவற்றினை “புஷ்ப ஸமர்ப்பணம்” என்றார். (எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவகாரியம் செய்து) (எட்டினாய பேத) – திருச்சந்தவிருத்தம் (27) – எட்டினாய பேத மோடிறைஞ்சி - என்பதற்கு ஏற்பவும், மநோ புத்த் யபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே கூர்மவச்சதுர: பாதாந் சிரஸ் தத்ரைவ பஞ்சமம் – மனம், புத்தி, செருக்கு என்பவற்றோடு, இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் ஐந்தாவதாக தலை ஆகியவற்றைப் பூமியில் வைத்து - என்பதற்கு ஏற்பவும், கர்வம் அற்றவனாக விழுகையும், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு ஸர்வேச்வரனை மட்டுமே விஷயமாக்குகையும், இரண்டு கால்கள், இரண்டு கைகள் மற்றும் தலை ஆகியவை பூமியில் பொருந்துகையும் என்றுள்ள அஷ்டாங்க நமஸ்காரம் செய்து. (பூவில் சாந்தொடு) – திருவாய்மொழி (5-2-9) - பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து - என்றும், திருவாய்மொழி (10-2-10) - சாந்தோடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்லவாய்ந்து கொண்டு – என்றும் கூறுவதற்கு ஏற்ப, மலர்கள் போன்றவைகளான் ஆராதனைக்கு உரிய பொருள்களை, “பலன், பற்றுதல், நாம் செய்தோம்” என்பதுடன் கூடிய செருக்கு என்ற நிலை, தலைமுடி, புழு போன்றவை இன்றி, சிறப்பாகக் கொண்டு வந்து (தேவகாரியம் செய்து) – பெரியாழ்வார் திருமொழி (4-5-1) – தேவகாரியம் செய்து – என்பதற்கு ஏற்ப பகவத் ஆராதனையைச் செய்து. (உள்ளம் தூயராய்) – திருச்சந்தவிருத்தம் (75) - ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளம் தூயராய் - என்பதற்கு ஏற்ப நித்யகர்மங்கள் இயற்றியபடி இருத்தல் என்பது தொடக்கமாக, பகவத் ஆராதனை என்பது முடிய இயற்றப்படுவதும், பலனை எண்ணாமை - பற்று வைக்காமை - நான் செய்தேன் என்ற எண்ணம் இல்லாமை – என்ற மூன்றுவிதமான தியாகங்களை முன்னிறுத்திச் செய்யப்படுவது ஆகிய கர்மங்களாலும், பகவானுடைய திருக்கல்யாண கணங்களை எப்போதும் எண்ணியபடி உள்ளதாலும், கஷாயே கர்மபி: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்த்ததே - அன்றாடம் இயற்றப்பட வேண்டிய கர்மங்களை இயற்றுவதன் காரணமாகப் பாவங்கள் அழிந்து ஞானம் வெளிப்படுகிறது - என்பதற்கு ஏற்ப ஞானயோகத்தைத் அடைவதற்குத் தகுதியாக உள்ளதான பாவங்கள் நீங்கப் பெற்றவர் என்பதால் பரிசுத்தமான உள்ளம் உடையவர்களாக. (வாரி) – ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதாவந்தம் ப்ரமாதிநம், ஜ்ஞாநாங்குசேந க்ருஹ்ணீயாத் வச்ய மிந்த்ரிய தந்திநம் - எங்கும் பரந்துள்ள உலகவிஷயங்கள் என்னும் காட்டில் ஓடியபடி உள்ளதும், அகப்பட்டவர்களை அழிப்பதும் ஆகிய இந்த்ரியங்கள் என்ற யானையை, விலக்கத்தக்கது எது மற்றும் ஏற்கத்தக்கது எது என்று பகுத்தறியும் ஞானம் என்ற அங்குசம் கொண்டு அடக்கவேண்டும் - என்பதகு ஏற்ப, முதல் திருவந்தாதி (47) - வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும் சேரி தரியாமற் செந்நிறீஇ - என்று மதம் பிடித்த யானைகளை தண்ணீரில் நிறுத்தி ஆற்றுவது போன்று, இந்த்ரியங்கள் என்ற மதயானையை விஷயங்களை அனுபவித்தல் என்பதான உலகவிஷயங்கள் நிறைந்துள்ள பொருள்கள் உள்ள இடத்திற்குப் போகவிடாமல், ஆத்மாவைக் காணுதல் என்பதான நேர்வழியில் நிலை நிறுத்தி என்றும். (புன்புலம்) – திருச்சந்தவிருத்தம் (76) - புன்புல வழியடைத் தரக்கிலச்சினை செய்து நன்புலவழி திறந்து ஞான நற்சுடர் கொளீஇ – என்று தாழ்ந்தவை, நிலையற்றவை போன்ற தோஷங்களை உடையதான சிற்றின்பம் அளிக்கவல்ல பொருள்களைப் பின்தொடர்ந்து செல்லும் இந்த்ரியங்களுடைய வழியை அடைத்து, அவற்றின் தாழ்ந்த எண்ணம் காரணமாகத் தலை தூக்கும் வாசனைகளையும் அறும்படியாக அவற்றை உறைவித்து, மேன்மையான ஆத்ம பரமாத்ம விஷயத்தில் இந்த்ரியங்கள் செல்வதற்கான பாதையை அமைத்து, சிறப்பான ஞானச்சுடரை கொழுந்து விட்டு எரியும்படி உண்டாக்கி என்றும். (அகத்தினுள்) – திருவெழுகூற்றிருக்கை - ஐம்புலனகத்தினுள் செறுத்து – என்பதற்கு ஏற்ப செவி முதலான இந்த்ரியங்கள், ஐந்து புலன்களுக்கான விஷயங்களில் செல்லாமல் உள்ளே அடக்கி என்றும். இவ்விதம் கூறுவதற்கு ஏற்ப உள்ளே அடைக்கப்பட்ட இந்த்ரியங்களைக் கொண்டவர்களாக. (இளைப்பினை அடைவே விளக்கினைக் கண்டு) – திருக்குறுந்தாண்டகம் (18) – இளப்பினை யியக்கம் நீக்கி - என்ற பாசுரத்தில் கூறப்படுவது போன்று, அவித்யாஸ்மிதா ராக த்வேஷாபி நிவேசா: பஞ்ச க்லேசா: - அறியாமை, கர்வம், ஆசை, த்வேஷம், அபிமானம் என்னும் இவை ஐந்தும் துன்பங்கள் - என்று கூறப்படும் துன்பங்களுடைய ஸஞ்சாரத்தை தவிர்த்து, கீதை (6-11) - நாத்யுச்சரிதம் நாதிநீசம் – அதிகமான உயரமும் தாழ்வும் இல்லாத ஆசனம் - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதான ஓர் இருக்கையில் அமர்ந்து, கீதை (6-13) - ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவலோகயந் - தனது மூக்கின் நுனியை மட்டும் நன்றாக நோக்கியபடியும், திசைகளை நோக்காதபடியும் - என்பதற்கு ஏற்ப மூக்கின் நுனியில் மட்டும் தனது பார்வையைக் கொண்டவராகவும், ஓர் இடத்தில் நிலைநிற்காத இந்த்ரியங்களை உள்நோக்கும்படிச் செய்து, த்யானத்திற்கு இலக்காக உள்ள பகவானிடம் ஸ்நேஹத்தை வைத்து, இடைவிடாமல் அவனை எண்ணி, [அதன் மூலமாக] சுடர்விட்டு எரிகின்ற ஞானத்தால் தன்னைத்தானே வெளிப்படுத்தவல்ல ஆத்மஸ்வ்ரூபத்தைச் சாஸ்த்ரங்களில் கூறியுள்ள முறையில் தரிசித்து, இதன் மூலம் நல்ல கர்மங்களை இயற்றியபடி உள்ளதால் பாவங்கள் நீங்கப் பெற்று, தோஷங்கள் ஏதும் இல்லாத மனம் கொண்ட ஒருவனுக்கு, ஸர்வேச்வரனை நேருக்குநேர் காண்பதற்கு ஏற்றபடியாக உண்டாகின்ற யோகம் மூலம் பிறக்கும் ஞானம் என்பது, முதலில் ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்து தெளிந்து மேன்மேலும் ப்ரகாசிக்கும் - என்பதைக் கூறுகிறார். மேலே எடுக்கப்பட்ட திருக்குறுந்தாண்டகம் (18) - விளக்கினை விதியில் காண்பார் - என்ற பாசுர வரிக்கு “ஸர்வேச்வரனை நேரே காணுதல்” என்றே பூர்வர்கள் வ்யாக்யானம் செய்தபோதிலும், இவர் ஆத்மபரமாகவே அருளிச்செய்கிறார் என்றே கொள்ளவேண்டும். ஏன்? காரணம், தொடர்ந்து இனி வரும் வரியில் – யோக நீதி நண்ணி- என்று தொடங்கி ஸர்வேச்வரனை த்யானித்தல், காணுதல் போன்றவற்றைத் தனியாகக் கூறுவதால் ஆகும். மேலும் சூர்ணை (23) - விதியில் காணும் ப்ரதம மத்யம தசைகளை - என்று ஆத்மபரமாக அல்லவோ ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தார். இப்படியாகக் கருத்து வேறுபாடு வருவது இயல்பானதே ஆகும். (யோகநீதி நண்ணி) - திருச்சந்தவிருத்தம் (63) - யோகநீதி நண்ணுவார்கள் – என்பதற்கு ஏற்ப யோகம் என்னும் உபாயத்தால் அடைந்து, (அறம் திகழும்) - பெருமாள் திருமொழி (1-7) – மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி வன்புலன்களடக்கி யிடர்ப்பாரத் துன்பம் துறந்து இருமுப்பொழுதேத்தி யெல்லையில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம் கதியை – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதான கொலை, சினம், கொடுமை செய்தல் என்பதான மறம் காரணமாக மலராமல் உள்ளதான மனத்தினை, அந்த வாசனைகளை அடியுடன் போக்கி, பொய்யை விலக்கி, மிகுந்த வலிமை பொருந்திய இந்த்ரியங்களை அவற்றின் விஷயங்களில் மேய விடாமல் கட்டி வைத்து, மிகுந்த துன்பங்களை ஏற்படுத்தவல்லதும், அமலனாதிபிரான் - பாரமாய பழவினை பற்றறுத்து – என்று கூறுவதும் ஆகிய பழவினைகளை வேருடன் அறுத்து, மிகவும் மேன்மையான காலை நண்பகல் அந்தி என்னும் மூன்று வேளைகளிலும் தொழுது, முன்னோர் வகுத்த அளவற்ற நெறிமுறைகளில் சிலரால் கலக்க இயலாதபடி நிலை நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களாகவும், பேரருள் காரணமாக மலர்ந்துள்ள சித்தம் கொண்ட சித்தர்களாகவும் உள்ளவர்களுக்கு அடையப்படும் பெரும் இலக்காக உள்ளவனை என்றும். (மறையோர் மனம் தன்னுள்) – பெரியதிருமொழி (7-3-7) - மறையோர் மனந்தன்னுள் விண்ணுளார் பெருமானை - என்பதற்கு ஏற்ப அந்தணர்களுடைய மனங்களே தனக்கு ஏற்ற இருப்பிடம் என்று அமர்ந்துள்ள நித்யஸூரிகளின் அதிபதியை என்றும். (அமர்ந்து உறையும்) பெரியதிருமொழி (2-1-1) – மாதவமானவர் தங்கள் நிந்தை யமர்ந்துறைகின்ற வெந்தை - என்று கூறுவதற்கு ஏற்ப மிகவும் பெரிய தவங்ளைக் கொண்ட மனிதர்களுடைய இதயங்களில், அவர்களிடமிருந்து எதனையும் எதிர்பாராமல் எப்போதும் வசிக்கின்ற ஸ்வாமி என்றும். இவ்விதமாகக் கூறுவதற்கு ஏற்ப, பரிசுத்தமான அந்தகரணத்தைக் கொண்டு உயர்ந்த யோகிகளுடைய இதயங்களில், (அரும் பெரும் சுடரை) – பெருமாள் திருமொழி (2-7) – ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடரொன்றினைச் சேரும் நெஞ்சினர் – என்பதற்கு ஏற்ப ஆபரணங்கள் போன்ற பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டவனாக மிகுந்து ப்ரகாசத்துடன் கூடிய திருமேனியுடன் எழுந்தருளியுள்ள ஸர்வேச்வரனை. (கண்கள் சிவந்தில்படியே) திருவாய்மொழி (8-8-1) – கண்கள் சிவந்து - என்ற பாசுரத்தில் கூறுவதற்கு ஏற்ப அவயங்களின் அழகு, ஆபரணங்களின் அழகு மற்றும் ஆயுதங்களின் அழகு ஆகியவற்றுடன் கூடியுள்ள காளமேகம் போன்ற கரியநிறம் பொருந்திய திவ்யமங்கள் விக்ரஹத்துடன். (மனம் உட்கொண்டு) – பெரியதிருமொழி (7-3-1) - கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு - என்பதற்கு ஏற்ப அறிவு நிறைந்த யோகிகள் தங்களுடைய இதயத்திலே கொண்டு என்கிறபடியே இதயக்கமலத்தில் உள்ளதாக த்யானம் செய்து. (நிரந்தரம் மறவாமை) - திருச்சந்தவிருத்தம் (101) - நிரந்தரம் நினைப்பதாக - என்றும், பெரியதிருமொழி (3-5-4) – மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அத்தகைய த்யானத்திற்கு எந்தவிதமான தடை மற்றும் மறதி இன்றி. (துடக்கு அறா மனத்தராய்) - திருச்சந்தவிருத்தம் (78) - சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய் – என்பதற்கு ஏற்ப, எந்த நேரத்திலும் உலக விஷயங்களால் ஈர்க்கப்படாத அன்பு கொண்டவர் என்பதால் அவனுடைய சேர்க்கை மற்றும் பிரிவு என்பதான சுகம் மற்றும் துக்கத்தை மட்டுமே கொண்டவர்களாக, சாந்தோக்ய உபநிஷத் - ஸத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி: – ஸத்வம் என்ற அந்தகரணம் தூய்மை அடைந்தால் தடையில்லாத த்யானம் கைகூடும் - என்பதற்கு ஏற்ப த்யானிக்கப்படும் பொருள் குறித்து தடையில்லாமல் உள்ள சிந்தனையுமாய். (கனவில் மிக்க தர்சன ஸமமாய்) இரண்டாம் திருவந்தாதி (81) - கனவில் மிகக் கண்டேன் – என்று கூறுவதற்கு ஏற்ப இந்த்ரியங்கள் கொண்டு சேர இயலாதபடி மனத்தில் ஏற்படும் ஞானம் என்ற உணர்வு மூலம் “அழகியதாகக் கண்டேன்” என்று உரைக்கும்படியாக, ஸா ச ஸ்ம்ருதிர் தர்சந ஸமாநாகாரா - அத்தகைய நினைவு என்பது நேரடியாகக் காண்பது போன்று இருப்பது - என்பதற்கு ஏற்ப இந்தச் சிந்தனை என்பது அவனை நேருக்குநேர் காண்பது போன்றே உள்ளதாய். (ஆகத்துப் புல்கும் அத்யர்த்த ப்ரியமாய்) - அவ்விதம் நேரடியாகக் காண்பது போன்றுள்ள அதுதான், திருவாய்மொழி (10-4-6) – நாடோறும் ஞாநத்தா லாகத்தணைப்பார்க்கு – என்றும், முதல் திருவந்தாதி (32) - ஆகத்தணைப்பா ரணைவரே – என்றும், திருவாய்மொழி (1-2-4) - எல்லையில் அந்நலம் புல்கு – என்றும், முதல் திருவந்தாதி (50) – ஆர்வம் புரிய பரிசினால் புல்கில் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அணைப்பதாகவும், புல்குவதாகவும் கூறப்படுவதால், பெண்களை அணைப்பது போன்று, கீதை (7-17) - ப்ரியோ ஹி ஜ்ஞாந நோத்யர்த்த மஹம் - நான் ஞானிகளுக்கு மிகவும் ப்ரியமானவன் - என்பதற்கு ஏற்ப எண்ணப்படுகிற விஷயம் அளிக்கும் இன்பம் காரணமாகத் தானும் மிகவும் ப்ரியமாய். (வைகும்) - பெரியதிருவந்தாதி (53) - நின்புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென் றருளும் வான் - உனது திருக்கல்யாண குணங்களின் மீது எப்போதும் எந்தவிதமான தடையும் இன்றி உள்ளதான சிந்தனையைக் காட்டிலும் நீ அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று திருவுள்ளம் கருதி அளிக்கின்ற பரமபதம் இனிமையாக இருக்குமோ - என்றும், (சிறப்பு விட்டு) - திருவாசிரியம் (2) உலகு படைத்தித்யாதி – அமுத வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு ஒரு பொருட்கசைவோரசைக … நல்வீடு பெறினும் கொள்ளவதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பு – பரத்வம், ஸௌலப்யம் போன்ற பலவற்றாலும் பரிபூர்ணமாக உள்ள ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்தால் ஏற்படும் எல்லையற்ற ஆசையின் விளைவாக நீர்ப்பண்டமாக உருகி, “இதுவும் ஓர் உருவமோ” என்று காண்பவர் வியக்கும்படி மங்கிப்போன ஆத்மவஸ்துவில், அத்தகைய ஆசை காரணமாகப் பிறந்த வேறுபட்ட சிறப்பினைக் கொண்டதான சேர்க்கை, காமம் போன்ற நிலைகளை உடைய பக்தியால் விளைவதான எல்லையற்ற இன்பத்தில் நிலைத்து நிற்பது என்ற லாபத்தைக் கைவிட்டு, தாழ்ந்த சில புருஷார்த்தங்களை வேண்டி நின்று அதற்காகத் தங்களை வருத்தியபடி சிலர் இருப்பர், அவர்களைத் தள்ளுக; மிகுந்த மேன்மையான ஐச்வர்யம், அதனைக் காட்டிலும் வேறுபட்ட சிறப்பினைக் கொண்டதான ஆத்ம அனுபவம், அதனைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷம் போன்றவற்றை ஒருவன் பெறக்கூடியவன் என்ற நிலை வந்தாலும், நன்மை எது தீமை எது என்று பிரித்து அறியக்கூடிய அறிவாளிகளுடைய மனதில் அவற்றை ஏற்கவேண்டும் என்ற எண்ணம் வருமோ - என்றும். (குற்றேவலென்னாத அநந்ய ப்ரயோஜநமாய்) - பெரியதிருவந்தாதி (58) – உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்றடிக் கீழ்க் குற்றேவலன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு – உன்னைக் குறித்து எண்ணத் தொடங்கிய காலம் முதலாக உனது இனிமையான திருக்கல்யாண குணங்களில் மட்டுமே நான் பழுத்து நின்றேன்; இனி நான் வேண்டுவது என்பது மீண்டும் பிறக்காமல் இருந்து, உனது திருவடிகளில் கைங்கர்யம் செய்தபடியே இருத்தல் வேண்டும் என்பது அல்ல; எனக்கு இப்போது பிறந்த உன்னைக் குறித்த ஞானம் மறக்காமல் இருத்தல் வேண்டும் என்ற செல்வத்தையே வேண்டுகிறேன் - என்றும். இவ்விதம் கூறுவது போன்று ஸர்வேச்வரனைக் குறித்து இடைவிடாதுள்ள சிந்தனை காரணமாக, பரமபதத்தையும் வெறுத்துத் தள்ளும்படி, ஸர்வேச்வரனாகிய தானே மிகவும் உயர்ந்த பலனாக இனிமையாக உள்ளதால், மற்ற எந்த ஒரு பயனையும் அவர்கள் எண்ணாதபடியாக. – (வேதநோபாஸந ஸேவா த்யாநாதிகளென்று சொல்லுமது ஸாத்யஸாதந பக்தியாக சாஸ்த்ர ஸித்தம்) - வேதனம், உபாஸனம், ஸேவை, த்யானம் போன்ற பலவிதமான சொற்கள் மூலம் கூறப்படும் பக்தி என்பது, ஆத்மஸித்தி – உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய – கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டாலும் நிரப்பப்பட்ட அந்தகரணம் உள்ளவனுக்கு - என்று கூறுவதற்கு ஏற்ப, கர்மம் மற்றும் ஞானம் ஆகியவை மூலம் பக்தி செய்வதற்குத் தகுதி நிறைந்த மனம் கொண்ட ஒருவனுக்குப் பிறப்பதாகும். ஆகவே சேதநர்களால் இயற்றப்படுவதாய், ஸர்வேச்வரனுடைய கருணையைப் பெறுவதற்குக் காரணமாக இருப்பதால், அவனைப் பெறுவதற்கு உபாயமான பக்தியாக, இதிகாச புராணங்களும் கூடியதான வேதாந்த சாஸ்த்ரத்தில் கூறப்பட்டது என்று கருத்து (அதாவது சாதன பக்தியின் தன்மையை இவ்விதமாகக் கூறினார்).