Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 88)
இரண்டாம் ப்ரகரணம்
சேஷத்வ பஹிர்ப்பூத ஜ்ஞாநாநந்த மயனையும் ஸஹியாதார் த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே.
பகவத் விநியோகார்ஹ மாகையாலே திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை நித்யஸூரிகள் பரிக்ரஹிக்கை ப்ராப்தம்; அங்ஙனன்றிக்கே, முமுக்ஷுக்களான விவர்கள் பகவத் பாகவத சேஷத்வ வாஞ்சையாலே திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்தித்தார்களாகிலும், உத்க்ருஷ்ட்தயா சாஸ்த்ரஸித்தமான வர்ணத்தை இப்படி கழிக்கிறதென்னென்ன வருளிச்செய்கிறார் (சேஷத்வேத்யாதி).
ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்வதற்கு ஏற்றபடி உள்ளதாகையால் விலங்கு, தாவர பிறவிகளை நித்யஸூரிகள் விரும்பி ஏற்பது தக்கதே ஆகும். ஆனால் ஸர்வேச்வரன் மற்றும் பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக முமுக்ஷுக்கள் விலங்கு மற்றும் தாவர பிறவிகளை வேண்டினாலும், உயர்ந்தது என்று சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட வர்ணங்களைத் தள்ளுவது ஏன் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “ந தேஹம் ந ப்ராணாந் ந ச ஸுகம் அசேஷாபிலஷிதம் நசாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத், பஹிர்ப்பூதம் நாத க்ஷணமபி ஸஹேயாது சததா விநாசம் தத் ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபநமிதம்” என்று தேவரீருடைய சேஷத்வத்துக்குப் புறம்பான தேஹாதிகளொன்றைம் க்ஷணமும் ஸஹியேன், அவ்வளவன்றியே ஜ்ஞாநாநந்தமயமான ஆத்வஸ்துவையும் ஸஹியேன், ஆக சத்தாவாக விநாசத்தையடைவதாக; இந்த விண்ணப்பம் அஹ்ருதயமன்று ஸத்யம், திருமுன்பே பொய் சொன்னேனாகில், தேவரீர்க்குப் பொய்யனான மது பட்டது படுகிறேனென்கையாலே, ஷேஷத்வத்துக்குப் புறம்பானபோது “ஜ்ஞாநாநந்த மயஸ்த்வாத்மா” என்று ஜ்ஞாநாநந்த மயத்வத்தாலே ச்லாக்யமாயிருக்கு மாத்மாவையும் ஸஹியாதவர்கள், சேஷத்வ விரோதி பூத அஹங்கார ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய் கர்மநிபந்தனமாகையாலே ஔபாதிகமா யிருக்கிற வர்ணத்தை ஆதரிப்பார்களோவென்கை. ஔபாதிகமானவித்தை உபாதியென்றது கார்யே காரணோபசாரம்.
(சேஷத்வ பஹிர்ப்பூத ஜ்ஞாநாநந்த மயனையும் ஸஹியாதார்) - ஸ்தோத்ரரத்னம் (57) – ந தேஹம் ந ப்ராணாந் ந ச ஸுகம் அசேஷாபிலஷிதம் நசாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத், பஹிர்ப்பூதம் நாத க்ஷணமபி ஸஹேயாது சததா விநாசம் தத் ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபநமிதம் - மதுஸூதனா! உனக்குக் கைங்கர்யம் செய்வதற்கு ஒத்துழைக்காத எனது இந்தச் சரீரம், ப்ராணன், உலக இன்பங்கள், ஆத்மா போன்ற எதனையும் நான் விரும்பவில்லை. இவை அனைத்தும் நூறு துண்டுகளாக அடையாளம் இன்றிச் சிதைந்து போகக்கடவது. எனது இந்த விண்ணப்பம் அடியேன் மனம் அறிந்து செய்வதாகும், இது சத்தியம் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்தலுக்குப் புறம்பாக உள்ள சரீரம் போன்ற எதனையும், ஒரு நொடிப்பொழுது கூட என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது; அது மட்டும் அல்லாமல், ஞானம் மற்றும் ஆனந்தமயமாக உள்ள ஆத்மாவையும் பொறுக்க இயலாது; அவை நூறு துகள்களாக அழியட்டும்; இந்த விண்ணப்பம் எனது இதயத்தினால் அறியப்படாதது அல்ல, அறிந்து கூறுகின்ற சத்திய வாக்காகும்; உன் முன்பாக நான் மெய் உரைக்காமல் பொய்யாக உரைத்தேன் என்றால், மது என்ற அரக்கன் அழிந்தது போன்று அழியக்கடவேன் - என்று கூறினார். ஆகவே, அடிமைத்தனத்திற்குப் புறம்பாக உள்ளபோது, ஜ்ஞாநாநந்த மயஸ்த்வாத்மா - ஞானம் மற்றும் ஆனந்தமயமான ஆத்மா – என்று கூறுவதற்கு ஏற்ப, ஞானம் மற்றும் ஆனந்தமயமாக உள்ளதால் போற்றத்தக்கதான ஆத்மாவைக் கூடப் பொறுத்துக் கொள்ளாதவர்கள், (த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே) - ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள தன்மைக்கு விரோதமாக உள்ளதான அஹங்காரத்திற்குக் காரணமாக உள்ளதால் கைவிடத்தக்கதாகவும், கர்மம் காரணமாக வந்தது என்பதால் வந்தேறியதாகவும் உள்ள வர்ணத்தை ஆதரிப்பார்களோ? மாட்டார்கள் இங்கு “வந்து சேர்ந்தது” என்பதை உபாதி என்பதாகக் கொள்க.