Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 93)
இரண்டாம் ப்ரகரணம்
இதுக்கு மூலம் - யான் நீ என்று மறுதலைத்து வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி நிலையிடம் தெரியாதே தெய்வத்தின மொருவகைக் கொப்பாக இனத்தலைவன் அந்தாமத்தன்பு செய்யச் சேர்ந்தமைக் கடையாளமுளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழிந்து சடரையோட்டி மதாவலிப்தர்க்கு அங்குசமிட்டு நடாவிய கூற்றமாய்த் தீயனமருங்கு வாராமல் கலியுகம் நீங்கிக் கிதயுகம் பற்றிப் பட்டெழு போதறியாதிருந்த ப்ரபாவம்.
இப்படி இவரை ஜ்ஞாநிகளானவர்கள் சங்கிக்கைக்கு ஹேதுவேதென்னு மாகாங்க்ஷையிலே இதுக்கு மூலம் இவருடைய ப்ரபாவமென்கிறார் மேல்.
இப்படியாக நம்மாழ்வார் குறித்து ஞானிகள் ஐயம் கொள்வதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். இதற்குக் காரணம் நம்மாழ்வாருடைய ப்ரபாவமே ஆகும் என்று விடை அருளிச்செய்கிறார்.
– (இதுக்கு மூலம்) அதாவது, இவரைக் கண்ட ஜ்ஞாநாதிகர் “இவர் இன்னார்” என்று நிர்ணயிக்கமாட்டாமை இங்ஙன் சங்கிக்கைக்கு ஹேது, (யான் நீயென்று மறுதலைத்து) “புவியுமிருவிசும்பும்” என்று தொடங்கி உயப விபூதியும் உன் ஸங்கல்பத்திலே கிடக்கின்றன; ஏவம்பூதனான நீ என்னுடைய ச்ரோத்ரேந்த்ரிய த்வரா புகுந்து விச்சேதமின்றிக்கே என் ஹ்ருதயத்திலே உளையாகா நின்றாய். இப்படியான பின்பு விபூதியையுடைய நீயோ விபூதிமானையுடைய நானோ பெரியா ராரென் றறிவாரார். அப்ரதிஹத சக்தியான நீதான் இத்தை நிரூபித்தறிந்து காண் என்று உபய விபூதி யுக்தனோடே மறுதலைக்கிற விபவத்தையுடையராய். – (வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி) “யாவர் நிகரகல் வானத்தே” என்றும், “மாறுளதோவிம் மண்ணின் மிசையே” என்றும் அவனுடைய உபயவிபூதி யோகத்துக்கும் ஸௌகுமார்யத்துக்கும் தகுதியாம்படியாகவும் ஸர்வேச்வரனாய் அவாப்த ஸமஸ்தகாமனாய் ஒன்றுக்கும் விக்ருதனாகாதவன், தம்முடைய உக்தி ச்ரவண ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே தெகுடாகும்படியாகவும், திருவாய்மொழி பாடுகிற நாவீறுடைமையாலே உபயவிபூதியிலும் உபமாந ரஹிதராய், (நிலையிடம் தெரியாதே) கலவியும் பிரிவும் கலசி நடக்கையாலே கலவியால் வந்த ரஸமேயாய்ச் செல்லும் அங்குள்ளார் படியுமன்றி, பகவத்குணைக தாரகதையாலே அந்ந பாநாதிகளால் தரிக்குமிங்குளார் படியுமன்றி, இப்படி உபயவிபூதியிலும் அடங்காமையாலே “வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்” என்று வாஸ ஸ்தலம் தெரியாதபடியாய், (தெய்வத்தின மொருவகைக் கொப்பக) “தெய்வத்தினமோரனை யீர்களாய்” என்று ஒருவரிருவரன்றிக்கே நித்யஸூரிகளெல்லாம் கூடினாலும் தமக்கு ஒரு வகைக் கொப்பாம்படியாய், (இனத்தலைவன் அந்தாமத்தன்பு செய்ய) “வானோரினத் தலைவன்” என்று அனந்த ஸூரி ஸங்க நிர்வாஹகனான ஸர்வேச்வரன் “அந்தாமத்தன்பு செய்து” என்று அழகிய தாமமான பரமபதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை யடையத் தம் பக்கலிலே ஒரு மடைகொள்ளப் பண்ண, (சேர்ந்தமைக்கு அடையாளமுளவாக) “திருவருள்களும் சேர்ந்தமைக் கடையாளம் திருந்தவுள” என்று மேன்மேலும் அவன் விஷயீகாரங்களைப் பெற்றமைக்கு ஸுவ்யக்தலாஞ்சநமான ராகம் வாய்கரையிலே தோன்றுகை முதலான கலவிக் குறிகளுண்டாய்ச் செல்ல, (உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து) “உகந்துகந்து மகிழ்ந்து குழையும்” என்றும், “திமிர் கொண்டாலொத்து நிற்கும்” என்றும், அவன் ஸௌந்தர்ய சீலாதிகளை அநுஸந்தித்து உத்தரோத்தரம் விளைகிற பாஹ்யாப்யந்தர ஹர்ஷத்தாலே சிதிலராவது, “ஸ்தப்தோஸ்யுத தமாதேசமப்ராக்ஷய:” என்கிறபடியே ஸர்வநியாமக பரப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பிறந்தாரைப்போலே ஸ்திமிதராவதாய். (நாட்டியல்வொழிந்து) “நாட்டாரோடியல் வொழிந்து” என்று, “உண்டியே உடையே” யுகந்தோடி, “யானே யென்றனதே” என்று அஹங்கார மமகார வச்யராயிருக்கிற லௌகிகரோடு ஸம்பந்தமற்று, (சடரையோட்டி) சடகோபராகையாலே “வேதசாஸ்த்ரா விரோதிநா” என்கிறபடியே ப்ரமாணாநுகூல தர்க்கங்களாலே மத்யஸ்தமாக வர்த்தத்தை ஸாதிக்கை யன்றிக்கே ஸ்வபுத்த்யா கல்பித சுஷ்க தர்க்கங்களாலே ஸ்வஸ்வ மத ஸ்தாபனம் பண்ணும் பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற சடரை, ச்ருத்யந்த தாத்பர்யமான ஸ்வோக்தி விசேஷங்களாலே ஸ்வஸந்நிதானத்தில் நில்லாதபடி துரத்தி. (மதாவலிப்தர்க்கு அங்குசமிட்டு) பராங்குசராகையாலே “வித்யாமதோ தநமதஸ் த்ருதீயோ பிஜநோமத: ஏதே மதாவலிப்தாநாம்” என்று மத ஹஸ்திபோலே அபிஜந வித்யாதி மதத்ரயா வலிப்தராய்த் திரியுமவர்களுக்கு நிர்மதராய்த் தலைவணங்கும்படி உபதேச ரூபாங்குசமிட்டு. (நடாவிய கூற்றமாய்) “பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்” என்று வேதவேத்யத்வ த்யோதகமாம்படி வேதமய கருடவாஹனான ஸர்வேச்வரன் விஷயத்திலே “நின்கண் வேட்கை யெழுவிப்பன்” என்று எல்லார்க்கும் பக்தியை யுண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம் தர்சநத்திலகப்பட்டவர்களின் ஸம்ஸாரத்துக்கு ம்ருத்யுவாய், (தீயனமருங்கு வாராமல்) “கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம்” என்று சரீரத்தை முடித்து ப்ராணனை அபஹரிக்கக் கடவதான வ்யாதி சாத்ரவ க்ஷுதாதி தோஷங்களும், ஸாம்ஸாரிக ஸகல துக்க ஹேதுவான பாபங்களும், “வன்துயரை – மருங்கு – கண்டிலமால்” என்னும்படி அருகும் வாராதபடியாய், (கலியுகம் நீங்கிக் கிதயுகம் பற்றி) “திரியும் கலியுகம் நீங்கி” என்று, “பவிஷ்யத்யதரோத்தரம்” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் மாறாடும்படி பண்ணுவதாய், “கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வ ஸ்ரஷ்டாரமீச்வரம், நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜநா:” என்கிறபடியே பகவத் ருசி விரோதியான கலியுகம் போய், “பெரிய கதியுகம் பற்றி” என்கிறபடியே கேவல வைஷ்ணவ தர்மமே நடக்குமதாய், யுகாந்தர வ்யவதாநமின்றிக்கே ஒரு போகியான க்ருதயுகம் ப்ரவேசிக்கும்படியாக, (பட்டெழு போதறியாதிருந்த ப்ரபாவம்) “பட்டபோதெழு போதறியாள் விரை மட்டலர் தண்டுழா யென்னும்” என்று பகவத்விஷயத்தில் போக்யதாநுஸந்தானத்தால், “நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யஸ்தமிதே ரவௌ” என்று ஆதித்யோதயத்திலே வந்தவாறே த்ரவ்யார்ஜந காலம் வந்ததென்று உகப்பார்கள், அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடே ரமிக்கைக்கு காலம் வந்ததென்று உகப்பர்களென்றும், “ப்ராதர் மூத்ரபூரீஷாப்யாம் மத்யாஹ்நே க்ஷுத் பிபாஸயா, ஸாயம் காமேந பாத்யந்தே ஜந்தவோ நிசி நித்ரயா” என்றும் சொல்லுகிறபடியே நாட்டார்க்குப் புறம்பே காலக்ஷேபத்துக் குடலாய்ச் செல்லுகிற திவா ராத்ர விபாகமு மறியாதே அகால கால்யமான தேசத்திற் போலே, பகவதநுபவைக பரரா யிருந்த ப்ரபாவம். [இதுக்கு மூலம் இப்படியிருந்த ப்ரபாவம்] என்று வாக்ய ஸம்பந்தம். இத்தால் கீழ்ச்சொன்ன சங்கைக்குக் காரண மின்னதென்று எல்லாரு மறியும்படி அருளிச்செய்தாராய்த்து.
– (இதற்கு மூலம்) நம்மாழ்வாரைக் கண்ட ஞானிகள் “இவர் இன்னார்” என்று உறுதியாக உரைக்க இயலாமல் இவ்விதம் ஐயம் கொள்வற்கான காரணம், (யான் நீ என்று மறுதலைத்து இருந்த ப்ரபாவம்) - பெரியதிருவந்தாதி (75) – புவியும் இரு விசும்பும் - என்று தொடங்கி, “நித்யவிபூதி, லீலாவிபூதி என்ற இருவகையான செல்வங்களும் உன்னுடைய ஸங்கல்பத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீ எனது செவி வழியாக என்னுள் புகுந்து கொண்டு, பிரிவு என்பது இன்றி, எனது இதயத்தில் எப்போதும் நிலையாக நிற்கிறாய். இப்படியாக உள்ளதால், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் கொண்டவனாகிய நீயா அல்லது இந்தச் செல்வங்கள் அனைத்தையும் கொண்டவனாக உள்ள உன்னைக் கொண்டுள்ள நானா – நம் இருவரில் யார் பெரியவர் என்று யாரால் கூற இயலும்? ஆனால் எந்த ஒரு தடையும் இல்லாத சக்தி கொண்ட நீயே ஆவாய் என்பதை ஆராய்ந்து அறிந்து காண்பாயாக”, என்று இரண்டு விபூதிகளையும் கொண்டவனாகிய ஸர்வேச்வரனோடு மறுத்துப் பேசும்படியான வைபவம் கொண்டவர். (வானத்து மண்மிசை மாறும் நிகரும் இன்றி இருந்த ப்ரபாவம்) – திருவாய்மொழி (4-5-8) - யாவர் நிகரகல் வானத்தே - என்றும், திருவாய்மொழி (6-4-9) - மாறுளதோ இம்மண்ணின் மிசையே – என்றும் கூறுவதற்கு ஏற்ப இரண்டு விபூதிகளையும் கொண்டவனாகும் தன்மை மற்றும் மென்மைத் தன்மை ஆகிய இரண்டிற்கும் தகுதியாகும் விதத்திலும்; ஸர்வேச்வரனாக உள்ளதால், தான் விரும்பும் அனைத்தையும் அடைந்ததன் காரணமாக நிறைவு பெற்றவனாக உள்ளவனும், வேறு எதனையும் நாடாதவனும் ஆகிய அவன், தனது திருவாய்மொழியைக் கேட்டவுடன் எழுந்த மகிழ்ச்சி காரணமாக தெகுடு ஆடும் விதத்திலும் உள்ளதான திருவாய்மொழியை உரைக்கின்ற நாக்கு கம்பீரம் கொண்ட காரணத்தால் இந்த உலகம், அந்த உலகம் என்று இரண்டிலும் ஒப்பு கூற இயலாதவராக உள்ள ப்ரபாவம் கொண்டவர். (நிலை இடம் தெரியாதே இருந்த ப்ரபாவம்) – ஸர்வேச்வரனுடைய சேர்க்கை என்ற இன்பம் மட்டுமே எப்போதும் உள்ளதான பரமபதம் போன்று அல்லாமலும், இங்கு சேர்க்கையும் பிரிவும் கலந்து உள்ளதால், ஸர்வேச்வரனுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவித்தபடி இருத்தல் என்பதை மட்டுமே கொண்டு உயிர் தாங்கி நிற்பதால் இந்த உலகில் உள்ள மற்றவர்கள் போன்று உணவு நீர் முதலியவைகளால் உயிர் தாங்கி நிற்பது அல்லாமலும் – ஆக இப்படியாக இந்த உலகம் மற்றும் பரமபதம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேராமல் உள்ளதன் காரணமாக, திருவிருத்தம் (75) – வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் – என்று கூறுவதற்கு ஏற்ப நம்மாழ்வார் வாழும் இடம் இன்னது என்று அறிய இயலாதபடியான ப்ரபாவம் கொண்டவர். (தெய்வத்து இனம் ஒருவகைக்கு ஒப்பாக இருந்த ப்ரபாவம்) – [இங்கு தெய்வத்து இனம் என்றால் நித்யஸூரிகள் என்று பொருள்] திருவிருத்தம் (23) – தெய்வத்தினமோரனை யீர்களாய் – என்பதற்கு ஏற்ப ஒருவர், இருவர் என்று அல்லாமல், நித்யஸூரிகள் அனைவரும் சேர்ந்து நின்றாலும், நம்மாழ்வாரகிய தன் ஒருவருக்கு மட்டும், அவர்கள் ஓரளவிற்கு ஒப்பாகும்படியான ப்ரபாவம் கொண்டவர். (இனத்தலைவன் அந்தாமத்தன்பு செய்ய இருந்த ப்ரபாவம்) – [இனத்தலைவன் என்றால் பரமபதநாதன், அந்தாமம் என்றால் பரமபதம்] பெரியதிருவந்தாதி (25) – வானோரினத் தலைவன் - என்பதற்கு ஏற்ப எண்ணற்ற நித்யஸூரிகளுடைய நிர்வாஹகனான ஸர்வேச்வரன், திருவாய்மொழி (2-5-1) - அந்தாமத்தன்பு செய்து - என்பதற்கு ஏற்ப மிகவும் அழகான இடமான பரமபதத்தில் கொள்ளும் மயக்கம் முழுவதையும், நம்மாழ்வாராகிய தன்னிடம் மட்டுமே கொள்ளும்படியான ப்ரபாவம் கொண்டவர். (சேர்ந்தமைக்கு அடையாளமுளவாக இருந்த ப்ரபாவம்) – திருவாய்மொழி (8-9-6) - திருவருள்களும் சேர்ந்தமைக் கடையாளம் திருந்தவுள - என்பதற்கு ஏற்ப மேன்மேலும் அவனுடைய கடாக்ஷங்களைப் பெற்றதற்கு அடையாளமாக உதடுகளில் சிவந்த நிறம் தோன்றுதல் போன்றதான, சேர்க்கைக்கே உரிய தன்மைகள் நிறைந்த ப்ரபாவம் கொண்டவர். (உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து இருந்த ப்ரபாவம்) - திருவாய்மொழி (6-5-4) – உகந்துகந்து மகிழ்ந்து குழையும் - என்றும், திருவாய்மொழி (6-5-2) - திமிர் கொண்டாலொத்து நிற்கும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அவனுடைய ஸௌந்தர்யம், எளிமை போன்ற பல திருக்கல்யாண குணங்களை எப்போதும் எண்ணியபடி, அதன் விளைவாக உள்ளும் புறமும் மேன்மேலும் அதிகரித்தபடி உள்ளதான மகிழ்ச்சி காரணமாக உடல் தளர்ந்து நின்றவர், சாந்தோக்ய உபநிஷத் - ஸ்தப்தோஸ்யுத தமாதேசமப்ராக்ஷய: - பரம்பொருள் குறித்து அறிந்தாயோ, அதனால் திமிர் கொண்டு காணப்பட்டாயோ – என்பதற்கு ஏற்ப அனைத்தையும் நியமிக்கின்ற பரம்பொருளை நேரடியாகக் கண்டவர்கள் போன்று திமிர் நிறைந்தவராக உள்ள ப்ரபாவம் கொண்டவர் [இங்கு திமிர் என்றால் ஆணவம் என்று பொருள் அல்ல; அறிந்து கொண்ட பெருமிதம், மகிழ்ச்சி என்று பொருள்]. – (நாட்டியல்வொழிந்து இருந்த ப்ரபாவம்) – திருவாய்மொழி (10-6-2) - நாட்டாரோடியல் வொழிந்து - என்பதற்கு ஏற்ப, பெருமாள் திருமொழி (3-4) - உண்டியே உடையே – என்று அவற்றின் பின்னால் ஓடி, திருவாய்மொழி (2-9-9) – யானே யென்றனதே - என்பதற்கு ஏற்ப “நான், என்னுடையது” என்பதான கர்வத்தின் பிடியில் சிக்குண்ட உலகத்தவர்களுடன் ஸம்பந்தம் இல்லாத ப்ரபாவம் கொண்டவர். – (சடரை ஓட்டி இருந்த ப்ரபாவம்) மநுதர்மத்தில் - வேதசாஸ்த்ரா விரோதிநா - வேத சாஸ்த்ரங்களுக்கு முரண்படாமல் – என்பதற்கு ஏற்ப, ப்ரமாணங்களுக்கு ஏற்றபடியாக உள்ள விதிமுறைகள் கொண்டு நடுவு நிலைமை தவறாமல் நின்று வேதங்களின் ஆழ்பொருளை உறுதி செய்யாமல், தங்களுடைய புத்தியில் தோன்றுவதற்கு ஏற்ப வீண் கற்பனை வாதங்கள் கொண்டு தங்களுடைய மதங்களை நிலைநிறுத்த முயலும் மற்ற மதத்தவர்களும், வேதங்களின் ஆழ்பொருளை உள்ளது உள்ளபடி அறியாதவர்களும் ஆகிய வஞ்சனை நிறைந்தவர்களை, இவர் சடகோபர் என்பதால், வேதாந்தத்தின் தாத்பர்யமாகவே உள்ளதான தனது திருவாய்மொழிகள் கொண்டு, தன் முன்பாக நிற்க இயலாதபடி விரட்டிய ப்ரபாவம் கொண்டவர். (மத ஆவலிப்தர்க்கு அங்குசம் இட்டு இருந்த ப்ரபாவம்) - வித்யாமதோ தநமதஸ் த்ருதீயோ பிஜநோமத: ஏதே மதாவலிப்தாநாம் - கல்வி காரணமாக ஏற்பட்ட களிப்பு, செல்வம் காரணமாக ஏற்பட்ட களிப்பு, பிறந்த குலம் காரணமாக ஏற்பட்ட களிப்பு ஆகிய மூன்றும், கர்வம் கொண்டவர்களுக்கு மதத்தை ஏற்படுத்துகின்றன - என்பதற்கு ஏற்ப, கர்வம் கொண்ட யானை போன்று பிறந்த குலம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றால் ஏற்படும் மூன்றுவிதமான மதங்களுடன் மேலும் கர்வம் கொண்டு திரிபவர்கள், தங்களுடைய கர்வம் நீங்கப் பெற்றவர்களாகி, தலைவணங்கி நிற்கும்படியாக, பராங்குசராக உள்ளதால் உபதேசம் வடிவமான அங்குசம் கொண்டு, அவர்களை அடக்கும் ப்ரபாவம் கொண்டவர். – (நடாவிய கூற்றமாய் இருந்த ப்ரபாவம்) – திருவிருத்தம் (6) - பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம் – என்பதற்கு ஏற்ப, வேதங்களால் மட்டுமே அறியப்படக்கூடியதான தன்னுடைய தன்மையை உணர்த்தும்படியாக, வேதமயமாகவே உள்ள கருடனைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள ஸர்வேச்வரன் விஷயத்தில், திருவிருத்தம் (96) - நின்கண் வேட்கை யெழுவிப்பன் – என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் பக்தியை வளர்த்து, தனது பார்வையில் அகப்பட்டவர்கள் அனைவருடைய ஸம்ஸாரம் என்பதற்கு யமனாக நிற்கும் ப்ரபாவம் கொண்டவர். – (தீயனமருங்கு வாராமல் இருந்த ப்ரபாவம்) - திருவாய்மொழி (5-2-6) – கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம் - என்பதற்கு ஏற்ப சரீரத்தை வீழ்த்தி, ப்ராணனை அபகரித்துச் செல்வதாகிய நோய், பகை, பசி போன்ற தோஷங்களும், ஸம்ஸாரத்தில் உள்ளதன் காரணமாக உண்டாகிற அனைத்துவிதமான துன்பங்களுக்கும் காரணமான பாவங்களும், பெரியதிருவந்தாதி (54) – வன்துயரை – மருங்கு – கண்டிலமால் – என்பதற்கு ஏற்ப சிறிதும் அருகில் வராதபடியாகத் தடுக்கும் ப்ரபாவம் கொண்டவர். (கலியுகம் நீங்கிக் கிதயுகம் பற்றி) – மஹாபாரதம் - பவிஷ்யத்யதரோத்தரம் - பொருள்களின் தன்மைகள் அனைத்தும் முற்றிலும் தலைகீழாக மாற உள்ளன - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்துப் பொருள்களின் தன்மைகள் அனைத்தும் மாறும்படியாகவும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-1-50) – கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வ ஸ்ரஷ்டாரமீச்வரம், நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜநா: - மைத்ரேயரே! உலகம் அனைத்திற்கும் தலைவனும், எங்கும் பரவி உள்ளவனும், அனைத்தையும் படைப்பவனும், அனைத்தையும் நியமிப்பவனும் ஆகிய ஸர்வேச்வரனை, கலியுகத்தில் பாவங்களால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் வணங்கமாட்டனர் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வ்ரனிடம் உள்ள பக்திக்கு விரோதம் ஏற்படும்படியாகவும் உள்ளதான கலியுகமனாது, திருவாய்மொழி (5-2-3) – திரியும் கலியுகம் நீங்கி – என்று கூறுவதற்கு ஏற்ப நீங்கி, திருவாய்மொழி (5-2-3) - பெரிய கதியுகம் பற்றி - என்பதற்கு ஏற்ப ஸ்ரீவைஷ்ணவ தர்மம் மட்டுமே நிறைந்ததும், மற்ற யுகங்களுடைய இடையூறு இன்றி இன்பம் அளிக்கவல்லதும் ஆகிய க்ருதயுகம் ஏற்படும்படியான ப்ரபாவம் கொண்டவர். – (பட்டெழுபோது அறியாது இருந்த ப்ரபாவம்) - திருவாய்மொழி (2-4-9) - பட்டபோதெழு போதறியாள் விரை மட்டலர் தண்டுழா யென்னும் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனை மட்டுமே எப்போதும் எண்ணியபடி உள்ள மனம் கொண்டு, அந்த இன்பத்திலேயே மூழ்கியபடி உள்ளவர் என்பதால், இராமாயணம் அயோத்யாகாண்டம் (105-24) – நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யஸ்தமிதே ரவௌ - சூரிய உதயத்தின்போது பொருள் ஈட்டும் காலம் வந்தது என்று மகிழ்வர், சூரியன் அஸ்தமித்தவுடன் மனைவியுடன் இன்பமான உள்ள காலம் வந்தது என்று மகிழ்வர் - என்பதற்கு ஏற்ப சூரியன் உதித்தவுடன் பொருள் ஈட்டும் காலம் வந்ததாக மகிழ்வர், சூரியன் மறைந்தவுடன் தங்களுக்கு விருப்பமாக விஷயங்களில் ஈடுபடுவதற்கான காலம் வந்தது என்று மகிழ்வர் - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-62) - ப்ராதர் மூத்ரபூரீஷாப்யாம் மத்யாஹ்நே க்ஷுத் பிபாஸயா, ஸாயம் காமேந பாத்யந்தே ஜந்தவோ நிசி நித்ரயா – காலைப்பொழுதில் மலமூத்திரத்தாலும், உச்சிப்பொழுதில் பசி தாகத்தாலும், மாலைப்பொழுதில் காமத்தாலும், இரவில் தூக்கத்தாலும் மனிதர்கள் துன்பம் அடைகிறார்கள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள இந்த உலகினர் போன்று இவர் அல்லாமல், பொழுதுபோக்குவதற்குத் துணை நிற்கின்ற இரவு பகல் வேறுபாடு அறியாமல், காலம் என்பதன் பிடியில் சிக்காமல் உள்ள பரமபதத்தில் உள்ளது போன்று பகவத் அனுபவம் என்பதில் மட்டுமே எப்போதும் நிலைத்தவராக உள்ள ப்ரபாவம் கொண்டவர். சூர்ணையில் “இதுக்கு மூலம் … இப்படியிருந்த ப்ரபாவம்” என்று முடிக்கவேண்டும். இப்படியாகப் பலவிதமாக மேலே எழுந்த சந்தேகத்திற்குக் காரணம் இன்னது என்று அனைவரும் அறியும்படியாக அருளிச்செய்தார்.