Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 95)

இரண்டாம் ப்ரகரணம்

ச்ரமணீ விதுர ரிஷிபத்நிகளைப் பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு சாபமிழிந் தென்னப் பண்ணுமிறே.

– நித்யஸம்ஸாரியாய்ப் போந்தாரொருவர்க்கு பகவத் கடாக்ஷ விஷயமான வளவிலே நிகில பாபங்களும் நீங்கி இப்ப்ரபாவமெல்லா முண்டாகக்கூடுமோ வென்கிற சங்கையிலே பகவத் கடாக்ஷ வைபவத்தை அருளிச்செய்கிறார் (ச்ரமணீ யென்று தொடங்கி).

– எல்லையற்ற காலமாக ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள ஒருவருக்குப் பகவத் கடாக்ஷம் கிட்டிய உடனேயே, அவருடைய அனைத்து பாவங்களும் நீங்கப் பெற்று, இப்படிப்பட்ட ப்ரபாவங்கள் பலவும் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழலாம். இதற்கு விடையாக, பகவத் கடாக்ஷத்தின் பெருமையை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “ச்ரமணீம் தர்மநிபுணாம் அபிகச்ச” என்று கபந்தன் சொன்ன வநந்தரம் “ஸோப்ய கச்சந் மஹாதேஜாச் சபரீம்” என்கிறபடியே ஸ்வயமேவ சென்று விஷயீகரித்த வேடுவிச்சியான ச்ரமணியை, “சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம்” என்று தேவரீருடைய அழகிய திருக்கண் பார்வையாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களெல்லாம் போய்ப் பரிசுத்தையானேனென்று சொல்லும்படியாகவும், வெள்ளமானது பள்ளத்திலே தானே சென்று விழுமாபோலே அபிஜநாத்யஹங்கார அயோக்யதையு மில்லாமையாலே “நிவாஸாய யயௌ வேச்ம விதுரஸ்ய மஹாத்மந:” என்று தானே சென்று க்ருஹத்திலே புக்கு “விதுதாந்நாநி புபுஜே சுசீநி குணவந்திச” என்று தம்முடைய ஸ்பர்சமுள்ளவற்றை விரும்பி அமுது செய்யப்பெற்ற ஸ்ரீவிதுரரை, “பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மதுஸூதந, கிமர்த்தம் புண்டரீகாக்ஷ! புக்தம் வ்ருஷல போஜனம்” என்று எதிரியானவன் சீறிச் சொல்லச் செய்தேயும், “புண்டரீகாக்ஷ” என்னும்படி அழகிய திருக்கண்களில் கடாக்ஷத்தாலே ஸகல ஸாம்ஸாரிக தோஷங்களும் போய் பரிசுத்தராம்படியாகவும், – “வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளு”கிறபோதை நெடுநோக்காலே பக்த விலோசனத்தில் ருஷிபத்நிகளிலே ஒருத்தியை “தத்ரைகா வித்ருதா பர்த்ரா பகவந்தம் யதாச்ருதம், ஹ்ருதோபகூஹ்ய விஜஹௌ தேஹம் கர்ம நிபந்தநம்” என்று ஸ்வவிஷய ப்ராவண்யத்தாலே அப்போதே ஸம்ஸாராந் முக்தையாம்படியாகவும், அல்லாதாரை க்ஷீண பாபராய் முக்த்யர்ஹராம்படி பரிசுத்தராகவும் பண்ணின ஸர்வேச்வரனுடைய கடாக்ஷமானது – “அங்கணிரண்டுங் கொண்டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபமிழிந்து” என்று அழகிய திருக்கண்களாலே எங்களைப் பார்த்தருளினாயாகில் சாபோபஹதரைப்போலே அநுபவித்தாலல்லது நசியாத வெங்கள் பாபம் போய்விடு மென்கிறபடியே அநுபவ விநாச்யமான ஸகல பாபங்களும் நிவ்ருத்தமாம்படி பண்ணுமிறே யென்கை. பகவத் கடாக்ஷந்தான் ஸகல பாப க்ஷபண நிபுணமாகையாலே, பட்டவிடம் “அமலங்களாக” என்னும்படி நிர்தோஷமாமிறே.

(ச்ரமணீ பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு) - இராமாயணம் பாலகாண்டம் (1-57) – ச்ரமணீம் தர்மநிபுணாம் அபிகச்ச – ஸந்யாஸினியும், தர்மத்தில் நிலை நிற்பவளும் ஆகிய சபரியை அடைவாயாக - என்று கபந்தன் கூறியவுடன், இராமாயணம் பாலகாண்டம் (1-57) – ஸோப்ய கச்சந் மஹாதேஜாச் சபரீம் - மிகுந்த தேஜஸ் பொருந்திய சபரியை இராமன் அடைந்தான் - என்பதற்கு ஏற்ப, இராமன் தானாகவே சென்று ஏற்றுக் கொண்ட வேட்டுவிச்சியும், அனைத்தும் துறந்தவளும் ஆகிய சபரியை, இராமாயணம் ஆரண்யகாண்டம் (74-12) - சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் - ரகுகுலத்தில் அவதரித்தவனே! உனது குளிர்ந்த திருக்கண்களால் நான் தூய்மை அடைந்தேன். உனது திருவடிகள் காரணமாக நான் மீண்டும் வருதல் என்பது இல்லாத உலகத்தை அடைய உள்ளேன் - என்பதற்கு ஏற்ப, “உம்முடைய அழகான திருக்கண்களின் கடாக்ஷம் காரணமாக என்னுடைய பேற்றுக்குத் தடையாக இருந்த பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று தூய்மை அடைதேன்”, என்று கூறும்படியாகச் செய்த தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவனுடைய கடாக்ஷம். (விதுரரைப் பூதர் ஆக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு) வெள்ளம் தானாகவே பள்ளத்தை நோக்கி ஓடிச் சென்று விழுவது போன்று, உயர்ந்த குலத்தில் பிறவி போன்றவற்றால் ஏற்படுவதான அஹங்காரம் போன்றவை தோன்ற எந்தவிதமான வாய்ப்பும் இல்லாத காரணத்தால், மஹாபாரதம் உத்யோகபர்வம் - நிவாஸாய யயௌ வேச்ம விதுரஸ்ய மஹாத்மந: – மஹாத்மாவாகிய விதுரரின் இல்லத்தில் தங்குவதற்காக க்ருஷ்ணன் சென்றான் – என்பதற்கு ஏற்ப, தானாகவே வலியச் சென்று விதுரரின் இல்லத்தில் புகுந்தான். தொடர்ந்து, மஹாபாரதம் உத்யோகபர்வம் - விதுதாந்நாநி புபுஜே சுசீநி குணவந்திச - எந்தவிதமான பலனையும் எதிர்பாராத சிறந்த குணம் கொண்ட விதுரர் அளித்த உணவை உண்டான் - என்பற்கு ஏற்ப உண்ட பின்னர், தான் தொட்டு அளித்த உணவை மிகுந்த விருப்பத்துடன் உண்ட விதுரர், “மஹாபாரதம் உத்யோகபர்வம் - பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மதுஸூதந, கிமர்த்தம் புண்டரீகாக்ஷ! புக்தம் வ்ருஷல போஜனம் - மதுஸூதநா! தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவனே! பீஷ்மர், துரோணர், துரியோதனனாகிய நான் என்று பலரும் உள்ளபோது, நீ ஏன் தாழ்ந்த விதுரர் வீட்டிற்குச் சென்று உண்டாய்?”, என்று எதிரியான துரியோதனன் மிகுந்த சீற்றத்துடன் உரைத்தபோதிலும், புண்டரீகாக்ஷ - தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவன் - என்பதற்கு ஏற்ப தனது அழகான திருக்கண்களின் கடாக்ஷம் காரணமாக, பிறவியால் ஏற்பட்ட அனைத்து குற்றங்களும் நீங்கப்பெற்று தூய்மை அடையும்படியாகச் செய்த கடாக்ஷம். (ரிஷிபத்நிகளை பூதர் ஆக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு) – நாச்சியார் திருமொழி (12-6) – வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் - என்பதற்கு ஏற்ப தனது கடாக்ஷப் பார்வையால் ரிஷிகளுடைய மனைவிகளில் ஒருவளை, ஸ்ரீமத்பாகவதம் (10-22-34) – தத்ரைகா வித்ருதா பர்த்ரா பகவந்தம் யதாச்ருதம், ஹ்ருதோபகூஹ்ய விஜஹௌ தேஹம் கர்ம நிபந்தநம் – [ராஸலீலை நடைபெற்ற இடமான] அங்கு ஒருவள் தனது கணவனால் தடுக்கப்பட்டவளாக, க்ருஷ்ணனைத் தனது மனதால் வரித்தவளாக, கர்மத்தால் ஏற்பட்ட சரீரத்தை அப்போதே விட்டாள் - என்பதற்கு ஏற்ப, தன்னிடம் கொண்ட ப்ரேமையால் அப்போதே அவள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவள் என்றாகும்படியாகவும், மற்றவர்களைத் தங்கள் பாவங்கள் நீங்கப் பெறறு மோக்ஷம் பெறத் தகுதியானவர்கள் என்று பரிசுத்தராகும்படியாகவும் செய்யும் ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் …. [செய்வது என்ன என்று அடுத்து உரைக்கிறார்] (சாபம் இழிந்து என்னப் பண்ணுமிறே) திருப்பாவை (22) - அங்கணிரண்டுங் கொண்டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபமிழிந்து - என்பதற்கு ஏற்ப அழகான திருக்கண்கள் கொண்டு எங்களைப் பார்த்து அருளினால், சாபத்தில் பீடிக்கப்பட்டவர்கள் போன்று “அனுபவித்தால் அல்லாமல் கழியாது” என்றபடி உள்ள எங்களுடைய அனைத்துவிதமான பாபங்களும் அழியும்படிச் செய்யும் அல்லவோ [கடந்த பத்தியின் இறுதியில் உள்ள “ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம்” இவ்விதம் செய்யும் அல்லவோ என்று கூட்டவேண்டும்]? ஸர்வேச்வரனுடைய பார்வை என்பது அனைத்து பாவங்களையும் அழிக்கவல்லது என்பதால், அந்தப் பார்வை பட்ட இடமானது திருவாய்மொழி (1-9-9) – அமலங்களாக – என்பதற்கு ஏற்ப, தோஷம் இல்லாத இடம் அல்லவோ?