Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 89)
இரண்டாம் ப்ரகரணம்
இதன் ஔபாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறைமுனிவனாக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்க்கமேற்றினபோதே தெரியும்.
வர்ணத்தினுடைய ஔபாதிகத்வந்தன்னை உதாஹரண முகேந தெளிவிக்கிறார் மேல் (இதினௌபாதிகத்வம் ஒரு ராஜாவென்று தொடங்கி).
– வர்ணம் என்பது ஜீவாத்மாவுக்கு இயல்பானது அல்ல, அது வந்தேறியதாகும் என்பதை ஓர் உதாரணம் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
– அதாவது, இவ்வர்ணத்தினுடைய ஔபாதிகத்வம் குசிக வம்ச்யனாய் ராஜாவான விச்வாமித்ரன் ப்ரஹ்மருஷித்வ காமனாய், நெடுங்காலம் தபஸ்ஸு பண்ணின தன்னை “மந்திரங்கொள் மறைமுனிவன்” என்னும்படி ப்ரஹ்மருஷியாக்கின சக்திமானான வஸிஷ்டன் தன் வார்த்தை கேளாமல் தன்னை அவமதி பண்ணிப்போனது கொண்டு ஸ்வபுத்ரர்கள் பண்ணின சாபத்தாலே மார்பிலிட்ட யஜ்ஞோபவீதமே வாராம்படி சண்டாள னாக்குவித்த இக்ஷ்வாகு வம்ச்யனாயிருந்துள்ள த்ரிசங்குவாகிற ராஜாவை அந்த வார்தானே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாகக் கொண்டு தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம் பண்ணுவித்தபோதே ஸுஸ்பஷ்ட மென்கை. இத்தால், ஒரு க்ஷத்ரியன் ஸுக்ருத விசேஷத்தாலே அந்த சரீரந் தன்னோடே ப்ரஹ்மருஷிகையாலும், ஒரு க்ஷத்ரியன் துஷ்க்ருத விசேஷத்தாலே அந்த சரீரந் தன்னோடே சண்டாளனாகையாலும், க்ஷத்ரியத்வம் போய் ப்ரஹ்மருஷியானவன் தான் ப்ரஹ்மருஷியாவதுக்கு முன்பே க்ஷத்ரிய வேஷம் போய் சண்டாள வேஷமாய் நிற்கிறவனை, அந்த வேஷந் தன்னோடே யஜிப்பித்து ஸ்வர்க்கத்திலே யேற்றுகையாலும் வர்ணத்தின் கர்மோபாதிகத்வம் எல்லார்க்கும் தோன்றுமென்றதாய்த்து.
(இதன் ஔபாதிகத்வம்) – வர்ணங்கள் என்பது வாழும்போது நடுவில் வந்து தோன்றியவை என்பது, (ஒரு ராஜா) – குசிக குலத்தில் வந்த அரசனாகிய விச்வாமித்ரன். (தன்னை) - தான் ஒரு ப்ரஹ்மரிஷி ஆகவேண்டும் என்று விருப்பம் கொண்டு நீண்டகாலம் தவம் செய்த தன்னை. (மறைமுனிவன் ஆக்கினவன்) - பெருமாள் திருமொழி (10-2) – மந்திரங்கொள் மறைமுனிவன் - என்பதற்கு ஏற்றபடி ப்ரஹ்மரிஷி ஆக்கிய சக்தி வாய்ந்த வசிஷ்டன். (நீசன் ஆக்குவித்த ராஜாவை)- தனது [வசிஷ்டர்] சொற்களைக் கேட்காமல் தன்னை [வசிஷ்டன்] அவமதித்தான் என்ற காணத்தால், தனது [திரிசங்குவின்] புதல்வர்கள் அளித்த சாபம் காரணமக மார்பில் அணிந்துள்ள யஜ்ஞோபவீதம் என்பதே வாராகும்படி சண்டாளன் ஆக்கிய இக்ஷ்வாகு குலத்தில் வந்த திரிசங்கு என்ற அரசனை, (வாரே உறுப்பாக யஜிப்பித்து) - அப்படிப்பட்ட வார் என்பதையே யாகத்திற்கு உறுப்பாக உள்ள உறுப்புத்தோலாகக் கொண்டு விச்வாமித்திரனாகிய தனது தவ வலிமை மூலம் யாகத்தை முடித்து, (ஸ்வர்க்கம் ஏற்றினபோதே தெரியும்) – ஸ்வர்க்கத்திற்குப் போகும்படிச் செய்தான். இதன் மூலம், க்ஷத்ரியனாகிய ஒரு அரசன், தனது புண்ணிய பலன்கள் காரணமாக அந்தச் சரீரத்தில் உள்ளபோதே ப்ரஹ்மரிஷி ஆனதாலும்; க்ஷத்ரியனாகிய திரிசங்கு என்ற அரசன் தனது பாவ பலன்கள் காரணமாக அந்தச் சரீரத்தில் உள்ளபோதே சண்டாளன் ஆனதாலும்; க்ஷத்ரியனாய் நின்ற விச்வாமித்ரன், தான் ப்ரஹ்மரிஷி ஆவதற்கு முன்பாகவே, க்ஷத்ரியத் தன்மை மறைந்து சண்டாளனாய் நின்ற திரிசங்கு என்ற அரசனை, அப்படிப்பட்ட பிறவியிலேயே யாகம் செய்து ஸ்வர்க்கத்தில் ஏற்றியதாலும் - வர்ணங்கள் என்பது புண்ணிய பாவ கர்மங்கள் மூலம் வந்து சேர்வதாகும் என்பது தெளிவாகிறது.