Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 83)

முதல் ப்ரகரணம்

ஆதித்ய ராமதிவாகராச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் வற்றி விகஸியாத போதில் கமல மலர்ந்தது வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே.

இன்னமும் இவருடைய அவதாரத்தாலே லோகத்துக்குண்டான நன்மைகளை யருளிச்செய்கிறார் (ஆதித்யேத்யாதியால்).

– அடுத்து நம்மாழ்வாருடைய அவதாரத்தால் இந்த உலகிற்கு ஏற்பட்ட நன்மைகளை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிரு ளகன்றது” என்னும்படி பாஹ்யாந்தகாரத்தைப் போக்கிக் கொண்டு உதிக்கு மாதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாநாந்தகாரம், “தமோ பாஹ்யம் விநச்யேத் து பாவகாதித்ய ஸந்நிதௌம் பாஹ்யமாப்யந்தரஞ்சைவ விஷ்ணுபக்தார்க்க ஸந்நிதௌ” என்கிறபடியே நீங்கி, “சரஜாலாம்சுமாந் சூர: கபே! ராம திவாகர:, சத்ரு ரக்ஷோமயம் தோயமுபதோஷம் நயிஷ்யதி” என்கிறபடியே சரஜாலங்களாகிற கிரணங்களை யுடையனாய்க் கொண்டு சத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணின ராம திவாகரனுக்கு வற்றாத “பிறவியென்னும் கடல்” என்கிற ஸம்ஸார ஸமுத்ரம் வற்றி, “ததோகில ஜகத்பதம் போதாயாச்யுத பாநுநா, தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா” என்று ஜகத்பத்மம் விகஸிதமாம்படி தேவகியாகிற பூர்வ ஸந்த்யையிலே ஆவிர்ப்பவித்த அச்யுதபாநுவான க்ருஷ்ணனுக்கு விகஸியாத “போதில் கமல வன்னெஞ்சம்” என்கிற ஹ்ருத்பத்மம் விகஸிதமாய்த்து, – “யத்கோ ஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர:, யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய” எனறு திருவாய்மொழி யாயிரமுமாகிற கிரணங்களையுடையராய், மஹிஷீ பூஷணாயுத விசிஷ்டனான நாராயணனை “கண்கள் சிவந்த”படியே உள்ளேயுடையராய், வேதவித்துக்களான ஸர்வசிஷ்டர்களும் கேட்டபோதே தாமிருந்த தேசத்தை நோக்கி வணங்கும்படியான வைபவத்தையுடையராய் வகுளாபரணரா யிருக்கிற ஆழ்வாராகிற பாஸ்கரனுடைய உதயத்திலேயென்கை. ஆதித்ய திவாகர பாநு சப்தங்களா லன்றிக்கே பாஸ்கர சப்தத்தாலே இவரைச் சொல்லுகையாலே “ஊரும் நாடும்” இத்யாதிப்படியே ஸ்வஸம்பந்தமுடையா ரெல்லார்க்கும் ப்ரகாசத்தைப் பண்ணுமவரென்று தோற்றுகிறது.

– (ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி) – திருப்பள்ளியெழுச்சி (1) – கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிரு ளகன்றது – என்பதற்கு ஏற்ப உலகின் புற இருளை நீக்கியபடி உதிக்கும் சூரியனால் நீங்காதபடி உள்ளதாகிற அறிவின்மையானது, தமோ பாஹ்யம் விநச்யேத் து பாவகாதித்ய ஸந்நிதௌம் பாஹ்யமாப்யந்தரஞ்சைவ விஷ்ணுபக்தார்க்க ஸந்நிதௌ - அக்னி, சூரியன் ஆகியவர்கள் முன்பாக ஒருவனின் புற இருள் அழிந்துவிடும்; மஹாவிஷ்ணுவின் பக்தன் என்ற சூரியன் முன்னிலையில் மட்டுமே அக இருளும் அழியும் - என்பதற்கு ஏற்ப நீங்கி, (ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக்கடல் வற்றி) - இராமாயணம் ஸுந்தரகாண்டம் (37-16) – சரஜாலாம்சுமாந் சூர: கபே! ராம திவாகர:, சத்ரு ரக்ஷோமயம் தோயமுபதோஷம் நயிஷ்யதி - அனுமனே! அம்புகள் என்ற கதிர்கள் கொண்டவனாகிய இராமன் என்ற சூரியன், அரக்கர்கள் என்ற ஸமுத்திரத்தை வற்றச் செய்பவனாக உள்ளான் – என்பதற்கு ஏற்ப அம்புகள் என்ற கதிர்கள் கொண்டு விரோதிகளான ராக்ஷஸர்கள் கூட்டம் என்னும் ஸமுத்திரத்தை வற்றச் செய்யவல்ல இராமனால் வற்றாத, பெரியாழ்வார் திருமொழி (5-4-2) - பிறவியென்னும் கடல் - என்பதற்கு ஏற்ப உள்ளதான ஸம்ஸாரம் என்ற ஸமுத்திரம் வற்றி. (அச்யுதபாநுவுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது) – ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-3-2) - ததோகில ஜகத்பதம் போதாயாச்யுத பாநுநா, தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா - தாமரை போன்றுள்ளதான அனைத்து உலகங்களையும் மலரச் செய்வதற்காக, தேவகி என்னும் கிழக்குத்திசையில், மிகவும் ப்ரகாசமான ஒளியுள்ள க்ருஷ்ணன் என்ற சூரியன் அவதரித்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, உலகம் என்ற தாமரை மலரும்படியாக, தேவகி என்ற கிழக்குத்திசையில் வெளிப்பட்ட க்ருஷ்ணனால் மலராத, பெரியாழ்வார் திருமொழி (5-2-8) – போதில் கமல வன்னெஞ்சம் – என்பதற்கு ஏற்ப உள்ளதான மனம் என்ற தாமரை மலர்ந்தது...(இது போன்ற மூன்று செயல்கள் எப்போது நடைபெற்றது என்றால், நம்மாழ்வார் என்னும் சூரியன் உதித்தபோது ஆகும் என்று அடுத்து அருளிச் செய்கிறார்). (வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே) – [சூர்யனால் போகாத அக இருள், இராம பாணத்தால் வற்றாத ஸம்ஸாரக்கடல், க்ருஷ்ணன் என்ற சூரியனால் மலராத மனம் என்ற தாமரை, நம்மாழ்வாருடைய அவதாரத்தால் ஏற்பட்டது என்கிறார்]. பராங்குசாஷ்டகம் - யத்கோ ஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர:, யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய - யார் ஒருவருடைய திருவாய்மொழி என்ற ஆயிரம் பாசுர வடிவில் உள்ளதான கதிர்கள் மூலம் மனிதர்களுடைய அறியாமை என்ற இருள் நீங்குகிறதோ, சங்கும் சக்கரமும் தரித்தபடி உள்ள ஸ்ரீமந்நாராயணன் யாரிடம் வசிக்கிறானோ, அந்தத் திருவாய்மொழியைக் கேட்கும் காதுகளைக் கொண்ட எந்த இடத்தை அந்தணர்கள் வணங்குகிறார்களோ, அப்படிப்பட்ட நம்மாழ்வாராகிய சூரியனுக்கு நமஸ்காரம் - என்று கூறுவதற்கு ஏற்ப, திருவாய்மொழிப் பாசுரங்கள் என்ற ஆயிரம் கதிர்கள் கொண்டவராக, பெரியபிராட்டி மற்றும் திவ்யமான பல ஆபரண ஆயுதங்களுடன் கூடியுள்ள ஸ்ரீமந்நாராயணனைத் திருவாய்மொழி (8-8-1) - கண்கள் சிவந்து - என்பதற்கு ஏற்ப தனது உள்ளத்தில் கொண்டவராக, வேதவித்துக்களான அந்தணர்கள் அனைவராலும் திருவாய்மொழியின் ஓசையைக் கேட்ட உடனேயே தானிருக்கும் திசை நோக்கி வணங்கும்படி உள்ளவராக இருக்கின்ற நம்மாழ்வார் என்ற சூரியன் உதித்ததால் உண்டானது. இங்கு ஆதித்யன், திவாகரன், பானு என்ற பதங்களை விடுத்து நம்மாழ்வாரை “பாஸ்கர” என்ற பதம் கொண்டு கூறுவது காண்க. இது ஏன் என்றால், திருவாய்மொழி (6-7-2) – ஊரும் நாடும் - என்ற பாசுரத்தில் கூறியதற்கு ஏற்ப தன்னுடன் ஸம்பந்தம் கொண்டவர்கள் அனைவருக்கும் இவர் ஒளியை ஏற்படுத்துவார் என்பதை உணர்த்தவே ஆகும்.