Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 91)
இரண்டாம் ப்ரகரணம்
தமிழ்மாமுனிதிக்கு சரண்யமென்றவர்களாலே க்வசித் க்வசித்தென்று இவராவிர்ப்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்.
இப்படி பாகவதத்வ ஸாமாந்ய ப்ரயுக்த வைபவ மாத்ரமன்றிக்கே “ஜநக தசரத” இத்யாதி வாக்யந் தொடங்கி மூன்று வாக்யத்தாலே கீழ்ச் சொன்ன வைபவ விசேஷ த்யோதகமான ப்ரமாணமேதென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் மேல் (தமிழ் மாமுனி யென்று தொடங்கி).
இவ்விதம் பாகவதர்களுக்கு உரியதான பொதுவான வைபவத்தால் ஏற்படும் மேன்மை மட்டும் அல்லாமல், சூர்ணை (82) – ஜனக தசரத – என்று தொடங்கும் மூன்று வாக்கியங்கள் மூலம் கூறப்பட்ட மேன்மையை விளக்கவல்ல ப்ரமாணம் ஏதேனும் உண்டோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(தமிழ்மாமுனிதிக்கு சரண்யமென்றவர்களாலே) “தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா” என்று “வண்தமிழ் மாமுனி” என்கிறபடியே த்ராவிட சாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யனிருக்கிற திக்கு ஸர்வர்க்கும் புகலிடமென்ற மஹர்ஷிகளாலே. இப்போது இது சொல்லிற்று - வைதிகரான ருஷிகள் த்ராவிட ப்ரபந்த வக்தாவானவிவரை இப்படி பஹுமதி பண்ணிச் சொல்லக்கூடுமோவென்று சங்கிப்பார்க்கு ஒரு த்ராவிடஜ்ஞனாலே தக்ஷிண திக்குக்கு நன்மை சொன்னவர்கள் த்ராவிட ப்ரபந்த முகேந லோகோஜ் ஜீவநகரரான இவரையும் இப்படி பஹுமாநம் பண்ணிச் சொல்லக் குறையில்லையென்று தோற்றுகைக்காக. (க்வசித் க்வசித்தென்று இவராவிர்ப்பாவம்) “க்ருதாதிஷு நரா ராஜந் கலா விச்சந்தி ஸம்பவம், கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: க்வசித் க்வசித் மஹாராஜ த்ராவிடேஷு ச பூயச:, தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ, காவேரீ ச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதீ, யேபிபந்தி ஜலம் தாஸாம் மநுஜா மநுஜேச்வர, தேஷாம் நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்ரவா” என்று ஜ்ஞாதாக்கள் வந்து ஆவிர்ப்பவிக்கும் ஸ்தல விசேஷங்களை தத்தந்நதீ விசேஷங்களாலே ப்ரகாசிப்பித்து அந்த நதீ விசேஷங்களில் ஜலத்தைப் பாநம் பண்ணுமவர்களுக்கு பகவத் பக்தி அதிசயிக்கும்படியையும் சொல்லுகிறவளவில் ப்ரதமத்திலே “தாம்ரபர்ணீ நதீ யத்ர” என்று இவராவிர்ப்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே இவ்வாழ்வாருடைய ஆவிர்ப்பாவமானது, (கலியும் கெடும் போலே ஸூசிதம்) இவர்தாம் மயர்வறமதிநலம் பெற்றவராகையாலே “கலியும் கெடும்” என்று திருமங்கையாழ்வார் உடையவர் போல்வார் அவதரித்து கலியுக ஸ்வபாவமும் கழியுமென்று மேல்வருமம்சத்தை தர்சித்தருளிச் செய்தாப்போலே த்ரிகாலஜ்ஞாரான ஸ்ரீசுகாதிகளாலே ஸூசிப்பிக்கப்பட்டதென்கை. – “க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீ க்ருதே, விஷ்ணோ ரம்சாம்சஸம் பூதோ வேத வேதார்த்த தத்வவித் ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா, ஜநிஷ்யதி ஸதாம் ச்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா” இத்யாதி வசநங்களும் இவராவிர்ப்பாவ ஸூசகங்களாகையாலே, இவ்விடத்தில் விவக்ஷிதங்கள். கேவல ஜந்ம வாசக சப்தங்களிலொன்றைச் சொல்லாதே அவதார சப்த பர்யாயமான ஆவிர்ப்பாவ சப்தத்தைச் சொல்லிற்று இவர் பிறப்பும் ஈச்வரன் பிறப்போபாதி பரார்த்தமென்று தோற்றுகைக்காக. இத்தால் இவர் ஓரவதார விசேஷமென்ற தாயிற்று.
(தமிழ்மாமுனிதிக்கு சரண்யமென்றவர்களாலே) – தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா - புண்ணிய கர்மங்களையே செய்கின்ற எந்த அகஸ்திய முனிவரால் தெற்குத் திசை அனைவரும் சரணம் புக ஏற்ற இடமாக ஆனதோ - என்றும், பாசுரப்படி இராமாயணம் ஆரண்ய காண்டம் - வண்தமிழ் மாமுனி - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தமிழ்மொழியில் அனைத்து சாஸ்த்ரங்களையும் எடுத்து உபதேசித்த அகஸ்த்ய முனிவர் வசிக்கும் தெற்குத்திசை அனைவருக்கும் புகலிடம் என்று மஹரிஷிகளாலே. இப்போது இங்கு அகஸ்த்யர் குறித்து ஏன் கூறப்பட்டது - வைதிகர்களாக உள்ள ரிஷிகள், தமிழில் அமையப் பெற்ற நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களையும், அவற்றைச் செய்தருளிய நம்மாழ்வரையும் இப்படியாகத் துதித்து உரைப்பார்களோ என்ற சிலர் ஐயம் கொள்ளலாம். தமிழை அறிந்த ஒரு முனிவனால் தெற்குத்திசைக்கே நன்மை உண்டு என்று கூறியவர்கள், தமிழ் ப்ரபந்தம் மூலம் உலகினைக் கரையேற்றக்கூடிய நம்மாழ்வாரையும் இவ்விதம் புகழ்ந்து உரைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை – என்று உணர்த்தவே ஆகும். (க்வசித் க்வசித்தென்று இவராவிர்ப்பாவம்) - ஸ்ரீமத்பாகவதம் (11-5-38, 39) – க்ருதாதிஷு நரா ராஜந் கலா விச்சந்தி ஸம்பவம், கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: க்வசித் க்வசித் மஹாராஜ த்ராவிடேஷு ச பூயச:, தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ, காவேரீ ச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதீ, யேபிபந்தி ஜலம் தாஸாம் மநுஜா மநுஜேச்வர, தேஷாம் நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்ரவா – அரசனே! க்ருதயுகம் தொடக்கமாக உள்ள யுகங்களில் வாழ்ந்த மக்கள் கூட கலியுகத்தில் பிறவியை விரும்புகிறார்கள்; நாராயணனே அடையத்தக்கவன் என்று பறை சாற்றுகின்ற சான்றோர்கள் கலியுகத்தில் இங்கும் அங்கும் தோன்றுவார்கள்; எங்கு தாமிரபரணி, க்ருதமாலா, பாலாறு, பெருமை நிறைந்த காவேரீ, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிகள் ஓடுகின்றனவோ அங்கு அவர்கள் பிறப்பார்கள்; எந்த மனிதர்கள் அந்த நதிகளுடைய புண்ணிய நீரைப் பருகுகிறார்களோ அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இன்றி நாராயணனிடம் பக்தி ஏற்படும் - என்பதன் மூலம் சான்றோர்கள் அவதரிக்கும் இடங்களை, அந்தந்த இடங்களில் உள்ள நதிகள் மூலம் சிறப்பித்து உரைத்து, அந்த நதிகளில் உள்ள தண்ணீரைப் பருகுபவர்களுக்குப் பகவானிடம் பக்தி பெருகுவதும் உரைக்கப்பட்டது; இவற்றில், தொடக்கத்திலேயே - தாம்ரபர்ணீ நதீ யத்ர - தாமிரபரணி எங்கு உள்ளதோ - என்று நம்மாவார் அவதரித்த இடத்தை உரைப்பதால், நம்மாழ்வாருடைய அவதாரம் என்பது, (கலியும் கெடும் போலே ஸூசிதம்) - நம்மாழ்வார் மதிநலம் பெற்றவர் என்பதால், திருவாய்மொழி (5-2-1) – கலியும் கெடும் – என்பதற்கு ஏற்ப திருமங்கையாழ்வார், எம்பெருமானார் போன்றவர்கள் அவதரிக்க, அதனால் கலியுகத்தின் தன்மை நீங்கும் என்று எதிர்காலத்தில் நடக்க உள்ளதை முன்பே அறிந்து நம்மாழ்வார் அருளிச்செய்தது போன்று, நம்மாழ்வாருடைய அவதார ஸ்தலம் குறித்து முக்காலமும் நன்குணர்ந்த ஸ்ரீசுகப்ரஹ்மம் போன்ற ரிஷிகளால் உரைக்கப்பட்டது என்று கருத்து. க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீ க்ருதே, விஷ்ணோ ரம்சாம்சஸம் பூதோ வேத வேதார்த்த தத்வவித் ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா, ஜநிஷ்யதி ஸதாம் ச்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா – [வேதமார்க்கமானது] நாஸ்திகர்களால் கலங்கும்படியான கொடிய கலியுகம் வந்தபோது, மஹாவிஷ்ணுவின் அம்சத்திற்கு அம்சமாக உள்ளவரும், வேதங்களை அதன் ஆழ்பொருளுடன் அறிந்தவரும் ஆகிய நம்மாழ்வார், வேதங்களின் உருவில் உள்ள ஸ்துதிகள் அனைத்தையும் தமிழ் மொழியில் உலகிற்கு நன்மை அளிக்கும் விதமாகச் செய்தருளப் போகிறார் - என்பது போன்று வாக்கியங்களும் நம்மாழ்வாருடைய அவதாரத்தை மறைமுகமாகக் கூறுவதால், அவற்றையும் இங்கு கொள்ளவேண்டும். சாதாரணமாக “பிறப்பு” என்பது போன்றதை உணர்த்தவல்ல “ஜனனம்” போன்ற பதத்தை கூறாமல், அவதாரத்தை உணர்த்தவல்லதான “ஆவிர்ப்பாவம்” என்ற பதத்தை இட்டது காண்க. இதன் மூலம் இவருடைய பிறப்பு என்பது ஸர்வேச்வரனுடைய பிறப்பு போன்று, மற்றவர்களுக்காக என்பது வெளிப்படுத்தப்பட்டது. இதனால் நம்மாழ்வார் ஓர் அவதார புருஷர் என்பது தெளிவாகிறது.