Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 85)

முதல் ப்ரகரணம்

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜை கொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விச்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும், தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹ போஜநமும், ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல ஸஹஜரோடே புரோடாசமாகச் செய்த புத்ரக்ருத்யமும், புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப்பூவு மாலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில் காயந்நஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.

இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக் குறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப் பல உதாஹரணங்களாலும் ப்ரகாசிப்பியா நின்று கொண்டு இவ் வாகாரங்க ளறிவார்க்கிறே ஜந்மத்தி லுத்கர்ஷாபகர்ஷம் தெரிவதென்கிறார் மேலோரு சூர்ணையாலே.

அடுத்து, நம்மாழ்வாருடைய மேன்மைகளை மேலும் நன்றாக விளக்கும்விதமாக, உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய மேன்மைகளைப் பல உதாரணங்கள் மூலம் விளக்கி, இத்தகைய தன்மைகளை நன்றாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே, மற்றவர்களுடைய பிறவியில் உள்ள உயர்வும் தாழ்வும் அறிய இயலும் என்கிறார்.

– [ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜை கொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும்] (ம்லேச்சனும் பக்தனானால்) “மத் பக்தஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம், ஸ்வயம் அப்யர்ச்சநஞ்சைவமதர்த்தே டம்ப வர்ஜநம், மத் கதா ச்ரவணே பக்தி: ஸ்வர நோத்ராங்க விக்ரியாமமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி பக்திர் அஷ்டவிதா ஹி ஏஷா யஸ்மிந் ம்லேச்சோபி வர்த்ததே” என்கிறபடியே என்கிறபடியே ம்லேச்ச ஜாதீயனாயுள்ளவனும் என்னுடைய பக்த ஜனங்கள் பக்கல் வாத்ஸல்யமும், என்னுடைய ஆராதனத்தி லுகப்பும், தானே ஆராதிக்கையும், என்பக்கல் டம்பமற்றிருக்கையும், என் கதையைக் கேட்குமிடத்தில் பக்தியும், பக்தி கார்யமான ஸ்வரநேத்ராங்கங்களில் விகாரமும், என்னையே எப்போதும் நினைக்கையும், என்னை ப்ரயோஜநாந்தரம் கொள்ளாதொழிகையு மென்று அஷ்டவிதையாக வருளிச்செய்த பக்தியை யுடையனானால், (சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து) “ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதிஸ் ஸ ச பண்டித:; தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம்” என்றும், “பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள் இழிகுலத்தவர்களேலு மெம்மடியார்களாகில், தொழுமினீர் கொடுமின் கொள்மின்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வோத்க்ருஷ்டனாய், உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள் அபிஜநாத்யபிமாந தூஷிதமான ஸ்வஸ்வரூப சுத்த்யர்த்தமாக அநுவர்த்திக்கைக்கு விஷயமாய், அவர்களுக்கு ஜ்ஞாநாபேக்ஷை யுண்டாகில் ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணி, (குலதைவத்தோடொக்கப் பூஜை கொண்டு) “ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம்”, “நின்னோடுமொக்க வழிபட வருளினாய் போல” என்கிறபடியே, “மம நாதம், மம குல தைவதம்” என்கிறபடியே குலதெய்வமாச் சொல்லப்படுகிற ஸர்வேச்வரனோடொக்க, “அவரெங்கள் குல தெய்வம்” என்கிறபடியே குலதெய்வமாய் அவர்களைப் பூஜை கொண்டு. (பாவந தீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும்) “தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்” என்று அவன் திருவடிகள் விளக்கின ஜலம் அநுபமமான தீர்த்தம்; அவனமுது செய்த சேஷம் பரம பாவநம் என்கையாலே, அஹங்கார மதிராபாவநமத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த ப்ரஸாதாந்வயத்தாலே சுத்த ஸ்வரூபராம்படி பாவந தீர்த்த ப்ரஸாதனாமென் றருளிச்செய்த பகவதுக்தியான திருமுகமும் அதின் படியெடுப்பான ஆழ்வார் பாசுரமும் (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது). – [விச்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்] (விச்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன்) அபர ராத்ரியிலே சென்று பாடி நம்பியைத் திருப்பள்ளியுணர்த்துகையாலே, “கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்த்யா ப்ரவர்த்ததே, உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவ மாஹ்நிகம்” என்றும், “அரவணையா யாயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே” என்றும், “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே” என்றும் திருப்பள்ளியுணர்த்தின விச்வாமித்ரன் பெரியாழ்வார், “துளபத் தொண்டாய” தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகிய இவர்களோடே ஸகோத்ரியாய், “வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கா ளென்றுள் கலந்தார்” என்கிறபடியே பகவத் சேஷத்வ ஜ்ஞாந பூர்வகமாக அநந்ய ப்ரயோஜந வ்ருத்தியிலே அந்விதனாயுள் கலந்து, “எம் தொழுகுலம்” என்று விசேஷஜ்ஞர் ஆதரிக்கு மேற்றத்தை யடைந்த ஜந்மஸித்த நைச்யனான பாகவதன், (நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்) சரககுலோத்பவனான ஸோமசர்மாவாகிற ப்ராஹ்மணன் உபக்ரமித்த யாகத்தை யதா க்ரமம் அநுஷ்டியாமையாலும், அது ஸமாபிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸாய்ப் பிறந்து திரியா நிற்கச்செய்தே, “த்வம் வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதும் அர்ஹஸி, ஏவ முக்த்வாத சண்டாளம் ராக்ஷஸச் சரணம் கத:” என்கிறபடியே, “நீ உன்னுடைய கீத ப்ரபாவத்தாலே என்னை இவ்வாபத்தில் நின்றும் கரை யேற்ற வேணும்” என்று சரணம் புக, “யந் மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிகமுத்தமம், பலேந தஸ்ய பத்ரம் தே மோக்ஷயிஷ்யஸி கில்பிஷாத்” என்று நம்பி ஸந்நிதியில் பின்பு பாடின “நிலையார் பாடலா”ன கைசிகப் பண்ணாலே, “ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராக்ஷஸோ ப்ரஹ்ம ஸம்ஜ்ஞித:, யஜ்ஞசாபாத் விநிர்முக்த: ஸோமசர்மா மஹாயசா:” என்னும்படியான வைகல்ய தோஷத்தாலே வந்த ரக்ஷஸ்த்வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த ப்ராஹ்மணனுடைய யாகத்தில் குறையைத் தலைக்கட்டினபடியும், (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது). – [கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்] (கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்) நிஷாத வம்சஜ ராகையாலே, “ஏழையேதலன் கீழ்மகன்” என்னும்படி ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் தண்ணியரான ஸ்ரீகுஹப்பெருமாள், அயோத்தியர் கோமானாகையாலே அவை யெல்லாத்தாலும் உத்க்ருஷ்டனாயிருக்கிற வளவுமன்றிக்கே, தர்ம்யைக்யத்தாலே “வானோர் தலைமகனா” யிருக்கிற சக்ரவர்த்தித்திருமகனுக்கு, “உகந்து தோழன் நீ” என்கையாலே ஸமனான ஸகாவாய். (தம்பிக்கு முன் பிறந்து) “உம்பியும்” என்கையாலே இவர் தம்பியான இளையபெருமாளுக்கு முன்பிறந்தவராய், (வேலும் வில்லுங் கொண்டு பின்பிறந்தாரைச் சோதித்து) இப்படி தம்மை அங்கீகரித்தவன்று ராத்ரி, பெருமாள் பள்ளி கொண்டருளா நிற்க, அவருடைய ஸௌகுமார்யாநு ஸந்தாநத்தா லுண்டான பிரிவாலே கண்ணுறக்கமற்று கையும் வில்லுமாய்க் காத்துக்கொண்டு நிற்கிற இளையபெருமாளை அதிசங்கை பண்ணி, “கூரணிந்த வேல்வலவன்” என்றும், “தத்ஸ்த்வஹஞ்ச உத்தம பாண சாபத்ருத்ஸ்திதோபவம் தத்ர ஸ யத்ர லக்ஷ்மண:” என்றும் சொல்லுகிறபடியே ஸாயுதராய்க் கொண்டு, இவர் மேலே கண்ணாய் நின்று, அவர் நினைவு சோதித்து, (தமையனுக்கிளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏககுலமானமையும்) “ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: பரதாய அப்ரமேயாய குஹோ கஹநகோசர:” என்கிறபடியே ராமவிரஹ க்லிஷ்டனாய் திருச்சித்ரகூடத்தேறப் போவதாக வந்த தமையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு, தம்பியான இளையபெருமாளுடைய “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:” என்றும், “பரவாநஸ்மி” என்றும் சொல்லுகிறபடியே பெருமாள் பக்கல் ப்ரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம்படி யிருக்கையாகிற ஸத்தையோடே வ்யாப்தமான ஸ்வபாவத்தைச் சொல்லும்படி இக்ஷ்வாகு வம்ச்யரோடு ஏக குலமானபடியும், (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது). – [தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹ போஜநமும்] (தூதுமொழிந்தித்யாதி) “முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து” என்று பிராட்டிக்கு தூது வாக்கியத்தைத் திருவடி வாயிலே சொல்லிவிட்ட சக்ரவர்த்தி திருமகன், “சபர்யா பூஜிதஸ் ஸம்யக் ராமோ தசரதாத்மஜ:” என்கிறபடியே ஸ்ரீசபரி கையால் பண்ணின ஸம்யக் போஜநமும்; “குடை மன்னரிடை நடந்த தூதா” என்னும்படி பாண்டவர்களுக்காகத் தூது போன க்ருஷ்ணன், பீஷ்ம த்ரோணாதி க்ருஹங்களை விட்டு, “விதுராந்நாதி புபுஜே சுசீநி குணவந்திச” என்கிறபடியே பாவநத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீவிதுரர் திருமாளிகையில் பண்ணின ஸகுண போஜநமும்; “தூது வந்த குரங்கு” என்கிற திருவடி, “த்ருஷ்டா ஸீதா” என்ற ப்ரீதியாலே, “உபகாராய ஸுக்ரீவோ ராஜ்ய காங்க்ஷீ விபீஷண: நிஷ்காரணாய ஹநுமாந் தத் துல்யம் ஸஹபோஜநம்” என்று திருவுள்ளம் பற்றி, “கோதில் வாய்மையினாயோடுமுடனே யுண்பன் நான்” என்று பெருமாளோடு பண்ணின ஸஹபோஜநமும் (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது). – [ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும்] (ஒரு பிறவியிலே இத்யாதி) யதுகுலத்திலே பிறந்து கோப குலத்தில்கே ஸஜாநீயத்வேந வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான க்ருஷ்ணனுக்கு தர்மபுத்ரர் தம்முடைய யாகத்திலே அக்ரபூஜை கொடுத்தமையும், ருஷி புத்ரராய்ப் பிறந்து போய் மற்றோரிடத்திலே தஜ்ஜாதீயராய் வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான திருமழிசைப்பிரானுக்குப் பெரும்புலியூரடிகள் தம்முடைய யாகத்திலே அக்ரபூஜை கொடுத்தமையும் (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது). – [ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாசமாகச் செய்த புத்ரக்ருத்யமும்] (ஐவரிலித்யாதி) பாண்டவர்களைவரில் ப்ரதாநரான தர்மபுத்ரர் ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக்யத்தையும் அசரீரி வாக்யத்தையுங் கொண்டு ஸந்தேஹியாமல் செய்த புத்ர க்ருத்யமும்; தசரதாத்மஜர் நால்வரில் ப்ரதாநரான பெருமாள், “ஸௌமித்ர ஹர காஷ்டாதி நிர்மதிஷ்யாமி பாவகம், க்ருத்ரராஜம் திதக்ஷாமி மத்க்ருதே நிதநம் கதம்” என்று ஸஹஜரான இளையபெருமாளும் கூட நிற்கச்செய்தே அவர் கையிலுங் காட்டாமல், “ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம், ததாஹ ராமோ தர்மாத்மா ஸ்வபந்துவிவ துக்கித:” என்கிறபடியே பெரியவுடையார்க்குச் செய்த புத்ர க்ருத்யமும்; பெரியநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலைநம்பி என்று ஸப்ரஹ்மசாரிகளாய்க் கொண்டு ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவிக்கையாலும், உடையவர்க்கு ஆசார்யர்களாகையாலும் ப்ரஸித்தரான நம்பிகள் மூவரிலும் ப்ரதாநரான பெரியநம்பி, மாறனேரிநம்பிக்கு “புரோடாசத்தை நாய்க்கிடாதே கொள்ளும்” என்று அவர் அருளிச்செய்து போந்தபடியே புரோடாசமாக நினைத்துச் செய்த புத்ர க்ருத்யமும் (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது); – [புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப்பூவு மாலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அநுவர்த்தித்த க்ரமமும்] (புஷ்ப த்யாகேத்யாதி) “சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்கிறபடியே புஷ்பமண்டபமான திருமலையில் பணிப்பூவும் கையுமாய் திருவுள்ள மறியப் பரிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக் கந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை, “துளங்கு நீண்முடியரசர்தம் குரிசில் தொண்டை மன்னவன்” என்கிற அபிஷிக்த க்ஷத்ரியாக்ருயரான தொண்டைமான் சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும்; “வேகவத் யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ் ஸ்வயம், வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருச்யதே” என்கிறபடியே த்யாகமண்டபமான பெருமாள்கோவிலில் திருவாலவட்டமும் கையுமாய்ப் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற திருக்கச்சிநம்பியை வைதிகோத்தமரான உடையவர் அநுவர்த்தித்த க்ரமமும்; “தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்” என்கிறபடியே போகமண்டபமான கோயிலில் வீணையும் கையுமாய்ப் பெரியபெருமாளுக்கந்தரங்கராய் வர்த்தித்த திருப்பாணாழ்வாரை லோகஸாரங்க மஹாமுநிகள் அநுவர்த்தித்த க்ரமமும் (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது); – [யாகாநுயாகோத்தர வீதிகளில் காயந்நஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்] (யாகாநுயாகேத்யாதி) “யஜ தேவ பூஜாயாம்” என்கையாலே, யாக சப்த வாச்யமான திருவாராதநத்தில் பிள்ளையுறங்காவில்லிதாஸர் ஸ்பர்சத்தாலே காயசுத்தி பண்ணின உடையவரும்; பகவதாராதநானந்தரம் தத் ஸமாப்தி ரூபேண பண்ணப்படு மதாகையாலே அநுயாக சப்த வாச்யமான ப்ரஸாத ஸ்வீகாரத்தில் பிள்ளையேறு திருவுடையார் தாஸர் கர ஸ்பர்சத்தாலே அந்ந சுத்தி பண்ணின நம்பிள்ளையும்; உத்தரவீதி குடி புகுகிறபோது பிள்ளைவானமாமலை தாஸர் ஸஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி பண்ணின நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டருமாகிற ஜ்ஞாந வ்ருத்தர்களுடைய ஆசாரமும், (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) இப்படி கீழ்ச்சொன்ன விவை யெல்லாமறிவார்க்கிறே “இன்ன ஜந்மம் உத்க்ருஷ்டம், இன்ன ஜந்மம் அபக்ருஷ்டம்” என்று ஜந்மத்தினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் தோன்றுவதென்றபடி. இத்தால் ஐந்மாத்யபக்ருஷ்டர் பகவத் பக்தர்களானார்களாகில் உத்க்ருஷ்ட வர்ணரால் அநுவர்த்தநீயராய், அவர்களுக்கு ஜ்ஞாநப்ரதராய், ஈச்வரனோபாதி அவர்களுக்குப் பூஜ்யராய், ஸ்வதீர்த்த ப்ரஸாதங்களாலே ஸர்வரையும் சுத்தராக்கு மவர்களாம்படியையும், பாபமக்நரான உத்க்ருஷ்ட வர்ணர்க்கும் ஸ்வஸம்பந்தத்தாலே உத்தாரகராம்படியையும், அவர்களளவில் பகவத் ததீயர்களுடைய ஆதராநுவர்த்தந ப்ரகாரங்களையும் அவர்களுடைய ஸ்பர்சமே பரமபாவனமென்னுமத்தையும், ப்ரமேய பூதனான ஈச்வரனுடையவும் ப்ரமாத்ரு பூதரான ததீயருடையவும் வசநா நுஷ்டாநங்களாலே மந்தமதிகளு மறியும்படி ப்ரகாசிப்பித்தாராய்த்து.

– (ம்லேச்சனும் பக்தனானால்) பாஞ்சராத்ர ஆகமம் - மத் பக்தஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம், ஸ்வயம் அப்யர்ச்சநஞ்சைவமதர்த்தே டம்ப வர்ஜநம், மத் கதா ச்ரவணே பக்தி: ஸ்வர நோத்ராங்க விக்ரியாமமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி பக்திர் அஷ்டவிதா ஹி ஏஷா யஸ்மிந் ம்லேச்சோபி வர்த்ததே - எனது அடியார்களிடம் அன்பும், என்னிடம் எந்தவிதமான ஆடம்பரத்தைக் காண்பிக்காமலும், எனது லீலைகளைக் கேட்கும்போது பக்தி காரணமாக குரல் தழுதழுத்தலும், ஆனந்தக் கண்ணீர் சொரிதலும், மயிர்க்கூச்சல் எடுப்பதும், என்னை எப்போதும் எண்ணியபடி இருப்பதும், என்னிடமிருந்து என்னைத் தவிர வேறு எந்தவிதமான பயனையும் எதிர்பாராமல் இருப்பதும் என்றுள்ள எட்டுவிதமான பக்தி ஒரு தாழ்ந்தவனிடம் உள்ளது என்றாலும் - என்று கூறுவதற்கு ஏற்ப, தாழ்ந்தவனாக உள்ளபோதிலும் ஒருவன் எனது அடியார்களிடம் மிகுந்த வாத்ஸல்யம் கொண்டும், என்னை ஆராதிக்கும்போது மகிழ்வும், எப்போதும் தானே என்னை ஆராதித்தும், என்னிடம் ஆடம்பரம் காண்பிக்காமலும், எனது கதைகளைக் கேட்கும்போது பக்தியும், பக்தியின் விளைவாக ஆனந்தக்கண்ணீர் சொரிந்து மயிர்க்கூச்சல் எடுத்தலும், என்னையே எப்போதும் நினைத்தலும், என்னைத் தவிர என்னிடமிருந்து வேறு பயன் எதிர்பாராமலும் என்றுள்ள எட்டுவிதமான பக்தி கொண்டவன் என்றால், (சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து) – பாஞ்சராத்ரம் - ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதிஸ் ஸ ச பண்டித:; தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் - எட்டுவிதமான பக்தி கொண்ட அவன், மிகவும் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும், அவனே அந்தணர்களில் உத்தமன், முனிவன், ஐச்வர்யம் பொருந்தியவன், பண்டிதன், அவனுக்கு ஞானம் அளிக்கலாம் என்றுள்ளவன், அவனிடமிருந்து ஞானம் பெறலாம் என்றுள்ளவன் - என்றும், திருமாலை (42) – பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள் இழிகுலத்தவர்களேலு மெம்மடியார்களாகில், தொழுமினீர் கொடுமின் கொள்மின் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்துவிதத்திலும் உயர்ந்தவனாகவும்; உயர்ந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகிய நான்கு வேதங்களையும் நன்கு அறிந்தவர்கள், தங்களுடைய பிறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட கர்வத்தால் தாழ்த்தப்பட்டதான தங்களுடைய ஆத்மஸ்வரூபத்தைத் தூய்மை அடையச் செய்யும்விதமாகப் பழகுவதற்கு ஏற்றவனாகவும், அவர்கள் அவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அந்த ஞானத்தை அவர்களுக்கு அளித்து. (குலதைவத்தோடொக்கப் பூஜை கொண்டு) – ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம் – நான் எவ்விதம் பூஜிக்கத் தக்கவனோ அது போன்று அவனும் பூஜிக்கத்தக்கவன் – என்றும், திருமாலை (42) – நின்னோடுமொக்க வழிபட வருளினாய் போல - என்றும் கூறுவதற்கு ஏற்ப, கத்யம் - மம நாதம், மம குல தைவதம் - எனது நாதனும் குலதெய்வமுமான ஸ்ரீரங்கநாதன் - என்று குலதெய்வமாகக் கொண்டாடப்படும் ஸர்வேச்வரனுக்கு நிகராக, பெரியதிருமொழி (2-6-4) - அவரெங்கள் குல தெய்வம் - என்கிறபடியே குலதெய்வமாகப் கொண்டு அவர்களைப் பூஜிக்கும்படியாக. (பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும்) – பாஞ்சராத்ரம் - தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம் – அவன் திருவடியைக் கழுவிய நீரானது ஒப்பற்ற தீர்த்தம், அவன் உண்டு வைத்த மீத உணவு மிகவும் தூய்மையானது - என்பதற்கு ஏற்ப, அப்படிப்பட்ட ஒருவன் தனது திருவடிகளைக் கழுவிய நீரானது ஒப்பில்லாத தீர்த்தம், அவன் உண்ட உணவின் மீதம் மிகவும் தூய்மையானது என்று கூறும் காரணத்தால், அஹங்காரம் என்ற மது பானத்தைப் பருகியதால் பித்துப் பிடித்தவர்கள் போன்றுள்ள தூய்மை அற்றவர்கள் கூட அத்தகைய தீர்த்தம் மற்றும் உணவின் மீதம் போன்றவற்றின் தொடர்பு காரணமாகத் தூய்மையான தன்மை அடையும்படிச் செய்கின்ற தூய்மையான தீர்த்த ப்ரஸாதம் அளிப்பவன் ஆகிறான் என்று அருளிச்செய்த பகவானுடைய திருவாக்கு நிறைந்த திருமுகப்பாசுரம் மற்றும் அதன்படி எடுக்கப்பட்டதான, திருமாலை (41) - வானுளார் அறியலாக - என்பதான ஆழ்வாருடைய திருப்பாசுரம், (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) - ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு அல்லவோ பிறப்பின் உயர்த்தி தாழ்ச்சி அறிய இயலும் !! (விச்வாமித்ரரோடே) - இராமாயணம் பாலகாண்டம் (23-2) - கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்த்யா ப்ரவர்த்ததே, உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவ மாஹ்நிகம் - கௌஸலையின் மிகவும் சிறந்த புத்திரனே! இராமா! காலைப்பொழுது புலர்ந்தது, துயில் எழுவாயாக, தேவர்கள் விஷயமாக உள்ள கர்மங்களை இயற்றவேண்டும் - என்று விடியற்காலைப்பொழுதில் சென்று இராமனைத் துயில் எழுப்பிய விச்வாமித்திரர். (விஷ்ணுசித்தரோடே) - பெரியாழ்வார் திருமொழி (2-2-1) – அரவணையா யாயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே - என்று துயில் எழுப்பிய பெரியாழ்வார். (துளஸீப்ருத்யரோடே) – திருப்பள்ளியெழுச்சி - அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே - என்று ஸ்ரீரங்கநாதனைத் துயில் எழுப்பிய, திருமாலை (45) - துளபத்தொண்டாய தொல்சீர் தொண்டரடிப்பொடி - என்பதற்கு ஏற்ப உள்ளவராகிய தொண்டரடிப்பொடியாழ்வார் போன்றவர்களுடன் ஒரே கோத்ரம் ஆகும்படியாக. (உள்கலந்து) – இரவுப்பொழுதின் கடைசி யாமத்தில் சென்று பாடித் திருக்குறுங்குடி நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துவதாக கைசிகமாஹாத்ம்யத்தில் கூறப்பட்டவனும், திருவாய்மொழி (3-7-9) - வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கா ளென்றுள் கலந்தார் - என்பதற்கு ஏற்ப, “ஸர்வேச்வரனுக்கு நான் அடிமைப்பட்டவன் என்ற ஞானத்திற்கு மேலாக வேறு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் பாடுதல்” என்ற தொழிலில் மட்டும் ஈடுபட்டு ஒப்புமை இல்லாதவனும், (தொழுகுலம் ஆனவன்) – திருவாய்மொழி (3-7-8) – எம் தொழுகுலம் - என்பதற்கு ஏற்றபடி, உயர்ந்தவர்களும் கொண்டாடும்படியான ஏற்றத்தை அடைத்தவனும் ஆகிய இயற்கையாகவே தாழ்ந்த பிறவி கொண்ட பாகவதனாகிய நம்பாடுவான். (நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்) – சரககுலத்தில் பிறந்தவனான ஸோமசர்மா என்னும் அந்தணன், தான் தொடங்கிய யாகத்தைச் செய்யவேண்டிய விதிகளின்படி செய்யாமல், அது நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இறந்துவிட்டதால், ப்ரஹ்மராக்ஷஸனாகத் திரிந்துபோது, கைசிகமாஹாத்ம்யம் - த்வம் வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதும் அர்ஹஸி, ஏவ முக்த்வாத சண்டாளம் ராக்ஷஸச் சரணம் கத: - “நீ உனது பண்ணுடைய மஹிமை காரணமாக என்னை இந்தப் பாவத்திலிருந்து கரையேற்ற வல்லவன்” என்று கூறியபடி, சண்டாளனாகப் பிறந்த நம்பாடுவானிடம் சரணம் அடைந்தான் - என்பதற்கு ஏற்ப, “நீ உன்னுடைய கீதத்தின் ப்ரபாவம் மூலம் என்னை இந்த ஆபத்திலிருந்து கரையேற்ற வேண்டும்” என்று சரணம் புகுந்து நின்றபோது, கைசிகமாஹாம்யம் – யந் மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிகமுத்தமம், பலேந தஸ்ய பத்ரம் தே மோக்ஷயிஷ்யஸி கில்பிஷாத் - மிகவும் உயர்ந்த ஸ்வரமாக உள்ள எந்த ஒரு கைசிகம் என்ற கீதம் என்னால் இங்கு பாடப்படுகிறதோ, அத்தகைய கீதத்தின் பலன் காரணமாக உன்னை இந்த பாவத்திலிருந்து விடுவிப்பேன் – என்பதற்கு ஏற்ப, திருக்குறுங்குடிநம்பி முன்பாகப் பாடப்பட்ட பெரியதிருமொழி (9-6-10) - நிலையார் பாடல் – போன்று உள்ளதான கைசிகப்பண் மூலம், கைசிகமாஹாத்ம்யம் - ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராக்ஷஸோ ப்ரஹ்ம ஸம்ஜ்ஞித:, யஜ்ஞசாபாத் விநிர்முக்த: ஸோமசர்மா மஹாயசா: - இப்படியாக உள்ள வரம் காரணமாக ப்ரஹ்மராக்ஷஸ் எனத் திரிந்த ஸோமசர்மா, தான் யாகத்தை நடுவில் நிறுத்தியதால் உண்டான பாவம் விலகி விடுதலை அடைந்தான் - என்பதற்கு ஏற்ப, யாகத்தில் உண்டான குறை காரணமாக ஏற்பட்ட ரக்ஷஸ் என்னும் நிலையை நீக்கிக் கரையேற்றியதால், ஸோமசர்மா என்ற அந்தணனின் யாகத்தில் உண்டான குறையை நம்பாடுவான் முடித்தது குறித்து, (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) - அறிபவர்களுக்கு மட்டுமே பிறவியில் உள்ள உயர்ந்தியும் தாழ்ச்சியும் உரை இயலும். (கீழ்மகன்) - வேடர்களுடைய குலத்தில் பிறந்த காரணத்தால் பெரியதிருமொழி (5-8-1) – ஏழையேதலன் கீழ்மகன் – என்பதற்கு ஏற்ப பிறவி, செயல்பாடு, ஞானம் போன்ற பலவற்றாலும் தாழ்ந்தவனாகிய குகன், (தலைமகனுக்கு) - அயோத்தியில் வாழ்கின்ற அனைவருக்கும் சக்கரவர்த்தியாக உள்ள காரணத்தால் அவர்கள் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது மட்டும் அல்லாமல், சூரியன் போன்று அனைவருக்கும் ஒரே தர்மத்துடன் உள்ள காரணத்தால், திருவிருத்தம் (53) - வானோர் தலைமகன் - என்றுள்ள சக்ரவர்த்தி திருமகனாகிய இராமனுக்கு. (ஸமஸஹாவாய்) - பெரியதிருமொழி (5-8-1) – உகந்து தோழன் நீ - என்பதற்கு ஏற்ப ஒத்த நண்பனாகவும். (தம்பிக்கு முன் பிறந்த) – பெரியதிருமொழி (5-8-1) – உம்பியெம்பி - என்பதற்கு ஏற்ப இராமனுடைய தம்பியாகிய லக்ஷ்மணனுக்கு முன்பு பிறந்தவன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும். (வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) - இவ்விதம் தன்னை ஏற்றுக் கொண்ட இரவுப்பொழுதில், இராமன் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இராமனுடைய மென்மையை எண்ணியபடியே உள்ளதால் ஏற்பட்ட பிரிவு காரணமாக உறக்கம் இன்றி கைகளில் வில்லுடன் இராமனுக்குக் காவலாக உலவி நின்ற லக்ஷ்மணனைக் குறித்து சந்தேகம் கொண்ட குகன், பெரியாழ்வார் திருமொழி (3-10-4) – கூரணிந்த வேல்வலவன் – என்றும், இராமாயணம் அயோத்யாகாண்டம் (87-23) – தத்ஸ்த்வஹஞ்ச உத்தம பாண சாபத்ருத்ஸ்திதோபவம் தத்ர ஸ யத்ர லக்ஷ்மண: – அதனைத் தொடர்ந்து உயர்ந்த வேல் மற்றும் அம்புகள் கொண்டிருந்த லக்ஷ்மணன் எங்கு உலவினானோ அங்கு நானும் இருந்தேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஆயுதங்களுடன் கூடியவனாக, லக்ஷ்மணன் மீது தன் கண்கள் வைத்தபடி நின்று, அவனுடைய சிந்தனையை எப்போதும் எண்ணியபடி உள்ளவனாகவும். (தமையனுக்கு) – இராமனைப் பிரிந்துள்ள காரணத்தால் மிகவும் வருத்தம் கொணடு திருச்சித்ரகூடம் செல்லும் பொருட்டு வந்த பரதனிடம், (இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி) - அயோத்யாகாண்டம் (86-1) – ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: பரதாய அப்ரமேயாய குஹோ கஹநகோசர: - அந்தக் கானகத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்ட குகன், பரதனிடம் லக்ஷ்மணனிடத்து உள்ள நல்ல தன்மைகள் குறித்து உரைத்தான் - என்பதற்கு ஏற்ப, இராமனின் தம்பியாகிய லக்ஷ்மணனுடைய, இராமாயணம் பாலகாண்டம் (18-27) – பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: - சிறுவயதிலிருந்தே லக்ஷ்மணன் இராமனிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான் - என்றும், இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-7) – பரவாநஸ்மி - உனக்கு மட்டுமே வசப்பட்டவனாக உள்ளேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதான, இராமனிடம் காண்பிக்கும் ப்ரேமை மற்றும் வசப்பட்ட தன்மை ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே “லக்ஷ்மணன் இன்னான்” என்று நிரூபிக்கும்படியாக உள்ள தன்மையைக் கூறுபவனாகவும். (ஏக குலம் ஆனமையும்) - இவ்விதம் உள்ள குஹன், இக்ஷ்வாகு வம்சத்தினரோடு ஒரே வம்சம் என்று ஒன்றாகக் கலந்து நின்ற நிலையைக் குறித்து, (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) - அறிபவர்களுக்கு மட்டுமே பிறவியில் உள்ள உயர்ந்தியும் தாழ்ச்சியும் உரை இயலும். (தூது மொழிந்தவருடைய ஸம்யக் ஸகுண போஜனமும்) பெரியதிருமொழி (2-2-3) - முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து - என்று கூறுவதற்கு ஏற்ப சீதைக்குத் தனது தூது செய்தியை அனுப்பிய சக்ரவர்த்தித்திருமகனாகிய இராமன், இராமாயணம் பாலகாண்டம் (1-57) - சபர்யா பூஜிதஸ் ஸம்யக் ராமோ தசரதாத்மஜ: - தசரதனுடைய புத்திரனாகிய இராமன் சபரியால் நன்றாக பூஜிக்கப்பட்டான் - என்பதற்கு ஏற்ப சபரியின் கைகளால் அவளுடைய குணத்திற்கு ஏற்றபடி இருந்த நல்ல உணவு உண்டான். (தூது நடந்தவருடைய ஸம்யக் ஸகுண போஜனமும்) – பெரியதிருமொழி (6-2-9) - குடை மன்னரிடை நடந்த தூதா – என்பதற்கு ஏற்ப பாண்டவர்களுக்காகத் தூது சென்ற க்ருஷ்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியவர்களுடைய வீடுகளுக்குச் செல்லாமல் விடுத்து, மஹாபாரதம் உத்யோகபர்வம் – விதுராந்நாதி புபுஜே சுசீநி குணவந்திச - தூய்மை மற்றும் சிறந்த குணம் பொருந்திய விதுரரின் வீட்டில் அன்னம் உண்டான் – என்பதற்கு ஏற்ப, விதுரரின் தூய்மை மற்றும் இன்பமான தன்மை ஆகியவற்றைக் கண்டு தனது திருவுள்ளம் மகிழ்ந்து, விதுரரின் வீட்டில் உணவை உண்டான். (தூது வந்தவருடைய ஸம்யக் ஸகுண போஜனமும்) பெரியதிருமொழி (10-2-6) – தூது வந்த குரங்கு – என்பதற்கு ஏற்ப உள்ள அனுமனால், இராமாயணம் பாலகாண்டம் (1-78) – த்ருஷ்டா ஸீதா – சீதை இலங்கையில் என்னால் பார்க்கப்பட்டாள் - என்பதற்கு ஏற்ப “சீதையைக் கண்டவன்” என்ற ப்ரீதி காரணமாக, பாத்மோத்தர புராணம் - உபகாராய ஸுக்ரீவோ ராஜ்ய காங்க்ஷீ விபீஷண: நிஷ்காரணாய ஹநுமாந் தத் துல்யம் ஸஹபோஜநம் - இராமன் செய்த உதவி காரணமாகவே சுக்ரீவன் அவனுக்குக் கைங்கர்யம் செய்தான், விபீஷணன் அரசபதவியை எண்ணினான், எதனையும் விரும்பாமல் அனுமன் கைங்கர்யம் மட்டுமே செய்தான் – என்பதற்கு ஏற்ப மகிழ்ந்த இராமன், அனுமனின் உள்ளத்தை அறிந்து, பெரியதிருமொழி (5-8-2) - கோதில் வாய்மையினாயோடுமுடனே யுண்பன் நான் – என்று கூறும்படி அனுமனுடன் சேர்ந்து இராமன் உணவு உண்டான். இவற்றை (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) - அறிபவர்களுக்கு மட்டுமே பிறவியில் உள்ள உயர்ந்தியும் தாழ்ச்சியும் உரை இயலும். – (ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு) - யதுவம்சத்தில் அவதரித்து, ஆயர் குலத்தில் அவர்களில் ஒருவனாகவே வளர்ந்த காரணத்தால், ஒரு பிறப்பில் இரண்டு பிறவிகளாக விளங்கிய க்ருஷ்ணனுக்கும், ரிஷியின் புத்திரராகப் பிறந்து பிரம்பன் குலத்தில் அந்த இனத்தில் ஒருவராகவே வளர்ந்த காரணத்தால் ஒரு பிறப்பில் இரண்டு பிறவிகள் என்று விளங்கிய திருமழிசையாழ்வாருக்கும். (தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ரபூஜை கொடுத்தமையும்) – தர்மபுத்திரன், தான் செய்த ராஜஸூய யாகத்தில் க்ருஷ்ணனுக்கு அக்ர தாம்பூலம் அளித்தமையும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றின் அருகில் காணப்படும் பெரும்புலியூர் என்ற இடத்தில் வசித்த அந்தணர்கள், தாங்கள் இயற்றிய யாகத்தில் திருமழிசையாழ்வாருக்கு முதல் மரியாதை அளித்தமையும் குறித்து, (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) - அறிபவர்களுக்கு மட்டுமே பிறவியில் உள்ள உயர்ந்தியும் தாழ்ச்சியும் உரை இயலும். – (ஐவரில் முற்பட்டவர் ஸந்தேஹியாமல் செய்த புத்ர க்ருத்யமும்) - பாண்டவர்கள் ஐந்து பேர்களில் மூத்தவராகிய தர்மபுத்ரர், ஸ்ரீவிதுரருடைய ஞானத்தின் மேன்மை மற்றும் அசரீரி ஒன்றின் வாக்கு ஆகியவற்றை ஏற்றவராக, எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஸ்ரீவிதுரர் இறந்தபோது, ஒரு மகன் தனது தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக்கடன்களைச் செய்வது போன்று, ஸ்ரீவிதுரர்க்குச் செய்தார். (நால்வரில் முற்பட்டவர் ஸஹஜரோடு செய்த புத்ர க்ருத்யமும்) - தசரதரின் புத்திரனாகிய இராமன், இராமாயணம் ஆரண்யகாண்டம் (68-27) – ஸௌமித்ர ஹர காஷ்டாதி நிர்மதிஷ்யாமி பாவகம், க்ருத்ரராஜம் திதக்ஷாமி மத்க்ருதே நிதநம் கதம் - லக்ஷ்மணா! விறகுகளை நீ எடுத்து வருவாயாக. நான் தீயை உண்டாக்குகிறேன். என் பொருட்டு மரணம் அடைந்த ஜடாயுவுக்கு நான் தீ மூட்ட விரும்புகிறேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, தன்னுடன் பிறந்தவனாகிய லக்ஷ்மணன் தன்னுடன் நின்றிருந்தபோதிலும், அவன் கையிலும் காண்பிக்காமல், இராமாயணம் ஆரண்யகாண்டம் (68-31) – ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம், ததாஹ ராமோ தர்மாத்மா ஸ்வபந்துவிவ துக்கித: – இவ்விதமாக உரைத்து, பறவைகளின் அரசனாகிய ஜடாயுவைச் சிதையில் ஏற்றியவனாகிய தர்மாத்மா இராமன், மிகுந்த துக்கத்துடன், தனது உறவினரை எரிக்கும் முறையில் எரித்தான் - என்பதற்கு ஏற்ப, ஜடாயு இறந்தபோது, ஒரு மகன் தனது தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக்கடன்களைச் செய்வது போன்று, ஜடாயுவுக்குச் செய்தான். (மூவரில் முற்பட்டவர் புரோடாசமாகச் செய்த புத்ர க்ருத்யமும்) - ஆளவந்தாரிடம் பெரியநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரியதிருமலைநம்பி என்ற மூவரும் சீடர்களாக இருந்தனர். இவர்கள் எம்பெருமானாருடைய ஆசார்யர்களாக விளங்கியதால் மிகவும் ப்ரஸித்தி அடைந்தனர். இவர்களில் மூத்தவராகிய பெரியநம்பி, ஆளவந்தாரின் மடத்தில் இருந்த மாறனேரிநம்பி இறந்தபோது, அவர் உயிருடன் இருந்தபோது உரைத்த வாக்கான “புரோடாசத்தை நாய்க்கிடாதே கொள்ளும் - தேவர்களின் பொருட்டு வேள்வியில் அளிக்கப்படும் அரிசி மாவால் செய்த அவிர்பாகத்தை, நாய் போன்ற தாழ்ந்த பிறவிகளுக்கு அளிக்காமல் நீரே பாதுகாக்க வேண்டும்” என்பதற்கு ஏற்ப, மாறனேரிநம்பியையே புரோடாசமாக எண்ணி, மாறனேரிநம்பி இறந்தபோது, ஒரு மகன் தனது தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக்கடன்களைச் செய்வது போன்று, மாறனேரிநம்பிக்குச் செய்தார். (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) – இவற்றைக் குறித்து அறிபவர்களுக்கு மட்டுமே பிறவியில் உள்ள உயர்த்தியும் தாழ்ச்சியும் உணர இயலும். (புஷ்பமண்டபத்தில் பணிப்பூவும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவன் அநுவர்த்தித்த க்ரமும்) – [இங்கு புஷ்பமண்டபம் - திருவேங்கடம், பணிப்பூ - மண்ணால் செய்த பூ, அந்தரங்கர் - குறும்பறுத்தநம்பி, முடிமன்னவன் – தொண்டைமான்]. திருவாய்மொழி (3-3-2) - சிந்து பூமகிழும் திருவேங்கடம் - என்பதற்கு ஏற்ப புஷ்ப மண்டபமான திருவேங்கடத் திருமலையில், குறும்பறுத்தநம்பி என்பவர் மண்ணால் செய்த மலர் கொண்டு திருவேங்கடமுடையானின் திருவுள்ளத்தை நன்றாக அறிந்த காரணத்தால், அவனுக்கு மிகவும் அந்தரங்கராக இருந்து கைங்கர்யம் செய்தார். பெரியதிருமொழி (5-8-9) – துளங்கு நீண்முடியரசர்தம் குரிசில் தொண்டை மன்னவன் – என்பதற்கு ஏற்றபடி முடி சூடிய பல அரசர்களுக்கும் சக்ரவர்த்தியாக விளங்கிய தொண்டைமான் என்பவன், அத்தகைய குறும்பறுத்தநம்பி திருவேஙடமுடையானை வழிபட்ட அதே முறையைப் பின்பற்றினான். (த்யாக மண்டபத்தில் ஆலவட்டமும் கையுமான அந்தரங்கரை வைதிகோத்தமர் அநுவர்த்தித்த க்ரமமும்) – [இங்கு த்யாகமண்டபம் - காஞ்சீபுரம் வரதன் கோயில், ஆலவட்டம் – விசிறி, அந்தரங்கர் - திருக்கச்சிநம்பிகள், வைதிகோத்தமர் – எம்பெருமானார்]. காஞ்சீமாஹாத்ம்யம் – வேகவத் யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ் ஸ்வயம், வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருச்யதே - வேகவதி என்ற நதியின் வடக்குக்கரையில் உள்ள புண்ணியகோடி என்ற விமானத்தில் ஸ்ரீஹரி எழுந்தருளி, அனைத்து உயிர்களுக்கும் வரம் அளிப்பவனாக இன்றளவும் காணப்படுகிறான் - என்பதற்கு ஏற்ப அனைவருக்கும் அனைத்தையும் அளிப்பதால் த்யாகமண்டபமாகத் திகழும் காஞ்சீபுரம் வரதனின் திருக்கோயிலில், அவனுக்கு அன்றாடம் விசிறி வீசியபடி கைங்கர்யம் செய்து, அவனுக்கு மிகவும் நெருக்கமானவராகத் திருக்கச்சிநம்பிகள் விளங்கினார். இவரை, வைதிகரில் மிகவும் உத்தமராக விளங்கிய எம்பெருமானார் அண்டி நின்றார். (போக மண்டபத்தில் வீணையும் கையுமான அந்தரங்கரை மஹாமுனி அநுவர்த்தித்த க்ரமமும்) - [இங்கு போகமண்டபம் - ஸ்ரீரங்கம் பெரியகோயில், அந்தரங்கர் - திருப்பாணாழ்வார், மஹாமுனி – லோகசாரங்கர்]. பெருமாள்திருமொழி (1-1) - தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையாலடி வருடப் பள்ளி கொள்ளும் - என்பதற்கு ஏற்ப மோக்ஷ ஆனந்தம் அளிக்கவல்லதான திருவரங்கம் பெரியகோயிலில் திருப்பாணாழ்வார் வீணை வாசித்தபடியே கைங்கர்யம் செய்து, பெரியபெருமாளாகிய ஸ்ரீரங்கநாதனுக்கு மிகவும் அந்தரங்கமானவர் ஆனார். அவரை லோகசாரங்க மஹாமுனிவர் அண்டி நின்றார். (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) – இவற்றைக் குறித்து அறிபவர்களுக்கு மட்டுமே பிறவியில் உள்ள உயர்த்தியும் தாழ்ச்சியும் உணர இயலும். (யாகத்தில் காய சுத்தி பண்ணின வ்ருத்த ஆசாரமும்) – [இங்கு யாகம் - திருவாராதனம், காயசுத்தி செய்தவர் - எம்பெருமானார், காயம் என்றால் சரீரம்]. யஜ தேவ பூஜாயாம் - யாகங்கள் தேவர்களுக்குச் செய்யப்படும் பூஜை - என்பதற்கு ஏற்ப யாகம் என்ற சொல்லுக்குப் பொருளாக உள்ள திருவாராதனத்தில், பிள்ளை உறங்காவில்லி தாஸரைக் கொண்டு தன்னைத் தொடும்படிச் செய்து, அதனால் தனது சரீரத்தைத் தூய்மையாக்கிக் கொண்ட எம்பெருமானாரின் செயல். (அநுயாகத்தில் அன்ன சுத்தி பண்ணின வ்ருத்த ஆசாரமும்) - பகவத் ஆராதனம் முடியும்போது, அதனைத் தொடர்ந்து, அதனை நிறைவு செய்யும் விதத்தில் செய்யப்படுதல் என்பதால் “அநுயாகம்” என்று கூறப்படுவதான பகவத் ப்ரஸாதத்தை உட்கொள்ளுதல் என்ற நேரத்தில், பிள்ளை ஏறுதிருவுடையார் தாஸருடைய கரம் கொண்டு அந்த ப்ரஸாதத்தைத் தொடும்படிச் செய்து, அதன் மூலம் அந்த அன்னத்தைத் தூய்மையாக்கிய ஞானத்தில் முதிர்ந்தவராகிய நம்பிள்ளையின் செயல். (உத்தரவீதியில் ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்த ஆசாரமும்) – திருவரங்கத்தில் உள்ள வடக்கு உத்தரவீதியில் குடி ஏறும்போது, பிள்ளை வானமாமலை தாஸரை அந்த இடத்தில் நடக்கும்படிச் செய்து, அதன் மூலம் அந்த நிலத்தைத் தூய்மைப்படுத்திய ஞானத்தில் மூத்தவராகிய நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டருடைய செயல். (அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது) – இவ்விதம் கீழே கூறப்பட்ட பலவற்றையும் குறித்து அறிபவர்களுக்கு மட்டுமே “இன்ன பிறவி உயர்ந்தது, இன்ன பிறவி தாழ்ந்தது” என்று பிறவியில் உள்ள உயர்த்தியும் தாழ்ச்சியும் உணர இயலும். ஆக இந்தச் சூர்ணை மூலம், பிறப்பு போன்றவற்றால் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள், பகவத் பக்தர்கள் என்றால் - உயர்ந்த பிறப்பு கொண்டவர்கள் என்று கருதப்படுபவர்களால் அண்டி நிற்கப்படுவர்; உயர் பிறப்பு கொண்டவர்களுக்கு ஞானம் அளிப்பவர்; ஸர்வேச்வரன் போன்றே அவர்களால் வணங்கத்தக்கவர்; தாங்கள் உண்டு மீதம் வைத்த தீர்த்தம் மற்றும் உணவு போன்றவற்றால் அனைவரையும் தூய்மையாக்க வல்லவர் என்பவற்றைக் குறித்தும்; அஹங்காரம் போன்ற பாவங்களால் சூழப்பட்டுள்ள உயர்பிறப்பு கொண்டவர்களைத் தங்களுடைய தொடர்பு காரணமாக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வது குறித்தும்; அவர்களிடம் உள்ளதான ஸர்வேச்வரனுடைய ஈடுபாடும், அவனைக் குறித்தே இவர்கள் வாழ்கின்ற வாழ்வும், இப்படிப்பட்ட அவர்களுடைய தொடுதல் என்பதே அனைத்தையும் தூய்மையாக்கவல்லது என்பவை குறித்தும் - வேதங்கள் என்ற ப்ரமாணங்கள் மூலம் மட்டுமே அறியப்படுபவனாகிய ஸர்வேச்வரன் மற்றும் அப்படிப்பட்ட ப்ரமாணங்கள் மூலம் அறியப்படும் சான்றோர் ஆகியோர்களுடைய சொற்கள் கொண்டு, அற்பமான அறிவுள்ளவர்களும் புரிந்து கொள்ளும்படி உரைத்தார்.