Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 90)

இரண்டாம் ப்ரகரணம்

மாவுருவில் கள்ளவேடம், திருந்து வேதமலமான மானிடம் பாடல், ஸர்வவர்ண சூத்ரத்வம், காடுவாழ் சாதியில் கடல்வண்ணன் வேடம், தென்னுரையில் ஹரிகீர்த்தி, ச்வபசரில் பத்திபாசனமுமறிவார் ஆராரமரரென்ன வேற அறியாதார் சாதியந்தணர் களேலும் தகர விழுவர்.

இனிமேல் ப்ராகரணிகமாய் வருகிற ப்ரமாத்ரு வைபவ ஸ்தாபநத்துக்கு உறுப்பாக ப்ரமாண ப்ரமேயங்களையும் கூட்டிக் கொண்டு மூன்றிலும் த்யாஜ்யோபாதே யாம்சங்க ளுண்டென்னு மிடத்தை விபஜித்துச் சொல்லி இவ்விசேஷமறிவார் பெறும் பேற்றையும், இதறியாமல் பாகவத ஜன்ம நிரூபணம் பண்ணுவார் அத:பதிக்கும் படியையும் அறிவிக்கிறார் (மாவுருவிலித்யாதியாலே).

அடுத்து, ப்ரமாண வாக்கியங்கள் உரைக்கத்தக்கவராகிய ப்ரமாத்ரு என்று கொண்டாடப்படத் தக்கவராகிய, நம்மாழ்வாரின் மேன்மையை நிலைநிறுத்தும் பொருட்டு, ப்ரமாணம் மற்றும் ப்ரமேயம் ஆகிய இரண்டையும் சேர்த்துக்கொண்டு, ப்ரமாணம் - ப்ரமேயம் – ப்ரமாதா என்றுள்ள மூன்றிலுமே, ஏற்கத்தக்கவையும் உண்டு, தள்ளத்தக்கவையும் உண்டு என்பவற்றை வேறுபடுத்தி உரைத்து, இந்த வேறுபாட்டினைக் குறித்து அறிபவர்கள் அடையும் பேறு இன்னது என்றும், இதனை அறியாமல், பாகவதர்களின் பிறவி குறித்து ஆராய முற்படுபவர்கள் தாழ்ந்த நிலையை அடையும் தன்மை இன்னது என்றும் உணர்த்துகிறார்.

அதாவது, “எம்மாவுருவும் வேண்டுமாற்றாலாவாய்” என்கிறபடியே எல்லா ரூபமும் அப்ராக்ருதமாகையாலே ச்லாக்யமுமாய் இச்சாக்ருஷீதமுமா யிருக்கும். பகவதவதார விக்ரஹங்களில் வைத்துக் கொண்டு வேதா ப்ராமாண்யத்தை உபபாதித்து வைதிக ருசியைக் குலைக்கைக்காக “யதாஹி சோரஸ் ஸ ததாஹி புத்த:” என்கிறபடியே “கள்ள வேடத்தைக் கொண்டு” என்னும்படி பரிக்ரஹித்த புத்தமுனியான விக்ரஹமும், பகவத் ஸ்வரூபாதிகளை யதாவாக ப்ரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டிருந்துள்ள வேதத்தில் “நஸ்மர்த்தவ்யோ விசேஷேண வேதமந்த்ரோப்ய வைஷ்ணவ:” என்கிறபடியே ஸ்மரிக்கவுமாகாதபடி மலாம்சமான “மானிடம் பாடலென்னாவது” என்கிறபடியே க்ஷேத்ரஜ்ஞரை ப்ரசம்ஸிக்கிற வாக்யங்களும், – “ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா: ஸர்வவர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜநார்தநே” என்று எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தரல்லாதார் சூத்ரத்வமுமாகிற - ப்ரமேயத்திலும் ப்ரமாணத்திலும் ப்ரமாதாக்களிலு முண்டான த்யாஜ்யாம்சங்களும் – “காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்” என்று ஊர்மனையில் வஸியாமல் பசுக்களுக்குப் புல்லும் தண்ணீருமுள்ள காடுகளிலே வர்த்திக்கையாலே “காடுவாழ் சாதி” என்கிற கோபஜாதியில் ஸஜாதீயனாய் வந்தவதரித்து நிற்கிற க்ருஷ்ணனுடைய “காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்” என்று தாமநுபவித்துப் பிறர்க்குமழைத்துக் காட்டும்படி பசு மேய்த்து வருகிறபோதை யலங்காரத்தோடே கூடியிருக்கிற விக்ரஹமும். – “தென்னுரையில் கேட்டறிவதுண்டு” என்கிறபடியே தக்ஷிண திக் வர்த்தியானது கொண்டு தென்னுரை என்று சொல்லப்படுகிற த்ராவிட பாஷையான ப்ரபந்தங்களில், “ஹரிகீர்த்திம் விநைவாந்யத்” இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதகமானவையும், – “ச்வபசோபி மஹீபால விஷ்ணுபக்தோ த்விஜாதிக:” என்கிறபடியே ச்வபசரில் “பெறர்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்” என்று ஸ்வயத்நத்தால் பெறுதற்கரிதாயிருந்துள்ள பகவத் பாத கமல பக்தியாகிற தனமுடையவர்களுமாகிற ப்ரமேயாதி த்ரயத்தி லுபாதேயாம்சங்களுமான இவ்விபாகமறிவார் “ஆராரமரர்” என்கிறபடியே ஏதேனும் ஜந்ம வ்ருத்தங்களை யுடையரேயாகிலும் ஸூரி ஸமரென்னும்படி ச்லாக்யராய், “இலங்குவான் யாவரு மேறுவர்” என்கிறபடியே அத்யுஜ்ஜ்வலமான பரமபதத்தை ப்ராபிக்க, இப்ப்ரமேயாதி த்ரயத்திலும் கீழ்ச்சொன்னவாசி யறியாதாராய்க் கொண்டு பாகவத ஜந்மநிரூபணம் பண்ணுவார் “அமரவோரங்கமாறும்” என்கிற பாட்டில் “ஸாங்கமாக ஸகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ச்ரேஷ்டருமாய் உத்க்ருஷ்ட ஜந்மாக்களுமா யிருந்தார்களேயாகிலும் தேவரீர் திருவடிகளின் ஸம்பந்தைக நிரூபணீயரான ஸ்ரீவைஷ்ணவர்களை, ஜந்மாதிகளையிட்டு நிந்திப்பார்களாகில் காலந்தரே தேசாந்தரே யன்றிக்கே, அப்போதே அவ்விடந்தன்னிலே அவர்கள் தாங்கள் சண்டாளராவர்கள்” என்கிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மாக்களே யாகிலும் கர்ம சண்டாளராய் இனியொரு காலமும் கரையேற யோக்யதையில்லை யென்னும்படி அத:பதிப்பர்களென்கை. “அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீந ஜந்மந: மத் பக்தாந் ச்ரோத்ரியோ நிந்தந் ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத்” என்னக்கடவதிறே. ஆக, “வீட்டின்ப வித்யாதி” வாக்யந் தொடங்கி, “நிமக்நரை உயர்த்தத் தாழ விழிந்தார்” என்னுமளவும் ஆழ்வாருடைய வைபவத்தை ப்ரதிபாதித்து தத் ஸ்தாபநார்த்தமாக “ம்லேச்சனும் பக்தனானால்” என்று தொடங்கி, மேலெல்லாம் ஸாமாந்யேந பாகவத வைபவத்தை விஸ்தரேண ப்ரகாசிப்பித்து உபக்ரம வாக்யத்திற் போலே, ப்ரமாண ப்ரமேயங்களுடனே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை நிகமித்தாராய்த்து.

– (மாவுருவில் கள்ளவேடம்) - திருவாய்மொழி (5-8-2) - எம்மாவுருவும் வேண்டுமாற்றாலாவாய் - என்பதற்கு ஏற்ற ஸர்வேச்வரனுடைய அனைத்து ரூபங்களும் இந்த உலகியல் பொருள்களுடனான தொடர்பு அற்றவை என்பதால் கொண்டாடத் தக்கவையாகவும், தனது விருப்பம் காரணமாகவே எடுக்கப்பட்டவையாயும் உள்ளவை ஆகும். இப்படிப்பட்ட அவனுடைய ரூபங்களில் ஒன்றாக உள்ளதும், வேதங்கள் ப்ரமாணம் அல்ல என்று உபதேசித்து வேத மார்க்கத்தில் உள்ள விருப்பத்தைத் தகர்க்கும் பொருட்டு, இராமாயணம் அயோத்யாகாண்டம் (109-33) – யதாஹி சோரஸ் ஸ ததாஹி புத்த: - கள்ளர்கள் போன்றே, வேத மார்க்கத்திற்குப் புறம்பான புத்தனும் தள்ளத்தக்கவன் - என்று கூறுவதற்கு ஏற்பவும், திருவாய்மொழி (5-10-4) – கள்ள வேடத்தைக் கொண்டு – என்பதற்கு ஏற்பவும் கொண்டதும் ஆகிய புத்தமுனி ரூபம் தள்ளத்தக்கது. (திருந்து வேதமலமான மானிடம் பாடல்) – ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம் முதலானவை குறித்து உள்ளது உள்ளபடி உரைப்பதால் கட்டளைப்பட்டுள்ள வேதத்தில், நஸ்மர்த்தவ்யோ விசேஷேண வேதமந்த்ரோப்ய வைஷ்ணவ: - வேத மந்த்ரமாகவே உள்ளபோதிலும் மஹாவிஷ்ணுவின் தொடர்பு இல்லாத மந்த்ரங்கள் விசேஷமாக எண்ணத்தக்கவை அல்ல – என்பதற்கு ஏற்ப அவற்றைக் குறித்து எண்ணுவதும் கூடாது என்னும்படியான தோஷம் பொருந்திய பகுதியான, திருவாய்மொழி (3-9-3) - மானிடம் பாடலென்னாவது – என்பதற்கு ஏற்ப கர்மம் காரணமாக உண்டானதும், தொடர்ந்து கர்ம வசப்பட்டதும் ஆகிய மற்ற ஜீவாத்மாக்கள் குறித்து உரைக்கும் வாக்கியங்கள் தள்ளத்தக்கவையே ஆகும். (ஸர்வ வர்ண சூத்ரத்வம்) - மஹாபாரதம் அச்வமேதிகபர்வம் (118-32) - ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா: ஸர்வவர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜநார்தநே - பகவானின் அடியார்கள் சூத்திரர்கள் அல்லர்; அவர்கள் அந்தணர்களோடு ஒத்தவர் என்றும் பாகவதர்கள் என்றும் கூறப்படுவர். அனைத்து வர்ணங்களிலும், யார் ஒருவருக்கு பகவத் பக்தி இல்லாமல் உள்ளதோ அவரே சூத்திரர் ஆவர் - என்பதற்கு ஏற்றபடி அனைத்து வர்ணங்களிலும், பகவானுடைய அடியார்கள் அல்லாதவர் சூத்திரரே ஆவர் [ஆக நான்கு வர்ணங்களிலும், இவ்விதம் சூத்திரராக உள்ள தன்மை தள்ளத்தக்கது என்று கருத்து]. இப்படியாக ப்ரமேயம், ப்ரமாணம், ப்ரமாதா ஆகியவற்றில் உள்ள தள்ளத்தக்கவற்றைக் குறித்து அருளிச்செய்தார். (காடுவாழ் சாதியில் கடல்வண்ணன் வேடம்) – நாச்சியார் திருமொழி (12-8) – காடுவாழ் சாதியுமாகப் பெற்றான் - என்பதற்கு ஏற்ப ஊருக்குள் உள்ள வீட்டில் வசிக்காமல், பசுக்களுக்குத் தேவையான புல்லும் நீரும் நிறைந்துள்ள காடுகளில் வசிப்பதால், நாச்சியார் திருமொழி (12-8) – காடுவாழ் சாதி - என்பதற்கு ஏற்ப உள்ள ஆயர்குலத்தில், அவர்கள் இனத்தில் ஒருவனாக உள்ளபடி தான் வந்து அவதரித்து நிற்கும் க்ருஷ்ணனுடைய, பெரியாழ்வாழ் திருமொழி (3-3-1) - காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர் - என்பதற்கு ஏற்ப, பெரியாழ்வாராகிய தான் அனுபவித்து மற்றவர்களுக்கும் அழைத்துக் காண்பிக்கும்படி உள்ளதான, பசு மேய்த்து வரும்போது காணப்படுவதான அலங்காரத்துடன் கூடிய திருமேனி கொண்டாடத்தக்கது. (தென்னுரையில் ஹரிகீர்த்தி) - பெரியதிருமடல் (6) - தென்னுரையில் கேட்டறிவதுண்டு – என்பதற்கு ஏற்ப, தெற்குத் திசையில் நிலைத்து நிற்பதன் காரணமாக “தென்னுரை” என்று கூறப்படுவதான தமிழில் உள்ள ப்ரபந்தங்களை, மத்ஸய புராணம் - ஹரிகீர்த்திம் விநைவாந்யத் - மஹாவிஷ்ணுவின் புகழ் நிறைந்தவை அல்லாமல் மற்ற பாசுரங்களை பாடுதல் ஆகாது - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் குறித்துள்ள பாடல்கள் என்பதால் பாடத்தக்கவை. – (ச்வபசரில் பக்தி பாசனமும்) – ச்வபசோபி மஹீபால விஷ்ணுபக்தோ த்விஜாதிக: - விஷ்ணுவிடம் பக்தி கொண்டவன் நாய் இறைச்சி உண்பவன் என்றாலும், அவன் அந்தணனைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பதற்கு ஏற்ப நாய் இறைச்சி உண்பவர் என்றாலும், திருச்சந்தவிருத்தம் (100) – பெறர்கரிய நின்ன பாத பத்தியான பாசனம் – என்பதற்கு ஏற்ப தனது முயற்சியால் பெறுவதற்கு மிகவும் கடினமான “ஸர்வேச்வரனுடைய திருவடிகள் மீது கொள்ளும் பக்தி” என்னும் செல்வத்தைப் பெற்றவர்கள் கொண்டாடத்தக்கவர்களே ஆவர். இப்படியாக ப்ரமேயம் தொடக்கமாக உள்ள மூன்றிலும் ஏற்கத்தக்கவற்றைக் குறித்து உரைத்தார். (அறிவார் ஆர் ஆர் அமரர் என்ன ஏற) - இப்படியாக இந்த மூன்றிலும் தள்ளத்தக்கவை மற்றும் கொள்ளத்தக்கவை என்பதில் உள்ள வேறுபாட்டினை அறிபவர்கள், திருவாய்மொழி (10-5-8) – ஆராரமரர் – என்பதற்கு ஏற்ப, அவர்கள் எப்படிப்பட்ட பிறவியைக் கொண்டிருந்தாலும், எப்படிப்பட்ட ஒழுக்கங்கள் கொண்டிருந்தாலும், அவர்கள் நித்யஸூரிகளுக்கு ஒப்பானவர் என்னும் சிறப்பு உடையவர்களாக, திருவாய்மொழி (3-8-11) - இலங்குவான் யாவரு மேறுவர் – என்பதற்கு ஏற்ப, மிகுந்த ப்ரகாசம் நிறைந்ததான பரமபதத்திற்குச் செல்வர். (அறியாதார் சாதி அந்தணர்களேலும் தகர விழுவர்) – ப்ரமேயம் என்பதான மூன்றில் உள்ளதும், கீழே உரைக்கப்பட்டதும் ஆகிய வேறுபாட்டினை அறியாமல், பாகவதர்களின் பிறப்பு போன்றவற்றைச் சிலர் ஆராயக்கூடும். அவர்கள், திருமாலை (43) – அமரவோரங்கமாறும் - என்னும் பாசுரத்தில், “வேதங்கள் அனைத்தையும் அவற்றின் அனைத்து அங்கங்களுடன் அத்யயனம் செய்து, அடியார்கள் அனைவரும் கொண்டாடும்படி உயர்ந்தவர்களாகவும், உயர்ந்த பிறவினராயும் சிலர் இருக்கக்கூடும். ஆனால் இப்படிப்பட்டவர்கள், உன்னுடைய திருவடிகளின் தொடர்பு கொண்டவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை, அவர்களுடைய பிறவி போன்றவற்றை ஆராய்ந்து நிந்திப்பார்கள் என்றால், வேறு ஏதோ ஒரு காலம் அல்லது வேறு ஏதோ ஒரு இடம் என்றில்லாமல், அந்த நேரத்திலேயே, அந்த இடத்திலே அவர்கள் சண்டாளர்கள் ஆகிவிடுவர்”, என்று கூறுவதற்கு ஏற்ப, உயர்ந்த பிறப்பு கொண்டவர்கள் என்றாலும், கர்மசண்டாளர்களாக இனி எந்த ஒரு காலத்திலும் கரையேறும் தகுதி இல்லாத தாழ்ந்த நிலையை அடைவார்கள். ப்ரஹ்மாண்ட புராணத்தில் - அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீந ஜந்மந: மத் பக்தாந் ச்ரோத்ரியோ நிந்தந் ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் - எனது அடியார்கள் ஒழுக்கத்தை இழந்தவர்கள் என்றாலும், ஞானம் அற்றவர்கள் என்றாலும், தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும், அவர்களைப் பழிப்பவன் அந்தணர்களில் உயர்ந்தவன் என்றபோதிலும், அவன் அந்த நொடியிலே சண்டாளன் ஆகிறான் - என்றது காண்க. ஆக சூர்ணை(75) – வீட்டின்பம் - என்பது தொடங்கி, சூர்ணை (84) – நிமக்நரை உயர்த்தத் தாழ விழிந்தார் - என்பது முடிய உள்ளவற்றில், நம்மாழ்வாரின் வைபவத்தை அருளிச்செய்தார். அந்த வைபவத்தை மேலும் விளக்கும்விதமாகவும், உறுதிபட உரைக்கும் விதமாகவும், சூர்ணை (85) - ம்லேச்சனும் பக்தனானால் - என்று தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய உள்ளவற்றில், பாகவதர்களுடைய வைபவத்தை விரிவாக அருளிச்செய்தார். மேலும் சூர்ணை (75) - வீட்டின்பம் - என்பதில் அருளிச்செய்தது போன்று, ப்ரமாணம் மற்றும் ப்ரமேயம் என்பவற்றுடன் சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தையும் கூறி முடிந்தார்.