Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 87)
இரண்டாம் ப்ரகரணம்
அணையவூரப்புனைய அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து ப்ரார்த்திப்பார்கள்.
இனிமேல் ஆத்மநிரூபக சேஷத்வாநுகூல ஜந்மமே உத்க்ருஷ்ட ஜந்மமென்னுமத்தை அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரும் முமுக்ஷுக்களுமான மஹாத்மாக்களாதர முகேந ப்ரகாசிப்பிக்கிறார் - (அணையவென்று தொடங்கி).
அடுத்து “ஆத்மா இன்னது” என்று உணர்ந்தவல்ல தன்மையாக உள்ளதான “ஸர்வேச்வரனுக்கு அடிமைத்தனம் செய்தல்” என்பதற்கு ஏற்றதான ஒரு பிறவியே உயர்த்த பிறவி என்பதை, இந்த உலகில் ஸம்ஸார தொடர்பு அற்றவர்களாகிய நித்யஸூரிகள் மற்றும் முமுக்ஷுக்கள் போன்ற மஹாத்மாக்களின் ஈடுபாடு மூலம் இந்தச் சூர்ணையில் வெளிப்படுத்துகிறார்.
– அதாவது “அணைவதரவணைமேல் பூம்பாவையாகம் புணர்வது” என்று பிராட்டி திருமேனி ஸ்பர்சத்தோடொக்க விகல்பிக்கலாம்படி அத்யந்த ஸுக ஸ்பர்சமாய், சைத்ய மார்த்வ ஸௌரப்யங்களை ப்ரக்ருதியாக வுடையதாய்க் கொண்டு ச்ரிய:பதியானவன் கண்வளர்ந்தருளுகைக்குப் பாங்காயிருக்கும் திருவரவணையாயும், “ஊரும் புள்” என்கிறபடியே ஆர்த்த ரக்ஷணத்துக்கும் அநுகூலரை அநுபவிப்பிக்கைக்கும் தன் உகப்புத்தனக்குமாக அவன் பலகாலும் மேற்கொண்டு நடத்துகைக்கு வாஹனமான கருளப்புள்ளாயும், “தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய்” என்கிறபடியே அவனாதரித்துச் சாத்துகைக்கு அர்ஹமான திருத்துழாயாயமிருக்கும் திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை “பெருமக்களுள்ளவர்” என்கிறபடியே “அஹ்ருத ஸஹஜ தாஸ்ய” ராகையாலே “அஸந்நேவ” என்பது “ஸந்தமேநம்” என்பதாக வேண்டாதபடி, என்றுமொக்க வுளரா யிருக்கிற மஹாத்மாக்களான நித்யஸூரிகள், பகவத் கைங்கர்யேச்சையாலே பரிக்ரஹித்தார்கள். – “பத்யு: ப்ரஜாநாமைச்வர்யம் பசூநாம் வா ந காமயே, அஹம் கதம்போ பூயாஸம் கந்தோ வா யமுநா தடே” என்று ப்ரஜாபதி பசுபதிகளுடைய ஐச்வர்யத்தையும் வேண்டேன்; “பூத்தநீள் கடம்பேறி” என்றும், “பூங்குருந்தேறி யிருத்தி” என்றும் சொல்லுகிறபடியே யமுனைக்கரையில் அவன் திருவடிகளால் மிதித்தேறின கடம்பாதல், குருந்தாதலாவேனாக வேணுமென்றும், “ஆஸாமஹோ சரணரேணு ஜுஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவநே கிமபி குல்மல தௌஷதீநாம், ய துஸ்த்யஜம் ஸ்வஜநமார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்தபதவீம் ச்ருதிபிர் விம்ருக்யாம்” என்று ச்ருதிகளாலே தேடப்படுமதான க்ருஷ்ணன் போன வழியை ஸ்வஜநாதிகளையும் அதிக்ரமித்து யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள், அவர்களுடைய பாத ரேணுவை பஜித்திருப்பனவாய் ப்ருந்தாவனத்தி லிருக்கும் சிறுசெடிகள், கொடிகள், ஓஷதிகளில் வைத்துக் கொண்டு ஏதேனுமொன்றாவேனாக வேணுமென்றும்; “கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே”, “மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே”, “செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே”, “தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே”, “எம்பெருமான் பொன்மலை மேலேதேனு மாவேனே” என்று திருமலையாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களில் ஏதேனுமொன்றாகப் பெறுவேனாக வேணுமென்றும்; “தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம் பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே” என்று தேவரீருடைய தாஸ்ய ஸுகமொன்றிலுமே ஸங்கத்தையுடையரான ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாசங்களிரண்டும் அங்கேயாம்படியான கீடஜந்மமே எனக்குண்டாக வேணுமென்றும், இப்படி அவனடிபடவும், அவனையணைந்தாரடியில் பொடிபடவும், அவனுகந்தருளின நிலத்திலேயாதல், அவனடியார் அபிமாநமுள்ள நிலத்திலேயாதல் வர்த்திக்கவுமீடாக ஜநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை, “பேராளன் பேரோதும்” பெரியோரான ஸ்ரீசுகப்ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப்பெருமாள், பெரியமுதலியார் முதலான முமுக்ஷுக்கள் ப்ரார்த்தித்தார்களென்றபடி. – இத்தால் “வாசிகை: பக்ஷி ம்ருகதாம் மாநஸைரந்த்ய ஜாதிதாம், சரீரஜை: கர்மதோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர:” என்ற இந்த விபூதியில் திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள் வாசிக காயிக பாப பலன்களாக சாஸ்த்ர சொல்லாநிற்க, அப்படியன்றிக்கே பகவத் விநியோகார்ஹமாக இந்த ஜந்மங்களை நித்யஸூரிகள் ஸ்வேச்சையாலே ஏறிட்டுக் கொள்ளுவர்களென்றும், தாஸ்ய ரஸஜ்ஞரான முமுக்ஷுக்கள் தத் ஸம்பந்த ததீய ஸம்பந்தமுள்ள திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்திப்பர்களென்றும் சொல்லுகையாலே தாஸ்யாநுகுண ஜந்மமே உத்க்ருஷ்ட மென்றதாய்த்து.
(அணையப் பெறுகிற திர்யக் ஜந்மத்தை) – திருவாய்மொழி (2-8-1) – அணைவதரவணைமேல் பூம்பாவையாகம் புணர்வது - என்பதற்கு ஏற்ப பெரியபிராட்டியின் திருமேனி தீண்டுதலால் ஏற்படும் இன்பத்திற்கு இணையாகக் கூறலாம்படியாக எல்லையற்ற இன்பம் அளிக்கவல்லதாகவும், குளிர்ச்சி – மென்மை - நறுமணம் ஆகிய தன்மைகளை இயல்பாகக் கொண்டதாகவும், மஹாலக்ஷ்மியின் நாதனாகிய ஸர்வேச்வரன் கண்வளர்வதற்கு ஏற்றபடி பாங்காக அமைந்துள்ளதும் ஆகிய ஆதிசேஷன் என்ற பிறவியையும். (ஊரப் பெறுகிற திர்யக் ஜந்மத்தை) – திருவாய்மொழி (10-2-3) – ஊரும் புள் - என்பதற்கு ஏற்ப தனது அடியார்களுடைய துன்பங்களை நீக்குவதற்காகவும், தன்னை அனுபவிக்கவேண்டும் என்று எண்ணும் அடியார்கள் தன்னை அனுபவிக்கும்படிச் செய்வதற்காகவும், தனது மகிழ்வுக்காகவும் பலமுறை வீற்றிருந்து செல்லக்கூடிய வாகனமாக உள்ள கருடன் என்ற பிறவியையும். (புனையப் பெறுகிற ஸ்தாவர ஜன்மத்தை) – திருவாய்மொழி (1-9-7) - தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் – என்பதற்கு ஏற்ப அவன் மிகவும் மகிழ்வுடன் தன் மீது சார்த்திக் கொள்வதற்கு ஏற்றவிதத்தில் துளசியாக உள்ள செடிகளுடைய பிறவியையும். (பெருமக்கள் பரிக்ரஹித்து) – திருவாய்மொழி (3-7-5) - பெருமக்களுள்ளவர் - என்பதற்கு ஏற்ப, ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1-33) - அஹ்ருத ஸஹஜ தாஸ்ய – கைங்கர்யம் என்ற செல்வத்தை இயற்கையாகவே உடைய நித்யசூரிகள் – என்பதற்கு ஏற்ப உள்ளதால், தைத்திரீயம் – அஸந்நேவ - ப்ரஹ்மத்தை உள்ளது என்று அறியாதவன், இல்லாத பொருள் ஆகிறான் - என்று கூறப்படும் நிலையானது பின்னர் மனம் திருந்தி, தைத்திரீயம் – ஸந்நமேநம் - ப்ரஹ்மத்தை உள்ளது என்று அறிந்தவன் உள்ள பொருள் என்றாகிறான் – என்று மாறவேண்டிய அவசியம் இல்லாமல், எப்போதும் ஒரே போன்று ப்ரஹ்மத்தை அண்டி நிற்கும் மஹாத்மாக்களாகிய நித்யஸூரிகள், [முன்பு கூறப்பட்ட விலங்கு, பறவை, செடி என்னும் மூன்றுவிதமான பிறவிகளை] ஸர்வேச்வரனுக்குத் தாங்களும், அந்தப் பிறவிகளும் செய்யும் கைங்கர்யத்தின் மேல் காண்பிக்கப்படும் இச்சை காரணமாக மிகுந்த ஈடுபாட்டுடன் ஏற்றுக் கொண்டனர். (அடிபடப் பெறுகிற தாவர ஜந்மத்தை) - பத்யு: ப்ரஜாநாமைச்வர்யம் பசூநாம் வா ந காமயே, அஹம் கதம்போ பூயாஸம் கந்தோ வா யமுநா தடே - நான்முகனின் செல்வம் மற்றும் சிவனுடைய செல்வம் ஆகியவற்றை நான் விரும்பவில்லை, யமுனை நதியின் கரையில் கடம்பமரம் அல்லது குருந்த மரம் என்று நிற்பதை அடைவேனாக - என்று நான்முகன், சிவன் போன்றவர்களுடைய செல்வத்தை நான் வேண்டமாட்டேன்; நாச்சியார் திருமொழி (4-4) - பூத்தநீள் கடம்பேறி - என்றும், நாச்சியார் திருமொழி (3-3) - பூங்குருந்தேறி யிருத்தி – என்றும் கூறுவதற்கு ஏற்ப யமுனை நதியின் கரையில் க்ருஷ்ணன் தனது திருவடிகள் கொண்டு மிதித்து மேலே ஏறிய கடம்பமரம் அல்லது குருந்தமரம் என்றாக வேண்டும் என்றும் உள்ளதான பிறப்பையும்; (பொடிபடப் பெறுகிற தாவர ஜந்மத்தை) - ஸ்ரீமத் பாகவதம் (10-48-61) – ஆஸாமஹோ சரணரேணு ஜுஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவநே கிமபி குல்மல தௌஷதீநாம், ய துஸ்த்யஜம் ஸ்வஜநமார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்தபதவீம் ச்ருதிபிர் விம்ருக்யாம் – எந்தக் கோபிகைகள், விட இயலாத உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் சென்ற வழியை விட்டு அகன்று, க்ருஷ்ணன் சென்ற வழியைப் பின்பற்றி நடந்தார்களோ, அத்தகைய கோபிகைகளுடைய பாதத்துளிகள் படிந்ததான ப்ருந்தாவனத்தில் உள்ள புதர்கள், கொடிகள், மரங்கள் என்பவற்றில் நான் ஏதேனும் ஒன்றாக ஆவேனாக – என்று கூறுவதற்கு ஏற்ப, ச்ருதிகளாலும் தேடப்படும் க்ருஷ்ணன் சென்ற வழியில், தங்களுடைய உறவினர்களையும் விட்டு கோபிகைகள் சென்றனர்; இப்படிப்பட கோபிகைகளுடைய பாதத்துளிகளை எப்போதும் வணங்கியபடி உள்ளதும், ப்ருந்தாவனத்தில் உள்ளதுமாகிய சிறுசெடிகள், கொடிகள், மரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக வேண்டும் என்று உள்ளதான பிறப்பையும்; (பர்வதத்தில் ஏதேனுமாக பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை) - பெருமாள் திருமொழி (4-1) - கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே - என்றும், பெருமாள் திருமொழி (4-2) - மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே - என்றும், பெருமாள் திருமொழி (4-4) - செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே, பெருமாள் திருமொழி (4-5) - தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே - என்றும், பெருமாள் திருமொழி (4-10) - எம்பெருமான் பொன்மலை மேலேதேனு மாவேனே - என்றும் கூறுவதற்கு ஏற்ப திருவேங்கட திருமலையின் தொடர்பு உள்ளதான விலங்குகள், தாவரங்கள் என்பதான ஏதேனும் ஒன்றாகப் பிறக்கவேண்டும் என்பதான பிறப்பையும். (பவநங்களிலே ஜநிக்கப் பெறுகிற திர்யக் ஜந்மத்தை) – ஸ்தோத்ரரத்னம் (55) – தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம் பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே - உனக்குக் கைங்கர்யம் செய்வதன் மூலம் கிட்டவல்ல இன்பம் என்பதை மட்டுமே விரும்புகின்றவர்களுடைய வீடுகளில், பிறப்பு இறப்பு என்ற இரண்டுமே எனக்கு ஏற்படும்படியாக உள்ள புழு போன்ற தாழ்ந்த பிறவியாவது எனக்கு வேண்டும் என்பதான பிறப்பையும். (பெரியோரும் ப்ரார்த்திப்பர்) இப்படியாக அவனுடைய திருவடிகள் படும்படியாகவும், அவனை அண்டி நிற்பவர்களுடைய திருப்பாதத்துளிகள் படும்படியாகவும், அவன் மிகவும் உகப்புடன் வசிக்கின்ற திவ்யதேசத்தில் உள்ளபடியாகவும், அவனுடைய அடியார்கள் விருப்பத்துடன் வசிக்கின்ற இடத்தில் உள்ளபடியாகவும் இருக்கின்றதான விலங்கு, தாவரம் போன்ற பிறவிகளை, பெரியதிருமொழி (7-4-4) - பேராளன் பேரோதும் - என்பதற்கு ஏற்ப உள்ளவர்களான ஸ்ரீசுகப்ரஹ்மம், குலசேகராழ்வார், ஆளவந்தார் போன்றவர்கள் வேண்டி நின்றனர். – மநுஸ்ம்ருதி (12-9) – வாசிகை: பக்ஷி ம்ருகதாம் மாநஸைரந்த்ய ஜாதிதாம், சரீரஜை: கர்மதோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர: - சொற்கள் மூலம் ஏற்பட்ட தோஷங்கள் காரணமாகப் பறவை மற்றும் விலங்கு போன்ற பிறவிகள், மனதால் ஏற்பட்ட தோஷத்தால் சண்டாளப் பிறப்பு, சரீரத்தால் ஏற்பட்ட தோஷத்தால் தாவரப் பிறவி ஆகியவற்றை ஜீவாத்மா அடைகிறான் - என்பதற்கு ஏற்றபடி, இந்த உலகில் விலங்குகள் பறவைகள், மரங்கள், செடிகள் என்பதான பிறவிகள், வாக்கு மற்றும் சரீரம் போன்றவற்றால் உண்டாகும் தோஷங்களுடைய பலன்கள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன; ஆனால், இதனை விடுத்து ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தகுதியாக இந்தப் பிறவிகளை நித்யஸூரிகள் தங்களுடைய விருப்பத்தின் காரணமாக ஏற்பார்கள் என்றும், ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ளதன் சுவையை அறிந்த முமுக்ஷுக்கள், ஸர்வேச்வரன் மற்றும் அவன் அடியார்களுடைய ஸம்பந்தம் உள்ளதான விலங்கு மற்றும் தாவர பிறவிகளை வேண்டி நிற்பர்கள் என்றும் இந்தச் சூர்ணையில் கூறுவதால், ஸர்வேஸ்வரனுக்குக் கைங்கர்யம் செய்யவல்ல பிறப்பே உயர்ந்த பிறப்பு என்றாகிறது.