Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 96)

இரண்டாம் ப்ரகரணம்

கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் ஜகத்திதார்த்தமாக எனக்கே நல்லவருள்க ளென்னும்படி ஸர்வ ஸௌஹார்த ப்ரஸாதத்தை ஒருமடை செய்து இவரைத் தன்னாக்க லோகமாகத் தம்மைப்போலே ஆக்கும்படியானார்.

இப்படி இவரை ஈச்வரன் நிர்ஹேதுகமாக விசேஷ கடாக்ஷம் பண்ணிற்று ஏதுக்காக? விசேஷ கடாக்ஷ வேஷந்தானேது? இவர்தாம் பின்பு ஆனபடி எங்ஙனே யென்னு மபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் மேல் (கோவ்ருத்திக்கென்று தொடங்கி).

இவ்விதம் இவரை ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி சிறப்பாகக் கடாக்ஷித்தது ஏன்? அத்தகைய சிறப்பான கடாக்ஷத்தின் தன்மை என்ன? அதன் பின்னர் இவர் எவ்விதம் ஆனார்? இது போன்ற கேள்விகளுக்கு இந்தச் சூர்ணையில் விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது “திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி” என்று பரமபதத்திற் காட்டிலும் பசுநிரை மேய்க்கையை விரும்பியிருக்குமவனாகையாலே “ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநா க்லிஷ்ட கர்மணா, சுபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸதா” என்கிறபடியே கோரக்ஷணத்துக்காக நெரிஞ்சிக்காட்டை, “உத்பந்ந நவசஷ்பாட்யா” என்கிறபடியே தத் போக்யமான புல்லாம்படி பரஸம்ருத்த்யேக ப்ரயோஜநமான திருவுள்ளத்தாலே ஸங்கல்பித்த ஸர்வ சக்தியானவன், – “நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச, ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:” என்கிறபடியே, கோரக்ஷணத்தோபாதி ஜகத் ரக்ஷணத்துக்கும் கடவன் தானே யாகையாலே ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக, – “எனைத்தோர் பிறப்பும் - எதிர்சூழல் புக்கு – எனக்கே யருள்கள் செய்ய – அம்மான் திருவிக்கிரமனை - விதி சூழ்ந்தது” என்று அநேக ஜந்மங்கள் நான் பிறந்த ஜந்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து எனக்கே தன் ப்ரஸாதங்களைப் பண்ணும்படி ஸர்வேச்வரனை க்ருபை கால் கட்டிற்றென்றும், “நல்லவருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்” என்றும் இத்தலையில் குற்றமாதல், (அஜ்ஞத்வமாதல்,) தன் ஸார்வஜ்ஞயமாதல் பாராதே தன் பேறாகப் பண்ணுமதான வருள்களை நமக்கே அஸாதாரணமாகத் தந்தருளுகிறவனென்றும் இவர் பேசும்படி. – “ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம்” என்கிறபடியே ஸர்வபூதங்களின் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய ஸௌஹார்த்த பலமான ப்ரஸாதமாகிற க்ருபையை இவரொருவர் விஷயமாகவும் ஒரு மடைப்படுத்தி, “என்னைத் தன்னாக்கி” என்கிறபடியே அஜ்ஞாந சக்திகளுக்கு எல்லையாயிருக்கிற விவரைத் தன்னோடொத்த ஜ்ஞான சக்திகளை யுடையராம்படி பண்ண, இப்படி அவனால் திருந்தினவிவர், “ஊரும் நாடு முலகமும் தன்னைப் போலே வனுடைய பேரும் தார்களுமே பிதற்றி” என்கிறபடியே தம்மோடந்வயித்த லோகத்திலுள்ளவர்களை யெல்லாம் தம்மைப்போலே பகவதேக பரராகப் பண்ணும்படியானா ரென்கை.

(கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன்) - திருவாய்மொழி (10-3-10) – திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி – என்பதற்கு ஏற்ப, பரமபதத்தில் வீற்றுள்ளதைக் காட்டிலும் பசுக்கூட்டத்தை மேய்ப்பதை மிகவும் விரும்புபவன் என்பதால், ஸ்ரீவிஷ்ணு புராணம் (5-6-28) – ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநா க்லிஷ்ட கர்மணா, சுபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸதா - பசுக்களுடைய நன்மையை எண்ணும் மனம் கொண்ட க்ருஷ்ணனுடைய நல்ல மனத்தால், நெரிஞ்சில் முள் நிறைந்த காடாகக் கிடந்த ப்ருந்தாவனம், செழிப்பாக மாறும்படியாக எண்ணப்பட்டது - என்பதற்கு ஏற்ப, பசுக்களை காப்பாற்றும் பொருட்டு நெரிஞ்சில் காடாகக் கிடந்த பிருந்தாவனத்தை, ஸ்ரீவிஷ்ணு புராணம்(5-6-37) – உத்பந்ந நவசஷ்பாட்யா – புதியதாகப் புற்கள் நிறைந்தன – என்பதற்கு ஏற்ப, பசுக்களுக்கு இன்பம் அளிக்கவல்ல புல்லாக மாறும்படி மற்றவர்களுடைய மனநிறைவு என்பதையே தனது பலனாக எண்ணும் திருவுள்ளம் கொண்டு ஸங்கல்பித்த ஸர்வேச்வரன். (ஜகத்திதார்த்தமாக) – மஹாபாரதம் - நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச, ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: - அந்தணர்கள், பசுக்கள் ஆகியவர்களுக்கு நன்மையைச் செய்பவனாகிய அந்தணர்களுடைய தலைவனாகிய பகவானுக்கு நமஸ்காரம்; உலகிற்கு நன்மையைச் செய்யும் க்ருஷ்ணா! கோவிந்தா! உனக்கு நமஸ்காரம் - என்பதற்கு ஏற்ப பசுக்களை எவ்விதம் பாதுகாக்கிறானோ அது போன்றே உலகில் உள்ளவர்களைக் காப்பதற்கு உரியவன் பகவானாகிய தானே என்பதால் உலகின் நன்மைக்காக. (எனக்கே நல்ல அருள்கள் என்னும்படி) - திருவாய்மொழி (2-7-6) – எனைத்தோர் பிறப்பும் … எதிர்சூழல் புக்கு … எனக்கே யருள்கள் செய்ய … அம்மான் திருவிக்கிரமனை … விதி சூழ்ந்தது – என்பதற்கு ஏற்ப, நான் பிறந்த பல பிறவிகளிலும் தானும் பிறந்து வந்து, எனக்காக மட்டுமே தனது அருளைச் செய்யும்படியாக ஸர்வேச்வரனை அவனுடைய கடாக்ஷமானது காலைக் கட்டியது - என்றும், திருவாய்மொழி (8-6-1) – நல்லவருள்கள் நமக்கே தந்தருள் செய்வான் - என்பதற்கு ஏற்ப நம்மிடம் உள்ள தோஷங்களை ஆராய்தல், அறிவற்ற தன்மையைக் காணுதல், முற்றும் உணர்ந்த தனது மேன்மையைக் கருத்தில் கொள்ளுதல் போன்ற எதனையும் செய்யாமல், கடாக்ஷித்தல் என்பதைத் தனது பேறாகச் செய்து, அந்தக் கடாக்ஷங்களை நமக்கே உடைமையாக அளிப்பவன் என்றும் நம்மாழ்வார் உரைக்கும்படியாக. (ஸர்வ ஸௌஹார்த்த ப்ரஸாதத்தை ஒருமடை செய்து) – கீதை (5-29) - ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் - அனைத்து உயிர்களுடைய நன்மையை எண்ணுகின்ற என்னை - என்பதற்கு ஏற்ப அனைத்து உயிர்களிடமும் காண்பிக்கின்ற ப்ரியத்தின் விளைவான தனது கடாக்ஷத்தை, நம்மாழ்வார் ஒருவர் விஷயமாக மட்டுமே ஆகும்படி ஒரு நிலைப்படுத்தி, (இவரைத் தன்னாக்க) – திருவாய்மொழி (7-9-1) – என்னைத் தன்னாக்கி - என்பதற்கு ஏற்ப அறியாமை மற்றும் ஆற்றல் இன்மை ஆகியவற்றுக்கு எல்லையாக உள்ள இவரைத் தனக்குச் சமமான ஞானம் மற்றும் சக்தி உள்ளவராக மாற்ற, (லோகமாகத் தம்மைப்போலே ஆக்கும்படி ஆனார்) - இவ்விதம் அவனால் திருந்தின நம்மாழ்வார், திருவாய்மொழி (6-7-2) - ஊரும் நாடு முலகமும் தன்னைப் போலே வனுடைய பேரும் தார்களுமே பிதற்றி - என்பதற்கு ஏற்ப தம்முடன் உள்ள அனைவரும் தன்னைப் போன்றே அவனைக் குறித்து மட்டுமே அனுபவித்தபடி உள்ளது போன்று ஆனார்.