Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 82)
முதல் ப்ரகரணம்
ஜனக தசரத வஸுதேவ குலங்களுக்கு மூத்தபெண்ணும் நடுவிற்பிள்ளையும் கடைக்குட்டியும் போலே இவரும் பிறந்து புகழுமாக்கமுமாக்கி அஞ்சிறையுமறுத்தார்.
இனி இவரவதாரத்தின் பரோபகாரகத்வத்தை ஸநிதர்சநமாக வருளிச் செய்கிறார் - (ஜநகேத்யாதியால்).
– அடுத்து நம்மாழ்வாருடைய அவதாரத்தின் வள்ளல்தன்மைகளை எடுத்துக்காட்டுகளுடன் இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான பிராட்டி பிறந்து, “ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா, ஸீதா பர்த்தாரமாஸாத்ய ராமம் தசரதாத்மஜம்” என்கிறபடியே தான் பிறந்த குலத்துக்குக் கீர்த்தி யுண்டாக்கினாப் போலேயும், – தசரத குலத்துக்கு நடுவில்பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான் பிறந்து, “ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்துமிஹ அர்ஹஸி, கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:” இத்யாதியாலே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக்கடவரன்றென்கிற குலமர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, “ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி” என்றும், “பங்கதிக்தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீக்ஷதே” என்றும் சொல்லுகிறபடியே ஜ்யேஷ்டரான பெருமாளுடைய விச்லேஷத்தில் சடை புனைந்து வற்கலை யுடுத்துக் கண்ணநீரா லுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடந்து, குலத்துக்கு முன்பில்லாத வேற்றங்ளை யுண்டாக்கினாப்போலவும், வஸுதேவ குலத்துக்கு “மக்களறுவரைக் கல்லிடை மோதவிழந்தவள் தன் வயிற்றில் சிக்கன வந்து பிறந்து நின்றாய்” என்கிறபடியே கடைக்குட்டியான க்ருஷ்ணன் பிறந்து, “தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ” என்கிறபடியே தங்களால் விடுவித்துக் கொள்ளவொண்ணாத மாதாபிதாக்கள் கால்கட்டை யறுத்தாப்போலவும், இவரும் திருவவதரித்து, “மலிபுகழ் வண்குருகூர்” என்னும்படி தாம் பிறந்த வூருக்குப் புகழுண்டாக்கி, “குடிக்கிடந்தாக்கம் செய்து” என்கிறபடியே சேஷத்வ குலமர்யாதை தப்பாதபடி நின்ற மாத்ரமன்றிக்கே சேஷி விரஹ க்லேசாதிசயத்தாலே “காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து”, “கண்ணநீர் கைகளாலிறைத்து”, “இட்டகா லிட்டகை” யாம்படி நிச்சேஷ்டராய், தரைக்கிடை கிடந்த ப்ரேம விசேஷத்தாலே இக்குடிக்குப் பண்டில்லாத வேற்றத்தையுமுண்டாக்கி, “அறுவர் தம் பிறவி யஞ்சிறையே” என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்யாஸ முகத்தாலே தம்மோடந்விதரான இவர்களுடைய ஸம்ஸாரமாகிற அறவைச் சிறையையுமறுத்தாரென்கை. த்ருஷ்டாந்தபூதரான மூவர் செய்ததும் ஒருத்தரே செய்கையாலும், இத்தனையும் ஸ்வரூபாநுகூலமாகச் செய்கையாலும் இவர் பிறப்பிறே மிகவும் பரோபகாரகமாய்த்து.
– (ஜனக குலங்களுக்கு மூத்தபெண்ணும் பிறந்து புகழும் ஆக்கி) – ஜனகனின் குலத்துக்கு மூத்த பெண்ணாகப் பிறந்து, இராமாயணம் பாலகாண்டம் (67-21) – ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா, ஸீதா பர்த்தாரமாஸாத்ய ராமம் தசரதாத்மஜம் - எனது புத்திரியான இவள், தசரதனின் புத்திரனாகிய இராமனைக் கணவனாக அடைந்து, ஜனக குலத்துக்குப் பெருமை ஏற்படுத்த உள்ளாள் - என்று கூறுவதற்கு ஏற்ப, சீதையானவள் தான் அவதரித்த குலத்துக்கு மிகுந்த கீர்த்தி ஏற்படுத்தியது போன்றும், (தசரத குலங்களுக்கு நடுவிற்பிள்ளையும் பிறந்து ஆக்கமும் ஆக்கி) - தசரதனின் குலத்தில் நடுவில்பிள்ளையாகப் பரதன் பிறந்து, இராமாயணம் அயோத்யாகாண்டம் (82-12) – ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்துமிஹ அர்ஹஸி, கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக: - [தன்னை முடிசூட்டிக் கொள்ளும்படி தான் பணிக்கப்பட்டபோது, பரதன் அரசவையில் உள்ளவர்களை நோக்கி உரைக்கிறான்] ராஜ்யமும் நானும் இராமனின் செல்வங்கள், இந்த விஷயத்தில் நீவிர் தர்மத்தை உரைக்கவேண்டும், தசரதனின் புத்திரனாகப் பிறந்த ஒருவன் மற்றவர்களின் ராஜ்யத்தை எவ்விதம் அபகரிப்பான் - என்பதற்கு ஏற்ப, மூத்தவர்கள் உள்ளபோது இளையவர்கள் முடிசூடிக் கொள்ளக்கூடாது என்ற குல மரியாதையை உரைத்தது மட்டும் அல்லாமல், இராமாயணம் அயோத்யாகண்டம் (100-1) - ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி - சடைமுடியுடன் கூடியவனும், மரவுரி தரித்தவனும், கைகள் குவித்து வணங்கியபடி பூமியில் கட்டை போன்று விழுந்தவனும் ஆகிய பரதனை இராமன் பார்த்தான் - என்றும், இராமாயணம் யுத்தகாண்டம் (127-5) – பங்கதிக்தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீக்ஷதே - பரதன் சடைமுடியுடன் கூடியவனாக தனது அழுக்கடைந்த உடலுடன் உன்னுடைய வரவை எதிர்நோக்கியபடி உள்ளான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தனது மூத்த சகோதரனாகிய இராமனின் பிரிவு காரணமாகச் சடைமுடியுடன் மரவுரி தரித்து தனது கண்களிலிருந்து பெருகும் கண்ணீரால் ஏற்பட்ட சேற்றில் கிடந்தபடி, தசரதனின் குலத்துக்கு இதுவரை இல்லாத ஏற்றத்தைப் பரதன் உண்டாக்கியது போன்றும். – (வஸுதேவ குலங்களுக்கு கடைக்குட்டியும் பிறந்து அஞ்சிறையும் அறுத்து) வஸுதேவ குலத்திற்கு, பெரியாழ்வார் திருமொழி (5-3-1) – மக்களறுவரைக் கல்லிடை மோதவிழந்தவள் தன் வயிற்றில் சிக்கன வந்து பிறந்து நின்றாய் - என்பதற்கு ஏற்ப கடைப்பிள்ளையாக க்ருஷ்ணன் அவதரித்து, பெரியதிருமொழி (7-5-1) – தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ – என்பத்ற்கு ஏற்ப தங்களால் விடுவித்துக்கொள்ள இயலாத தனது தாய்தந்தையரின் கைகால் விலக்குகளை அறுத்தது போன்றும். (இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அஞ்சிறையும் அறுத்தார்) – அவர்களைப் போன்றே நம்மாழ்வரும் இந்த உலகில் அவதரித்து, திருவாய்மொழி (4-2-11) – மலிபுகழ் வண்குருகூர் - என்பதற்கு ஏற்ப, தான் அவதரித்த ஊருக்குப் புகழை ஏற்படுத்தினார். திருவாய்மொழி (9-2-2) - குடிக்கிடந்தாக்கம் செய்து – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாக உள்ள தன்மை என்ற தனது குலப்பெருமை தவறாதபடி நின்றார். அத்துடன் நில்லாமல், ஸர்வேச்வரன் என்ற தலைவனைப் பிரிந்து ஏற்படும் துன்பம் காரணமாக, திருவாய்மொழி (8-5-2) - காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து - என்றும், திருவாய்மொழி (7-2-1) - கண்ணநீர் கைகளாலிறைத்து - என்றும், திருவாய்மொழி (7-2-4) - இட்டகால் இட்டகை - என்றும் கூறுவதற்கு ஏற்ப, என்ன செய்வது என்று அறியாதவராகத் தரையில் கிடந்து இவருடைய குலத்திற்கு இதுவரை இல்லாத ஏற்றத்தை உண்டாக்கினார். திருவாய்மொழி (1-3-11) – அறுவர் தம் பிறவி யஞ்சிறையே - என்பதற்கு ஏற்ப, தம்முடைய ப்ரபந்தங்களைக் கற்பதன் மூலம் தன்னுடன் ஸம்பந்தம் கொண்ட அனைவரது பிறவி என்னும் சிறையை அறுத்தார். இங்கு உபமானமாகக் கூறப்பட்ட மூவரின் செயல்களை, நம்மாழ்வார் ஒருவர் மட்டுமே செய்ததாலும், இவற்றைத் தனது ஆத்மஸ்வரூபத்துற்கு எந்தவிதமான விரோதமும் இன்றிச் செய்ததாலும், இவருடைய அவதாரம் மிகவும் வள்ளல்தன்மை மிக்கதாகிறது அல்லவோ?