Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 86)
முதல் ப்ரகரணம்
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாச்ரம வித்யா வ்ருத்தங்களை கர்தப ஜன்மம் ச்வபசாதமம் சில்பநைபுணம் பஸ்மாஹுதி சவ விதவாலங்காரமென்று கழிப்பார்கள்.
“ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது” என்றவிடத்தில் ததுத்கர்ஷாபகர் ஷங்களுக்கு உடலாக விவக்ஷிதமானவற்றை மேலிரண்டு வாக்யத்தாலே வெளியிடுகிறார். அதில் ப்ரதமத்திலே அபக்ருஷ்ட ஜந்மம் இன்னதென்று தோற்றும்படி பகவத் ஜ்ஞாந ரஹிதமான வர்ணாதிகளில் ஹேயத்வத்தை ஸப்ரமாணமாக தர்சிப்பிக்கிறார் (அஜ்ஞரென்று தொடங்கி).
கடந்த சூர்ணையில் “ஜந்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது” என்றார். அந்தந்த பிறவிகளில் ஏற்படும் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்குக் காரணமாக உள்ளவை குறித்து அடுத்துள்ள இரண்டு சூர்ணைகளில் அருளிச்செய்கிறார். இவற்றில் முதலில், தாழ்ந்த பிறவி என்றால் இத்தகையது என்று உணர்த்தும்படி, பகவானைக் குறித்த ஞானம் இல்லாதவர்களுடைய தாழ்வினைத் தகுந்த ப்ரமாணங்கள் மூலம் காண்பிக்கிறார்.
அதாவது, பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகமென்று நிஷ்கர்ஷித்து ததநுகுணமாக ஹேயோபாதேய விபாகம் பண்ணத்தக்க ஜ்ஞாநமில்லாதவர்கள் பகவதந்வய ரஹிததயா அபக்ருஷ்டராயிருக்க, உத்தமவர்ணம், உத்தமாச்ரமம், ஸத்வித்யை, ஸத்வ்ருத்தம் என்று உத்க்ருஷ்டமாக ப்ரமிக்கிற வர்ணாதியானவற்றை, “சதுர்வேததரோ விப்ரோ வாஸுதேவம் ந விந்ததி, வேதபார பராக்ராந்தஸ் ஸவை ப்ராஹ்மண கர்தப:” என்று நாலு வேதங்களையு மதிகரித்து வைத்தே, “ஸர்வே வேதா யத் பதமாமநந்தி”, “வேதைச்ச ஸர்வைரஹமேவ வேத்ய:” என்கிறபடியே ஸகல வேத ப்ரதிபாத்யனான ஸர்வேச்வரனை யறியாதவன் குங்குமம் சுமந்த கழுதைபோலே தான் பரித்துக் கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளமறியாத ப்ராஹ்மணக் கழுதையென்றும், “ச்வபசோபி மஹீபால விஷ்ணுபக்தோ த்விஜாதிக:, விஷ்ணு பக்தி விஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம:” என்று சரமாச்ரமியாகிலும் பகவத் பக்தி ஹீனனானவன் ச்வபசனிற்காட்டில் தண்ணியனென்றும், – “தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே, ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா சில்பநைபுணம்” என்று பகவத்பரதயா மோக்ஷார்த்தையானதுவே வித்யை; அல்லாதது செருப்புத் தைக்கத் தக்கவோபாதியென்றும், – “ஆம்நாயாப்யஸநாநி அரண்ய ருதிதம் வேதவ்ரதாநி அந்வஹம் மேதச்சேத பலாநி பூர்த்தவிதய: ஸர்வே ஹுதம் பஸ்மநி, தீர்த்தாநாம் அவகாஹநாநி ச கஜ ஸ்நாநம் விநா யத் பதத்வந்த்வாம்போருஹ ஸம்ஸ்ம்ருதீ விஜயதே தேவஸ் ஸ நாராயண:” என்று பகவத் ஸ்ம்ருதியில்லாதவர்களுடைய கர்மாநுஷ்ட்டாநம் பஸ்மாஹுதிவத் நிஷ்ப்ரயோஜநமென்றும், “யஸ்யாகிலாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிச்ரா குணகர்ம ஜந்மபி:, ப்ராணந்தி சும்பந்தி புநந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாச் சவ சோபநா மதா:”, “விஷ்ணு பக்தி விஹீநஸ்ய வேதச் சாஸ்த்ர ஜபஸ் தப:, அப்ராணஸ்யேவ தேஹஸ்ய மண்டநம் லோகரஞ்ஜநம்” என்று பகவதந்வய ரஹிதோக்திகளும் பகவத்பக்தி ஹீநனுடைய வித்யா வ்ருத்தங்களும் சவாலங்கார கல்பமென்றும், – “ப்ராதுர்ப்பாவைஸ் ஸுரநரஸமோ தேவதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா, கிந்து ஸ்ரீமத், புவந பவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ:” என்று பகவதந்விதருடைய வித்யா வ்ருத்த பாஹுள்யமாகிற உத்கர்ஷம், பகவத் ஸம்பந்த ஜ்ஞாந ரூப ஸௌமங்கல்யா பாவத்தாலே விதவாலங்கார ஸமமென்றும் ஜ்ஞாநிகளானவர்கள் இகழ்வர்களென்கை. ஆக இப்படி பகவத் விஷய ஸ்பர்சமற்ற வர்ணாச்ரமங்களும் ஜ்ஞாந வ்ருத்தங்களும் ஹேயமென்கையாலே, கீழ் அபக்ருஷ்ட ஜந்மதயா விவக்ஷிதமானது இன்னதென்னு மிடமறிவித்தாராய்த்து.
– (அஜ்ஞர்) - ஸர்வேச்வரனுக்கு அடிமையாக இருத்தல் என்பதே ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்றது என்று உறுதிபட தீர்மானித்து, அதற்கு ஏற்றபடி தள்ளத்தக்கது எது மற்றும் ஏற்கத்தக்கது எது என்று பிரித்து அறியும் ஞானம் அற்றவர்கள், அத்தகைய ஞானம் இல்லாத காரணத்தால் மட்டுமே தாழ்ந்தவர்களாக உள்ளபோது, (ப்ரமிக்கிற வர்ண ஆச்ரம வித்யா வ்ருத்தங்களை) - உயர்ந்த வர்ணம், உயர்ந்த ஆச்ரமம், சிறந்த கல்வி, சிறந்த ஆசாரம் போன்றவற்றையே உயர்ந்ததாக எண்ணுகின்ற வர்ணம் போன்றவற்றையே உயர்வு என்று கருத்துகின்ற, (கர்தப ஜன்மம்) – [கர்தபம் என்றால் கழுதை] உயர்குலத்தில் பிறவி கொண்டவனை, சதுர்வேததரோ விப்ரோ வாஸுதேவம் ந விந்ததி, வேதபார பராக்ராந்தஸ் ஸவை ப்ராஹ்மண கர்தப: - எந்த ஒரு அந்தணன் நான்கு வேதங்களையும் அறிந்துள்ளபோதிலும், எங்கும் வ்யாபித்து நிற்கும் வாஸுதேவனை அறியாமல் உள்ளானோ, அவன் வேதங்கள் என்ற பாரத்தைத் சுமக்கின்ற அந்தணக் கழுதை ஆவான் - என்பதற்கு ஏற்ப நான்கு வேதங்களை அத்யயனம் செய்துள்ளபோதிலும், கடவல்லீ - ஸர்வே வேதா யத் பதமாமநந்தி - எந்த ஒரு பரமாத்மாவை அனைத்து வேதங்களும் கூறுகின்றனவோ – என்றும், கீதை (15-15) - வேதைச்ச ஸர்வைரஹமேவ வேத்ய: - அனைத்து வேதங்களாலும் அறியத்தக்கவன் நானே ஆவேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து வேதங்களாலும் கூறப்படுகிற ஸர்வேச்வரனை அறியாதவன், குங்குமப்பூவை அதன் நறுமணம் அறியாமல் சுமக்கும் கழுதை போன்று, தான் சுமந்து நிற்கும் வேதங்களின் பரிமளம் அறியாத அந்தணக்கழுதை போன்றவன் என்று இகழ்வார்கள். (ச்வபசாதமம் என்று) - உயர்ந்த வர்ணம், உயர்ந்த ஆச்ரமம், சிறந்த கல்வி, சிறந்த ஆசாரம் போன்றவற்றையே உயர்ந்ததாக எண்ணுகின்ற உயர்ந்த ஆச்ரமத்தில் உள்ள ஒருவனை, ச்வபசோபி மஹீபால விஷ்ணுபக்தோ த்விஜாதிக:, விஷ்ணு பக்தி விஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம: - விஷ்ணுவிடம் பக்தி உள்ளவன் நாய் இறைச்சி உண்பவன் என்றாலும் அவன் அந்தணனைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆகிறான்; விஷ்ணுபக்தி இல்லாதவன் ஸந்ந்யாஸி என்றாலும், அவன் நாய் இறைச்சி உண்பவனைக் காட்டிலும் தாழ்ந்தவன் ஆகிறான் - என்பதற்கு ஏற்ப, அனைத்தும் துறந்தவன் என்றாலும் பகவத் பக்தி அற்றவன் நாய் இறைச்சி உண்பவனைக் காட்டிலும் தாழ்ந்தவன் என்று இகழ்வது போன்று இகழ்வார்கள். (சில்பநைபுணம்) - உயர்ந்த வர்ணம், உயர்ந்த ஆச்ரமம், சிறந்த கல்வி, சிறந்த ஆசாரம் போன்றவற்றையே உயர்ந்ததாக எண்ணுகின்ற உயர்ந்த கல்வி உள்ள ஒருவனை, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-19-41) - தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே, ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா சில்பநைபுணம் - எந்த ஒரு செய்கை ஸம்ஸார பந்தத்தை உண்டாக்காதோ அதுவே சிறந்த செய்கை; எந்த ஒரு கல்வி மோக்ஷத்திற்குப் பயன்படுமோ அதுவே உயர்ந்த கல்வி; மற்ற கல்வி அனைத்தும் செருப்புத் தைக்கக் கற்ற கல்வி போன்றது - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனைக் குறித்து உள்ளதன் காரணமாக மோக்ஷம் அளிப்பதற்காக உள்ளதே கல்வி ஆகும்; மற்ற கல்வி அனைத்தும் செருப்பு தைப்பதற்குக் கற்றது போன்றதே ஆகும் என்று அவனுடைய அறிவை இகழ்வார்கள். (பஸ்மாஹுதி) - முகுந்தமாலை (25) – ஆம்நாயாப்யஸநாநி அரண்ய ருதிதம் வேதவ்ரதாநி அந்வஹம் மேதச்சேத பலாநி பூர்த்தவிதய: ஸர்வே ஹுதம் பஸ்மநி, தீர்த்தாநாம் அவகாஹநாநி ச கஜ ஸ்நாநம் விநா யத் பதத்வந்த்வாம்போருஹ ஸம்ஸ்ம்ருதீ விஜயதே தேவஸ் ஸ நாராயண: - நாராயணனின் திருவடித் தாமரைகள் குறித்த சிந்தனை இன்றிச் செய்யப்படும் வேத அத்யயனம் என்பது காட்டில் நின்று அழுவது போன்று பயன் இல்லாதது ஆகும்; வேதங்களில் கூறப்பட்ட கர்மங்களை இயற்றினாலும் அவை சரீரம் இளைத்தல் என்பதை மட்டுமே பயனாகக் கொண்டவை ஆகும்; குளம் வெட்டுதல் போன்ற தர்மங்களும் சாம்பலில் இடப்படும் அவிர்பாகம் போன்று பயனற்றவை ஆகும்; கங்கை போன்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதும் யானை நீராடுவது போன்று பயன் அற்றவை ஆகும்; இப்படியாக நாராயணன் உயர்ந்தவன் ஆவான் – என்று கூறுவ்தற்கு ஏற்ப, ஸர்வேச்வரனை த்யானம் செய்யாமல் உள்ளவர்கள் செய்கின்ற கர்மங்கள் அனைத்தும் சாம்பலில் இடப்படும் அவிர்பாகம் போன்று பயனற்றவை என்று இகழ்வார்கள். (சவ அலங்காரம்) – ஸ்ரீமத்பாகவதம் (10-18-12) - யஸ்யாகிலாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிச்ரா குணகர்ம ஜந்மபி:, ப்ராணந்தி சும்பந்தி புநந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாச் சவ சோபநா மதா: - அனைவருடைய பாவங்களை நீக்குவதாகவும், அனைத்து மங்களங்களையும் அளிப்பதாகவும் உள்ள க்ருஷ்ணனுடைய குணங்கள், செய்கைகள் மற்றும் அவதாரங்கள் குறித்து உரைக்கப்படும் சொற்களே உலகத்தைச் செழிக்க வைக்கின்றன, உயர்த்துகின்றன, தூய்மையாக்குகின்றன; அவை அல்லாத மற்ற வாக்குகள் அனைத்தும் பிணத்திற்குச் செய்யும் அலங்காரங்கள் போன்றவையே ஆகும் - என்றும், விஷ்ணு பக்தி விஹீநஸ்ய வேதச் சாஸ்த்ர ஜபஸ் தப:, அப்ராணஸ்யேவ தேஹஸ்ய மண்டநம் லோகரஞ்ஜநம் - விஷ்ணுபக்தி அற்றவனுடைய வேத அத்யயனம், ஜபம், தவம் போன்றவை அனைத்தும் உயிரில்லாத சரீரத்திற்கு இந்த உலகில் உள்ளவர்களுடைய மகிழ்வுக்கு வேண்டிச் செய்யும் அலங்காரம் போன்றவை – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வர சம்பந்தம் நீங்கப் பெற்ற சொற்கள், பகவத் பக்தி அற்றவனுடைய கல்வி மற்றும் ஒழுக்கம் முதலானவை, பிணத்திற்குச் செய்யப்படும் அலங்காரம் போன்றவை என்று அவனுடைய பலவற்றையும் இகழ்வார்கள். (விதவா அலங்காரம்) - ப்ராதுர்ப்பாவைஸ் ஸுரநரஸமோ தேவதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா, கிந்து ஸ்ரீமத், புவந பவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ: – ஸர்வேச்வரன் தான் எடுக்கின்ற அவதாரங்கள் காரணமாக தேவர்கள், மனிதர்கள் போன்ற இனத்தவன் ஆகிறான்; பாகவதர்கள் கூட தங்களுடைய பிறப்பு, ஒழுக்கம் போன்றவற்றால் இவ்விதம் ஆகிறார்கள்; இவற்றால் எந்தவிதமான தோஷமும் இல்லை. இவை அனைத்தும் உயர்ந்தவையே ஆகும். பகவானின் அடியார்கள் அல்லாதவர்களிடம் உள்ள கல்வி, ஒழுக்கம் முதலானவற்றால் ஏற்படும் மேன்மை என்பது விதவைக்குச் செய்யப்பட்ட அலங்காரம் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுடைய சம்பந்தம் அற்றதான கல்வி, ஒழுக்கம் போன்றவை மூலம் ஏற்படும் மேன்மை என்பது, பகவத் சம்பந்த ஞானம் என்ற திருமாங்கல்யம் இல்லாத காரணத்தால், விதவைக்குச் செய்யப்பட்ட அலங்காரம் போன்றது என்று இகழ்வார்கள். ஆக இப்படியாக, ஸர்வேச்வரனுடைய விஷய சம்பந்தம் அற்றதான வர்ணம், ஆச்ரமம், ஞானம் போன்ற பலவும் தள்ளப்பட வேண்டியது என்பதால், இதுவரை கூறப்பட்டதான தாழ்ந்த பிறவி என்பது இத்தகையது என நிரூபித்தார் என்று கருத்து. ஆசார்யம் ஹ்ருதயம் முதல் பகுதி ஸம்பூர்ணம் ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவடிகளே சரணம் பெரியபெருமாள் திருவடிகளே சரணம் நம்மாழ்வார் திருவடிகளே சரணம்