Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 92)

இரண்டாம் ப்ரகரணம்

அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸு நந்தஸூநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ? வ்யாஸாதிவதாவேசமோ? மூதுவர் கரைகண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அனந்தன்மேல் புண்ணியங்கள் பலித்தவரோவென்று சங்கிப்பர்கள்.

இப்படி அவதரித்தவிவர் தாம் ஆரென்னு மாகாங்க்ஷையிலே பேரளவுடையாரும் இவரை இன்னாரென்று அளவிடமாட்டாமை அதிசங்கை பண்ணும்படியை அருளிச்செய்கிறார் மேல் (அத்ரியென்று தொடங்கி).

– இப்படியாகக் கொண்டாடப்படும்படி அவதரித்த நம்மாழ்வார்தான் யார் என்ற கேள்வி எழலாம். இதற்கு விடையாக, மிகவும் உயர்ந்த ஞானிகள் கூட நம்மாழ்வார் இன்னார் என்று அளவிட்டுக் கூற இயலாதபடி ஐயத்துடன் உள்ள நிலையை அருளிச் செய்கிறார்.

– அதாவது, க்ருதயுகத்திலே அத்ரியும் ஜமதக்நியுமாகிற ப்ராஹ்மணோத்தமர்களுக்குப் பிள்ளையாய்க் கொண்டு தத்தாத்ரேயனும் பரசுராமனுமாய், த்ரேதாயுகத்திலே க்ஷத்ரியனான தசரத சக்ரவர்த்திக்குப் பிள்ளையாய். த்வாபரயுகத்திலே யயாதி சாபத்தாலே அபிஷேக ப்ராப்தியற்ற யதுகுலோத்பவராகையாலே க்ஷத்ரியரில் தண்ணியராய் வைச்யப்ராயரா யிருக்கிற வஸுதேவர்க்கும் “க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம் வைச்யம் கர்ம ஸ்வபாவஜம்” என்கிறபடியே கோரக்ஷணாதி தர்மத்தையுடைய ஸாக்ஷாத் வைச்யரான ஸ்ரீநந்தகோபர்க்கும் புத்திரனாய், இப்படி க்ருதாதி யுக க்ரமத்திலே ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த ஸர்வேச்வரன் சதுர்த்தமான கலியுகத்திலே சதுர்த்த வர்ணத்திலே வந்தவதரித்தபடியோ வென்கை. பூர்வ யுக த்ரயத்திலும் அடைவே வர்ணத்ரயத்திலும் அவதரித்து வருகையாலும், “கலௌ புந: பாபரதாபிபூதே ஸ உத்பபூவாச்ரித வத்ஸலத்வாத், பக்தாத்மநா ஸர்வ ஜநாந் ஸுகோப்தும் விச்வாதிகோ விச்வமயோஹி விஷ்ணு:” என்று கலியுகத்திலே ஸர்வேச்வரன் பக்தரூபேண அவதரித்தானென்று ருஷிகள் சொல்லுகையாலும் இவர் வைபவம் கண்டவர்களுக்கு இப்படி சங்கிக்க யோக்யதை யுண்டிறே. (வ்யாஸதிவதாவேசமோ) அதாவது “க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்” என்றும், “ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் வ்யாஸரூபீ மஹாமுநி” என்றும் சொல்லுகிறபடியே வேதங்களை வ்யஸிக்கை முதலான கார்யங்களை நிர்வஹிக்கைக்காக வ்யாஸாதிகள் பக்கல் ஆவேசித்தாப்போலே இவரைக் கொண்டு த்ராவிட வேதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்காக இவர் பக்கல் ஆவேசித்தானோ வென்கை. இவரைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காக இவர் பக்கலிலே ஆவேசித்து நிற்கவும் கூடுமாகையாலே இப்படியும் சங்கிக்கலாமிறே. (மூதுவர் கரைகண்டோர் சீரியரிலே ஒருவரோ) அதாவது, “விண்ணாட்டவர் மூதுவர்” என்று பரமபதத்துக்கு நிலத்தாளிகளான நித்யஸூரிகளிலே இவ்விபூதியைத் திருத்துகைக்காக ஈச்வர நியோகத்தாலே அவதரித்தார் ஒருவரோ? அன்றிக்கே “கரை கண்டோர்” என்று ஸம்ஸாரத்தைக் கடந்து அக்கரைப்பட்டிருக்கும் முக்தரிலே ஸம்ஸாரிகளைத் திருத்துவதாக பகவந் நிதேசத்தால் அவதரித்தார் ஒருவரோ? அன்றிக்கே, “முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் ச்வேத த்வீப நிவாஸிநாம்” என்கிறபடியே முக்தப்ராயராய், “பாற்கடல் பாம்பணை மேல் பள்ளிகொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்” என்கிற ச்வேத த்வீப வாஸிகளிலே இவ்வருகுள்ளாரைத் திருத்துகைக்காக ஈச்வரேச்சையாலே அவதரித்தா ரொருவரோ வென்கை. இவருடைய வைபவம் பார்த்தால் எல்லார்படியும் சொல்லலாம்படி யிருக்கையாலே இப்படியும் தனித்தனியே சங்கிப்பார்க்கு சங்கிக்கலாமிறே. “பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல்” என்கிறபடியே பிராட்டிமாரோடு சேர்த்துப் பார்க்கும்படியிறே யிருப்பது; மற்றுள்ள ததீயருடன் பின்னை சொல்ல வேண்டாவிறே. (முன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ) அதாவது, கீழ்ச்சொன்னவர்கள் ஒருவருமன்றிக்கே ஸம்ஸாரிகள் தன்னிலே “முன்னம் நோற்ற விதி கொலோ” என்கிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸஞ்சிதமான தம்முடைய ஸுக்ருத பலமாய்க் கொண்டு இப்படி திருந்தினாரொருவரோ? அன்றிக்கே, “அநந்தன் மேல் கிடந்த வெம்புண்ணியா” என்று நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷத்தாலே நித்ய ஸம்ஸாரியை நித்யஸூரி கல்பமாக்கவல்ல அநந்தசாயியான ஸநாதந புண்யம் முழு நோக்காக பலித்து இப்படி திருந்தினார் ஒருவரோவென்று சங்கிப்பர்கள். அதாவது, இப்படிக் கீழ்ச் சொன்ன வகைகளாலே இவரை இன்னாரென்று நிச்சயிக்கமாட்டாமல் பேரளவுடையாரும் சங்கியா நிற்பர்க ளென்றபடி.

– [அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸு நந்தஸூநுவானவனுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ] (அத்ரி ஜமதக்நி ஸூநுவாய்) – க்ருதயுகத்தில் அத்ரி என்ற அந்தணருக்குப் புத்ரனான தத்தாத்ரேயனாயும், ஜமதக்நி என்ற அந்தணருக்குப் புத்ரனான பரசுராமனாயும். (பங்க்திரத ஸூநுவாய்) – த்ரேதாயுகத்தில் இராமனாயும். (வஸு நந்த ஸூநுவாய்) - த்வாபர யுகத்தில் யயாதியின் சாபம் காரணமாக முடிசூடிக் கொள்ளும் தகுதி இழந்த யதுகுலத்தில் பிறந்தவராகையால், க்ஷத்ரியங்களில் தாழ்ந்தவராகவும், வைச்யர்களை ஒத்தவராகவும் உள்ள வஸுதேவர் மற்றும், கீதை (18-44) – க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம் வைச்யம் கர்ம ஸ்வபாவஜம் - உழவு செய்தல், பசுக்களைக் காத்தல், பொருட்களை வாங்கி விற்பதில் ஸத்யத்துடன் இருத்தல் போன்றவை வைச்யர்களுடைய இயல்பான கர்மங்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப பசுக்களைக் காப்பாற்றுதல் போன்ற தர்மங்கள் உள்ளதன் காரணமாக இயல்பாகவே வைச்யராய் உள்ள நந்தகோபருடைய புத்திரனாயும், இப்படியாகப் பலவாக அவதரித்த ஸர்வேச்வரன். (யுக வர்ண க்ரம அவதாரமோ) – இவ்விதம் க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம் என்ற வரிசையில் அந்தணர், க்ஷத்ரியர், வைச்யர் என்ற முறையில் அவதரித்து வந்த ஸர்வேச்வரன், நான்காம் யுகமான கலியுகத்தில், நான்காம் வர்ணத்தில் வந்து அவதரித்தானோ? – முதல் மூன்று யுகங்களில் முறையே மூன்று வர்ணங்களில் அவதரித்து வந்த்தாலும், கலௌ புந: பாபரதாபிபூதே ஸ உத்பபூவாச்ரித வத்ஸலத்வாத், பக்தாத்மநா ஸர்வ ஜநாந் ஸுகோப்தும் விச்வாதிகோ விச்வமயோஹி விஷ்ணு: - உலகில் உள்ள அனைத்தையும் விட உயர்ந்தவனும், உலகமே உருவமானவனும் ஆகிய மஹாவிஷ்ணு, பாவம் செய்வதில் மட்டுமே பற்றுதல் கொண்ட மனிதர்களால் சூழப்பட்ட இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் பொருட்டு, அடியார்களிடம் அதிக வாத்ஸல்யம் உள்ளவன் என்பதால், ஒரு விஷ்ணுபக்தனாகவே கலியுகத்தில் அவதரித்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, கலியுகத்தில் ஸர்வேச்வரன் பக்தரூபத்தில் அவதரித்தான் என்று ரிஷிகள் உரைப்பதாலும், நம்மாழ்வாருடைய மேன்மைகளைக் கண்ணுற்றவர்களுக்குக் கடந்த பத்தியின் இறுதியில் கூறப்பட்ட சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லவோ? (வ்யாஸாதிவத் ஆவேசமோ) – ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-4-5) - க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் – க்ருஷ்ண த்வைபாயநர் என்று வழங்கப்படும் வ்யாஸரை ஸர்வேச்வரனாகிய நாராயணன் என்றே அறிவாயாக - என்றும், மஹாபாரதம் - ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் வ்யாஸரூபீ மஹாமுநி - இப்படிப்பட்ட வ்யாஸர் என்ற மஹாமுனிவர் நாராயணனே ஆவார் - என்று கூறுவதற்கு ஏற்ப வ்யாஸர் போன்றவர்கள் ரூபத்தில் ஸர்வேச்வரன் அவதரித்தது போன்று நம்மாழ்வார் மூலமாகத் தமிழ் வேதத்தை வெளிப்படுத்த எண்ணியவனாக, நம்மாழ்வார் ரூபத்தில் அவதரித்தானோ என்று கருத்து. நம்மாழ்வாரைக் கொண்டு உலகத்தைத் திருத்துவதற்காக நம்மாழ்வார் ரூபமாக அவதரித்திருக்கலாம் என்பது பொருந்தும் என்ற காரணத்தினால் இவ்விதம் ஐயப்படலாம் அல்லவோ? – [மூதுவர் கரைகண்டார் சீரியரிலே ஒருவரோ] (மூதுவரில் ஒருவரோ) – திருவிருத்தம் (2) - விண்ணாட்டவர் மூதுவர் - என்பதற்கு ஏற்ப பரமபதத்தில் எப்போதும் வசித்து வருகின்ற நித்யஸூரிகளில் ஒருவர், இந்த உலகத்தைத் திருத்துவதற்காக ஸர்வேச்வரனுடைய ஆணைக்கு இணங்க நம்மாழ்வாராக அவதரித்தாரோ? (கரைகண்டாரில் ஒருவரோ) – திருவாய்மொழி (8-3-10) – கரை கண்டோர் - என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரம் என்னும் பெரும் ஸமுத்ரத்தைக் கடந்து அக்கரையில் சேர்ந்த முக்தர் ஒருவர், ஸம்ஸாரிகளைத் திருத்துவதற்காக ஸர்வேச்வரனுடைய ஆணைக்குட்பட்டு நம்மாழ்வாராக அவதரித்தாரோ? (சீரியரிலே ஒருவரோ) – மஹாபாரதம் சாந்திபர்வம் – முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் ச்வேத த்வீப நிவாஸிநாம் - ச்வேத தீபகற்பத்தில் வசிப்பவர்களும், முக்தர்கள் போன்று உள்ளவர்களும் ஆகியவர்களுக்கு இதுவே லக்ஷணம் - என்பதற்கு ஏற்ப முக்தர்கள் போன்றவர்களாகவும், திருவிருத்தம் (79) – பாற்கடல் பாம்பணை மேல் பள்ளிகொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் - என்று கூறப்படுகின்ற ச்வேத தீபகற்பத்தில் வசிப்பவர்களாகவும் உள்ள ஒருவர், இந்த உலகில் உள்ளவர்களைத் திருத்துவதற்காக, ஸர்வேச்வரனுடைய விருப்பம் காரணமாக நம்மாழ்வாராக அவதரித்தாரோ? நம்மாழ்வாருடைய மேன்மையை ஆராயும்போது, இவர்கள் அனைவருடைய தன்மைகளும் காணப்படுவதால், இவ்விதம் தனித்தனியாகச் சந்தேகம் கொள்வது பொருத்தம் அல்லவோ? திருவாய்மொழி (6-5-10) – பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல் - என்பதற்கு ஏற்ப பிராட்டிகளுடன் சேர்த்துப் படிக்கப்பட்டாலும், அவரவர்களுடன் தனித்தனியாக உள்ளவன் என்று ஐயம் கொள்ளும்படியாக உள்ளான் அல்லவோ? இப்படி உள்ளபோது அவனுடைய அடியார்கள் ஒவ்வொருடனும் தனித்தனியாக அவன் உள்ளதைத் தனித்து மீண்டும் கூறவேண்டுமோ? (முன்னம் நோற்ற புண்ணியங்கள் பலித்தவரோ) - மேலே கூறப்பட்டவர்களில் யாரும் இல்லாமல், ஸம்ஸாரிகளாகிய இந்த உலகத்தில் வாழ்கின்றவர்களில், திருவாய்மொழி (6-5-7) - முன்னம் நோற்ற விதி கொலோ – என்பதற்கு ஏற்ப ஆயிரக்கணக்கான முற்பிறவிகளில் கிட்டிய புண்ணிய பலன்கள் காரணமாகத் திருத்திய ஒருவர் இவ்விதம் நம்மாழ்வாராக அவதரித்தாரோ? (அனத்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ) – திருச்சந்தவிருத்தம் (45) – அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா - என்பதற்கு ஏற்ப எந்த ஒரு காரணமும் இன்றி ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் கிட்டியதன் விளைவாக, நித்ய ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளவர்களை நித்யஸூரிகளுக்குச் சமமாகச் செய்யவல்ல ஆதிசேஷன் மீது சயனித்தவன், எப்போதோ செய்த புண்ணியத்தை பலிக்க வைத்ததன் விளைவாகத் திருந்திய யாரோ ஒருவர் நம்மாழ்வாராக அவதரித்தாரோ? இதுவரை கூறப்பட்ட பலரில், நம்மாழ்வார் யார் என்று அறியாத காரணத்தால், அதனை உறுதியாக உரைக்க இயலாமல் சான்றோர்களும் சந்தேகத்துடனே உள்ளார்கள் என்று கருத்து.