Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 84)
முதல் ப்ரகரணம்
வம்சபூமிகளை யுத்தரிக்கக் கீழ்க்குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே இவரும் நிமக்நரை யுயர்த்தத் தாழ விழிந்தார்.
இப்படி பரோபகார ஜன்மரானவிவர் வர்ண த்ரயத்தி லொன்றிலே அவதரியாதே சதுர்த்த வர்ணத்திலே தாழவிழிவானென் னென்ன, அதுவும் பரரக்ஷணார்த்தமாகவே யென்கிறார் - (வம்சேத்யாதியால்).
இவ்விதம் மற்றவர்களுக்காக அவதரித்த நம்மாழ்வார், முதல் மூன்று வர்ணங்களில் அவதரிக்காமல், நான்காம் வர்ணத்தில் ஏன் அவதரித்தார் என்ற கேள்வி எழலாம். இதற்கு, “அவ்விதம் அவதரித்ததும், மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகவே ஆகும்”, என்று விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி ஸாம்ப்ரதம்” என்கிறபடியே யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹமல்லாதபடி நிஹீநமான யதுவம்சத்தை, “அயம் ஸ கத்த்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விசாரதை: கோபாலோ யாதவம் வம்சம் மக்நமப்யுத்தரிஷ்யதி” என்கிறபடியே உத்தரிக்கைக்காக, “அங்கோராய்க் குலம் புக்கதும்” என்கிறபடியே கோகுலத்திலே உள்புக்கு கோபாலனான க்ருஷ்ணனைப் போலவும்; ஹிரண்யாக்ஷ பலத்தாலே நிலைகுலைந்து ப்ரளயங்கதையான பூமியை, “உத்த்ருதாஸி வராஹேண” என்றும், “நமஸ்தஸ்மை வராஹாய லீலயோத்தரதே மஹீம்” என்றும் சொல்லுகிறபடியே உத்தரிக்கைக்காக, “கேழலாய்க் கீழ்புக்கு” என்கிறபடியே பாதாளத்திலே தாழவிழிந்த வராஹரூபியைப் போலவும், – குலந்தாங்கு மபிமாநத்தாலே ஸம்ஸாரத்தில் நிமக்நரானவர்களை அந்நிலையில் நின்றும் பேதித்து “அபிமானதுங்கன்” என்னுமுயர்த்தியை யுடையராக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அநர்த்தகரமென்று தோற்றும்படி தத் ரஹிதமான சதுர்த்த வர்ணத்திலே தாழவிழிந்தாரென்கை. இத்தால், நாம் உத்க்ருஷ்டமாக நினைத்திருக்கும் வர்ணங்களை ஹேயமென்றுவிட்டு நிக்ருஷ்ட வர்ணத்திலே தாழ விழிந்தாரென்று தாய்த்து. ஆக, “வீட்டின்பம்” என்று தொடங்கி, இவ்வளவும் மந்தமதிகளுடைய சங்கா நிராகரணார்த்தமாக ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணத்திலே வரும் ப்ரத்யவாயமும், வ்யாஸாதிகளைப் பற்றி இவரவதார வைலக்ஷண்யமும், அவதாரம் பரார்த்தமென்னுமிடமும், மஹாப்ரபாவரானவிவர் தாழவவதரிக்கைக்கு நிதானமு மருளிச்செய்தாராய் நின்றார்.
(வம்சத்தை உத்தரிக்கக் கீழ்க்குலம் புக்க கோபாலரைப் போலே) ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-21-12) – யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி ஸாம்ப்ரதம் – இந்தக் குலமானது யயாதியின் சாபம் காரணமாக அரசாளத் தகுதி அற்றது என்பதற்கு ஏற்ப அரசனாகும் தகுதிகளை இழந்து தாழ்ந்து நின்ற யது வம்சத்தை, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-20-49) - அயம் ஸ கத்த்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விசாரதை: கோபாலோ யாதவம் வம்சம் மக்நமப்யுத்தரிஷ்யதி – இந்த க்ருஷ்ணன் தாழ்வில் மூழ்கிக் கிடக்கும் யயாதியின் யதுகுலத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப்போகிறான் என்று புராணங்களின் ஆழ்பொருளை உணர்ந்தவர்களால் கூறப்படுகிறது - என்று கூறுவதற்கு ஏற்ப உயர்த்துவதற்காக, திருவாய்மொழி (6-4-5) - அங்கோராய்க் குலம் புக்கதும் – என்பதற்கு ஏற்ப இடையர்கள் குலத்தில் புகுந்து அவதரித்த கோபாலனாகிய க்ருஷ்ணனைப் போன்றும். (பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலே) - ஹிரண்யாக்ஷனின் வரபலம் காரணமாக நிலை குலைந்து ப்ரளய நீரில் ஆழ்ந்து போன பூமியை, தைத்திரீயம் – உத்த்ருதாஸி வராஹேண - வராஹனால் உயர்த்தப்பட்டாய் - என்றும், வராஹபுராணம் - நமஸ்தஸ்மை வராஹாய லீலயோத்தரதே மஹீம் - ஒரு லீலையாகவே எளிதாக பூமியை மீட்டு எடுத்த வராஹனுக்கு நமஸ்காரம் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உயர்ந்துவதற்காக, திருவாய்மொழி (2-8-7) – கேழலாய்க் கீழ்புக்கு - என்று கூறுவதற்கு ஏற்ப பாதாளத்தில் தாழ்ந்து நின்று வராஹரூபம்எடுத்தவன் போன்றும். – (இவரும் நிமக்நரை உயர்த்தத் தாழ இழிந்தார்) - தங்களுடைய குலத்தை தாங்கள்தான் தாங்கி நிற்பது போன்று கர்வம் காரணமாக ஸம்ஸாரத்தில் தாழ்ந்து நிற்பவர்களை, அப்படிப்பட்ட நிலையிலிருந்து அவர்களை மாற்றி, திருப்பால்லாண்டு (11) – அபிமானதுங்கன் – என்பதற்கு ஏற்ப உயர்ந்தவர்களாக ஆக்குவதற்காகவும், அஹங்காரத்திற்குக் காரணமாக உள்ள மூன்று வர்ணங்கள் கேட்டினை ஏற்படுத்துபவை என்பது வெளிப்படும்படியாகவும், அப்படிப்பட்ட அஹங்காரம் அற்றதான நான்காம் வர்ணத்தில் அவதரித்தார் என்று கருத்து. ஆக தாங்கள் உயர்ந்தவர்கள் என்றுள்ள கர்வம் காரணமாக ஸம்ஸாரத்தில் மேன்மேலும் உழன்றபடி உள்ளவர்கள், அத்தகைய உயர்பிறப்பு என்று கூறப்படுகின்ற பிறவியானது, அஹங்காரம் முதலானவற்றுக் காரணமாக உள்ளதால் தாழ்ந்தது என்று உணர்ந்து, அந்தக் கர்வம் நீங்கிக் க கரையேறுவதற்காக, அவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்வதற்குக் காரணமாக உள்ள அந்த மூன்று வர்ணங்களை விடுத்து, தாழ்ந்தது என்று சிந்திக்கப்படும் நான்காம் வர்ணத்தில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவதரித்தார். ஆகவே சூர்ணை (75) - வீட்டின்பம் – என்னும் சூர்ணையில் தொடங்கி, இதுவரை உள்ள சூர்ணைகளில் அறிவற்றவர்களுடைய சந்தேகத்தைப் போக்கும்விதமாக ஆழ்வாருடைய பிறவியை ஆராய்ந்தால் ஏற்படும் தோஷத்தையும், வ்யாஸர் முதலானவர்களுடைய அவதாரத்தைக் காட்டிலும் நம்மாழ்வாரின் அவதாரத்தில் உள்ள வேறுபட்ட மேன்மையையும், நம்மாழ்வார் அவதரித்தது மற்றவர்களுக்காக மட்டுமே என்பதையும், மிகுந்த ப்ரபாவம் மிகுந்த நம்மாழ்வார் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவதரித்ததன் காரணத்தையும் அருளிச்செய்தார்.