Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 98)
இரண்டாம் ப்ரகரணம்
இருள் துயக்கு மயக்கு மறப்பென்கிற அநுதய ஸம்சய விபர்யய விஸ்ம்ருதிகளற்று மலர்மிசை யெழுகிற ஞானத்தைக் காதலன்பு வேட்கை அவாவென்னும் ஸங்க காமாநுராக ஸ்நேஹாத்யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தசையாக்குகை.
அது தன்னை விசதமாகவருளிச் செய்கிறார் மேல் (இருள் துயக்கென்று தொடங்கி). இனிமேல் இவருடைய இந்த பக்திதான் கர்மஜ்ஞாந ஸாத்யையாய் பகவத் ப்ராப்தி ஸாதந பூதையாயிருக்கு முபாஸகர் பக்தியிலும், ப்ரபந்நர் பகவான் பக்கல் அர்த்தித்துப் பெறும் கைங்கர்யோபகரண பக்தியிலும் வ்யாவ்ருத்தை யென்னுமிட மறிவிக்கைக்காக ப்ரதமம் ஸாதந பக்தி வேஷத்தை தர்சிப்பிக்கிறார் (ஜந்மாந்தரேத்யாதி) சூர்ணையாலே.
கடந்த சூர்ணையில் கூறப்பட்ட “மயர்வற மதிநலம் அருளுகை” என்பதை இந்தச் சூர்ணையில் விளக்குகிறார். அடுத்து நம்மாழ்வாருடைய பக்தி என்பது, கர்மம் மற்றும் ஞானத்தால் அடையப்படுவதாயும் பகவானை அடைவதற்குச் சாதனமாயும் உள்ளதான உபாஸகன் ஒருவனின் பக்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்றும், ப்ரபந்நர்கள் ஸர்வேச்வரனிடம் வேண்டி நின்று பெறப்படுவதான கைங்கர்யத்திற்கு உபாயமாக உள்ள பக்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்றும் உணர்த்த எண்ணியவராக, முதலில் சாதன ரூபத்தில் உள்ள பக்தியை இந்தச் சூர்ணையில் விளக்குகிறார்.
– மயர்வற மதிநல மருளுகையாகிறதுதான் “இருள் தருமா ஞாலம்”, “இருள் தீர்ந்திவ்வையம் மகிழ” என்று இருள் என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ஜ்ஞாநாநுதயமும், “துயக்கன் மயக்கன்” இத்யாதி ஸ்தலங்களில் “துயக்கு” என்கிற சப்தத்தால் சொல்லப்படும் “ஸ்தாணுர்வா புருஷோவா” என்கிறபடியே க்ராஹ்ய வஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், “மயக்கு” என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜு சுக்த்யாதி விஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத் புத்தியாகிற விபர்யயமும், “மறப்பும் ஞானமும்”, “மறப்பறவென்னுள்ளே மன்னினான்” இத்யாதிகளிற்போலே மறப்பு என்கிற சப்தத்தால் சொல்லப்படும் பூர்வாநுபூத விஷயமாய் அநுபவ ஸம்ஸார மாத்ரஜமான ஜ்ஞாநத்தினுடைய அபாவமாகிற விஸ்ம்ருதியுமான சதுர்வித ஸங்கோசாவஸ்தையுமற்று, “மனனக மலமற மலர்மிசை யெழு தரும்” என்கிறபடியே மந: பரிசுத்தியாலே விகஸிதமாய்க் கொழுந்துவிட்டு “தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கும்” என்கிறபடியே ப்ராப்த விஷயமான தன்னை நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை. – “உளப்பெருங்காதல்”, “நேரிய காதல்”, “காணக்கழி காதல்”, “கழியமிக்கதோர் காதல்”, “காதல் கடல்புரைய”, “காதல் கடலில் மிகப் பெரிதால்” “காதலுரைக்கில் - நீள்விசும்பும் கழியப் பெரிதால்”, “மெய்யமர் காதல்” என்றும், “அன்பு சூட்டிய”, “அன்பிலின்பு”, “அன்பே பெருகும் மிக”, “ஆராவன்பு” என்றும், “வேவாரா வேட்கை நோய்”, “பெருகுமால் வேட்கையும்”, “ஆவியின் பரமல்ல வேட்கை” என்றும், “அவா வொருக்கா வினையொடும்”, “காண்பானவாவுவன்”, “சூடுதற்கவா”, “அதனில் பெரிய வென்னவா” என்றும் இப்படிப் பலவிடங்களிலும் காதல், அன்பு, வேட்கை, அவா என்று சொல்லப்படுகிற விஷய தர்சநத்தில் ப்ரதமபாவியாய் ஸ்நேஹாங்குரமான ஸங்கமும், “ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:” என்கிறபடியே ததநந்தர ஜாதமாய் அவ்விஷயத்தை அநுபவித்தல்லது நிற்கவொண்ணாதபடியிருக்கும் தத் விபாக தசையான காமமும், தத் கார்யமாய் அநுபாவ்ய விஷய ராகாவிச்சேத ரூபமான அநுராகமும், ததநந்தரம் அவ்விஷயத்தை உத்தரோத்தர மநுபவிக்கு மதொழிய விட்டுப் பிடிக்கப் பற்றாதபடி விளையும் ஸ்நேஹமும். முதலான அவஸ்தைகளுக்கு அநுரூபமான நாமங்களையுடைத்தாய்க் கொண்டு பரமபக்தி தசா பர்யந்தமாம்படி பண்ணுகையென்கை. காதல், அன்பு, வேட்கை, அவா என்னுமிவை ஸங்காத்யுத்தரோத்தராவஸ்தைகளுக்கு வாசகமாயிருக்க, முன்பின் கலந்து வந்ததேயாகிலும், எல்லாவவஸ்தைகளும் இவர்க்கு எப்போதும் ப்ரகாசித்திருக்கையாலே அப்போதப்போது தம்முடைய ஆற்றாமைக் கீடாகப் பேசுகிறதாகையாலே விரோதமில்லை. ஆக இத்தால் சொல்லிற்றாய்த்து, மயர்வற மதிநல மருளுகையாவது - அஜ்ஞாநபிதையாக சாஸ்த்ரஸித்தமான அநுதயாதி சதுர்வித ஸங்கோசாவஸ்தையுமற்று விகஸிதமாய்க் கொழுந்துவிட்டு விஷயோந்முகமாய்க் கிளருகிற ஜ்ஞாநத்தை ஸ்நேஹ ப்ரதமாங்குரமான ஸங்கம் முதலான உத்தரோத்தர விபாக ரூபாவஸ்தைகளுக்கு அநுரூபமான காதலித்யாதி நாமங்களை பஜித்து ப்ரேமஸீமா பூமியான பரமபக்தி தசாபந்நமாம்படி பண்ணுகையென்றதாய்த்து. ஆக கீழ் “அத்ரி ஜமதக்நி” இத்யாதி வாக்யத்தில் சொன்ன சங்கைக்கு மூலம் இவர் ப்ரபாவமென்றும், அது தனக்கு ஹேது பகவந் நிர்ஹேதுக கடாக்ஷமென்று - கடாக்ஷத்தினுடைய சக்தியும், இவரை இப்படி கடாக்ஷித்தது லோக ஹிதார்த்தமாகவென்றும், கடாக்ஷிக்கையாவது - மயர்வற மதிநலமருளுகை யென்றும், அது தன்னின் ப்ரகாரமும் சொல்லப்பட்டது.
(இருள் என்கிற அநுதயம்) மயர்வற மதிநலம் அருளுகை என்பது : திருவாய்மொழி (10-6-1) – இருள் தருமா ஞாலம் - என்றும், பெரிய திருமொழி (11-4-8) - இருள் தீர்ந்திவ்வையம் மகிழ - என்றும் கூறப்படும் வரிகளில் உள்ள “இருள்” என்ற பதம் மூலம் கூறப்படும் அறிவு தோன்றாமை என்ற நிலை. (துயக்கு என்கிற ஸம்ஸயம்) – திருவாய்மொழி (1-9-6) - துயக்கன் மயக்கன் – என்பதற்கு ஏற்ப “துயக்கு” என்ற பதம் மூலம் கூறப்படும் “குச்சியா புருஷனா” என்று ஏதேனும் ஒன்றைக் கண்டால் அறிய வேண்டிய பொருள் இன்னது என்று உறுதியாக அறிய இயலாத சந்தேகத்துடன் உள்ள நிலை. (மயக்கு என்கிற விபர்யயம்) - “மயக்கு” என்ற சொல் மூலம் கூறப்படுவதான, கயிறு மற்றும் கிளிஞ்சல் ஆகியவற்றைப் பாம்பு மற்றும் வெள்ளி என்று எண்ணுவதான ஒன்றை மற்றொன்றாக எண்ணும் நிலை. (மறப்பு என்கிற விஸ்ம்ருதி) – திருவாய்மொழி (1-10-10) - மறப்பும் ஞானமும் - என்றும், திருவாய்மொழி (1-10-10) – மறப்பறவென்னுள்ளே மன்னினான் – என்றும் உள்ள வரிகளில் காணப்படும் “மறப்பு” என்ற பதம் மூலம் கூறப்படுவதான, முன்பே அறியப்பட்ட பொருளாக உள்ளபோதிலும், அனுபவம் காரணமாக ஏற்பட்ட நினைவு இன்மை என்ற நிலை. (அற்று) - இப்படியாக உள்ள நான்கு விதமான சுருக்கம் நிறைந்த நிலைகள் இன்றி. (மலர்மிசை எழுகிற ஞானத்தை) - திருவாய்மொழி (1-1-2) - மனனக மலமற மலர்மிசை யெழு தரும் - என்பதற்கு ஏற்ப, மனதில், பரிசுத்தம் காரணமாக மலர்ந்து கொழுந்துவிட்டு, முதல் திருவந்தாதி (67) – தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கும் – என்பதற்கு ஏற்ப அடையத்தக்க பொருளாகிய தன்னைக் குறித்து ஓங்கி வளர்கின்ற ஞானத்தை. (காதல் என்னும் ஸங்கம்) – திருவிருத்தம் (59) - உளப்பெருங்காதல் – என்றும், திருவாசிரியம் (2) - நேரிய காதல் - என்றும், இரண்டாம் திருவந்தாதி (56) – காணக்கழி காதல் - என்றும், திருவாய்மொழி (5-5-10) – கழிய மிக்கதோர் காதல் – என்றும், திருவாய்மொழி (5-3-4) - காதல் கடல்புரைய – என்றும், திருவாய்மொழி (7-3-6) – காதல் கடலில் மிகப் பெரிதால் – என்றும், திருவாய்மொழி (7-3-8) - காதலுரைக்கில் நீள்விசும்பும் கழியப் பெரிதால் - என்றும், திருவாய்மொழி (6-8-2) – மெய்யமர் காதல் - என்றும் பல இடங்களில் “காதல்” என்ற பதம் மூலம் கூறப்படுவதான, ஒரு பொருளைக் கண்டவுடன் முதன்முதலில் மனதில் ஏற்படுவதான சிநேகத்தின் முளையாக உள்ள ஸங்கமும். (அன்பு என்னும் காமம்) – திருவிருத்தம் (2) – அன்பு சூட்டிய - என்றும், திருவாசிரியம் (2) - அன்பிலின்பு - என்றும், பெரியதிருவந்தாதி (8) - அன்பே பெருகும் மிக – என்றும், திருவாய்மொழி (6-10-2) – ஆராவன்பு - என்றும் பல வரிகளில் “அன்பு” என்ற பதம் மூலம் கூறப்படுவதும், கீதையில் (2-62) – ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: - சேர்க்கையிலிருந்து காமம் ஏற்படுகிறது - என்பதற்கு ஏற்ப அந்தச் சங்கத்தின் மூலமாகத் தோன்றுவதும், இதன் காரணமாகப் பார்க்கப்பட்ட அந்தப் பொருளை அனுபவித்தால் அல்லாமல் நிற்க இயலாது என்பதற்கு ஏற்ப சங்கத்தின் முதிர்ந்த நிலையாக உள்ள காமமும். (வேட்கை என்னும் அநுராகம்) – திருவாய்மொழி (2-1-10) – வேவாரா வேட்கை நோய் - என்றும், திருவாய்மொழி (9-6-1) – பெருகுமால் வேட்கையும் - என்றும், திருவாய்மொழி (10-3-2) - ஆவியின் பரமல்ல வேட்கை – என்றும் இவ்விதம் பல வரிகளில் உள்ளதான “வேட்கை” என்ற பதம் மூலம் கூறப்படுவதும், காமத்தின் விளைவாக உள்ளதும், அனுபவிக்கப்படும் பொருள் மீது வைத்த ஆசை என்பது சிறிதும் இடைவெளி இன்றி உள்ளதும் ஆகிய அனுராகமும். (அவா என்னும் ஸ்நேஹம்) – திருவிருத்தம் (64) – அவா வொருக்கா வினையொடும் – என்றும், திருவிருத்தம் (84) – காண்பானவாவுவன் - என்றும், திருவாசிரியம் (2) – சூடுதற்கவா - என்றும், திருவாய்மொழி (10-10-10) - அதனில் பெரிய என் அவா – என்றும் இவ்விதம் பல வரிகளிலும் காணப்படும் “அவா” என்ற பதம் மூலம் கூறப்படுவதும், விரும்பிய பொருளை மேன்மேலும் அனுபவித்தடி இருப்பது அல்லாமல் அதனை நழுவவிட்டு பின்னர் பிடித்துக் கொள்ளலாம் என்பதைப் பொறுத்துக் கொள்ளாதபடி உள்ளதும், அந்த அனுராகத்தின் விளைவாக உள்ளதும் ஆகிய சிநேகமும். (ஆதி அவஸ்தா நாமங்களோடே பரபக்தி தசை ஆக்குகை) - போன்ற பலவிதமான நிலைகளுக்கு ஏற்படியான பெயர்கள் உள்ளதாகக் கொண்டு, அவற்றைப் பரமபக்தி நிலையாக மாற்றுதல் [கடந்த பத்திக்கும் முந்தைய பத்தியின் இறுதியில் உள்ள “ஞானத்தை” என்பதை இதனுடன் இணைத்துப் படிக்கவேண்டும். அதாவது அப்படிப்பட்ட ஞானத்தை, கடந்த பத்தியில் கூறப்பட்டதான ஸங்கம், காமம், அனுராகம், சிநேகம் என்ற நான்கு நிலைகளுக்கு ஏற்றபடிக் கொண்டு வந்து, பின்னர் பரமபக்தியாக மாற்றுதல் என்று கருத்து]. காதல், அன்பு, வேட்கை மற்றும் அவா ஆகியவை ஒன்றுக்கு ஒன்று மற்றொன்றின் விளைவாக இருந்தபடி, மேன்மேலும் ஏற்படுவதான ஸங்கம், காமம், அனுராகம், சிநேகம் என்ற நிலைகளை உணர்த்தக்கூடிய சொற்களாக உள்ளன; ஆனால் இவை நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களில் இதே போன்ற வரிசையில் வராமல், முன்னும்பின்னும் கலந்து வந்துள்ளதைப் காணலாம். இவ்விதம் இவை வந்தபோதிலும், இந்த அனைத்து நிலைகளும் நம்மாழ்வாருக்கு எப்போதுமே உள்ளபடி இருப்பதால், அவ்வப்போது இவற்றை, தம்முடைய பிரிவாற்றாமையைத் தாங்க இயலாமல், அதனைச் சரிசெய்யும் விதமாக கூறுவதால், முரண்பாடு இல்லை. ஆக இங்கு கூறப்பட்டது என்ன? மயர்வற மதிநலம் அருளுகை என்பது என்னவென்றால் - அறியாமை என்பதன் வெளிப்பாடாகச் சாஸ்த்ரங்களில் கூறப்படுவதான் அஜ்ஞானம் தோன்றாமை என்ற நான்குவிதமான சுருக்கமான நிலைகளும் விலகி; அடைய வேண்டிய பொருளான ஸர்வேச்வரனை நோக்கி மலர்ந்து கொழுந்துவிட்டுக் கிளர்ந்து எழுகின்ற ஞானத்தை; சிநேகத்திற்குக் காரணமாக சங்கம், அதன் விளைவான காமம், அதன் விளைவான அனுராகம், அதன் விளைவான சிநேகம் என்று ஒன்றுக்கொன்று காரண காரியங்களாக உள்ள நிலைகளுக்கு ஏற்றபடி காதல், அன்பு, வேட்கை மற்றும் அவா ஆகிய நாங்குவிதமான பெயர்களைப் பெற்று [அதாவது அந்த ஞானத்தை இவ்விதமாகப் பெயர்களைப் பெறும்படியாக); அதன் பின்னர் ப்ரேமையின் எல்லையான பரமபக்தி என்னும் நிலையை அடையும்படிச் செய்தல் - ஆகும். ஆக, சூர்ணை (92) - அத்ரி ஜமதக்நி – என்பதில் எழுப்பப்பட்ட சந்தேகத்திற்கு மூலமானது, இவருடைய ப்ரபாவம் என்றும், அதற்குக் காரணம் என்னவென்றால் எந்த ஒரு காரணமும் இன்றி பகவானுடைய கருணை நிறைந்த கடாக்ஷம் என்ற கடாக்ஷத்தின் சக்தியும், இவ்விதம் இவரைக் கடாக்ஷித்ததன் காரணம் இவர் மூலமாக உலகிற்கு நன்மை ஏற்படுவதற்காகவே ஆகும் என்றும், கடாக்ஷித்தல் என்றால் மயர்வற மதிநலம் அருளுதல் என்றும், அப்படி அருளிய விதம் இப்படிப்பட்டது என்றும் கூறப்பட்டது.