Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 94)

இரண்டாம் ப்ரகரணம்

இதுக்கு ஹேது - ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண்கான வந்து ஆள்பார்க்கிறவன் உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக் கழலலர் ஞானமுருவின் முழுதுமோட்டின பெருங்கண் எங்குமிலக்கற்று அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்குழன்று மாறிப்படிந்து துளங்குகிறவர் மேலேபடப் பக்க நோக்கறப் பண்ணின விசேஷ கடாக்ஷம்.

இவர்க்கு இந்த ப்ரபாவத்துக்கு அடியேதென்னுமாகாங்க்ஷையிலே இதுக்கு ஹேது, பகவந் நிர்ஹேதுக கடாக்ஷமென்கிறார் மேல். இப்படிக் கடாக்ஷித்ததுதான் இந்த லோகத்தை இவரைக் கொண்டு திருத்துகைக்காக வென்னுமத்தையும், இவர் தம்முடைய பூர்வாவஸ்தையையும், இவரைக் கடாக்ஷித்த ப்ரகாரத்தையும் விசதமாகச் சொல்லுகிறது இச்சூர்ணையாலே.

நம்மாழ்வாருடைய இத்தகைய ப்ரபாவத்திற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். இதற்குக் காரணம் - எந்தவிதமான காரணமும் இன்றி வருவதான பகவத் கருணையே ஆகும் என்கிறார். இவ்விதம் இவருக்குக் கடாக்ஷிப்பதன் காரணம் - இந்த லோகத்தை இவரைக் கொண்டு திருத்துவதற்காக என்பதையும், நம்மாழ்வாருடைய முந்தையை நிலை மற்றும் ஸர்வேச்வரன் கடாக்ஷித்த விதம் ஆகிய பலவற்றையும் இந்தச் சூர்ணையில் விரிவாக அருளிச்செய்கிறார்.

(இதுக்கு ஹேது) இவருடைய இந்த ப்ரபாவத்துக்கு ஹேது. (ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து) “ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து” என்றும், “சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த” என்றும் சொல்லுகிறபடியே, பண்ணின க்ருஷிகள் தப்பினாலும் சோம்பிக் கைவாங்காதே பின்னையும் க்ருஷி தன்னையே பண்ணும் க்ருஷிகனைப்போலே கல்பந்தோறும் ஸ்ருஷ்டிக்கச் செய்தே ஸபலமாகாதிருக்க முசியாதே மிகவுமொருப்பட்டு, என்றேனுமொருநாள் ப்ரயோஜனப் படுமென்று க்ருஷியை யுகந்து ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி. (முற்றுமாய் நின்று) “நில நீரெரிகால் விண்ணுயிரென்றிவைதான் முதலா முற்றுமாய் நின்ற” என்று, “தத் ஸ்ருஷ்ட்வா, ததேவாநு ப்ராவிசத்” இத்யாதிப்படியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளுக்குமாக அநுப்ரவேசித்து இவற்றைச் சொல்லும் வாசக சப்தம் தன்னளவிலே பர்யவஸிக்கும்படி ப்ரகாரியாய் நின்று. (நூலுரைத்து) “அன்ன மதாயிருந்தங்கற நூலுரைத்த” என்கிறபடியே, கேட்பார் உபஸத்தி பண்ண மாட்டாமையாலே இழக்கவெண்டாதபடி திர்யக் ரூபேண தன்னைத் தாழவிட்டு நின்று ஜ்ஞாதவ்ய தர்மப்ரகாசகமான சாஸ்த்ரத்தை உபதேசித்து. (யோகு புணர்ந்து) “குறைவில் தடங்கடல் கோளரவேறித்தன் கோல செந்தாமரைக்கண், உறைபவன் போல வோர் யோகு புணர்ந்த வொளி மணிவண்ணன்” என்கிறபடியே திருப்பாற்கடலிலே திருவநந்தாழ்வான் மேலேயேறிப் படுக்கை வாய்ப்பாலே கண்வளர்ந்தருளுகிறாப்போலே ஜகத் ரக்ஷணோபாய சிந்தை பண்ணிக் கண்வளர்ந்து. (கண்காண வந்து) சிந்திதோபாயாநு குணமாக “துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காண வந்து” என்கிறபடியே, “ந சக்ஷுஷா பச்யதி கச்சநைநம்” என்றும், “ந மாம்ஸ சக்ஷுரபி வீக்ஷதே தம்” என்றும், “கட்கண்ணால் காணாத வவ்வுரு” என்றும் சொல்லப்படுகிறதான துக்கோத்தரமான மநுஷ்யருடைய பிறவியிலே ஆவிர்ப்பவித்தருளி, அவர்கள் மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷயமாம்படி வந்து. (ஆள்பார்க்கிறவன்) இப்படி அவதாராதிகளாலே “ஆள் பார்த்துழி தருவாய்” என்கிறபடியே “எனக்கடிமை யாவாருண்டோ” என்று இதுவே வேளாண்மையாகத் தேடித் திரிகிறவன். (உலகினதியல்வை நல்வீடு செய்ய) “ஓ ஓ உலகினதியல்வே” என்று தத்வ வித்துக்கள் கண்டால் ஸஹிக்கமாட்டாமல் விஷண்ணராம்படி “பெற்றதாயிருக்க மணை வெந்நீராட்டு”வாரைப்போலே உத்பாதகனாய் ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய்ப் போருகிற பரதேவதையான தன்னை விட்டு, கிடந்தவிடம் தெரியாதபடி அப்ரஸித்தமான க்ஷுத்ர தேவதைகளை ஆட்டையறுத்தல், ப்ரஜையை அறுத்தல், அத்யந்த நிஷித்தமான மதிராதிகளை நிவேதித்தலாகிற பரஹிம்ஸாதி ஸாதந முகத்தாலே பஜித்து, தத் பலமாக துக்கமிச்ரமான ஸுகத்தைத் தருமவையாய், அநாதியாய் துஸ்தரமா யிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்த நிபந்தநமான ஜந்மங்களினின்றும் ஒருகாலும் நீங்காமைக்குறுப்பாய், பலவகைப்பட்டுத் தப்பவரிதா யிருந்துள்ள சப்தாதி விஷயங்களிலே துக்கப்பட் டழுந்துகிற லோக ஸ்வபாவத்தை “யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்” என்று, அநாதி வாஸனையாலே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் ஏதேனுமொன்றை அவலம்பித்துத் தன்னை விட்டகலுகையே ஸ்வபாவமான ஸம்ஸாரி சேதனன் வ்ரதத்தை நன்றாக விடுவிக்க மென்கிறபடியே ஸவாஸநமாகப் போக்குகைக்காக. (இணக்குப் பார்வை தேடி) ம்ருக பக்ஷிகளைப் பிடிப்பார் ஸஜாதீய புத்தியாலே தன்னோடே இணக்கவற்றான ம்ருக பக்ஷிகளைப் பார்வையாக வைத்துப் பிடிப்பாரைப்போலே பார்வையைத் திணக்குவதாக, அதுக்காவார் ஆரென்று தேடி. (கழலலர் ஞானமுருவின முழுதுமோட்டின பெருங்கண்) “கழறலம்” என்று தொடங்கி ஒரு திருவடித்தலமே பூமி யடையத் தானாயிற்று, ஒரு திருவடி பூமியிலே இடமில்லாமையாலே போய், ஸர்வர்க்கும் ஸர்வகாலத்திலும் இஸ்ஸம்பந்தத்தை நினைத்துத் தன்னிழலில் ஒதுங்கலாம்படி நிழலைக் கொடுக்கைக்காக ஊர்த்வ லோகங்க ளெல்லாத்திலும் நிறைந்தது. பரப்பையுடைத்தான அவ்வண்டத்தை யடையப்புக் குழறுகையாலே விகஸிதமா யிருந்துள்ள ஜ்ஞாநமாகிற ப்ரகாச ரூபமான தீபத்தை யுடையனாயென்கிறபடியே கழல்தலமும், உழறலர் ஞானமும் மறுபாடுருவின பரப்பெங்கு மோட்டிப் பார்த்த “அழறலர் தாமரை” போன்ற செவ்வியையுடைய “பெருங்கண்மலர்” என்கிற பெரிய திருக்கண்களானவை. (எங்குமிலக்கற்று) ஓரிடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமல் ஒரு விஷயத்தை அப்படிக் காக்குவதாகப் பார்க்கிறவளவிலே, (அன்பொடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர் மேலே பட) “அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளிக் கொள்ளும்” என்று ஸ்ரீவிபீஷணாழ்வான் விஷயமாக எப்போதும் ஸ்நேஹமாகப் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே தனக்குப் பள்ளமடையான தக்ஷிண திக்கிலே “யாதானுமோராக்கையில் புக்கு” என்றும், “ஆக்கையின் வழியுழல்வேன்” என்றும், “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்றும், “பல்பிறவியில் படிகின்ற யான்” என்றும், “பிறவிக் கடலுள் நின்ற நான் துளங்க” என்றும் சொல்லுகிறயடியே ஜாதி நியமமாதல் வர்ணநியமமாதலின்றிக்கே, கர்மாநுகுணமாக ஏதேனுமொரு சரீரத்திலே ப்ரவேசித்து, அந்த சரீரத்தின் வழியே போய் ஜந்ம பரம்பரைகளிலே தோள்மாறி அவ்வநர்த்தத்தில் வெறுப்பின்றிக்கே அதிலே அவகாஹித்துத் தரை காணவொண்ணாத ஸம்ஸார ஸாகர மத்யஸ்தராய்க் கொண்டு நடுங்குகிற விவர் மேலே பட, (பக்கநோக்கறப் பண்ணின விசேஷ கடாக்ஷம்) இப்படி இவர் மேலே பட்டவித்தை “நம்மேலோருங்கே பிறழ வைத்தார்” என்கிறபடியே ஒருமடைப்படுத்தி, “பக்கநோக்கறியான்” என்று நாச்சிமார் திருமுலைத்தடத்தாலே நெருக்கி யணைத்தாலும் புரிந்து பார்க்க வறியானென்னும்படி “நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந” என்றும், “நிர்ஹேதுக கதிம்” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப் பண்ணப்பட்ட விசேஷ கடாக்ஷம். “இதுக்கு ஹேது – இப்படிப் பண்ணின விசேஷ கடாக்ஷம்” என்று வாக்யாந்வயம். ஆகக் கீழுக்தமான இவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது ஸ்பஷ்டமாக ப்ரதிபாதிதமாயிற்று. இத்தாலே சங்கா வாக்யத்திற் சொன்ன சங்கைகளெல்லாம் கிடக்க “அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர்” இவரென்று நிர்ணீதமாய்விட்டது.

(இதுக்கு ஹேது) - நம்மாழ்வாருடைய இந்த ப்ரபாவத்திற்கான காரணம். (ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருள் என்று அளி மகிழ்ந்து) - திருவாய்மொழி (10-7-9) – ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து – என்றும், பெரியதிருவந்தாதி (18) - சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த - என்றும், திருவாய்மொழி (3-9-10) – ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் - என்றும், திருவாய்மொழி (2-10-11) – பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் - என்றும், திருவாய்மொழி (3-4-8) – அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப, முன்பு செய்த விவசாயம் தவறிப் போனாலும் அதனால் சோம்பியபடி பின்வாங்காமல் மீண்டும் அதே போன்று விவசாயம் செய்யும் விவசாயி போன்று, ஒவ்வொரு கல்பத்திலும் அனைத்தையும் படைத்தாலும், அந்தப் படைப்புகள் தன்னை நாடாமல் உள்ளது கண்டு, “தனது படைப்பு பயன் பெறவில்லையே” என்று சேர்ந்துவிடாமல், “இவை என்றாவது ஒருநாள் பயன் அளிக்கும்” என்று தான் செய்வதை மிகவும் விருப்பத்துடன் செய்து உலகைப் படைத்தபடி. (முற்றுமாய் நின்று) – திருவாய்மொழி (7-6-2) – நில நீரெரிகால் விண்ணுயிரென்றிவைதான் முதலா முற்றுமாய் நின்ற - என்றும், தைத்திரீய உபநிஷத் – தத் ஸ்ருஷ்ட்வா, ததேவாநு ப்ராவிசத் - அனைத்தையும் படைத்து, அவற்றினுள் புகுந்தான் - என்றும் கூறுவதற்கு, ஏற்ப தன்னால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் “ஒரு பொருள்” என்று கூறுவதற்கான தகுதியை அடைவதற்கும், “இதற்கு இன்ன பெயர்” என்று கூறுவதற்கான தகுதியை அவை பெறுவதற்கும், அவை தங்களுடைய கர்மங்களை இயற்றுதல் மற்றும் இயற்றாமல் இருத்தல் போன்ற நிலையை அடைவதற்கும் என்பதற்காக அவற்றினுள் புகுந்து, அவற்றைக் குறிக்கும் பெயர்கள் அனைத்தும் தன்னையே குறிப்பதாகச் செய்யும்படி அவற்றின் உயிராக நின்று. (நூல் உரைத்து) – பெரியதிருமொழி (11-4-8) – அன்னமதாயிருந்தங்கற நூலுரைத்த - என்பதற்கு ஏற்ப தனது உபதேசங்களைக் கேட்பவர்கள் அனைவரும் அவற்றை உணரமாட்டார்கள் என்பதன் காரணமாக, அவர்கள் அதனை இழந்து விடக்கூடாது என்று திருவுள்ளம் பற்றியவனாக, அன்னப்பறவையாகத் தான் தாழ்ந்த பிறவியில் அவதரித்து, அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியதான தர்மங்கள் அனைத்தையும் தன்னுள் வெளிப்படுத்தியபடி உள்ள சாஸ்த்ரங்களை உபதேசம் செய்து, (யோகு புணர்ந்து) – திருவாய்மொழி (3-10-3) - குறைவில் தடங்கடல் கோளரவேறித்தன் கோல செந்தாமரைக்கண், உறைபவன் போல வோர் யோகு புணர்ந்த வொளி மணிவண்ணன் - என்பதற்கு ஏற்ப திருப்பாற்கடலிற்கு வந்து ஆதிசேஷன் மீது ஏறி, சயனித்துக் கிடப்பதற்கு ஒரு மெத்தை கிட்டியது என்பதைக் காரணமாக வைத்து உறங்குவது போன்று பாசாங்கு செய்து, உலகத்தைக் காப்பது எப்படி என்று எப்போதும் கண்களை மூடியபடி சிந்தித்து. (கண் காண வந்து) - சிந்தித்த உபாயத்திற்கு ஏற்றபடி, திருவாய்மொழி (3-10-6) - துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காண வந்து – என்பதற்கு ஏற்ப, கடோபநிஷத் – ந சக்ஷுஷா பச்யதி கச்சநைநம் – இந்தப் பரமபுருஷனை யாரும் மாமிசக்கண் கொண்டு காண இயலாது – என்றும், ந மாம்ஸ சக்ஷுரபி வீக்ஷதே தம் – மாமிசக் கண்கள் கொண்டு அவனைக் காண்பதற்கு இல்லை - என்றும், பெரிய திருவந்தாதி (28) - கட்கண்ணால் காணாத வவ்வுரு - என்றும் கறுவதற்கு ஏற்ப உள்ள ஸர்வேச்வரனாகிய தான், துக்கங்களுக்கு இருப்பிடமாக உள்ள மனிதப்பிறவியில் தோன்றி, அவர்களுடைய மாமிசக் கண்களால் தன்னைக் காணும்படியாக நின்று. (ஆள் பார்க்கிறவன்) - இவ்விதமான அவதாரங்கள் மூலமாக, நான்முகன் திருவந்தாதி (60) - ஆள் பார்த்துழி தருவாய் - என்று கூறுவதற்கு ஏற்ப, “நமக்கு அடிமையாக உள்ளவர் யாரும் உள்ளனரோ” என்று இதனையே தொழிலாகச் செய்தபடி உள்ளவன் [அதாவது இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் செய்வது என்னவென்றால் …] (உலகினது இயல்வை நல்வீடு செய்ய) - உண்மையானவற்றை உள்ளது உள்ளபடி அறியும் சான்றோர்கள் கண்டால், திருவாசிரியம் (6) – ஓ ஓ உலகினதியல்வே - என்று பொறுத்துக் கொள்ள இயலாமல் துன்பம் அடையும் விதத்தில்; பெரியதிருமொழி (11-6-6) – பெற்ற தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ – [பெற்ற தாய் போன்று பரிவுடன் தனது திரு வயிற்றிலே நிறுத்திப் பிழைக்க வைத்தருளின ஸர்வேச்வரனும் வெறுக்கும்படியாக வேறு ஒரு தாழ்ந்த தேவதையைக் கொண்டாடுவது என்பது, அறிவற்ற மணைக் கட்டையை வெந்நீரில் நீராட்டுவது போன்று ஆகும் - பெண்கள் பிரசவித்தவுடன் பெற்ற அத்தாயையும் பிறந்த குழந்தையையும் நீராட்டுதல் என்பது மலைநாட்டு வழக்கமாக முன்பு இருந்தது; ஆனால் பிரசவித்தவுடனேயே தாயை நீராட்டுவது பலவகையான துன்பங்களுக்குக் காரணமாவதால் அத்தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை நீராட்டுதல் என்னும் வழக்கம் உள்ளது. அதனைத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார்] என்பதற்கு ஏற்ப, அனைத்துப் பொருள்களையும் படைத்தவனும், அவற்றை அனைத்துவிதத்திலும் காப்பாற்றுபவனும் ஆகிய உயர்ந்த தெய்வமான தன்னை விட்டு அகன்று சென்று; உள்ள இடம் தெரியாதபடி இருக்கின்ற ப்ரஸித்தம் அற்ற தாழ்ந்த தெய்வங்களை, ஆட்டை அறுத்தும் குழந்தைகளை வெட்டியும் பலி அளித்தும், மது போன்ற தாழ்ந்த பொருட்களை அளித்தும் என்பதான மற்ற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற வழிகளால் பூஜித்து, அதன் விளைவாகத் துக்கம் கலந்த இன்பத்தை அளிப்பதாகவும், எல்லையற்ற காலங்களாகக் கடப்பதற்கு அரியதாகவும் உள்ள இந்த உலகின் தொடர்பு காரணமாக ஏற்படும் பிறவி எனபவற்றிலிருந்து நீங்குவதற்கு இயலாமல் உள்ளதன் காரணமாகவும் இருக்கின்ற உலகவிஷயங்களில் துக்கப்பட்டு அழுந்தியபடி உள்ள இந்த உலகத்தினரின் தன்மையை; திருவிருத்தம் (95) – யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும் - என்பதற்கு ஏற்ப, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளதான வாசனை காரணமாக, இந்த உலகில் உள்ள பொருள்களுடன் தொடர்பு கொண்டபடி அவற்றை மட்டுமே விடாமல் பற்றிக்கொண்டு, ஸர்வேச்வரனாகிய தன்னை விட்டு அகலுதல் என்பதையே இயல்பாகக் கொண்டுள்ள இந்த ஸம்ஸாரத்தில் உள்ள மனிதர்களுடைய எண்ணங்களை முழுவதுமாக விடுவித்துவிடும் என்பதற்கு ஏற்ப அவற்றை வாசனையுடன் நீக்குவதற்காக. (இணக்குப் பார்வை தேடி) - விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றைப் பிடிக்க எண்ணுபவர்கள், அவைகள் “தங்களுடைய இனம்” என்று எண்ணுவதற்காக அவற்றின் இனத்துடன் ஒத்தபடி உள்ள விலங்குகளையும் பறவைகளையும் பார்வையாக வைத்துப் பிடிப்பது போன்று, ஸம்ஸாரிகளும் தங்களில் ஒருவர் என்று எண்ணவேண்டும் என்பதற்காக, அப்படிப்பட்ட ஒருவர் யார் என்று தேடி. (கழலலர் ஞானமுருவின முழுதுமோட்டின பெருங்கண்) திருவிருத்தம் (58) – கழறலம் – என்பதற்கு ஏற்ப ஒரு திருவடித்தலம் இந்தப் பூமி முழுவதையும் பரவி நின்றது, மற்றொன்று இந்தப் பூமியில் இடம் இல்லாத காரணத்தால் அனைவருக்கும் எப்போதும் இப்படிப்பட்டதான தனது ஸம்பந்தத்தை எண்ணியபடி “அவன் திருவடி நிழலில் ஒதுங்கலாம்” என்பதற்கு ஏற்ப நிழலை அளிப்பதற்காக மேல் லோகங்கள் அனைத்திலும் பரவி நின்றது. மிகுந்த பரப்பளவு கொண்டதான அண்டம் முழுவதும் பரவி நிற்கும்படியாக உள்ளதால் மலர்ந்து காணப்படும் ஞானம் என்ற ஒளி கொண்ட தீபம் ஏந்தியவன் என்பதற்கு ஏற்ப திருவடித்தலமும், மலர்ந்த ஞானம், மறுபாடு உருவின பரப்பு முழுவதும் அலசியபடி நோக்கியதும், சூரியனைக் கண்ட மலர்ந்துள்ள தாமரை போன்றும் அழகைக் கொண்ட திருவிருத்தம் (45) – பெருங்கண் மலர் - என்பதற்கு ஏற்ப உள்ள பெரிய திருக்கண்கள். (எங்கும் இலக்கு அற்று) - எந்த ஒரு இடத்திலும் இப்படிப்பட்ட செயலுக்கு ஏற்றபடியாக உள்ள ஒருவர் அகப்படாமல் உள்ளதால், அது போன்று ஒருவரைப் புதியதாக உருவாக்கலாம் என்று தீர்மானித்து நோக்கும் நேரத்தில். (அன்பொடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர் மேலே பட) - பெருமாள் திருமொழி (1-10) - அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளிக் கொள்ளும் - என்பதற்கு ஏற்ப ஸ்ரீவிபீஷணாழ்வான் மீது கொண்ட அன்பின் காரணமாக எப்போதும் அவன் உள்ள திசையான தெற்குத்திசையை நோக்கியபடி உள்ளதால், தனது பார்வை என்னும் வெள்ளம் ஓடுவதற்கு ஏற்றபடி பள்ளமாக உள்ளதான தெற்குத்திசையில், திருவிருத்தம் (95) – யாதானுமோராக்கையில் புக்கு – என்றும், திருவாய்மொழி (3-2-1) – ஆக்கையின் வழியுழல்வேன் - என்றும், திருவாய்மொழி (2-6-8) - மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து – என்றும், திருவாய்மொழி (3-2-2) - பல்பிறவியில் படிகின்ற யான் – என்றும், திருவாய்மொழி (5-1-9) – பிறவிக் கடலுள் நின்ற நான் துளங்க - என்றும் கூறுவதற்கு ஏற்ப இன்ன வர்ணம் என்றோ அல்லது இன்ன குலம் என்றோ ஒரு வரையறை இல்லாமல், கர்மத்தின் காரணமாக ஏதேனும் ஒரு சரீரத்தில் புகுந்து, அந்தச் சரீரம் இட்டுச் செல்லும் வழியில் சென்று, தொடர்ச்சியாக வருகின்ற பிறவிகளில் மாறி மாறி வந்து, இப்படிப்பட்ட தாழ்ந்த நிலை என்ற நிலையைக் குறித்து வெறுப்பு இல்லாமல், அந்த ஸம்ஸாரத்தில் மூழ்கியதன் காரணமாகத் தரை காண இயலாதபடி உள்ள பிறவி என்ற பெருங்கடலின் நடுவில் இருந்தபடி நடுங்கும் நம்மாழ்வார் மீது ஸர்வேச்வரனின் பார்வை பட்டது. (பக்கநோக்கறப் பண்ணின விசேஷ கடாக்ஷம்) - இவ்விதம் இவர் மேல் விழுந்த பார்வையை, திருவிருத்தம் (45) – நம்மேலோருங்கே பிறழ வைத்தார் – என்று கூறுவதற்கு ஏற்ப ஒரு நிலையில் வைத்து, திருவாய்மொழி (2-6-2) – க்கநோக்கறியான் – என்னும்படி பிராட்டிமார்கள் தங்களுடைய ஸ்தனங்கள் கொண்டு இவனை நெருக்கமாக அணைத்துக் கொண்டாலும் அதனை உணர்ந்து காணாமல் உள்ளான் என்னும்படியாக, பாஞ்சராத்ரம் - நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந - பகவானாகிய நான் சிபாரிசு காரணமாகவோ, மற்ற உபாயங்கள் காரணமாகவோ யாரையும் கடாக்ஷிப்பதில்லை; எனது விருப்பம் காரணமாக மட்டுமே ஒருவனைக் கடாக்ஷிக்கிறேன் - என்றும், பாஞ்சராத்ரம் – நிர்ஹேதுக கதிம் - எந்தவிதமான காரணமும் இன்றி வெளிப்படுவதான எனது கடாக்ஷம் காரணமாக ஏற்பட்டதான ஆசார்யனுடைய அங்கீகாரம் என்ற உயர்ந்த பேற்றினை அடைகிறார்கள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப தனது விருப்பம் காரணமாகவும், மற்ற எந்தவிதமான காரணம் இன்றியும் ஸர்வேச்வரனால் செய்யப்பட்ட சிறப்பான கடாக்ஷம். அதாவது “இதுக்கு ஹேது” என்று தொடங்கப்பட்ட சூர்ணை வாக்கியமானது “இவ்விதம் செய்யப்பட்ட விசேஷமான கடாக்ஷம்” என்று முடிகிறது. ஆக இப்படியாக மேலே கூறப்பட்ட இவருடைய ப்ரபாவத்தின் காரணம் இன்னது என்று தெளிவாகக் கூறப்பட்டது. இதன் மூலம் கடந்த சூர்ணையில் கூறப்பட்ட சந்தேகங்கள் பலவற்றில் உள்ளதான “அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர்” இவரே ஆவார் என்று உணர இயல்கிறது.